வியாழன், 4 ஜனவரி, 2018

நலந்தாவின் கருத்துப் பேழையில் தென்றல் சாயின் தனித்தமிழ் கட்டுரை.

தென்றல் சாய் காரைக்குடியில் தனது பெற்றோர் நடத்தி வந்த கார்த்திகேயன் பள்ளியைத் தனது சகோதரியுடன் நடத்தி கல்விச் சேவை ஆற்றி வருகிறார். மிகச் சிறந்த் ஆளுமை மிக்க பெண் அவர். அவரது எழுத்துக்களும் செறிவானவை. நந்தவனம் என்ற பத்ரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் படைத்து வருகிறார் . காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் பங்களிப்புச் செய்துள்ளார்.

எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்று தனது இலக்கியப் பணியையும் கல்விப் பணியையும் ஒருங்கே சிறப்பாக ஆற்றிவரும் அவருக்கு முதலில் எனது பாராட்டுகள். நூலில் இவரது கட்டுரையும் இன்னும் 24 கட்டுரைகளுமே அருமை. 
நலந்தா வெளியிட்ட கருத்து பேழையில் இவரது கட்டுரை மிகச் சிறப்பு. இதை இவ்விழாவுக்கு வந்திருந்த மாண்பமை நீதியரசர் மகாலிங்கம் வாழ்த்திப் பேசினார். வ சுப மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நலந்தா இலக்கியச் சாளரம் அநேகரின் எழுத்துக்களை அரங்கில் கொண்டுவந்துள்ளது. இந்நிகழ்வு காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் நடைபெற்றது. 
அப்பள்ளியின் முதல்வர் பீட்டர்ராஜா இம்மாதிரி இலக்கிய நிகழ்வுகளுக்கும் தம் பள்ளி மாணாக்கருக்கு புதிய விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதிலும் முன்னணி வகிப்பவர். 
வாழ்த்துக்கள் திருமதி தென்றல் சாய், முனைவர் திரு  சிதம்பரம். ( அருமையாகத் தொகுத்து அளித்தார் ) , வசுப மாணிக்கனாரின் புதல்வி திருமதி மாதரி, திரு நலந்தா செம்புலிங்கம், திரு பீட்டர்ராஜா. உங்களின் முயற்சிகள் தொடரட்டும். இலக்குகள் வெற்றியடையட்டும். 

முகநூலில் தென்றல் சாய் பகிர்ந்திருந்ததைக் கொடுத்துள்ளேன். 
///கருத்துப் பேழையில் என் கட்டுரை .
24 கட்டுரைகளும்
ஒரு புதுக்கவிதையும்
இடம் பெற்ற நூல்.
மனமார்ந்த நன்றிக்கும்
பாராட்டுக்கும் உரியவர்
தேனீயாய்ச் சேகரித்து நூலாக்கம் செய்த தமிழ்க் காதலன் நலந்தா செம்புலிங்கம்.
பேராசிரியர்கள், தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர்கள், வணிகர், தொழிலாளர் எனப் பலதரப்பட்ட தமிழ் ஆர்வலர்கள் இணைந்து தொடுத்த கதம்ப மாலை .
படிக்க வாருங்கள் நண்பர்களே.///

///மாண்பமை நீதியரசர் என் கட்டுரைக்குப் பாராட்டு.
8.12. 2017
முனைவர் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவினை
நலந்தா இலக்கியச் சாளரம் ஆவணப்படுத்தும் பெரும் பேறு பெற்றது.
"தனித்தமிழும் இனித்தமிழும்" கருத்துப் பேழையை மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் வெளியிட,
வ.சுப.மா.வின் மகள் முனைவர் மா. மாதரி பெற்றுக் கொண்டது,
அவர் தந்தையின் நெஞ்சுக்குகந்த தனித் தமிழுக்குச் செய்த மரியாதை.
கொடைஇமயம் வள்ளல் அழகப்பச் செட்டியாரின் உருவத்தை வாகனங்களிலும் ஒட்டும் படமாக (sticker), தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் முனைவர்.இர.சந்திரமோகன் வெளியிட,
RMS நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு . ஆ.பீட்டர் ராஜா பெற்றுக் கொண்டது காரை மாநகர் வாழ் மக்கள் சார்பாக நன்றிக்கடன் .
தன் தந்தையின் குணாதிசயங்களை உணர்வுப்பூர்வ அனுபவங்களுடன் மகள் மாதரி பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியுரை; எந்த நூலிலும் கிடைக்காதது.
தான் ஓர் அரசுப் பள்ளி மாணவன் என்ற பெருமிதத்தோடு தன் சிறப்புரையைத் தொடங்கிய நீதியரசர்,
தான் வழங்கிய 'பாடத்திட்டத்தில் திருக்குறள்' தீர்ப்பிற்கு வித்திட்டது காரைக்குடி மண் என்று வியப்பிலாழ்த்தி,
தமிழின் தொன்மைப் பெருமைகளை விரிவாகச் சான்றுகளுடன் பகர்ந்தது சிறப்பு.
அடுத்ததாக, கருத்துப் பேழையில் மூன்று சிறந்த கட்டுரைகளைப் பற்றிக் கூறுகிறேன் என்று சொல்லி,
முதலாவதாக நான் எழுதிய கட்டுரையின் சில வரிகளைச் சொல்லிப் பாராட்டியதோடு, இவை தென்றல் எழுதிய கட்டுரையில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன என்று என் பெயரையும் குறிப்பிட்டு, அயல் நாடுகளில் தாய் மொழி கற்றலின் தீவிரத்தோடு சேர்த்துச் சொல்லி விளக்கியது மகிழ்ச்சி.
நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் ஜோதி சுந்தரேசன், சின்ன அலமேலு மற்றும் அழகாக நன்றியுரைத்த பேரா. முனைவர் சிதம்பரம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.///

இது தென்றலின் பகிர்வு. 

