சனி, 29 ஜூலை, 2017

சாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. இருங்கோவேள் சொல்லும் யோசனைகள்.


நண்பர் திரு இருங்கோவேள் அவர்களின் இவ்விடுகை மிகமுக்கியம் என்பதால் இன்றே இரண்டாவது சாட்டர்டே போஸ்டாக இதையும் வெளியிடுகிறேன். 

கண் புரை (கேட்டராக்ட்) -

வருவதை தவிர்க்க முடியுமா? - ஓர் விளக்கம்

கட்டுரை ஆசிரியர்:
அ போ இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா,
சென்னை 600 006.

800px-Shushrut_statue.jpg

மனிதகுலத்தில் முதன் முதலாக
கேட்டராக்ட் ஆபரேஷன் செய்த கண் மருத்துவர் சுஸ்ருதர்
ரு இளைஞர் ஒரு கண் மருத்துவரைப் போய் பார்த்து, என் தாத்தாவும் என் அப்பாவும் கண்ணில் கேட்டராக்ட் வந்து ஆபரேஷன் செய்து கொண்டார்கள். கண்ணே இத்துணூண்டு உடல் உறுப்பு, அதிலே ஆபரேஷனா? நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த கேட்டராக்ட்டே வராம இருக்க ஏதாச்சும் செய்ய முடியுமா?ன்னு கேட்டார்..

டாக்டர் சிரித்துக் கொண்டே, ”கேட்டராக்ட் பற்றி பயம் வேண்டாம் ”, என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

1. கேட்டராக்ட் பொதுவாக வயோதிகம் காரணமாக வருவதாக பலரும் நினைத்தாலும், அது மட்டுமே காரணமில்லை. உண்மையைச் சொல்வதானால், இதனால்தான் கேட்டராக்ட் வருகிறது என்று என்று இன்று வரை யாரும் உறுதியாக அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. (Cataract is still unknown etiology).

2. கேட்டராக்டை குணப்படுத்த முடியும் - தவிர்க்க முடியாது, ஆனால்
உங்களுடைய நடவடிக்கைகளை, வாழ்க்கை முறைகளை முறைப்படுத்துவதன் மூலம்(லைஃப் ஸ்டைல்) தாமதப்படுத்த முடியும்.


3. பிறவியிலேயே கேட்டராக்ட் பிரச்சினையை சந்தித்தவர்கள் இரத்த சம்பந்தம் உள்ள உறவினருடன் திருமண உறவு வைத்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் Congenital Cataract என்று சொல்லப்படும், பரம்பரை மூலக்கூறியல் காரணத்தால் வரக்கூடிய கேட்டராக்ட் அடுத்த தலைமுறைக்கு வராமல் தாமதிக்க முடியும்.

4.கருவுற்றிருக்கும் தாய்க்கு தேவையான சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம், ஆரோக்யமான குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. இதன் மூலம் குழந்தைப்பருவத்திலேயே கேட்டராக்ட் வருவதை தவிர்க்க முடியும் - ”முத்துப் போல குழந்தை பிறக்க வேண்டும் மூன்று கிலோ எடை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள், அது போல முத்துச்சுடரென ஒளிவீசும் விழிகளுடனும் பிறக்க வேண்டும்.”

5. இன்றைக்கும் சில கிராமங்களில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்கிறார்கள். பிரசவத்தின் போது, வீடுகளில் பிரசவம் பார்க்காமல், தகுதி பெற்ற மருத்துவர் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது அவசியம்.
வீட்டிலேயே அல்லது பிரசவம் சிக்கலாகி, “இன்ஸ்ட்ருமெண்ட் (ஆயுதம்) ” தேவைப்பட்டால், அல்லது சிசேரியன் தேவைப்பட்டால் பிரசவம் விபரீதமாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த நிலையில், தகுதியில்லாதவர்கள் இந்த ஆயுதம் மற்றும் சிசேரியன் முறைகளை கையாண்டால், குழந்தைகளின் தலையில் அல்லது கண்களில் காயம் ஏற்பட்டு Pediatric Cataract - எனப்படும் குழந்தைப்பருவ கேட்டராச்ட் வருவதை தவிர்க்க முடியும்.

