செவ்வாய், 4 ஜூலை, 2017

கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.



கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை. 

சொல்வேந்தர் சுகி சிவத்தின் நூலைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அண்டைவீட்டுக்காரர் கம்பர் நூல்களைக் கொடுத்தால் படிக்கக் கசக்கிறதா என்ன. எனது அண்டைவீட்டுக்காரர் திரு கம்பனடிசூடி அவர்கள். அவர்கள் தந்த நூலில் அவ்வப்போது கம்பரசம் மாந்தி மகிழ்வதுண்டு.

இந்நூல் தலைப்பே வித்யாசமாக இருந்ததால் இன்று படித்தேன். அமரர் ஏவிஎம் . அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு. சென்னைக் கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது. 

கம்பன், கம்பராமாயணக் காவல் நிலையங்கள், கம்பன் விழாக்கள், கம்பராமாயணக் கதை, கம்பன் கருத்துக்கள்,  கம்பனது சமயம், கம்பன் கவியனுபவம், கம்பன் தனிச்சிறப்பு, கம்பனது சமய இலக்கியம், கம்பன் காட்டும் அரசியல், என்றும் உண்டு எதிர்காலம் ஆகிய தலைப்புகளில் நேற்று இன்று நாளை என்று ஆய்வு செய்து பேசியுள்ளது சிறப்பு. 

வடபுலத்து ராமனை எளிதாகத் தென்தமிழ்ப்படுத்தியவர் கம்பன். ஆனால் உடையவர், சம்பந்தர் போல் கம்பன் தமிழ் தனது இடத்தை அடைய, மூன்று பிரிவான சமய உலகத்தில் தெய்வீக அந்தஸ்தைப் பெறப் பட்ட பாட்டை விவரிக்கிறார் சுகி.சிவம். 

வாரியார் , வைமுகோ, டாக்டர் உ வே சா, ஜகவீரபாண்டியன் ஆகியோரின் மூலம் கம்பனின் கவியாழம் வெளிப்பட்டது அழகு. கம்பராமாயண வளர்ச்சி உயர்சாதி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்த்த திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். இச்சூழலில்தான் எரியூட்டுப் படலம் துவங்கியதாம். அப்போது தேசபக்தியும் தெய்வபக்தியும் மிக்க சாவன்னா கணேசன் அவர்கள் கம்பனுக்காகக் கடுமையாகப் போராடியது குறித்தும் பதிவு செய்கிறார்.

கம்பக் காவலர்கள் என்று கம்பனடிப்பொடி, பட்சிராஜ அய்யங்கார், காரைக்குடியில் ”கம்ப நாடர்” என்ற பத்ரிக்கை நடத்திய மோகனூர் கோவிந்தராஜ அய்யங்கார், பி.ஸ்ரீ, ரசிகமணி டி.கே.சி, வையாபுரிப் பிள்ளை, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், வெ.ப. சுப்ரமணிய முதலியார், பால்நாடார், அ. சீனிவாசராகவன், நீதிபதி மகராஜன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, செய்குத்தம்பி பாவலர், ராஜாஜி, ம.பொ. சி, கல்கி, இவர்களை அவர் குறிப்பிடுகிறார். 

மொழி , சமயத்துக்கு அப்பாற்பட்டு ஊர்தோறும் வெற்றி விழாவும் உலாவும் கண்ட கம்பன் கழகங்கள், அவற்றுக்காகப் பாடுபட்ட மீப்பெரும்தகையினர் பற்றி சிலாகிக்கிறார். 

புரட்டாசி மாதம் கையேடு படித்தல் ( ஓலைகளில் எழுதப்பட்ட இராமாயணத்தைப் படித்தல் ).எங்கள் வீட்டிலும் உண்டு. முன்னோர்களிருந்தபோது பாராயணம், பட்டாபிஷேகம் செய்து வருபவர்களுக்கு விருந்தளிப்பார்கள். அதையும் சுகிசிவம் குறிப்பிட்டுள்ளது சிறப்பு. 

