சனி, 7 ஏப்ரல், 2018

மலாயில் மொழிபெயர்க்கப்பட்ட எங்கள் கவிதைகள்.

1ஆதிரா முல்லை

சிப்பி
தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை
வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வழக்காகிப் போக
ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!


2.அகிலா கிருஷ்ணமூர்த்தி
துளி விசம்…
“சாதி, பணம், நிறம், கௌரவம்…
வதைத் தொடுப்புகளில்
களைத்துப்போன நாம்…
உயிரை மாய்க்க எத்தனித்தபோது
பரிமாறிக்கொண்ட துளி விசத்தில்
தாய்ப்பாலின் சுவையுணர்ந்தோமே
அறியுமா நம் சுற்றம்”
...................
3.அமுதா பொற்கொடி
செங்கதிரோன் வரைந்த சித்திரம்!

செங்கதிரோன் கண்டு யான் வியந்தேன்
எத்திரையும் கடக்கும் அவன் திறம் கண்டு
முத்திரை பதிக்க பல தடை தாண்டி
முத்தமிட்டான் எனை இளங் கதிரால்
நித்திரை என்னிடம் விடை பெற்றாள்
இத்திரை எழுந்தது துயில் மீண்டாள்

பாலாடையாய் மூடிய பனிமேலாடை
புவி நூலாம்படையாய் விலகியது
பூமகள் மேனி வெளிர் கொண்டு
அகர்முக அபநயனத்திற்காய் காத்திருந்தாள்
கைத்திறன் கொண்ட கலைஞனைப் போல்
காப்பியம் படைத்தான் கதிர் தூரிகையால்
பத்திர மாத்துத் தங்கம் போல்
சித்திரம் ஆனாள் பூமித்தாய்!

4.பிருந்தா சேது
நான் வரையும் பறவை என் மனதிலிருக்கிறது
காலத்தின் நொடி முறித்துப்
பிறந்த பெயரற்ற காலம்
இந்த வாழ்க்கை
நெருங்கி நீங்கும் கடல் அலையாக
உதிர்ந்து கிளைத்த தளிரிலையாக
பெருமரத்தைச் சாய்த்து
உயிர் மூச்சென உள்ளொடுங்கும்
காற்றாக
நீயாக.....
நீயற்றும்....
நான் வரையும் பறவை
என் மனதிலிருக்கிறது

பறத்தலின் பாதைக்கு
சுவடுகள் இல்லை
.................
5.தமயந்தி
வெள்ளம் நடந்து போன தெரு
வெறுமையாய் பாம்பு கடந்த சுவடுடன் நெளியுது அறை
அமிழ்த்திப் போன ஆற்றைத் தேடுது இற்றுப் போன கிளையொன்று
அடித்த வெயிலின் நுனியில் வெள்ளத்தின் உயிர் காயுது
சந்திப் பிழைகளோடான செய்தியொன்று
தெருக்களில் விரிந்து கிடக்கிறது
தப்பிப் போன ஒற்றை மனிதனின் நிழல் மட்டும்
அலைந்த படி இருக்கிறது-
நீரில் மூழ்கியவனின் ஆன்மாவில் சிக்கினபடி
யாராவது வருவார்கள் என்று பசியோடு அலைகிறது
மறுபடி புகலிடம் கண்ட தெருநாய் ஒன்று
இவை எதுவுமே நினைவுக்கு வராமல்
கல்யாணமாகி முதல் தீபாவளிக்கு
கணவனோடு காதலனைக் கடப்பவள் போல கிடக்குது நதி
.............
6.கலை இலக்கியா
அணையும் உலையும்...

பேசுகிறாய் பேசவில்லை.
நினைக்கிறாய் நினைக்கவில்லை
இருக்கிறேன் என்பதையும்

புறக்கணிக்கிறாய் பரவாயில்லை.

