புதன், 23 மே, 2018

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசர்.

பாண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாக அந்தக் குடிசையைப் பதம் பார்த்தும் இன்னும் விடுவதாயில்லை. உள்ளே ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். அவள் கரங்களோ அந்தக் குடிசையில் இருக்கும் சொக்கநாதப் பெருமானின் படத்தை வணங்கிக் காத்தருளுமாறு வேண்டுகின்றன.

அன்று ஆவணி மூல நட்சத்திர நாள். தினமும் பிட்டு சுட்டுப் படைக்கும் அவள் சிலநாட்களாகப் பிட்டு சுட்டுப் படைக்கமுடியவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறாள். “ஈசா என்ன நினைத்து என்னைப் படைத்தாய்?. இந்தக் கிழவியின் பிட்டுக்கும் ஏன் தடை விதித்தாய் ? என்று நிற்கும் இம்மழை.? என்று வடியும் இவ்வெள்ளம்.? என்னை அடித்துச் சென்றாலாவது காக்க வருவாயா? “ என்றெல்லாம் அவள் ஈசனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

சாதாரண நாட்களிலேயே சூரியனும் சந்திரனும் கூரை இடுக்குகளின் வழியாக அவள்மேல் தங்கள் கண்களைப் பதிப்பார்கள். அன்றோ காற்றும் தன் பங்குக்குக் குடிசையின் தென்னங்கிடுக்குகளை விசிறித்தள்ளிக் கொண்டிருந்தது. சில கிடுகுகளைப் பெயர்த்தும் போட்டிருந்தது.  பெய்த மழையில் சொதசொதவென்று ஈரமாக இருந்தது அவளது குடிசை.



நெற்றியில் கவலைக்கோடுகள், இடுங்கிய கண்கள் மழையால் நனைந்ததா அல்லது சில நாட்களாக வியாபாரம் ஆகாத நிலையால் நனைந்ததா எனத் தெரியாத கசகசப்பு , வரி விழுந்த கன்னங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக மிச்சமிருக்கும் பற்கள், தொய்ந்த உடல் கொண்டு குடிசையை எட்டிப்பார்க்கும் அவள் தனது சுருங்கிய கைகளைக் கண்களின் மேல் அண்டைக்கொடுத்து வெளியே பார்க்கிறாள்.

இன்னும் சாரலும் தூறலும் விட்டபாடில்லை. குடிசையின் பக்கத்தில் உருட்டி முரட்டிக் கொண்டு ஓடும் வைகையோ இன்றோ நாளையோ குடிசைக்கு உள்ளே புகுந்துவிடுவேன் என்று மிரட்டிச் செல்கிறது. பொங்கிவரும் புதுப்புனல் கரையை உடைத்துக்கொண்டு ஊருக்குள் உலாவரப் பார்க்கிறது.

முரசறைவோர் அறைந்து செல்கிறார்கள். “ வைகையில் வெள்ளம் எல்லை மீறுகிறது. வீட்டுக்கு ஒருவர் வைகையின் கரைக்கு அணைகட்ட , மண் கொட்ட வரவேண்டும். இது பாண்டிய மன்னரின் ஆணை. தவறுவோர் தண்டனைக்கு உள்ளாவார் “ டம் டம் டம் என்று முரசறைந்து அவர் செல்லத் திகைக்கிறாள் வந்தி என்னும் அம்மூதாட்டி.

கூடை மண்வெட்டி சகிதம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மக்கள் கிளம்புகிறார்கள். கூடை தூக்கி மண் கொட்டும் வயதா அது. மண்வெட்டியைத் தூக்கவே முடியவில்லை அவளால்.

தள்ளாத வயதில் மூதாட்டி வந்தி என்ன செய்வாள். தனக்குத் தெரிந்த பிட்டைச் சுட்டு விற்று அந்தக்கூலியைக் கொடுத்து யாரையும் மண் கொட்டச் செய்யலாம் என எண்ணுகிறாள். மாவுப்பானையைத் திறந்து பார்க்கிறாள். ஏதோ கொஞ்சம் வறுத்த சிவப்பரிசி மாவு இருக்கிறது. வெல்லப் பானையிலும் சிறிது வெல்லம் இருக்க அவளது உள்ளம் மலருகிறது. சில சுள்ளிகளும் விறகுகளும் குடிசையின் வெளியே கிடைக்கின்றன.

