வியாழன், 31 மே, 2018

பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.


பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன்.

காரிருள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறது. பரிதி தன் குதிரைகளில் ஆரோகணம் செய்து உலாவர ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். விடியப்போகிறது. ஆனால் பதினைந்து வயது பாலகன் ஒருவனை நினைத்து அவனைப் பெற்றவர்கள் பரிதவித்தபடி பரமனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

கங்கையின் மணிகர்ணிகை கட்டம். பிரவகிக்கும் கங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு சிவலிங்கம் ஜொலித்துக் கொண்டிருக்க சின்னஞ்சிறு பாலகன் ஒருவனின் குரல் நம்பிக்கையுடன் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ சிவாய நமக. ஓம் நமச்சிவாய.”


பிறப்பிறப்பறுக்கும் பெம்மான், ஆதியந்தமற்ற அந்த அனாதிப் பெருமான் தன் பக்தனுக்காக அவன் எழுப்பிய சிவலிங்கத்துள் காத்திருக்கிறான். ஆமாம் என்ன நடக்கப் போகிறது அன்று. ? ஏன் அந்தப் பதினைந்து வயதுப் பாலகன் அன்று அந்தச் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே பழியாகக் கிடக்கிறான்.?

டகுகள் உராய்ந்து செல்கின்றன. சூரியனின் பொன்னிற கிரணங்களால் தகதககக்கிறாள் கங்கை. புனித தீர்த்தமாடும் தம்பதியர் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி தம் பாவங்களைப் போக்குமாறு கங்கையில் ஏழுமுறை முழுகி எழுகிறார்கள். பாவம் தொலைக்கும் கங்கை அவர்களைப் புனிதமாக்குகிறாள்.  

கங்கையின் மணிகர்ணிகைக் கட்டத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு தம்பதி கங்கையிடம் தங்கள் கவலைகளை ஒப்புவித்தபடி முழுகி எழுகிறார்கள். தாங்கள் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஒரு சீமந்த புத்திரன் பிறக்கவில்லையே என்ற கவலை இருவரையும் வாட்டி வதைக்கிறது.

அத்தம்பதிகளின் பெயர் மிருகண்டு முனிவர், மித்ராவதியார். பரமனின் பரம பக்தர்கள். அல்லும் பகலும் அனவரதமும் சிவனன்றி வேறோர் தெய்வமில்லை அவர்களுக்கு. முனி சிரேஷ்டரானால் என்ன கவலை அவரையும் அவரது பத்னியையும் தின்று கொண்டிருக்க காசியம்பதியில் உறையும் விஸ்வநாதரிடம் முறையிட்டு மூழ்கி எழுகிறார்கள்.

பூர்வவினைப்பயன்கள் மடிய புண்ணியம் பெருகிய காசியில் அவர்கள் கவலை தோய்ந்த வேண்டுதல் காதில் புக பிரத்யட்சமாகக் காட்சி அளிக்கிறார் பெருமான். கங்கையே ஹாரத்தி கண்டதுபோல் ஒளிர்கிறாள்.

புலித்தோல் ஆடையும் ஜடாமுடியும் தரித்த உடுக்கையும் நாகமும் சுமந்த சிவனைத் தொழுது நிற்கிறார்கள் இருவரும். தன் அடியார்களின் துயரம் தீர்க்க எழுந்த பெருமான் வினவுகிறார்.

“காம க்ரோத மத மாச்சர்ய லோபமுள்ள நூறாண்டு வாழும் தாமஸ புத்திரன் வேண்டுமா. இல்லை பதினாறே ஆண்டுகள் வாழ்ந்தாலும் பரம பக்தனாக வாழ்ந்து செல்லும் புனித குமரன் வேண்டுமா. ?”

அடுத்த நொடி தயங்காமல் இருவருமே பதில் அளித்தார்கள். “ ஈசனே, உம்பால் பக்தி கொண்ட பரம பக்தனான புத்திரனே வேண்டும். அவன் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தாலும் சிரேஷ்டமாக வாழ வேண்டும் “

”உங்கள் எண்ணப்படியே ஈந்தேன்” என வரம் தந்து மறைந்தார் சிவனார். அடுத்த பத்தாம் மாதம் மித்ராவதியாரின் திருவயிற்றில் உதித்தார் மார்க்கண்டேயர். இவர் பிறந்ததும் தந்தை தாய் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவரையும் சிவபக்தி உள்ளவராக வளர்த்து வருகிறார்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெற்றோரும் உற்றாரும் போற்றும் வண்ணம் கல்வி, கேள்வி, பக்தி ஆகிய யாவற்றிலும் தலை சிறந்தவராகவும் சிவபக்தராகவும் வளர்ந்து வருகிறார் மார்க்கண்டேயர்.

இதென்ன பதினைந்து ஆண்டுகள் சடுதியில் ஓடி மறைந்துவிட்டனவே.. திகைத்து நிற்கிறார்கள் மார்க்கண்டேயனைப் பெற்றோர். விடிந்தால் பதினாறு பிறக்கப் போகிறது அவர்கள் மைந்தனுக்கு. ஆனால் பெற்றோரே துக்கத்தில் மிதக்கிறார்கள். காரணம் அறியாது தவிக்கிறார் மார்க்கண்டேயர்.

பெற்றோரிடம் அவர்கள் வாட்டத்திற்கான காரணத்தை வினவுகிறார். அவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளை வரம் பற்றிக் கூறுகிறார்கள். :பக்தியால் ஆகாதது எதுவுமே இல்லை. பரமனைப் பற்றியே நான் உய்வேன்” என உறுதி அளிக்கிறார் மார்க்கண்டேயர்.