எப்போதும் தளும்பும்
அணைக்கட்டொன்று
வரண்டதும் அன்றி,
புகை கக்கும்
சூளையானதை
எப்படிச் செரிக்க...?
……………………
7.நிதா எழிலரசி
மரணத்தின் தூதுவர்
தும்பைப்பூ பூத்தது போல்
நின்ற வெண்மணல் பரப்பு
காரிருள் போர்வைக்குள்
ஒட்டிய இருள் மூடிய புதர்கள்
இருளை விரட்ட மின்மினிகள்
தூய ஒளியைப் பூசிப்பார்த்தன
இரவோ காயம்பட்ட கடும் புலி ஆனது
சிறகுகள் உதறி ஆரவாரித்தன ஆந்தைகள்
வௌவால்கள் போர்வை போன்ற
உடல்களைத் தூக்கிக் கொண்டு

ஆலமரங்களில் மரணத்தின்
தூதுவர் போல் மெல்ல
துயர நிமிடங்களில் துன்பம் சொல்லி
கோபத்தோடு சென்றன
சிலந்திகள் இரைபிடிப்பதற்கு
ரகசியமாய் வலைகட்டிக்
காத்திருந்தது மூலையில்.
.............
8.கிருஷ்ணபிரியா

அர்த்தமிழக்கவைக்கும் கைகள்
கொஞ்சம் குடித்து
கொஞ்சம் தின்று
வார இறுதி சந்தோஷத்திற்கென
வந்தத் தொகைக்குக்
கடன் அட்டைத் தேய்த்து
உலகமயமாக்கல் குறித்த
உரத்த விவாதத்தோடு
குளிரூட்டப்பட்ட அறைக்கதைவைத்
திறந்து வெளிப்படுகையில்
உடலெங்கும் நுரைத்திருந்த

அத்தனை சந்தோஷங்களையும்
அர்த்தமற்றதாக்குகின்றன
பசியென்று கையேந்தும்
சின்னஞ்சிறு கைகள்...


9.பாலைவன லாந்தர்
மேய்ப்பான்
உங்கள் யுத்தத்தில் எனக்கு வேலை கொடுங்கள்
எனது திறமையை சற்றும் கீழாக மதிப்பிட வேண்டாம்
ஆயுதங்கள் பாதுகாக்கும் பணியைத் தராதீர்கள்
சுயபரீட்சை செய்யும் பழக்கம் எனக்குண்டு

வீரர்களுக்கு உணவு சமைக்கும் பணியைத் தராதீர்கள்
அன்னையைப் போன்று உப்பும் உரப்பும் விகிதமாகக் கலக்கத் தெரியாது
குதிரைகளை யானைகளை பழக்கும் பணியைத் தராதீர்கள்
எனக்கு உணர்வு மொழிகள் அவ்வளவு தெரியாது

தலைமை வகிக்க பணிக்காதீர்கள் சகிப்புத்தன்மை அறவே கிடையாது
இதையெல்லாம் கற்றுக் கொள்ளும் முன்னமே யுத்தம் சமீபித்து விடலாம்

ஆதலால் எனக்கு மேய்ப்பன் வேலை கொடுங்கள்
இரண்டு ஆட்டுக்குட்டிகளை தடவிக் கொடுத்து அமைதியாக
வேடிக்கை பார்க்கும் மேய்ப்பன் வேலை கொடுங்கள் .

10.லாவண்யா
கவிதை போலும்

காலம் காலமாய் வாழும் அது
என்றாய் நகைத்திருந்தேன்
காவியம் போல அது
என்றாய் புன்னகைத்திருந்தேன்
பூவிலும் மெல்லியதது அது
என்றாய் சிறு இதழ் விரித்திருந்தேன்
சாவிலும் கூடவே வரும் அது
என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்
இறுதியில் நீ உமிழ்ந்து விட்டுப் போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக.