கல்கூட்டிய அடுப்பு நெருப்பைக் கண்டு ஆறேழு நாளிருக்கும். மழையில் நனைந்து அதுவும் கலகலத்திருந்தது.  வெளியே சென்று கல் அடுப்பைச் சுத்தம் செய்து விறகுகளைப் போட்டுப் பற்றவைத்து புட்டு அவிக்கும் இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றுகிறாள். மழையால் நனைந்த விறகுகள் புகைகின்றன. கண்கள் எரிய ஊதாங்குழலால் ஊதி ஊதி அடுப்பை எரிக்கிறாள்.

புட்டுமாவைப் பாத்திரத்தில் நீர் விட்டுப் பிசைந்து  இட்டிலிப் பானையில் துணியைப் பரத்தி அதன் மேல் புட்டுமாவை உதிர்த்து மூடி வேகவைக்கிறாள். வறுத்த புட்டுமாவு வெந்து வாசனை மேலெழும்புகிறது. ஒருவழியாக அதை வேகவைத்து எடுத்து வெல்லம் போட்டுப் பிடித்து வைக்கிறாள்.

அப்போது அங்கே வருகிறான் திடகாத்திரமான ஒரு இளைஞன். “ பாட்டி எனக்கு ரொம்பப் பசிக்கிறது. ஆனால் என்னிடம் பணமில்லை. கொஞ்சம் உதிர்ந்த புட்டாவது தா “ எனக் கேட்கிறான்.

”பார்க்க வலுவான ஆளாயிருக்கிறாய். சரி தம்பி எனக்கு என ஒதுக்கப்பட்டது வைகைக்கரையின் இப்பகுதி. நீ பணம் தரவேண்டாம். எனக்காக நீ மண் சுமந்து கொட்டிக் கரையைப் பலப்படுத்தினால் உனக்குப் புட்டுத் தருகிறேன்.  இந்தா மண்வெட்டியும் கூடையும் ” எனத் தருகிறாள் வந்திப் பாட்டி.

ஆனால் இளைஞனோ மன்றாடுகிறான். “ ஐயோ பாட்டி பசி உயிர் போகிறது. நான் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மண்ணைக் கட்டாயம் கொட்டுவேன். கொஞ்சம் உதிர்ந்த புட்டையாவது கொடேன் “ என்று கெஞ்சுகிறான்

குழந்தையைப் போலக் கெஞ்சும் அவன் முகம் பார்த்து மனம் இறங்கிய வந்தி உதிர்ந்த புட்டை ஒரு தட்டில் வைத்து அவனிடம் நீட்டுகிறாள். ”இன்னும் கொஞ்சம் கொடு பாட்டி. உன் கைப்பக்குவமே தனி. மிக ருசியாக இருக்கிறது புட்டு. இதுபோல் ருசிமிகுந்த புட்டை நான் இதுவரை சுவைத்ததே இல்லை “ என்று சொல்லிச் சொல்லி நான்கந்து தட்டு உதிர்ந்த புட்டை வாங்கி வயிறு நிறைய உண்கிறான் அவன்.

”சரிப்பா. இந்தா மண்வெட்டியும் கூடையும்” என அவள் எடுத்துக் கொடுக்க அவனோ அவற்றை வாங்கிக்கொண்டு செல்கிறான். சென்றவன் ஒழுங்காக மண் வெட்டிக் கொட்டினானா ..இல்லையே.. உண்டமயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று வாயில் சூடாக உண்ட புட்டின் மணமும் ருசியும் தங்கியிருக்க அங்கே இருந்த மணல் மேட்டில் படுத்துச் சுகமாக உறங்குகிறான்.

ஆற்றங்கரையில் பல்வேறு மக்களும் தங்கள் பகுதியை மண் கொட்டி பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வந்தியின் பக்கம் அப்படியே கிடக்கிறது.       

