வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

76.ஆண்-பெண் என்ற பிளவு உளவியல் ரீதியானதா சமூகவியல் ரீதியானதா?

உடலியல் ரீதியானதும் கூட. அது சமூக ரீதியாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தால் இருவருமே டாமினட் ஆகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். சீரற்ற முறையில் சமூகம் ஏற்றி வைத்ததை இன்று அது நம் மீது சாற்ற நாம் அனுபவிக்கிறோம்.

77.ஆண்மைக்குரியது பெண்மைக்குரியது என்பது இயல்பானதா வலிந்து உருவாக்கப்பட்டதா?

உடலியல் கூறுகள் பொறுத்து உருவாக்கப்பட்டது. (தினம் வெளியே சென்று பேருந்தைப் பிடித்தோ, ஆட்டோவிலோ அல்லது அலைந்தோ வேலைக்குச் சென்று வருவதை என் உடல்கூறு தாங்குவதில்லை. ) அதே போல் கவிதையிலும் அப்படித்தான். முரட்டுப் பாய்ச்சலாய் எழுதும் பெண்களையும் மெல்லிய உணர்வோடு கவிதை புனையும் ஆண்களையும் தரிசிப்பதால் இது இருபாலாருக்கும் பொதுவானதுதான்.

78.இந்தப் பிளவை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?

ஆணைப் போல உடல் & மன வலிமை உள்ள பெண்கள் இருக்கிறார்கள். அதே போல் பெண்ணைப் போல மெலிந்த இதயம் படைத்த ஆண்கள் இருக்கிறார்கள். இது அவரவர் எதிர்கொள்ள வேண்டியது.

79.இதிலிருந்துதான் ஆண் மேலாதிக்கம் உருவானதா?

முன்பு இருக்கலாம். ஆண் மேலாதிக்கம் என்ற ஒன்றே இப்போது இல்லை. வீடுகளில் விட்டுக்கொடுத்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே. அப்படியானால் இப்போது பெண்கள் நடந்துகொள்வதும் எழுதுவதும் பெண் மேலாதிக்கம் என்று கொள்ளலாமா.

80.பெண்ணியம் ஆண்களையும் உள்ளடக்கியதுதானே?

பெண்ணியம் என்பது தனது சுதந்திரத்தையும் சுயநலத்தையும் மட்டும் பேணுவதல்ல. அதில் அடுத்த மனிதருக்கான கருணை இருந்தால் அது ஆண்களையும் உள்ளடக்கியதுதான்.

81.ஆண்மையும் கட்டமைக்கப்பட்டது என்ற விழிப்புணர்வு உருவாவதற்கு இதுவரை ஆண்களின் எழுத்துகள் தமிழில் பங்களிப்பு செய்திருக்கிறன்றனவா?

சு சமுத்திரத்தின் ஓரிரு படைப்புகளைச் சொல்லலாம். பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெயமோகன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோரின் சில எழுத்துக்களையும் சொல்லலாம்.

82.பாலினம் விழிப்புணர்வடைய ஓர் உளவியல் பயணம் தேவையாஅது சாத்தியமா?

தேவைதான். அதற்கான தெளிவு, சூழல், நபர்கள், உரையாடல் மற்றும் வாசிப்பு அமையும்போது சாத்யமாகும். மூன்று பாலினத்துக்கும் மட்டுமல்ல. ஐம்பத்தாறு வகை மனிதருக்கும் அது தேவை.

83.எழுதுவதற்கான ஓர் அறிதல்(revealation) கிடைத்திருக்கிறதா?

எழுத்தின் மூலம் வெளிப்படவேண்டும், அறிந்த கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் காரணமாக எழுதுவதுண்டு. ஓரளவு அறிதல் கிடைத்திருக்கிறது. ஆனாலும் தேடலைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறேன்.

84.எழுதுவதற்குக் காரணமான திருப்புமுனை அனுபவம் இருந்திருக்கிறதா?