..............
11.மதுமிதா
 பகிரப்படாத பிரியம்
பாயும் புலியின் வேட்கையுடன் கொல்கிறது
பகிரப்படாத பிரியத்தின் அழுத்தம்

விழியெனும் கத்திமுனையில்
விரைவாய் நிகழ்ந்தது கடத்தல்
மூச்சடைத்துக் கிடந்த பொழுதொன்றில்
விழிகள் தீண்ட நீண்டது இதழ்களின் ஸ்பரிசமாய்
இத்தனை அன்பைச் சுமக்கவியலாது என்ன செய்ய உத்தேசம்
இத்தனை அன்பின் சுமையை சுமப்பது எவ்விதம்
சின்னதொரு வடிகாலும் அடைபட்டால்
அச்சு முறிந்துவிடுமோ சுமக்கவியலா பரிதவிப்பில்

வடிகால் சின்னதாய் தேவையில்லை
பொங்கிப் பெருகி ஆர்ப்பரிக்கும் பெருங்கடலாக வேண்டும்
..................
12.மனுஷி
கடற்கரையின் பாறையில்
வந்தமர்ந்த கடவுளிடம் கேட்டேன்
முதுமை படர்ந்த பின்னும் தீர்ந்து போகாத,
தனிமையைக் கிளர்த்திவிடாத
காதலைத் தரும் ஓர் ஆணை
என் வழித்தடத்தில் காட்டிவிட்டுப் போ என.
பிட்டத்தைத் தட்டியபடி
எழுந்த கடவுள்
புள்ளியாய் மறைந்து போனான்.
..................
13.பத்மஜா நாராயணன்
சொல்லொண்ணா !

ஒரு கனவில் இருந்து எழுப்பப்படுதல்.
பிழைக்க ஊர் விட்டு விலகுதல்
ஒரு கச்சேரியின் மங்களம்
மகனை விடுதி சேர்த்து வீடு திரும்புதல்
திருமண மண்டபம் காலி செய்தல்
கல்லூரியில் கடைசி கையசைப்பு
கட்டிய வீடு காலி செய்தல்
புகை வண்டி அகன்ற நடைபாதை
ஓர் இறுதி ஊர்வலத்தில் சிதறிய ரோஜா
அயலகம் செல்லும் கணவனின் கண்ணாடி வழிப் பார்வை
பணி மூப்பு நாளின் இறுதிக் கையெழுத்து
மிகவும் பிடித்த நூலின் கடைசிப் பக்கம்
............
14.நித்யா பாண்டியன்
 அவளும் நானும்

அவள் எனக்கு எப்படி சகோதரியோ
அதே போலத் தான் நானும் அவளுக்கு
அவள் கொடுத்த தேநீரில் மதம் கலக்கவில்லை
நான் அருந்திய தேநீரில் இந்தியத்தின்
கலவை விகிதாச்சாரம் அறிந்துகொள்ள
வேண்டிய தேவை ஏற்படவில்லை...
அவளின் பெண் அத்தாவிற்கு
அப்பா என்றும் மாமாவிற்கு
அம்மம்மா என்றும் பொருள் கூறும்
போதும் மழலை மொழி
பேதமறிவதில்லை என
தான் தோன்றியது..
அன்று ஆகஸ்டு பதினான்கு
பாகிஸ்தானைப் பற்றி கூற
அவளுக்கு நிச்சயம் ஏதும் இல்லை
என்பதை நான் அறிவேன்…
அதனால் தான் அடுத்த நாளைப்பற்றியும்
நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை..
15.நறுமுகை தேவி
ஆடுகளம்

ஒரு விளையாட்டின்
இறுதிக்கட்டப் பரபரப்பில் இருக்கிறாய்
எனக்கு எங்ஙனமேனும்
விளக்கிவிட வேண்டுமாய்த் தவிக்கிறாய்
உன் மீதான குற்றச்சாட்டுகளில்
என் ஆர்வமின்மை உன்னை
அச்சம் கொள்ளச் செய்கிறது
ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாய்
அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்
கொள்ள எத்தனிக்கிறாய்
நேற்று வரை தள்ளியே நின்றிருந்த நீ 
இன்று என் தோள் சாய்ந்து விடத் துடிக்கிறாய்
என் தோள்களோ சுமந்த பாரத்தில்
காய்ப்புக் காய்த்துக் கிடக்கின்றன
..............

