வியாழன், 3 மே, 2018

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவர்மலர் - 16.

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன்.
யர்பாடி அன்று ஒரே கோலாகலமாயிருந்தது. பசுக்கள் தங்கள் கழுத்து மணியை ஆட்டியபடி பசும் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன.  வைக்கோல் வேய்ந்த குடில்கள் அன்று பசுஞ்சாணம் பூசியிருந்தன. இல்லங்களில் ஆய்ச்சியர் தயிர்கடையும் மத்தொலி கூட சரட் சரட் என்று கால்கள் கீறித் திமில் திருப்பிக் கொம்பசைத்துக் கிளர்ந்து நிற்கும் எருதுகளின் ஹீங்காரத்தை எதிரொலிக்கின்றது.
கொன்றை மரத்திலிருந்து பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அன்று நிகழப்போகும் ஏறு தழுவலுக்கு ஆசி அளிப்பதுபோல் உதிர்ந்துகொண்டே இருந்தன. ஆமாம் அன்று ஏறு தழுவப் போவது யார் ? அதுவும் ஏழு ஏறுகளைப் தழுவப் போகும் அந்த மாவீரன் யார் ?
வாருங்கள் தங்கள் நீண்ட கூந்தலில் பலவிதப் பூக்கள் அணிந்த ஆயர் மகளிர் ஒன்று கூடும் அந்த மைதானத்தை அடைவோம். அடடே அங்கே உயரத்தில் பரண் எல்லாம் கட்டப்பட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. கூர் சீவிய கொம்புகளை உடைய ஏறுகள் கம்பிக்கட்டைகள் பின்னே அணிவகுக்கின்றன. அவை திமில் மிரள வாடிவாசலில் இருந்து உள்ளே ஓடி வருவதற்குள்  நாம் பாதுகாப்பாகப் பரணில் ஏறி அமரலாம். யாருக்காக இந்த ஏறுதழுவல் என்பதைப் பார்க்க நாம் அதோ சில குழந்தைகள் குரவைக்கூத்தாடும் இடத்துக்குப் போவோம்.