ப்போது ஒரே ஆரவாரம் எழுகிறது. அடடா அங்கே அலங்காரச் சிவிகைகளும் பல்லக்குகளும் அதிகாரிகளின் குதிரைகளும் வருகின்றன. அவற்றில் யார் வருகிறார்களோ எனப் பயந்து மக்கள் கூட்டம் விரைந்து வேலையை முடிக்கிறது.

ஆற்றைப் பலப்படுத்தும் பணி சிறப்பாக நடக்கிறதா எனப் பார்க்க பாண்டிய மன்னனே தனது குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் நேரில் வந்திருக்கிறான். அஹா இதென்ன கரையில் ஒரு பக்கம் உடைப்பு அடைக்கப்படாமலே இருக்கிறதே. அந்த நதிநீர்க் கசிவிலும் ஒருவன் ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருக்கிறானே. யார் இவன்?. ஏன் பணியை முடிக்காமல் உறங்குகிறான். இந்த ஒரு பக்க உடைப்பை அடைக்காமல் விட்டாலும் ஊருக்குள் வெள்ளம் வந்துவிடுமே..

”யார் இந்தச் சோம்பேறி? எழுப்புங்கள் அவனை. ” கர்ஜிக்கிறான் அரசன். காவலாளிகளால் எழுப்பி விடப்பட்டும் அசங்கி மயங்கி எழுந்த அந்த இளைஞன் மண்ணை வெட்டுவதும் அதை அங்கேயும் இங்கேயும் கொண்டுபோய்க் கொட்டுவதுமாக விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சொல்பேச்சுக் கேட்காத அவனைப் பார்த்துக் கோபத்தில் கொந்தளிக்கிறான் பாண்டியமன்னன். ” அவனது முதுகில் பிரம்படி கொடுங்கள். அப்போதுதான் ஒழுங்காகச் செய்வான்  “ ஆணையிட்டபடி நகர்கிறான். அதிகாரிகள் பின் தொடர்கிறார்கள். அவன் இட்ட பணியை நிறைவேற்றக் காவலர்கள் நெருங்குகிறார்கள்.

ஒருவன் தன் கையிலிருந்த பிரம்பால் இளைஞனின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான். ஆஆஆஆஆ அம்மாஆஆஆஆஆ இதென்ன ஈரேழு பதினான்கு லோகங்களிலும் இருந்த அனைத்து உயிர்களின் முதுகிலும் அடிவிழுகிறதே விழுந்த அடியில் அனைவரும் ஆடிப் போனார்கள். அழுது வீழ்ந்தார்கள்.  பாண்டிய மன்னன் முதுகிலும் விழுந்தது அதே அடி.. அதிரடி.  அவன் சித்தம் கலங்கிப் போனான். தன் பரிவாரத்தைத் திருப்பிக் கொண்டு வந்து அந்த இளைஞனைக் கூர்ந்து நோக்குகிறான்.

ஆஹா இவன் சாதாரண இளைஞனல்ல இவனே அந்த சோம சுந்தரக் கடவுள்.. சொக்கநாதப் பெருமான் என்றுணர்கிறான். பிட்டு சுடும் வந்திக்காக வந்த அந்த சுந்தரேசன் அடியார்கள் வேண்டும்போதெல்லாம் வந்து உதவும் எளியவன் என்று காட்டவே இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறான். இதை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்சாண் கிடையாக அந்த இளைஞனைப் பணிந்து வணங்கினான். அவனோ வைகை வெள்ளம்தாண்டி மீனாட்சிசுந்தரேசனாகக் காட்சி அளித்து மன்னனுக்கு அருளி மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மறைந்தான்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 11. 5. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 


டிஸ்கி :- ஆன்மீக உணர்வை இதிகாச புராணக் கதைகள் வளர்ப்பதாகப் பாராட்டி இருக்கும் வாசாகர், திருச்சி உறையூரில் இருக்கும் எஸ் எம் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு லட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றி. 

2 கருத்துகள்:

  1. கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)