16.பிரேமா ரேவதி
கதைச் சிக்கில்
தீராத கதையொன்றை
கூறிக்கொண்டிருந்தேன்
மொட்டென நின்று
கேட்டாள் முன்பு -
முழுமலராளிணி
திளைப்பித்தாள் நேற்று
இன்று செம்மீன்கள்
நீந்தும் குளத்தின்
ஆழத்திற்கு
அமிழ்ந்து கொண்டிருக்கிறாள்
ஆம்பல் தோழி
கதைச் சிக்கிலேயே
நிற்கிறேன் நான்.
.................
17.பரமேஸ்வரி திருநாவுக்கரசு

சின்னதொரு துண்டைத்
திரும்பத் திரும்பக் கட்டி
அழகு பார்க்கிறாள் செல்ல மகள்
முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள்
ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது
துண்டைக் கட்டிக் கொண்டு தாயாகவும்
கழற்றியவுடன் மகளாகவும்
மாறிக் கொள்ள முடிகிறது அவளால்.
துண்டு ஒன்றுதான்...
அதுவே
அவளது மகிழ்ச்சியும்
என் துக்கமும்.
...................
18.ரோஸ்லின்
எச்சம்

ஒரு இரவு
ஒரு அன்பைப் புதுப்பிக்கிறது
ஒரு அன்பைக்
கைவிடுகிறது.
ஒரு அன்பை
விசாரணை செய்கிறது.
ஒரு அன்பை
வெளியேற்றுகிறது.
ஒரு அன்பை
நிராதவாக்குகிறது.
ஒரு இரவு
ஒரு போதும்
அன்பை அமைதிப்படுத்த
முயல்வது இல்லை.
.................
19.சாய் இந்து
மடியில் முத்துக்கள்

தனித்து விடப்பட்ட
தருணத்தின் சிப்பிக்குள்
நினைவு நத்தைகள்
கதகதப்புக் கோரி கதவைத் தட்ட
பிடிபடாத நேசத்தில்
அவன் பொழிந்த
பெரும்பிதற்றல்
கணங்களில்
கடலில் மூழ்காதும்
முளைத்து சிரித்தன
மடியில் முத்துக்கள்
.................
20.3சக்தி ஜோதி
கடலோடு இசைத்தல்

நிலத்தின்
மையத்திலிருப்பவனைக்
கடல் பார்த்தாயா எனக் கேட்டாள்

கடல்
நிலத்தின் மையத்திலிருக்கிறதா
அல்லது
நிலம்
கடலின் மையத்திலிருக்கிறதா


நிலம்
கடலை உற்பத்தி  செய்கிறதா
அல்லது
கடல்
நிலத்தைச் சூழ்ந்திருக்கிறதா

நிலத்தின் கடல்
கடலிலும்
கடலின் நிலம்
நிலத்திலும் கிடக்கிறது

நிலத்தின் பரப்பு
நீரால் குறுக்கப்பட்டிருக்க

நிலத்தின்
வாசல் திறக்கிறது
கடல் புகுகிறது

கடலின்
வாசல் திறக்கிறது
நிலம் நிறைகிறது .