6. குழந்தை பருவத்திலிருந்தே முறையான சிறந்த உணவு பழக்க வழக்கத்தை கடைபிடித்தால்,(பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால், மற்ற திட உணவுகள் சாப்பிட் ஆரம்பித்தவுடன் பின் வருபவை...)குறிப்பாக பல்வேறு நிறங்களில் காணப்படும் பழ வகைகள், காய்கறிகள், கீரை வகைகள்,வேக வைத்த பயறு வகைகள் தேவையான அளவு சாப்பிடும் அனைத்து வயதினருக்கும் கேட்டராக்ட் வருவதை தாமதிக்க முடியும்.

7. குழந்தைப்பருவத்திலிருந்தே கண்களில் காயம் படாமல் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுபவர்களுக்கு, விபத்தின் காரணமாக வரக்கூடிய கேட்டராக்ட் (Traumatic Cataract) டை தவிர்க்கலாம்.

8.பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆய்வுக்கூடத்தில் குறிப்பாக இரசாயனப் பொருட்களை (அமிலங்கள், உப்புகள், கரைசல்கள் போன்றவை) பயன்படுத்தும் போது எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதால், குறிப்பாக கண்களை பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தால் கண்களில் கேட்டராக்ட் உட்பட கண் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

9. ஒரு வேளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆய்வுக்கூடத்தில் பயிற்சி வகுப்புகளின் போது இரசாயனப் பொருட்கள் அல்லது அமிலங்கள் கண்களில் பட்டு விட்டால், கண்களை கசக்காமல் சுத்தமான நீரினை கண்களில், கண்களில் வலி மற்றும் எரிச்சல் நிற்கும் வரை தொடர்ந்து பயன்படுத்தி, உடனடியாக கண் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

10. நீங்கள் வாகனம் ஓட்டுபவராக இருந்தால், மேலும் அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே, செய்ய வேண்டிய தொழிலில்/வேலையில் இருந்தால் ஒரு கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று யு.வி. பாதுகாப்பு கூலிங் கண்ணாடியை அணிந்து (U.V. Protected Sun Glass) அணிந்து, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்கள் கண்களை காத்து, அதன் காரணமாக வரக்கூடிய கேட்டராக்டை தாமதிக்கலாம்.தலைக்கவசம் உயிர்க்கவசம் மட்டுமல்ல உங்கள் விழிகளை காக்கும் ஒளிக்கவசமும் ஆகும். எனவே ஹெல்மெட் அணிந்தே வாகனம் ஓட்டவும்.

11. வீட்டில் அம்மா, விறகு அடுப்பில் புகை மண்டிய சூழலில் சமையல் செய்பவராக இருந்தால், அவரை வருடம் ஒரு முறை முழுமையான கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்படிப்பட்ட அம்மாக்களுக்கு கண் புரை வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது..

12. தொழிற்சாலைகளில், வெப்பம்,தூசு, புழுதி போன்ற இடங்களில் பணியாற்றுபவர்கள் அதற்கென பிரத்யேகமாக பயன்படுத்தக்கூடிய பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிந்து அந்த வேலைகளை செய்வதன் மூலம் தொழில் ரீதியாக வரக்கூடிய கண் புரையை (Occupational Cataract) தாமதிக்கலாம்.

13. வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள்/விவசாய உதவியாளர்கள் உரம், பூச்சி மருந்துகள் போன்றவைகளை கையாளும் போது எச்சரிக்கையாக செயல் பட வேண்டும். ஒருவேளை கண்களில் அவை பட்டுவிட்டால், உடனடியாக கண்ணில் எரிச்சல் நிற்கும் வரை தொடர்ந்து சுத்தமான தண்ணீரினால் கண்களை கழுவி விட்டு உடனடியாக ஒரு கண் மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்படுவதன் மூலம் கேட்டராக்ட் உட்பட கண் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க அல்லது தாமதிக்க முடியும்.