இனி என் கருத்துக்கள். 

வசுப மாணிக்கனாரின் பல்வேறு நன்முகங்களைப் பற்றி மாதரி அவர்கள் மூலமும் நீதியரசர் , நலந்தா செம்புலிங்கம் ஆகியோரின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் தனித்தமிழுக்காக மட்டுமல்ல. எளிய மாணாக்கருக்குக் கல்வியில் அவரது உதவியும் சேவைகளும் அளவிடற்கரியன.
அதேபோல் நீதியரசரின் பேச்சு மிகச் செறிவுள்ளதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நூலில்  என்னைக் கவர்ந்த கட்டுரைகள். 
முதலில் தென்றல் அழகப்பனின் முன்னுரை. தேமதுரத் தமிழோசை பிழையின்றி முழங்கத் தன் தந்தை ஆற்றிய பணிகளை எடுத்தியம்பியது சிறப்பு.

தேவகோட்டை நகரத்தார் தொடக்கப்பள்ளியின் ஆசிரியை அலமேலுவின் கவிதை சிந்தனையைத் தூண்டியது. நீதி நூல்கள் கற்பிக்கப்படுவதற்கும் தனித்தமிழுக்காகவும்  இப்பள்ளி ஆற்றிவரும் பணி அரும்பணி. 
பிறமொழிக் கலப்பு பற்றி மாணிக்கவாசம், அமுதமொழி என்று கமலவேலன், அந்நியமொழி ஊடுருவல் பற்றி ரவிச்சந்திரன், தமிழ் வளர்த்த இலங்கை வானொலி பற்றி மூர்த்தி, தாய்மொழிக் கல்வி பற்றி முனைவர் ஜெயஸ்ரீ, வடமொழிச் சொற்கள் கலப்பு பற்றி புலவர் சங்கரன் , தாய்மொழியே வாழ்விக்கும் என்று விசுவநாதன், தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கவேண்டும் என முனைவர் மு. பழனியப்பன், மாற்றங்களைத் தமிழ் ஏற்கவேண்டும் என முனைவர் கண்ணன், பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொற்களைச் சிதைக்காமல் செதுக்குவோம் என நூலகர் விசயன் , மின் பதிவுகள் ( வலைப்பூ, இணையம், விக்கிபீடியா ) ஆக்க வேண்டியதன் அவசியம் குறித்து லெனின், வீட்டிலும் தமிழ் பேசவேண்டியதன் அவசியம் குறித்து பரமசிவம், முதலில் தமிழில் பேசுவோம் என ஆசிரிய பழ பாசுகரன், மொழியை எளிதாக்குவது குறித்து கல்லல் முத்தையா, பேச்சு வழக்கில் தனித்தமிழ்பயன்பாடு பற்றி புலவர் ராசகோபால், தமிழிலும் 22 வட்டார வழக்கு பற்றி இன்னம்பூரான்,கணினித்தமிழ் பற்றி பாலபாரதி, வனவியலில் தனித்தமிழ்ச்சொற்கள் பற்றி கவிஞர் அரவரசன், மொழிப்பற்றின் அவசியம் பற்றி பூவை பி தயாபரன், தமிழில் பெயரிடுதல் பற்றி வைரமுத்து, நாம் சிந்திக்கும் மொழியே நமது தாய்மொழி என மருத்துவர் திருப்பதியும் மாணிக்கக் குறள் பற்றி தமிழாகரர் முருகசாமி, ஆகியோரின் ஆக்கங்கள் கவனம் கொள்ளற்குரியன. 
ஆங்கிலமொழிக் கலப்பும் அது தமிழில் கலந்து  ஏற்படுத்தியுள்ள யதார்த்தத் தன்மை பற்றியும் சொல்லும் தென்றல் சாயின் கட்டுரை முக்கியமான ஒன்று
மொழியின் இருத்தலின் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற முனைவர் மா சிதம்பரத்தின் கட்டுரை மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரை. 218 மொழிகளை ஆங்கிலம் ஒழித்தது பற்றியும், தனித்தமிழ் இயக்கம் பற்றியும் ஆங்கிலம் மொழியே தவிர அறிவு அல்ல என்றும் கூறியதும் மேலும் சார்த்தரின் தத்துவச் சிந்தனைகளும், தெரிதாவைப் போலக் கலாச்சாரத்தையும், இத்தாலியின் க்ராம்சியின் அரசியல் தத்துவ நோக்கும், பிரேசிலின் பாலோஃபினாரேயின் கல்விச் சிந்தனையும் தமிழில் தோன்றினால் உலகம் தமிழின் பக்கம் பார்வையைத் திருப்பும் என்ற கருத்து அருமை.  
படித்துப் பாருங்கள். வாழ்த்துங்கள் இவர்கள் அனைவரையும். 

4 கருத்துகள்:

  1. காரைக்குடி அழகப்பா கல்லூரியின் பழைய மாணவன் நான். டாக்டர் வ.சுப.மாணிக்கனார் என் தமிழ் பேராசிரியர். பசுமை நிறைந்த (கல்லூரி) நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  2. தமிழகத்தில் சிதறி கிடக்கும் முத்துக்களை ஒன்று சேருங்கள். ஸ்ரீநாத்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விழா நிகழ்வுப் பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி. கட்டுரையாளர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி முத்துசாமி சார்

    நன்றி ராமநாதன் சார்

    நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)