அலை பாடிக் கொண்டிருக்கிறது
கடல் பாடல்களை.
.............
21.செலீனா

மன்னிக்க முடியாத துரோகத்ததப் பற்றி
நண்பசனாருவன் பேசிக்கொண்டிருந்தான்.
மன்னிக்க முடியாத துரோகமென்று
ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்.
ஒரு கைக்குட்டை தொலைந்து போவது போல
மெல்ல மெல்ல நழுவி
எங்கேயோ தொலைந்து போகும் துரோகங்கள்
ஆனால் கைகள் எப்போதும் நம்முடன் தானே
இருக்குமென குழப்பிவிட்டு சென்றிருந்தான்.
..............
22.சசிகலா பாபு

நீண்ட நாட்களுக்குப்
பின்னர்
கண்ணாடிப் பாத்திரமொன்றை
உடைத்தேன் நேற்று
கைதவறி விழுந்ததாய்தான்
நம்புகிறேன்
உங்களைப் போல
**
அருவியின் அருகில்
அமைந்திருக்கும்
உடைமாற்றும் அறைபோல்
இருக்கும் உன் மனது
அத்தனை ஈரமாய்
அத்தனை
காலடித் தடங்களுடன்
..........
23.சுமதி ராம்
தொட்டிச்செடிகளின்
சிறுவாட்டம் பொறுக்காத குழந்தை
 
உள்ளங்கைகளில்
நீர் ஏந்தி நடந்திடும்
பகல் பொழுதொன்றில்
கதவுக்குப் பின்னால்
சிரிப்படக்கிப் பார்த்துக் கொண்டிருந்தவள்
பூத்துக் குலுங்கும்
மலர்ச் செடியாகிறாள்!!!
.....................
24.தேனம்மை

1.நானென்ற கம்பீரம்..


புதைக்கப்பட்டதற்காய்ப்
புதையாமல்
வெடித்து வேர்விட்டுத் தேடு..

முளை விரல் நீட்டி
சூரியக் கரம் பிடித்து
மேலேறு...

புல்லாகவோ.,
பெருமரமாகவோ.,
நானென்ற கம்பீரத்துடன்..
...................

25.தேன்மொழி

தீண்டத்தகாதவள்

உரசலில் குத்திட்டு எழும்பாத
என் மயிர்கால்கள்
அடங்கிக் கிடக்கின்றன ஒரு
ஆண்சிங்கத்தை விடவும் கம்பீரமாய்
திருட்டுப் பூனையின் குருட்டுப் பார்வையில்
என் அனுமதிப்பு
ஒரு நாணத்தின் சாயலாய் தெரிகிறது
உண்மை என்னவெனில்
 
தீண்டத்தகாதவள் என்று
தெரியவரும்போது நீ
தீட்டுப்படவில்லை என்பதை
தெரிவிப்பதற்காக அனுமதிக்கிறேன்
உன் ஆபாசத் தீண்டலை
................
26.உமா மோகன்

கண்ணாரக் காண் 

உண்மையைச் சொல் 
உண்மையைச் சொல் 
என்கிறாய் 
உண்மையைத்தான் சொல்கிறேன் 
வேலியோரத் தும்பைப்பூவையும் 
அகன்ற திரையில் 
உருப்பெருக்கிப் பார்த்தே 
அறிந்துகொள்ளும் உன்னிடம் 
எப்படி விளக்குவேன் 
உண்மை இதுதான் 
இவ்வளவுதான் என்று......
...................
27.வத்சலா
இழப்புகள்
எனக்குள் உள்ள என்னை
நான் அடையாளம் கண்டு கொள்ளவில்லை
நீயும்தான்
நான் நீயானேன்
இல்லை -
நீ உருவாக்கிய நானானேன்
நான் எண்ணியிருந்தேன்
என்னை எனக்கு பிடித்திருக்கிறதென
உனக்கும்தான் என
திடீரென ஒரு நாள் புரிந்தது
அப்படியல்ல என
எனக்குள் இருந்த பழைய என்னையோ
காணவே காணோம்
எஞ்சியிருப்பது
அடி வயிற்றில் கனன்றெரியும் தழலும்
நீ இல்லாத சமயங்களில்
குற்ற உணர்வின்றி
தலை மாட்டில்
நான் கழற்றி வைக்கும்
நீ கட்டிய தாலியும்தான்
.................
28.சாரா
மூடி நசுங்குன பித்தளை தூக்குச்சட்டி 
வழியவழிய
சுக்கும் ஏலமும் மணக்க சக்கரப்பொங்கலும்
 