14.உங்கள் அம்மா அப்பா இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தால், குறைந்தபட்சம் உங்களுடைய 30வது வயதில் உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்று பரிசோதன் செய்து கொள்வது நல்லது. ஒருவேளை உங்களுக்கும் நீரிழிவு இருந்தால், நீரிழிவு சிறப்பு மருத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம், விரைவாக கேட்டராக்ட் உங்களுக்கு ஹலோ சொல்வதை தாமதிக்க முடியும்.

15. தற்கொலை மனித அணு குண்டுகள் (அதுதாங்க, பொது இடங்களில் சிகரெட் புகைக்கும் ஜென்மங்களை சொல்கிறேன்), உலவும் இடங்களில் இருந்து நீங்கள் விலகி இருப்பதும் நல்லது. இவர்கள் புகைக்கும் போது வெளிவிடும் புகை உங்கள் கண்களில் எரிச்சலை உண்டாக்கி உங்கள் பொது ஆரோக்யம் மட்டுமல்லாது, கண்களில் கேட்டராக்ட்டையும் விரைவில் உருவாக்கி விடும்.

16. அது போல, டாஸ்மாக் தமிழர்களுக்கும் வரவேண்டிய வயதில் கேட்டராக்ட் வராமல் சற்று விரைவில் வருவதற்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. டாஸ்மாக்கை தவிர்த்தால், கேட்டராக்ட்டையும் தாமதிக்கலாம்.

17. ஒருவேளை நீங்கள் ஸ்ட்டீராய்டு மருந்துகளை நீண்ட காலம் உபயோகிப்பவராக இருந்தால், கண்மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது. ஸ்ட்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துபவர்களுக்கு கேட்டராக்ட் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

18. நாம் பிறப்பதற்க்கு முன்பு நமது தாய்க்கு பிரசவகாலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்ப்பட்டிருந்தால், குழந்தை பிறந்தவுடன் முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும், கண்களில் பார்வைக்குறைபாடு அல்லது சிரமம் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலாம், கண் புரையை தாமதிக்க முடியும்.

19.  குழந்தைகளுக்கு போட வேண்டிய சொட்டு மருந்துகள், தடுப்பூசிகளை உரிய காலத்தில் கொடுப்பதன் மூலம், கண் புரை உட்பட பல நோய்களை தவிர்க்க/அல்லது தாமதிக்க முடியும்.

20. கண் புரையை ஆபரேஷன் மூலமே குணப்படுத்த முடியும், வெறும் லேசரால் மட்டும் குணப்படுத்த முடியாது. லேசர் உதவியுடன் செய்யப்படும் நவீன ஆபரேஷன் மூலமே குணப்படுத்தப்படுகிறது.

அடுத்து எனக்கு ஒரு மின்னஞ்சல்;

வணக்கம் தோழரே,  உங்கள் கண் புரை கண்ணுக்குள் பொருத்தும்  லென்ஸ் குறித்த பதிவை படித்தேன். கண் புரை இருப்பவர்கள் வெறும் கண் ஆப்ரேசன் பண்ணி கொண்டால் போதுமா? முன்னெல்லாம் இப்படி ஆப்ரேசன் செய்து கண் கண்ணாடி கொடுத்து அனுப்பி விடுவார்கள். இப்பொழுது ஏன் யார் சென்றாலும் அவர்களுக்கு  லென்ஸ் பொருத்த வேண்டும் என்று சொல்லி 10000 தொடங்கி 35000 வரை ஆகும் என்று சொல்லி விடுகிறார்கள். நீங்கள் நல்ல லென்ஸ் வாங்கினால் ரொம்ப நாளுக்கு வரும் என்று சொல்லி. 20000 முதல் 35000 உள்ள லென்ஸ்களை ரகமெண்ட் பண்ணுகிறார்கள். இந்த லென்ஸ் மாற்றுவது தேவையா? அவசியம் தானா? இல்லை இது ஒருவகைய கார்ப்பரேட் கொள்ளையா? விளக்கவும.  