கல்லூரிப் பருவத்துக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து பிள்ளைகள் வளர்ந்தபின் ஏற்பட்ட தனிமை, விரக்தி, வெறுமையக் களையவே வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் துவங்கினேன். ஆண்குழந்தைகளுக்கு அம்மா தோழிதான் ஆனால் குறிப்பிட்ட பருவம் வரை மட்டுமே. அதன் பின் அவர்கள் நிஜமான பதின்பருவத் தோழிகள் தேடிப் போய்விடுவார்கள். அப்போது தனித்துவிடப்படும் அம்மாவாக இருந்த நான் எழுத்தைத் துணையாகக் கொண்டேன். கணவருக்கு என்றைக்கும் தோழிதான். ஆனால் எழுத்து என்னைப் புதிப்பித்து இளமையான இன்னொரு புது முகத்தைத் தந்தது. பொதுவெளியில் நிறைய அங்கீகாரத்தையும் தந்தது.

85.கவிதையைத் தவிர வேறு படைப்புகளில் கவனம் இருக்கிறதா?

சிறுகதைகள், குறுநாவல், கட்டுரை, பேட்டி & நேர்காணல்கள், புகைப்படப் பகிர்வுகள், சினிமா & நூல் விமர்சனங்கள், வட்டார வழக்கு, ( செட்டிநாட்டுச் சொல்வழக்கு ), வட்டார வாழ்வியல், வீடுகளை ஆவணப்படுத்துதல், உணவு, கலாச்சாரம், பயணம், கோயில்கள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், மாவீரர்கள், சுற்றுலா, சிறுவர்க்கான நீதிக்கதைகள், தீம்களில் அமைக்கப்படும் கோலங்கள், வட்டாரவகை உணவுகள்,  ஆகியவற்றைப்பதிவு செய்வதில் ஆர்வம் இருக்கிறது.

86.கவிதை எழுதுவதற்கான பொறி எங்கிருந்து கிடைக்கும்?

சில சமயம் உள்ளிருந்தும் சில சமயம் வாசிப்பிலிருந்தும். சுற்றிலும் நிகழ்பவை நம்மை ஏதோ ஒரு விதத்தில் கடுமையாகப் பாதிக்கும்போதும் பொறி பிறக்கும்.

87.உங்கள் எழுத்துகளால் உங்கள் ஆளுமையால் தாக்கம் கொண்டு எழுதுபவர்கள் இருக்கிறார்களா?

ஏழெட்டுப் பேர் என்னைப் பார்த்து ஊக்கமடைந்து வலைத்தளம் ஆரம்பித்து எழுதினார்கள். ஆனால் தொடர்வதில்லை. 

சிலர் முகநூலிலும் வலைத்தளத்திலும் பதியும் கவிதைகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பத்ரிக்கைக்கும் அனுப்பி விடுகிறார்கள். பேர் வேண்டாமே.

88.தமிழில் கவிதையின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?

ஃபாஸ்ட்ஃபுட் மாதிரி ( ஹைக்கூ, க்ளரிஹ்யூ, சென்ரியு போக ) ஓரிரு வரிகளில் கவிதைகள் வரலாம்.

89.பெண்களின் கவிதைகள் புதிய முயற்சிகள் செய்கின்றனவா?

ஆம். முபின் ஸாதிகா மேம் பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன்.

90.பெண்களின் கவிதைகளை வாசிக்கும் வகைமை மாறவேண்டுமா?

என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.

91.பெண் கவிஞர்கள்பெண் எழுத்தாளர்கள் இன்னும் கூட அதிக அளவில் உருவாகாமல் இருக்கக் காரணம் என்ன?

வெகுஜனப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமே இன்றைய அநேகப் பெண்களிடம் இல்லை. இதில் இலக்கியம் படிப்பதெப்போ மேலும் படைப்பதெப்போ. அவர்கள் கூடா நட்பாய் மூடாத் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

92.எழுதுவதில் பயிற்சி இன்மைவெளியில் தெரிவதால் வரும் கவனத்தைத் தவிர்க்க இது போன்ற சில சிறிய காரணங்கள் தவிர வேறென்ன காரணங்கள் இருக்கின்றன?