சோதையின் வளர்ப்பு மகன் நீலவண்ணக் கண்ணன், அவன் அண்ணன் செக்கச்சிவந்த பலராமன் , இவர்கள் இருவருக்கும் நடுவே பூரண அழகோடு ஒரு பெண்பிள்ளை. அவள்தான் நப்பின்னை. இவர்கள் மூவரும் சுழன்று சுழன்று குரவைக்கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்டத்தைக் கண்டு மெய்மறந்து நிற்கிறாள் யசோதை. ஒருவர் கைகோர்த்து ஒருவர் திரும்பிச் சுழன்றாடும் அந்த ஆட்டம் முடிவதாயில்லை. சிறு பறைகளும் யாழும் கலந்து மென்மையாய் ஒலிக்கின்றன. அவற்றின் தாள லயமும் ஆட்டத்தின் லயமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைகிறது.
இந்த நப்பின்னை மிதிலையின் அரசன் கும்பக்கோனின் மகள். யசோதையின் அண்ணன்தான் கும்பக்கோன். தன் அண்ணன் மகளும் தன் மக்களும் ஆடும் குரவைக் கூத்தைக் கண்டு களிக்கிறாள் யசோதை. ஆட்டத்தோடு ஆட்டமாய் அவளுக்கு நப்பின்னைக்கும் கண்ணனுக்குமான ஒரு இணக்கமும் நட்பும் புலப்படுகிறது.
’ஆண்மகனுக்கு வீரம் வேண்டியதுதான் ஆனால் உறவுகளுக்குள்ளே மணமுடிக்கக் கூடப் போட்டிகள் தேவையா ?’  தன் அண்ணன் கும்பக்கோனின் புதிய அறிவிப்பை நினைக்கிறாள். இறைவனின் திருவுள்ளப்படி அனைத்தும் நடக்கும் என மனதைத் தேற்றிச் செல்கிறாள்.  
அப்படி என்ன அறிவிப்பைச் செய்தார் கும்பக்கோன். அதோ முரசறைந்து வருகிறாரே அவர் சொல்வதைக் கேளுங்கள். அதுதான் அந்த அறிவிப்பு.
”நாளை கொல்லேறு தழுவும் நிகழ்ச்சி. ஒன்றல்ல இரண்டல்ல ஏழு எருதுகளை அடக்கும் மாவீரருக்கே ஆயர்குல மன்னன் கும்பக்கோன் மகள் நப்பின்னையை மணக்கும் தகுதியுண்டு. தகுதி உள்ள வீரர்கள் நாளை மாலை அரண்மனை மைதானத்தில் சுயம்வரத்தில் கலந்துகொள்ளலாம்.” டம டம டம என முரசறிவிப்பவர் கடந்து செல்கிறார்.
“என்னது கொல்லேறு தழுவுதலா.. அதுவும் தொல்லிசைக் குடிகளுக்குள்ளே போட்டியா “  
கலகலத்துக் கிடக்கிறது ஆயர்பாடி. ” ஏறுதழுவுதல் வீரர்க்கழகு என்றாலும் ஏழு ஏறுகளா..? “ வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆயர்களும் ஆய்ச்சியரும். 
பெருந்தோள் கொண்ட பெருங்காளைகளும் அவர்கள் முறைப்பெண்களும் அதிர்ந்தார்கள். அழகி நப்பின்னையை நினைத்து அவர்களுக்குப் பொறாமையாக இருந்தது.
தொல்லிசைக் குடியோன் கண்ணனோ தனது புல்லாங்குழலில் வேணுகானத்தை மீட்டியபடி எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறான்.  அவன் கொல்லேறு தழுவி வெல்ல வேண்டுமே என்று அல்லும் பகலும் உறங்காமல் கண்விழித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறாள் நப்பின்னை பிராட்டி.
தோ பெரும் பறைகளும் குழல்களும் ஒலிக்கத் துவங்குகின்றன. மெல்ல மெல்ல ஆரம்பித்து அவை உச்சஸ்தாயியில் ஒலிக்கத் துவங்கும்போது வெறியாட்டு வந்ததுபோல் காளைகள் ஒவ்வொன்றாய் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வருகின்றன.
கொம்பும் திமிலும் பெருத்த காளைகள். அடக்கி அடக்கி வைக்கப்பட்ட கோபத்தில் அவை மண்ணைக் கீறித் தலையை அசைக்கின்றன.
எங்கே கண்ணன்.? அதோ.. அந்த மாயோன் இடையில் அரையாடையைக் குறுக்கே வரிந்து கட்டித் தலையில் உருமால் அணிந்து கழுத்தில் முல்லையும் வெண்காந்தளும் கலந்து கட்டிய மாலை சூடியிருக்கிறான். தன் குழலால் ஆநிரைக் கட்டிய அவன் இப்போது தன் கரங்களால் எருதுகளை அடக்கக் களமிறங்கிவிட்டான்.