  1. கண் புரை உரித்தல் என்று உண்மையில் தற்போது சொல்லப்படும் கேட்டராக்ட் ஆபரேஷன் பல முன்னேற்றங்களைக்கடந்து இன்று மிக மிக நவீன முறைக்கு வளர்ந்துள்ளது.
சுஸ்ருதர் ஆபரேஷன் செய்கிறார்
susruta-performing-surgery.gif


  1. மனித இனத்தில் முதன் முதலில் கண் புரை ஆபரேஷன் செய்தவர்கள் நாம் தான். சுஸ்ருதர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளார். இவர்தான் அன்றே பிளாஸ்டிக் சர்ஜரிகளும் செய்துள்ளார். இவர் செய்த கண் புரை ஆபரேஷன் ”கவுச்சிங் - Couching”  என்ற முறைப்படி செய்யப்பட்டுள்ளது.  இதனைப்பற்றியும் தனது  ”சுஸ்ருத சம்ஹிதை”  என்னும் நூலில் விளக்கமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். சுஸ்ருதர் - கண் மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், மற்றும் மாற்று மருத்துவம் எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற துறைகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். இந்த துறைகளில் சிகிச்சை அளிக்கும் முறைகளையும்  ”சுஸ்ருத சம்ஹிதை”  நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.  
  2. கேட்டராக்ட் என்பது நமது கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பது. அதன் காரணமாக பொருட்கள் தெளிவாக தெரியாமல் போவது. கவுச்சிங் முறைப்படி செய்யப்பட்ட ஆபரேஷனில், இயற்கையான லென்ஸை ஆபரேஷன் மூலம், கண்ணுக்குள்ளேயே தள்ளிவிடுவார்கள்.  இயற்கையான லென்ஸானது கண்ணின் பின் அறையில் விழுந்து கிடக்கும். அதன் பின்னர்  பொருட்களை உற்று நோக்கியே பார்வை  என்னும் புலனை பல்வேறு சிரமங்களுக்கிடையிலேயே அனுபவிக்க முடிந்தது.
  3. தொடர்ந்து பல்வேறு நிலைகளைக் கடந்து ஏப்ரல் 8ம் தேதி 1747 ம் வருடம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர்  ஜாக்ஸ் டேவில்        (Dr Jacques Daviel), சமீபத்திய புரை உரித்தல் எனப்படும் extracapsular cataract extraction எனப்படும் ஆபரேஷனை செய்தார். கண் புரையை குணப்படுத்த  இந்த முறையே சுமார் 200 ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தன.  ஆபரேஷனுக்குப் பின்னர், ஒரு கெட்டியான சோடாப்புட்டி கண்ணாடி போன்ற ஒரு கண்ணாடியை அணிந்து பார்வை என்னும் புலனை மனிதன் உணர்ந்து வந்தான். கண்ணாடி அணிந்தால் தான் பார்வை தெரியும்.
  4. டாக்டர் சர் ரிட்லி, (சர் ரிட்லி, நிக்கொலஸ் ஹரோல்ட் லாயிட்- Ridley, Sir Nicholas Harold Lloyd (1906 - 2001), பிரிட்டிஷ் விமானப்படையில் கண் மருத்துவராக இருந்தார். இரண்டாம் உலகப்போரில் பல விமானப் படை வீரர்கள், குறிப்பாக பைலட்கள், விமானத்தில் குண்டு வீசப்பட்டபோது, விமானத்தின் பைலட் இருக்கும் அறையின் கண்ணாடியாலான கனோப்பியில் குண்டு பாய்ந்து கண்களில் காயம் பட்டு வந்தார்கள். அவர்களுக்கு கண் சிகிச்சை அளித்து வந்தார்.
ஒரு முறை அவர் நோயாளிக்கு கேட்டராக்ட் ஆபரேஷன் செய்த போது, அவரது பயிற்சி மருத்துவர் கேட்ட கேள்வி அவரை சிந்திக்க வைத்தது.