விடியச் சில நாழிகை இருக்கும் பொழுது சிவனாருக்கு பிரியமான தாதவிழ் கொன்றைப் பூக்களும் செண்பக மாலையும் சார்த்தி சிவ பூஜையைத் தொடர்கிறார். சூரியனின் கிரணங்கள் மெல்ல மெல்ல கங்கையில் படர்ந்தபோது அன்றைக்கு செந்நிறமாகக் காட்சி அளித்தாள் கங்கை. புள்ளினங்கள் அன்றைக்குப் பொழுது புலர்ந்துவிட்டதை அறிவிக்கின்றன. பூக்களும் போதவிழ்ந்து இறைந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு பூக்களாக கொன்றைப் பூக்களைத் தூவிக் கம்பீரமாக சிவலிங்கத் திரு உருமுன் அமர்ந்து அர்சித்துக் கொண்டிருக்கிறான் பதினைந்து வயதுப் பாலகன் மார்க்கண்டேயன். அவர் நெற்றியிலிருந்து கைகள், நாபி, புஜங்கள், மார்பு ஆகிய இடங்களில் சிவச்சின்னமான விபூதி காட்சி அளிக்கிறது.

அன்றைக்கு அவனது உயிரைப் பறிக்க வேண்டி எமலோகத்திலிருந்து வந்த எமதூதன் ஒருவன் இப்பூஜையை எல்லாம் பார்த்துவிட்டுப் பயந்து போய்ப் பதுங்குகிறான். சிவபக்தனை அவனால் நெருங்கவே முடியவில்லை.

அவன் திரும்ப எமலோகம் சென்று எமனிடம் தெரிவித்த பின் எமன் காலனை அனுப்புகிறான். காலனும் கங்கையின் கரையில் கால் வைக்க முடியவில்லை. எங்கெங்கும் சிவ நாமம் எங்கெங்கும் சிவ கானம். கைலாயமே கங்கைக்கு வந்தாற்போல் மருண்ட அவனாலும் பரமனின் பரம பக்தனான மார்க்கண்டேயனை நெருங்கவே முடியவில்லை.

அவனும் தோற்றுத் திரும்ப கோபம் கொண்ட எமன் தனது எருமை வாகனத்தில் பாசக் கயிற்றை வீசியவாறு மார்க்கண்டேயனை நெருங்குகிறான். பசு பதி பாசம் என்ற மும்மலமும் கடந்த மார்க்கண்டேயனோ நிம்மதியாய் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டிருக்கிறான். அவன் பூஜையின் வீர்யம் எமனையும் நெருங்க விடவில்லை.

கோபம் கொண்ட அவன் தனது பாசக் கயிற்றை எட்ட இருந்தே மார்க்கண்டேயன் கழுத்தில் வீசுகிறான். அந்நேரம் பார்த்துக் கொன்றைப் பூக்களைத் தூவிப் பூஜித்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயன் கடைசிப் பூவையும் சிவலிங்கத்தின் மேல் நெருங்கிச் சென்று அர்ச்சித்து அவரை அணைத்துக் கொள்கிறான். தான் செல்லவேண்டிய இடம் யமலோகமல்ல சிவன் உறையும் கைலாயமே என உரைக்கிறான்.

ஐயகோ இதென்ன அந்தப் பாசக் கயிறு அந்தப் பாலகனை மட்டுமல்ல சிவனாரையும் சேர்த்தே வளைத்துவிட்டதே. திடுக்கிடுகிறான் எமன். தன் பக்தனுக்கு மட்டுமல்ல தனக்கும் பாசக்கயிறு வீசிய எமனை சும்மா விடுவாரா சிவன். கொன்றையம்பூக்களிலிலிருந்து லிங்கம் பிளந்து தனது சூலத்துடன் வெடித்தெழுந்தார் சிவன். காலசம்ஹார மூர்த்தியாகத் தோன்றி காலனை உதைத்துத் தனது சூலத்தால் சம்ஹரிக்கிறார். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரமளிக்கிறார். மார்க்கண்டேயனுக்காகக் காலத்தை சம்ஹரித்ததால் அவர் கால சம்ஹார மூர்த்தியானார்.

எமன் சம்ஹாரம் ஆனதைப் பார்த்த பூமாதேவி அவனில்லாவிட்டால் மக்கள் இறப்பில்லாமல் வாழ்வர் அதனால் பூமியின் பாரம் தாங்காது என வேண்ட சிவ பக்தர்களை அவன் துன்புறுத்தக்கூடாது என்ற ஆணையோடு ஈசன் அவனை உயிர்ப்பிக்கிறார். கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதற்கு நித்ய சிரஞ்சீவியான மார்க்கண்டேயனின் வரலாறே சாட்சி.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 25. 5. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 

டிஸ்கி:- அரும்புகள் கடிதத்தில் பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையைப் பாரட்டிய வாசகர் ஸ்ரீரங்கம் ப. சரவணன் அவர்களுக்கு நன்றிகள்.

4 கருத்துகள்:

  1. கேட்ட, படித்த கதைதான். இருந்தாலும், உங்கள் பாணியில் இன்னும் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. பாலன், காலன், நீலன் (நீலகண்டன்). நல்ல சொல்லாட்சி. எளிமை, புதுமையுடன் மார்க்கண்டேயன் கதை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றிமுத்துசாமி சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)