புதன், 6 டிசம்பர், 2017

நலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.

காரைக்குடியிலுள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி எனும் அரசுப் பள்ளியை
"" தனியார் பள்ளிகளைத் திரும்பிப் பாா்க்க வைக்கிறது"" என ஒரு இதழ் அண்மையில் பாராட்டியுள்ளது. எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தால், தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகியிருக்காதே!
வ.சுப.மாணிக்கனாரின் தாய்மொழிக் கல்விக் கொள்கை வெற்றி பெற்றிருக்குமே!
ஆகவே வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழாவை அந்தப் பள்ளியில் கொண்டாட விழைகிறோம்.
08.12.2017 வெள்ளி (மாலை 5.30 மணி) ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
தமிழ் நெஞ்சினரே வருக! வருக!

அழகப்பருக்காகத் தவம் செய்த சொல்
நல்ல சொல் வேண்டுமென கவிஞர்கள் தான் தவிப்பார்கள், தவமிருப்பார்கள்.
ஒரு தமிழ்ச் சொல் தவமிருக்குமா? ஒரு நல்ல தமிழ்ச் சொல் தவமிருப்பதாக ஒரு கவிஞர் கற்பனை செய்கிறார். அந்த புரட்சிக் கவிஞர் வேறு யாருமல்ல நமது வ. சுப. மாணிக்கனார் தான்.
தவமிருப்பது எந்தச் சொல் தெரிமா?
வள்ளல் என்ற சொல் தவமிருக்கிறதாம், எதற்கா? அந்தச் சொல்லை ஏற்கத் தகுதியாவன் பிறக்க வேண்டுமாம். அந்த தவத்தின் பயனாகப் பிறந்தவர் தானாம் வள்ளல் அழகப்பர்.
ஆனால் வள்ளல் எனும் சொல் யாரை நினைந்து தவம் செய்கிறது என்பதை வ.சுப.மா. சொல்லவில்லை. நான் சொல்லாமல் இருக்க முடியாது. வள்ளல் எனும் சொல் வ. சுப. மாணிக்கனாரை நினைந்து தான் தவமிருந்தது.
அந்தக் கொடை இமயத்தின் புகழ் கொடியை ஏந்திய தமிழ் இமயமல்லவா வ.சுப.மா.? அதனால் தான் நலந்தா எடுக்கும் வ.சுப.மா. நூற்றாண்டு விழா காரைக்குடி கண்ட இரு இமயங்களையும் கொண்டாடும் இரட்டை விழாவாக பரிணமிக்கிறது.
தமிழ் நெஞ்சினீரே வருக வருக
இனி, வள்ளல் பால் வ.சுப.மா கொண்ட தீராக் காதலை சுட்டும் அந்த வெண்பா (கொடை விளக்கு நூலில் 31 ஆம் வெண்பாவாக இடம் பெற்றுள்ளது)
வள்ளற் றமிழ்சொல் வணங்கித்
தவஞ்செய்து //கொள்ளப் பிறந்த கொடையழகன் உள்ள //
உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார்//
மடமை தொலைக்கும் மகன்//