கேட்டராக்ட் ஆபரேஷனின் போது, கண்ணுக்குள் இருக்கும் பாதிக்கப்பட்ட லென்ஸை அகற்றி விட்டு, தையல் போட்டு விடுவார்கள். அப்படி அவர் செய்த போது, அவரது பயிற்சி மருத்துவர், “டாக்டர், இந்த பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் செய்த போது, கண்ணுக்குள்ளே இருந்து எதையோ (லென்ஸை) எடுத்து வெளியே போட்டுவிட்டு, திரும்ப உள்ளே வைக்காமலேயே, மறந்து மூடி தைத்து விட்டீர்களே?” - என்று வெகுளியாக கேட்டார்.

அந்த கேள்வி டாக்டர் ஹேவர்ட் ரிட்லியை அதிகமாகவே சிந்திக்க வைத்தது. அப்போது, இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்ட ராயல் ஏர் ஃபோர்ஸ் பைலட்களின் கண்களில் போர் விமானங்களின் கனோப்பி எனப்படும் விமான அறையில் குண்டுகள் பாய்ந்த போது, அந்த கனோப்பியின் கண்ணாடித்துண்டுகள் விழுந்த போது எந்த பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

எனவே சர் ஹாரோல்ட் ரிட்லி சில கெமிக்கல் இண்டஸ்ட்ரிகளில் வேலை செய்து பி.எம்.எம்.ஏ.எனப்படும்  பொருளால் ஆன மருத்துவ தரம் மிக்க செயற்கை லென்ஸை கண்டுபிடித்தார்.

அவரது நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் உருவானது தான் ”கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்” (Intraocular Lens).