என்னைப் பற்றி ஏன் எழுதினாய் என யாரும் பிரச்சனை செய்யக் கூடும் என்றாலோ, எழுத்துக்களில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியபின் வாசிக்கும் யாரும் அதைக் கிண்டல் செய்யக்கூடும் என்ற எச்சரிக்கையாலோ, நத்தைக்கூட்டு மனப்பான்மையினாலோ, என்ன சொல்லித்தான் என்ன ஆகப்போகிறது என்ற விரக்தியிலோ பெண்கள் எழுதுவதில்லை

சில பெண்களே ’இதையெல்லாம் நீ எழுதித்தான் தீரணுமா?’ என்றும். இதைப் போய் எழுதுவார்களா என்று இகழ்ந்தும். ’ஏன் எழுதுகிறாய் குடும்பத்தைப் பார், பிள்ளைகள் கல்யாணத்தைப் பார் ‘ என்று அறிவுரை கூறியும் , ’இதெல்லாம் தெரியாதா என்ன புது விஷயமா என்ன’ என்றெல்லாம் நகட்டியும் இருக்கிறார்கள்.

93.பெண் நாவலாசிரியர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் ஏன்?

பத்துவரிக் கவிதை எழுதவே அவர்கள் பேப்பர் தேடவேண்டும். முகநூலிலும் வலைத்தளத்திலும் சிலர் எழுதுகிறார்கள். ஆனால் சொல்ல வந்த கருத்துக்களைக் கோர்வையாக நாவலாக்கி எழுத மிகுந்த நேரம் எடுக்கும். அதைச் சாத்யப்படுத்த அவர்களின் சிலரின் அன்றாடப் பணிகளில்/பிரச்சனைகளில் நேரம் கிடைப்பதில்லை.

94.வாசிப்பின்மை ஒரு காரணமா?

அதுவும் ஒரு காரணம். ஆனால் வாசிக்கும் அனைவரும் எழுதுவதில்லையே. அதற்கான ஒரு இண்டர்னல் டிசையர் இருப்பவர்கள் எழுதியே தீர்கிறார்கள்.

95.படைப்புக்கான களம் உருவாகவில்லையா?

ஏன் உருவாகவில்லை. எல்லாம் இருக்கிறது. ( ALL EXISTED ). நேரமும் எண்ணமும் எழுத்தும் ஒன்றுகூடச் சமயம் கிடைப்பதில்லை. சரியாகச் சொல்வோமோ, சரியாகப் புரிந்துகொள்ளப்படுமா என்ற தயக்கமும் ஒரு காரணம்.

96.சமூகத்தில் படைப்புக்கு உரிய இடம் இன்னும் உருவாகவில்லைஅது மட்டுமே காரணமா?

இல்லை, முகநூல் வாட்ஸப் டிவிட்டர் போன்றவற்றில் பொழுதுபோக்குபவர்கள் பெருகிவிட்டார்கள். இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிசமே இன்று வாசிக்கப்படுகிறது. கவிதைகளையும் கதைகளையும் கட்டுரைகளையும் பத்ரிக்கைகளே வரவேற்பதுமில்லை, வெளியிடுவதுமில்லை.

97.படைப்பாக்கக் கல்வி இல்லாதததாலா?

படைப்பாக்கம் என்று நாம் சொல்வதைப் பலர் தேவையில்லை என நினைக்கிறார்கள். படிப்பு அது சார்ந்த புத்தகங்கள் படித்து வேலையில் அமர்ந்தால் போதும். இலக்கியம் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்பதே பெரும்பாலான மனிதர்களின் எண்ணம். மேலும் அபத்தமான தொலைக்காட்சித் தொடர்கள் ஆழ்ந்த இலக்கியங்களை வாசிக்க அனுமதிப்பதில்லை.

