புதன், 2 ஆகஸ்ட், 2017

துறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.

துறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.


139 கட்டுரைகள் கொண்ட இந்நூல் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழாக் கொண்டாட்டத்தின்போது நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களால் வெளியிடப்பட்டது.

துறைதோறும் என்பதன் முழுப்பரிமாணத்தில் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒப்பியல், அரசியல், ஆட்சியியல், கல்வியியல், உளவியல், அறவியல், ஆளுமையியல், பண்பியல்,மகளிரியல், கலையியல், இலக்கியவியல், அறிவியல், ஊடகவியல், சூழலிய, மெய்யியல், எதிர்காலவியல் ஆகிய பதினாறு துறைகளில் இந்நூல் கம்பராமாயணத்தை அலசுகிறது.

கிட்டத்தட்ட 140 விதமான ( முனைவர்களின் ) எழுத்துக்களையும் எண்ணங்களையும் கம்பனில் தோய்ந்து படிக்கும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையான விருந்தாக அமைகிறது. 

கம்பன் யார் என்ற முதல் கட்டுரையிலேயே கம்பன் அடிசூடி அவர்கள் பல்வேறு துறைகளையும் தொட்டுச் செல்வது மிக அழகு. கோபுரப் பார்வையும் எழுநிலைகளிலும் ஏறிக் கிட்டே சென்று ரசித்தலுமான மிக அழகான அனுபவம் அது.

ஒப்பியலில் கம்பனில் திருவள்ளுவர் என்றொரு கட்டுரையும் ( முனைவர் லலிதா ) , தொல்காப்பியரும் கம்பரும் காட்டும் வண்ணங்களில் ( உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் ) , இனம் சேர்தல், கவரி , குலசேகர ஆழ்வார், ஆண்டாள், ஜீவா கண்ட கம்பன் பற்றிய கட்டுரைகள் மிகச் சிறப்பு. 

அரசியலில் கம்பன் பார்வையில் அரசு, அரசாட்சி செய்யும் முறை, அரசர்க்குரிய தகுதிகள், அரசியல் நோக்கும் போக்கும், முடியாட்சி – குடியாட்சிக்கான அவரது கருத்தும் ” பூவலயம் இன்று தனி அன்று பொது “ எனச் சுட்டப்படுகின்றன. 

ஆட்சியியலில் சமுதாய லட்சியம், ஜனநாயகம், உலக அமைதி, அறம் சார்ந்த அரசு, பேரிடர் மேலாண்மை, குற்றமில்லாக் குடிமக்கள், மக்கள் சக்தியின் வெளிப்பாடு, மனித உரிமைகள், சட்டக் கருத்துக்கள், போர் மறுப்புக் கோட்பாடுகள் ஆகியன வரையறுக்கப்படுகின்றன.

கல்வியியலில் நூல்களின் சிறப்பு, ஆராய்ச்சித்திறன், ஆசிரியரின் வழிகாட்டும் பொறுப்பு, ஆசிரியரின் இன்றியமையாத மனநலம், தொலைநோக்குப் பார்வை, மாணவன் நிழல், யார் ஆசிரியர் ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது.

உளவியலில் நினைவுமறதி பற்றி கம்பனின் உளவியல் கூறுகள், முரண்பட்ட மனநிலையும் சிக்மெண்ட் பிராய்டின் கோட்பாடும், அகமனக் கூறுகள், இலங்கிணியின் செயல்பாட்டில் இருபக்கங்கள், மனத்துக்கண் மாசிலன் ஆதல் ஆகியன விவரிக்கப்படுகின்றன.

அறவியலில் குருவின் கூற்று, செந்நெறி அடைந்த அண்ணல், மகளிர்க்கு வழிகாட்டும் மங்கைநல்லாள், பகைவனுக்கருள்தல், நடுவுநிலைமை, துறவு, தவம் ஆகியவற்றின் சிறப்பு கூறப்படுகிறது.

ஆளுமையியலில் பெண் ஆளுமை, சொல் ஆளுமை, விதி ஆளுமை, குறிப்பிற் குறிப்புணர் கொள்கையர், தலைமைப்பண்பு, மானுட விலங்கு தொடர்பியல், ஆகியன வித்யாசம்.  