திறமையற்ற புலவர் கூட்டம், பாமரர்களையும் கவரும் வண்ணம் பட்டிமண்டபம் உருவானது, தொலைக்காட்சிகளின் தாக்கம், அர்ப்பணிப்பு உணர்வற்ற பேச்சாளர் என்று ( தன்னையும் சேர்த்துச் ) சாடிக் கொள்வது, கம்பன் பேரியக்கத்தின் பண்ணைப்பயிர்கள், கணினியில் கம்பன் எனப்பலதும் பற்றிக் கோடுகாட்டியிருக்கிறார்.

நட்பின் புதிய பரிமாணங்கள், பெண்களில் பலவகை, கம்பனின் சமயம் செகுலார் – பொறையுடையது என நிறுவுதல், பரம்பொருளின் உருவ, அருவ, அருவுருவ நிலைகளை ஸ்தாபித்தல், புதுக்கவிதைகளோடு போட்டியிட்டும் காலத்தால் நீடித்திருக்கும் கம்பனின் கவிநயம், சொல்நயம், சொற்றொடர் நயம், பொருள் நயம், இன்றைய புலவர்கள் வலிந்து கூறும் கவிநயம் பற்றிய அங்கதம், சமயம் கடந்தும் சர்வதேச அங்கீகாரம், சமய நெடியற்ற சமநிலை, கம்பன் மூலம் வடக்கத்தி இராமர் ஆட்சிக்கு வந்துவிடுவாரோ என திராவிட இயக்கங்கள் தீ பரவட்டும் எனப் பரவவிட்டது குறித்து, சமயநூல், மதநூல் என்ற எச்சரிக்கையோடு அணுகவேண்டியதன் அவசியம் குறித்து, காவியத் தலைவனின் தலைமைப் பண்புகள், சீதையின் அரசியல் அறிவு, இத்தோடு இன்றைய அரசியல் ஒப்பீடு என விஸ்தாரமாக அலசல் செய்துள்ளார். 

பொருட்சார்புத்தன்மை, வணிக மனம், அவசர வாழ்வியல், மொழியைப் பாரமாக நினைத்தல், தொலைக்காட்சி நோய், தரமான விஷயங்களில் அக்கறை இன்மை, தரக்குறைவான விஷயங்களில் மக்களின் ரசனை செல்லுதல் குறித்து வருந்துகிறார். இவ்வளவு கெடுதிகள் இருந்தும் 2050 க்கு மேலும் கம்பன் தேடப்படுபவராகவே இருப்பார் என்கிறார்.

மன அமைதி கொண்ட தரமிக்க வாழ்வு வேண்டுவோர், நீதி நெறி நிலைகளில் நிலைத்திருக்க விரும்புவோர், உண்மைப் பொருளை உயிராகக் கொண்டோர் நிச்சயம் நம்மைப் போல சிரஞ்சீவியான கம்பனையும் ராமனையுமே நாடி நிற்பார் என்பது உறுதி. 

நூல்:- கம்பன் நேற்று-இன்று-நாளை
ஆசிரியர் :- சுகி. சிவம்
பதிப்பகம் :- வானதி பதிப்பகம்
விலை:- ரூ 35/- (2001 பதிப்பு, 160 பக்கங்கள் ).

2 கருத்துகள்:

  1. கம்பனைப் பற்றிப் படிக்கும் போது அவரவர் இஷ்டத்துக்குப் படித்து பொருள் கூறலாம் நான் படித்தவரை கம்பராமாயணத்தில் கம்பருக்கு நாய்களைக் கண்டால் ஆகாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது நாய்கள் என்றாலேயே இழிவானது என்னும் எண்ணம் வெளிபடுகிறது இதுகுறித்துஒருபதிவும் சான்றுகளோடு எழுதி இருந்தேன்

    பதிலளிநீக்கு
  2. ATHAI SHARE SEINGA BALA SIR. VITHYASAMA IRUKEY. LINK ANUPUNGKA


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)