பனஓல மடிப்பில அவிச்ச பச்சரிசி பலகாரமும்
கடுகுதாளிச்ச மூக்குகடலையும்
 
பேருக்கு நாலு மெதுவடையும்
 
பருப்புவடையும்
 
நாலு கரும்புகட்டையையும் எடுத்துக்கிட்டு
 

எடகாலு மேக்காலையும் வலக்காலு தெக்காலயும் போவ
விஸ்க்குவிஸ்க்குன்னு நடந்துவர்ர
 
பாக்கியப்பாட்டிக்கு யாரு சொல்லுவா
 

நா ஊரு தொலைச்ச கதய...
..................
29.கனிமொழி
 மகளுக்கு 

கூரை என்ற அமைப்பு 
எனக்கு தாள் வேய்ந்த கூம்பு வடிவு
 
உனக்கு வண்ணமிட்ட சமதளம்
.
தரை என்ற இடம்
 
எனக்கு
 
சாணிநிறத்தில் மழைசேகரக்குழிகள்
 
 உனக்கு 
முகம் தெரியும் வெண்சதுர சமன்நிலம்
.
எனக்கறிமுகமான தொலைக்காட்சிக்கருவி
சிறு வளைந்த வடிவம்
 
உனக்கு அகல விரிதிரை
.
என் முதல் தொலைபேசி
 
விரல்நுனிகள் வட்டமாய் சுற்றிவரும்
 
உனக்கு தொடுதிரை சிறு அசைவு
.
எனக்கு கற்பித்த உலகம்
 
வளைவுகளுடைய உருண்டை வடிவம்
 
 உனக்கு எல்லாம் சமன்பரப்பு மகளே ....
................
30.உமா மகேஸ்வரி
‘மடைகள்’
விதிகளைக் கிழிப்பதில் வேலி தாண்டிக்
குதிக்கும் திகிலின்பம்;
குளிர் பெட்டிக் காய்கள் போல்
முலைகளில் பனி துளிர்க்கும்.
அலையும் மரங்கள் பெயர்தலை விரும்பும்.
மறைவுகளில் தளும்பும் சிந்தை
இமையாப் பொழுதிலும் நெஞ்சில்
இறங்கும் மூர்க்கம்.
புரியப்புரிய விலகும் வெறுப்பின் விடுதலை
மீறிய அபஸ்வர மயக்கம்
மடைகளின் விளிம்பில்
கவர்ச்சிகளிடம் தோற்ற பயம்.
இருந்தும் பரிபூரணமுற்றது
மகரந்த மஞ்சள்
ஒருபோதும் சீராகதெனினும்
ஒட்டுண்ணியாகும் உயிர்
வெற்று வாழ்விடம்
சதுப்பு நடையாக.
*
............
31.கோதை

வெள்ளி நிறத்தொரு நெடுவாள்
நீண்டு கிடக்கிறது கறைகளோடு.
எவரின் பழி முடிக்க
எவரின் குருதி குடித்ததோ.
எவரின் சிரம் கொய்ததோ.
ஓய்ந்து ஒதுங்கிக் கிடக்கிறது
கேட்பாரற்றுக் குளக்கரையில்.
இறகுகள் பொறுக்கி
விளையாடும் குழந்தை
குஞ்சுக் காலொன்றில்
தடுக்கியத் பழம்வாள்.
பதறிய குழந்தை மயிலிறகெடுத்து
வருடிச் சொன்னாள் நெடுவாளை
'சரியாய்ப் போகும் கவலைப் படாதே'