  1. சர் ஹாரோல்ட் ரிட்லி - ஐ.ஓ.எல். லின் தந்தை என்றழைக்கப்படுகிறார். நவம்பர் 29, 1949ல் முதல் மாடர்ன் கேடராக்ட் ஆபரேஷன் செய்தார். கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ் பயன்படுத்தி முதல் முறையாக ஃபிப்ரவரி 8, 1950 ஆண்டு நடைபெற்றது. கேட்டராக்ட் ஆபரேஷனின் போது கண்ணுக்குள் ஏற்கெனவே இயற்கையாக இருந்த லென்ஸின் உட்கரு பகுதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இந்த செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. இந்த முறையினால் சுமார் 200 ஆண்டுகளாக சிரமப்பட்டுவந்த கேட்டராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டவர்களின் குறைகளில் சில நிவர்த்தி செய்யப்பட்டன. அதாவது கண்ணாடி அணிந்தால் தான் கண் பார்வை தெரியும் என்ற நிலை மாறியது.
  2. நோயாளிகளின் - மனிதனின் அனுபவங்களும் தேவைகளும், கண் மருத்துவத்தில் குறிப்பாக கண் புரை உரித்தல் ஆபரேஷனில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றது. அதன் காரணமாக புதிய அதே வேளையில் நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கக்கூடிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக செயற்கை லென்ஸை கண்ணுக்குள் பொருத்துவதற்கு கண்ணின் கார்னியா பகுதியில் காயம் ஏற்படுத்தியே , செயற்கை லென்ஸை பொருத்தினார்கள். அதன் காரணமாக அந்த காயம் ஆறுவதற்கு சிலருக்கு 4 முதல் 6 வாரங்கள் தேவைப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக சிறுதுளையிட்டு கண்புரை உரித்தல் (Small Incision Cataract Surgery)  மற்றும் ஃபேக்கொஎமல்சிஃபிகேஷன் (Phacoemulsification) எனும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுதுளையின் வழியே செயற்கை லென்ஸை பொருத்தும் வகையில் மடித்து பொருத்தக்கூடிய லென்ஸ்கள் (Foldable Lens) கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் காரணமாக காயம் ஆறுவதற்க்கான கால அவகாசம் குறைந்தது. நோயாளி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது.
  3. ஆரம்ப காலத்தில் செயற்கை லென்ஸ்கள் நோயாளியின் தூரப்பார்வையை கருத்திற்கொண்டே தயாரிக்கப்பட்டு வந்தது. எனவே இவ்வகை லென்ஸ்களை பொருத்திக்கொண்ட நோயாளிகள் அருகிலிருந்து செய்யக்கூடிய வேலைகளான செய்தித்தாள் படித்தல், கணினியில் பணியாற்றுதல், கலைவேலைப்பாடுகள் செய்தல் போன்ற வேலைகளை செய்வதற்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனையும் தவிர்க்க வேண்டும் என்று மனிதன் ஆசைப்பட்ட நிலையில், தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக கிடைத்த பரிசுதான் மல்டிஃபோக்கல் லென்ஸ்கள். அதாவது கேட்டராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டாலும் கண்ணாடி இல்லாமலேயே தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை குறைபாடுகளை களையும் வகையில் கிடைத்த வசதி தான் மல்டிஃபோக்கல் லென்ஸ்கள். இருப்பினும் கண்ணாடி அணிவதை முழுவதும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. இது நோயாளியின் கண் உடலியல் தன்மையைப் பொருத்தே அமைகிறது.
  4. பல நோயாளிகள், துல்லியமான பார்வையை, இளம் வயதில் அனுபவித்த பார்வையை மீட்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக கண் புரையினால் பார்வை பாதிக்கப்பட்டு, ஆபரேஷன் செய்து கொண்டவர்கள். எனவே சமீப காலங்களில் செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்ட நோயாளிகள் பார்வையின் தரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டது. வழக்கமாக நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் இருபுறமும் குவிந்த லென்ஸ்கள் (Biconvex)ஆகும். நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் ஒளிக்கற்றையாக நமது கார்னியாவில் குவிந்து, அவை நமது லென்ஸ் வழியாக விழித்திரையில் பிம்பமாகப் பதிவாகிறது. செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டவர்களின் கண்களில் இந்த ஒளிக்கற்றைகள் கோள பிறழ்ச்சி (Spherical Aberration) எனப்படும் ஒளியியல் தோற்றப்பாடு குறையை, ஒளிக்கதிர்கள் கற்றையாக வரும்போது நடைபெறும் ஒளியியல் தோற்றப்பாடினை ஏற்படுத்துகிறது. அதாவது அந்த ஒளிக்கற்றையின் மையப்பகுதியின் தொகுப்பு அல்லது கட்டு, பிம்பம் பதிவாகுமிடத்திற்கு முன்போ அல்லது பின்னரோ ஏற்படுத்துகிறது. இந்த கோள பிறழ்ச்சி பதிவாகும் பிம்பத்தின் தரத்தை குறைக்கிறது. எனவே பலரும் அதிகமான அளவில் பலவிதங்களில் உணரக்கூடிய தன்மை குறைவதை (Loss of contrast sensitivity)அனுபவித்தனர்.

  • இந்த குறையை நிவர்த்தி செய்வதற்க்கே Aspheric IOLs எனப்படும் கோள பிறழ்ச்சியை குறைக்கும் லென்ஸ்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இருபுறமும் குவிந்த லென்ஸ்களின் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வடிவமைக்கப்பட்டன. பல ஆய்வுக்கூடங்களிலும் மற்றும் மருத்துவ சோதனைகளிலும் இந்த லென்ஸ்கள் கோள பிறழ்ச்சி குறைபாட்டினை குறைக்கும் என்று கண்டறிந்து இந்த வகை செயற்கை லென்ஸ் பயன்படுத்தி இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