மகளிரியலில் அகத்திணை, (பரத்தையர் இல்லா மருதம் ), கற்பு, தற்கொண்டான் பேணல், கற்பின் கனலி, அன்னை உள்ளம், பலவித மகளிர், தாரையின் மேம்பாட்டு உள்ளம், கம்பனில் பெண்ணியம் ( அகலிகை, தாரை, மண்டோதரி, தான்யமாலி,) , இருபாலாருக்கும் கற்பு ஆகியன வலியுறுத்தப்படுகின்றன. 

கலையியலில் சிற்பக்கலை, ஆடற்கலை, இசைக்கலை,ஓவியக்கலை, கட்டிடக்கலை, நாடகக்கலை, காலைப்பண்ணும், மாலைப்பண்ணும், நவரச உணர்வுகள், போர்க்கலையியல், வில் வித்தை, அஸ்திரங்களின் அறிவியல்  ஆகியன அழகுற வடிக்கப்பட்டுள்ளன. 

யாப்பியலில் தொடை நயம், வியங்கோள், அடுக்குத்தொடர், எண்ணும்மை, அடுக்குத்தொடர், சீர் வகைகள், பா வகைகள், சொல்லாக்கக் கோட்பாடுகள் (எம் எஸ் ஸ்ரீலெக்ஷ்மி சிங்கப்பூர் அவர்களின் கட்டுரை ), செவ்வியல் நோக்கில் கம்பன், தற்குறிப்பேற்றம், யாப்பு உத்திகள், மொழிநடை, அணி, உருவகப்படுத்தம், கற்பனையியல், புனைவியல், பிரதிக் குறியியல் பார்வையில் கம்பராமாயணம் ஆகிய அரிய தகவல்கள் சொல்லப்படுகின்றன. 

அறிவியலில் நீர் மேலாண்மை, தொழில் நுட்பம், மனிதத் திறன், வேளாண்மை, பல்பயிர் சாகுபடி, கட்டுமானத்துறை, அணுவைக் கூறுபடுத்தும் கண்டுபிடிப்பு, பரிணாம தத்துவம், திட்டமிடும் கலையியலின் கூறுகள், ஆகியனவும், ஊடகவியலில் மக்கள் தகவல் தொடர்பு, தனிமனித தொடர்பு, அகமனத் தொடர்பு, குழுத்தொடர்பு, தினமணியில் கம்பர் கட்டுரைகள் ஆகியனவும்  சூழலியலில் வேளாண்மையும் உழவர் சிறப்பும் மழைநீர் சேகரிப்பும், நீர்வளக் கொள்கையும், பயிர் பாதுகாப்பும், ஐம்பூதங்களினால் ஏற்படும் ஒருங்கமைவும் குறிப்பிடப்படுகின்றன.

மெய்யியல் சிந்தனைகளில் உடல்- உயிர், வினை, புண்ணியம்- துறக்கம், ஊழ், துறவு, இருவினை, நிலையாமை, சமயம், ஐ அஞ்சு ஆகிய தத்துவன், சாங்கியமும் யோகமும் எடுத்தியம்பப்படுகின்றன. 

எதிர்காலவியலில் இராமனின் வழியில் ஆட்சியும் சமுதாயமும், மனவெழுச்சியும் முதிர்ச்சியும், குடியாட்சித்தத்துவம் ஆகிய சிறப்பியல்புகள் சிந்தை ஈர்க்கின்றன. 

மொத்தத்தில் மிக அருமையான செறிவான கருத்துக்கள் கொண்ட நூல். இதில் விவாதத்துக்குரிய தத்துவங்களும் எளிமையாக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இராமனைத் தெய்வத நிலையிலிருந்து யதார்த்த நிலைக்குக் கொணர்ந்து கம்பனின் பல்வேறு பரிமாணங்களையும் நினைவில் இருத்துகிறது இந்நூல். தமிழமுது சுவைக்க விரும்புவோர் வாசித்துப் பாருங்கள்.  

நூல் :- துறைதோறும் கம்பன் ( தொகுப்பு நூல் )
பதிப்பாசிரியர்கள் :- காரைக்குடி கம்பன் கழகம்
பதிப்பகம் :- கபிலன் பதிப்பகம்
பக்கம் :- 816.
விலை :- ரூ. 750/-

3 கருத்துகள்:

  1. nandri Venkat sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. கம்பர் நினைத்திருப்பாரோ இல்லையோ கம்பனைப் படிப்பவர்கள் அவன் நினைக்காததைஎல்லாம் உணர்ந்து பரவசமுறுவர்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)