கல்லூரிகளில் மொழிப்பாடம் என்பது இல்லவே இல்லை. மொழிப்பற்றும், தனது மொழி என்ற பிரக்ஞையும் பெருமிதமும் அற்ற, தனது வேரைத் தொலத்த, எந்த வரலாற்று ஆவணமும் அறியாத ஒரு தலைமுறை உருவாகிப் பெருகிவிட்டது. 

98.படைப்பாக்கம் இல்லாத அறிவுச் சூழல் எல்லாப் படைப்பாளர்களையும் அழுத்துகிறதாநெருக்கடிக்குத் தள்ளுகிறதா?

ஆம். தத்தளிக்கச் செய்கிறது. எழுதும் ஒன்றிரண்டையும் எழுதலாமா வேண்டாமா என மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. சமூகத்துக்கு இலக்கியவாதிகள் வேண்டவே வேண்டாமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. சம்பாதிப்பதும் கேளிக்கைகளும்தான் வாழ்வாகிவிட்டது. மெட்டீரியலிஸ்டிக் உலகில் கவிதை எழுதுபவர்கள் அர்த்தமற்றவர்கள், மதிப்பற்றவர்கள்.


99.மற்ற படைப்பாளர்களின் படைப்புகளை எப்படி அணுகுகிறீர்கள்?

வெறும் வாசகியாகவே அணுகுகிறேன். அவற்றில் எனக்குச் சில பகுதிகளில் மாற்றுக்கருத்து  இருந்தாலும் அதைப்பற்றி லேசாகக் கோடு காட்டிப் பிடித்தவற்றை மட்டுமே வலைத்தளத்தில் மேற்கோள் காட்டி நூல்பார்வையாக விவரிப்பேன்.

100.நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை நினைவு கொள்ளத்தக்கக் கவிதை எது?

இவை இரண்டுமே மிகப் பிடிக்கும். இவற்றில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீரின் பயணம்
எங்கோ பெய்யும் பெருமழையின் 
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது 
என் உயிர்ப்பைஇருப்பை
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு 
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கி 
நகர்கிறதென் பயணம்

பச்சை வண்ண புடவைக்காரி
பழைய பேருந்துகள்
சுற்றிச் செல்லும்
தடம் அற்ற சாலையில்....
வாதுமை மரத்தின் கொட்டைகள்
அங்கங்கே சிதறிக் கிடக்க....
ஒரு பச்சை வண்ணப் புடவையில்
அவள் வந்தாள்...
அழகென்று சொல்ல முடியாது..
பெயரும்., விழியும்.,
சிரிப்பும் பழகுவதும் அழகு..
அறிந்திருந்தேன் அவளை முன்பே.,
உருவம் அறியாமல் உருவாய்...
என் மனச் சித்திரம் போல்
இருந்தாள் பிசகாமல்., எளிமையாய்..
குழப்பமில்லாமல் ., சிக்கலில்லாமல்.,..
எப்போதும் அறிந்தவர் போல்
பேசிக் கொண்டிருந்தோம்...

அவள் விழிகளில் இருந்தும் .,
புன்னகையில் இருந்தும்
என்மேல் மழைத்துளி
சிதறிக்கொண்டே இருந்தது..
வெப்பமும் புழுக்கமும்
புழுதியும் விடைபெற
எப்போது குளிர்ந்தேன் என்பது
தெரியாமல் குளிர்ந்து கிடந்தேன்...
சாலையோரக் கல் போல்..

5 கருத்துகள்:

  1. அசந்து போனேன். நிதானமாகத் தான் முழுதும் படிக்க வேண்டும். வாசித்து விட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்தமாதிரிப் பதிவுகளுக்கு கருத்திடுவோரைக்காணவில்லையே

    பதிலளிநீக்கு
  3. அருமையான படைப்பு
    தொடருங்கள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  4. நச்சென்று உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளீர்கள். ரசிக்கவைத்த பேட்டி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜிவி சார் !

    அதான் தெரில பாலா சார்.

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)