  • வெற்றிக்கரமாக கேட்டராக்ட் ஆபரேஷன்கள் நிறைவேறியிருந்தாலும்,  வழக்கமாக பயன்படுத்தும் செயற்கை லென்ஸ்களில் கோள பிறழ்ச்சி (Spherical Aberration) எனப்படும் ஒளியியல் தோற்றப்பாடு குறையை மட்டுமே நீகக முடிந்தது. ஆனாலும் சுமார் 40% நோயாளிகளுக்கு சிலிண்ட்ரிக்கல் பவர் (cylindrical power) எனப்படும் உருளைக்கூறு குறைபாடு சரி செய்யப்பட முடியவில்லை. இந்த சிலிண்ட்ரிக்கல் பவர் குறையை ஓரளவு சரி செய்வதற்க்காகவே நோயாளிகளுக்கு கண்ணாடி அறிவுருத்தப்படுகிறது. இந்நிலையை கவனத்தில் கொண்டு  டோரிக் செயற்க்கை லென்ஸ், சிலிண்ட்ரிக்கல் பவர் குறைபட்டினை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் பார்வை சார்ந்த குறைபாடுகளைக் களையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லென்ஸை பயன்படுத்துவதன் மூலம் கேட்டராக்ட் ஆபரேஷனுக்குப் பிறகு நோயாளிகள் கண்ணாடியை சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கலாம்.
  1. மனிதனின் தேவைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முன்னேற்றம், வாழ்க்கை முறை ஆகியவற்றோடு செயற்கை லென்ஸ் ஆராய்ச்சிகளும் போட்டி போட வேண்டிய நிலைக்கு வருகின்றன. கேட்டராக்ட் ஆபரேஷன் ஆனாலும், இரவு நேரங்களில் நானே வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும், எதிரே வரும் வாகனத்தில் ஹெட்லைட் என் கண்களை கூசச் செய்கிறது என்று மனிதன் வேதனைப்பட்ட நிலையில் மேலும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக உருவானது தான் புதிய தலைமுறை பல்வகைகுவித்திறன் செயற்கை லென்ஸ்கள் (The New Generation Multifocal IOLs) குறிப்பாக Restore, Rezoom எனப்படும் லென்ஸ்கள்  இதன் காரணமாக பார்வைத்திறன் குறித்த சில பக்க விளைவுகளான கண் கூசுதல், ஒளிவட்டம், இரவு நேரங்களில் பார்வையில் சிரமம் போன்றவை தவிர்க்கப்பட்டன.
  2. வெய்யிலில் பயணம் செய்பவர்கள், தொடர்ந்து பலமணி நேரம் வெயிலில் பணியாற்றுபவர்கள் புற ஊதக்கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகலாம். புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டவையே ஐ.க்யூ. எனப்படும் புதிய வகை செயற்கை லென்ஸ்களை பயன்படுத்துகின்ற பட்சத்தில்,  வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், பகல் நேரங்களில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பினை வழங்க முடியும்.
  3. மனிதனின் தேவைக்கேற்ப அறிவியலும் தொழில் நுட்பங்களும் நாள் தோறும் வளருகின்ற நிலையில், அவற்றை பயன்படுத்திக்கொள்வதும் இல்லாததும் தனி மனிதனின் ஆர்வத்தை பொருத்ததே. இன்று அரசு மருத்துவமனைகள், அரசு சார்பற்ற தன்னார்வ மருத்துவமனைகள், சில தனியார் மருத்துவமனைகளும்,, சராசரி வாழ்க்கைக்கு தேவையான வகையில் ஏழை எளியவர்களுக்கு, பார்வையை மீட்டுத்தரும் செயற்கை லென்ஸ்களை இலவசமாகவே பொருத்தி ஆபரேஷன் செய்கிறார்கள்.எனவே தேவைக்கேற்ப வசதிக்கேற்ப தனிமனிதன் மருத்துவ சேவையை தேர்வு செய்து கொள்ளலாம்.

கட்டுரை ஆசிரியர்:
அ போ இருங்கோவேள்
மருத்துவ சமூகவியலாளர்
மேலாளர் - நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை
சங்கர நேத்ராலயா,
சென்னை 600 006


டிஸ்கி:- மிக அருமையான விழிப்புணர்வுத் தகவலை சாட்டர்டே போஸ்டில் பகிர்ந்தமைக்கு நன்றி. அன்பும் நன்றியும் இருங்கோவேள் சார்.  

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)