................
32.ஈழவாணி
தேவன்

இவர்கள் கனவுகளின்
தேவதையை வெறுப்பதில்லை
இதன் நிமித்தம்
வெறுப்புகளை உமிழவும்
உதாசீனங்களை விதைக்கவும்
நேசங்களை அறுக்கவும் கூட
விநாடிகளிலும் நிதானிப்பதில்லை
ஏனெனில்
நிஜங்களின் பிரசன்னத்தை
சாத்தான்களாகப் பிரகடனப்படுத்தி
மனிதப் பெண்மையைச் சபித்து
இடப்பக்கச் சிலுவைகளாக்குகின்றன
முட்களினாலான முடிகளை மட்டும் சாற்ற........
...............
33.ரத்திகா பவளமல்லி

தனிமையும்
இருளும்
அடரும் வேளைகளில்
உன் சொற்களைத்தான்
 
அறையெங்கும்
ஏற்றி வைக்கிறேன்
அசையும் மின்னல் கீற்றுகளுக்கு நடுவே
அமர்ந்திருக்கிறது தனிமை
பிறகு
ஒளியுடன் உரையாடத் தொடங்குகிறது...
பூமியிலிருந்து பெயர்ந்து
அந்தரத்தில்
 
தனக்கென ஓர் நீள்வட்டப் பாதையமைத்து
தனியே சுழல்கிறது
புதியதோர் ஒளிச்சொற்கோள்.
.....................
34.ச.விஜயலட்சுமி

ஆகாயத்தாமரை போர்த்திய ஆற்றின்
கரையோரம் நடக்கிறோம்
சகதிமிகுந்த பாதையில்
மூச்சு திணறுகிறது
அதன் கரையோரம்
அந்திச்சூரியன்
நெருப்புப் பந்தாய் ஒளிர்கிறான்
இரண்டு புறாக்கள் அங்கே அன்புசெய்திருக்கின்றன
அருகே செல்லாதீர்
அந்தப் புறாக்களுள் ஒன்றாய் நானிருக்கிறேன்
..............
35.ரேவதி முகில்
விரல் கூத்து

விரல் தேடி விரலோடி
விரலடுக்கிக் கோர்க்கும்
பார்க்கும்

விரல் பார்த்து விரல் சேர்த்து
விரல் மடித்து எடுக்கும்
கொடுக்கும்

விரல் திருகி விரல் பிசைந்து
விரல் நீவி வருடும்
சொடுக்கும்

விரல் இறுக்கி விரல் வளைத்து
விரல் நெருக்கிச் சிலிர்க்கும்
கிளர்த்தும்

விரல் கிள்ளி விரல் பூசி
விரல் கோதிப் பொதியும்
களிக்கும்
.............

36.முபீன் சாதிகா
மானமில் வண்டு

நாணமில் வண்டும்
நகைக்கும்
பொன்விழி மூடி
திகைக்கும்
அகம் சூடேற
சிவக்கும்
உடன் போகா உடலும்
கடன் தீர்ந்து
அடங்கும்
இல்லின் சதியும்
இகம் அமர்ந்து
எரிக்கும்
வளியும் வஞ்சித்து
உட்புகா அறையுள்
கூடும் நிமிர்ந்து
ஒடுங்கும்
ஒப்பும் ஒரு சமயம்
சூதின் வலையில்
எத்தும்
கோர்ப்பதும் அவிழ
சேர்ப்பதும் விலக
பகுக்கும்
தேனும் இறையாய்
தவழும் பூவும்
உகுக்கும்
மானமில் வண்டும்
மண் கலந்து
நசியும்



டிஸ்கி :- நன்றி கலைஞன் பதிப்பகம் & அழகப்பா பல்கலைக்கழகம், ஆசியான் இந்தியக் கவிஞர்கள் சந்திப்பு. 

3 கருத்துகள்:

  1. அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீத்ஸ்

    நன்றி சர்க்காரி தோஸ்த்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)