நெஞ்சில் வாழும் ச.மெய்யப்பனார் !!
நலந்தா இலக்கியச் சாளரம் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டில் அவரைப் போற்றித் துதிப்பதற்கு மேலாக அவருடைய சிந்தனைகளை மறுபதிவு செய்வதற்கும் மேலாக அவருடைய கொள்கைகளின் தேவையை வலியிறுத்துவதற்கும் மேலாக ஏதனும் ஒரு பணி செய்ய விழைந்தது.
வ.சுப.மா அவர்களின் நெஞ்சுக்கனிய கொள்கை தனித்தமிழ் கொள்கையாகும். அதைப் பற்றிய விவாதத்தை மேற்கொள்ள விழைந்தோம்.
ஒரு புத்தகக் கடைக்காரன் வ.சுப.மா குறித்து விவாதம் நடத்துவதா? கட்டுரைகள் திரட்டுவதா? எனப் பலர் மனதிற்குள் நினைத்தார்கள். எம் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. ஏனெனில் கட்டுரைகள் திரட்டுவது தொகுப்பது போன்றவற்றை ஒரு முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் ஆழமாகப் பதிவாகிவிட்டது.
அதைவிடக் கொடுமை தனித்தமிழ் பற்றி பேசுவதே தேவையற்றது எனச் சிலர் நேரில் வாக்குவாதம் செய்தனர். நாங்கள் மாற்றுக் கருத்தையும் நாங்கள் பிரசுரம் செய்யத் தயராக இருக்கிறோம் என்ற பிறகும் அவர்கள் கட்டுரை எழுதித் தரவில்லை. ஆகவே, தனித்தமிழ் ஆதரிப்பார் இல்லாவிடினும் கடைபிடிப்பார் இல்லாவிடினும் தனித்தமிழ்
நிற்கும் எனத் தெளிந்து மகிழந்தேன். இதுவே கருத்துப் பேழை அச்சேறும் முன்னரே கிடைத்த வெற்றியாகும்.
எல்லாம் நன்மைக்கே நாங்கள் எதிர்கொண்ட இந்த நிலைகளால் தான் தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை கண்ணாடி மாளிகைக்குள் அரங்கேறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் சமூகத்திற்கு பயன் தரும் கூட்டுச் சுரைக்காயாக அமைந்துள்ளது.
இந்தக் கருத்துப் பேழையில் இன்று பொறியில் பயின்றுவரும் மாணவரிலிருந்து வ.சுப.மா அவர்களின் ஆரம்ப கால மாணவர் வரை பல தரப்பினர் எழுதியுள்ளார்கள்.
தாள், அச்சு ஊடகம் எல்லாம் மலையேறப் போகின்றன தனித் தமிழோ கலப்புத் தமிழோ எதுவும் நிற்காது மின்தமிழ் தான் நிற்கும் என்கிறார் ஒரு பொறியாளர். மொழியும் சிந்தனையும் இணைபிரியாதவை எனப் புதிய தளத்திற்கு விவாதத்தை எடுத்துச் செல்கிறார் நரம்பியல் மருத்துவர் திருப்பதி. காட்டுக்குள் செடியும் கொடியும் விலங்குகளும் மட்டுமில்லை தமிழின் சொல் வளமும் இருக்கிறது என நிகண்டை மேற்கோள் காட்டி நீளப் பட்டியலிடுகிறார் வனத் துறையில் பணியாற்றிய கவிஞர் அரவரசன். முதலில் தமிழைப் பேசச் சொல்லுங்கள் பிறகு தனித்தமிழைப் பற்றியெல்லாம் யோசிப்போம் ஓங்கி அறைகிறார் ஒரு ஆசிரியர்.
மின் ஊடகத்திற்கு ஏற்ப எழுத்துச் சீர் திருத்தம் தேவை என்பதோடு சில முன்வரவையும் வைக்கிறார் வல்கனைசிங் தொழில் செய்து வரும் கல்லல் முத்தையா. நிறைவாக நாங்கள் எதிர்பார்த்தைவிட கருத்துப் பேழையின் வனப்பும் பரப்பும் விரிந்து செழுமை பெற்று களிபேருவுகை அளிக்கிறது. இதில் குறையிருந்தால் அதற்கு நானே பொறுப்பு. ஏதேனும் நிறை இருந்தால் ஆங்கில வழியில் படித்த என்னுள் நற்றமிழை விதைத்தரும் நாளும் என் நெஞ்சில் வாழ்கின்றவருமான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனாருக்கே உரியதாகும்.
தமிழ் நெஞ்சினீரே! தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை வெளியீட்டு விழாவிற்கு வருக! வருக!!

நண்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் நலந்தா = நல்ல புத்தகக் கடை என்னும் நூல் நிலையத்தைத் திறம்பட நடத்தி வருபவர். இதன் மூலம் பல்வேறு மாணக்கர்களும் புத்தக நேயர்களும் பயன் பெற்றுள்ளார்கள். 
வெறும் புத்தக விற்பனை, வெளீயீடு ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் தமிழுக்கும் சேவையாற்றி வரும் அரும்பெரும் மனிதர். தனித்தமிழும், இனித்தமிழும் என்ற தலைப்பில் வ சுப மணிக்கணார் பற்றிய கருத்துப் பேழை வெளியிடும் தருணம், தமிழ் இமயத்தோடு கல்வி இமயம், பதிப்பக இமயம் ஆகியோரின் கரம் கோர்த்தும் பயணித்து நம்மையும் தமிழ்ப் பயணம் மேற்கொள்ள வைக்கும் அவரது சீரிய முயற்சிக்குப் பாராட்டுகள். கருத்துப்பேழைக்குப் பொக்கிஷங்கள் சேர்த்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள். 
இந்த நல்ல முயற்சியில் அவருக்கு உறுதுணையாயிருக்கும் இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளிக்கும் ,அப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணாக்கர்கள், அவர்களை வழி நடத்தி நகராட்சிப் பள்ளியையும் பேர் பெற்ற பள்ளியாக மாற்றியிருக்கும் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜ் அவர்களுக்கும்    மனமார்ந்த வாழ்த்துகள்.  விழா சிறக்கட்டும்
வாய்ப்பு இருக்கும் காரைக்குடி மக்கள் 8. 12. 2017 மாலை 5.30 க்கு ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் இந்நிகழ்வில்  கலந்து பயன் பெறுக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)