எங்கே நப்பின்னை. ?. எருதுகள் நெருங்குமுன்னர் பரணில் அரசனான தன் தந்தையோடு அமர்ந்திருக்கும் அவளைக் காண்கிறான். அவள் விழிகள் இரண்டும் இரண்டு நிலவுகளைப் போல தண்ணென்றிருக்கின்றன. அவற்றில் சிறிது கலக்கமும் கலந்திருக்கிறது.
’மனம்கவர் கள்வன் கண்ணன் வெல்வானா.?’ ’நிச்சயம் வெல்வான்’ என்று தோன்றினாலும் அவள் மனப்பதட்டம் அடங்கின பாடில்லை. அதோ முதல் காளை வந்த வேகத்தில் முரல்கிறது. பூமியைக் கிளர்கிறது. கூரான கொம்புகளுக்கிடையில் கோவிந்தன் நிற்கின்றான். ஒரு கிளையைப் போலக் கொம்புகளைப் பிடித்து மடக்குகிறான். வீழ்கிறது காளை. அப்பாடா பெருமூச்சு வருகிறது நப்பின்னைக்கு.
அடுத்தது வில்லாகப் பாய்ந்து வருகிறது உடனே மற்றொரு எருது. அதனுடன் பொருது அம்பாக மடக்குகிறான் வேய்ங்குழல் வேந்தன். அடுத்தடுத்தும் காளைகள். அவற்றின் கொம்புகளும் திமில்களும் அவற்றின் திரண்ட ஓட்டமும் சத்தமும் கூட்டத்தினரைப் பித்தம் பிடிக்கச் செய்கிறது. ஆரவாரமிட்ட கும்பல் இப்போது அடங்கிப் போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நாலாபக்கமும் கண்ணனைச் சூழ்ந்து கொல்லேறுகள். கூர்ந்த கொம்பால் குத்துகிறது ஒன்று. மார்பில் கீறல்கள் பதிந்து ரத்தம் கசிகிறது., குடலைக் கீறிவிடுமோ என்று பயமேற்படுத்திப் பாய்கிறது இன்னொன்று. வன்மம் கொண்டு குளம்புகளால் மண்ணைக் கிளறி மூர்க்கமாய்ப் பாய்கின்றன இன்னும் சில. எல்லாவற்றுக்கும் அனல்மூச்சு புயலைப் போலச் சீறிக் கிளம்புகிறது.  
எத்தனை காளைகள் வந்தாலென்ன. எத்தனை கீறல்கள் தந்தாலென்ன. அந்த அடலேறு சிங்கம் போலப் பாய்ந்து ஒன்றன் பின் ஒன்றாகத் தோளோடு திமிலணைத்து அடக்குகிறான். அவன் பாய்ந்தது மின்னல் பாய்ந்ததுபோல் இருக்கிறது கூட்டத்தாருக்கு. என்ன நிகழ்ந்தது என்று எண்ணுமுன் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வுகின்றன கொல்லேறுகள்.  
கண்கள் நடுங்குகின்றன நப்பின்னைக்கு. மக்களின் குலவைச் சத்தம் வெற்றியை அறிவிக்கிறது. ஆனந்தத்தில் நனையும் கண்களோடு கண்ணனைத் தன் மன்னனைப் பார்த்துச் சிரிக்கிறாள். கும்பகோன் ஆணையை நிறைவேற்றி விட்டான் கண்ணன். பெரும்பறைகள் அதிர்ந்து அவன் வெற்றியை அறிவிக்கின்றன. இளைய ஆயர்கள் கண்ணனைத் தங்கள் தோள் மீதேற்றி உலா வருகிறார்கள்.
கொல்லேறு தழுவிய அந்த தொல்லிசைக் குடியோன் தன் மனங்கவர் நப்பின்னையைப் பார்த்துச் சிரிக்கிறான். செங்காந்தள் போன்ற அவள் கரம் பற்றி இறங்குகிறான். கும்பக்கோன் தன் வாக்குப்படி நப்பின்னையின் கரத்தைக் கண்ணனின் கரத்தில் ஒப்படைக்கிறான். புல்லாங்குழல் ஓசை காற்றில் கலந்து அந்த வீரத்திருமகனின் வெற்றி விளையாட்டுக்குப் பக்கபலமாய் ஒலிக்கிறது. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 27. 4. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 


டிஸ்கி  2. :- இதிகாச புராணக் கதைகளில் பிரம்மன் ஹயக்ரீவர் கதையைப் பாராட்டிய வாசகி ஐந்துதலைப்பு வாய்க்கால், செ. தன்ஷிகாவுக்கு நன்றி. 

2 கருத்துகள்:

  1. அழ்கான கதை. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க தேனு. வாழ்த்துகள்!

    திருப்பாவையில் முப்பத்து மூவர் பாடலில் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் என்று வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)