செவ்வாய், 27 ஜூன், 2017

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரையரும் திருமெய்யரும்.


கி. பி ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் புதுக்கோட்டை திருச்சிப் பக்கங்களை ஆண்டவர்கள் முத்தரையர்கள். இவர்கள் மூன்று நிலப்பகுதிகளையும் ( சேர சோழ பாண்டியர் ) ஆண்டதால் முத்தரையர் என அழைக்கப்பட்டார்களாம்.

ஊனையூர் செல்லும் வழியில் காயாம்பட்டி என்றொரு இடத்தில் ஒரு ஊரணிக்கரையில் மாவீரன் சிலைஒன்றும் அதைச் சுற்றி நந்தவனம் ஒன்றும் பார்த்து 2012 இல் புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.

இந்த முறை அதே ரோட்டில் சென்றபோது அதே மாவீரன் சிலை. ஆனால் பூக்கள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியில்  இருந்தது .
எல்லா வீரர்களுக்கும் எல்லாப் பெருந்தலைகளுக்கும்  எல்லாச் சிலைகளுக்கும் இந்தக் கதிதானா என நினைத்தபடி புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அட முத்தரையர் சிலையாம்



பொன்னியின் செல்வன் போன்ற புதினங்களில் முத்தரையர்களையும் பழுவேட்டரையர்களையும் பற்றிப் படித்திருக்கிறோமே என்று கூகுளில் தேடினால் விவரங்கள் கொட்டின.


இவர் பெரும்பிடுகு முத்தரையர். தஞ்சை திருச்சி புதுக்கோட்டைப் பகுதியை ஆண்டவர்கள். இவர்களில் விடேல் விடுகு முத்தரையர் திருமெய்யம் விஷ்ணு கோயிலுக்குத் திருப்பணி செய்தவர். இவரது மகன் மாரன் குவாவனின் மனைவி சமணர் பள்ளிக்குப் பொற்காசுகளைக் கொடையாகக் கொடுத்திருக்கின்றார்களாம்.

விடேல் விடுகு, மாற்பிடுகு, பெரும்பிடுகு ஆகியவை இவர்கள் போரில் வென்றதால் பெற்ற பட்டங்கள்.



எவ்வளவு அருமையான தோட்டம் & பூக்கள். இளஞ்சோலை போலிருந்தது.


11.3.2012 இல் திரு வெ பாண்டித்துரை தலைமையில் திரு. மு.ராஜமாணிக்கம், ( முத்தரையர் சங்கத் தலைவர் ) திறந்துவைத்திருக்கிறார்.


இப்போது காயும் வெய்யிலில் தங்கநிறச் சிலை மட்டும் இருக்கிறது. தோட்டமே இல்லை.
முத்தரையருள் சாத்தன் என்பானே முதல் அரசனாம்.

சாத்தன் என்ற பெயர்கள் முத்தரையர்களில் வழங்கப்படுகிறது. இதே ஒற்றுமையாக சமணர்களின் தாக்கத்தால் மற்றும் சாத்தனை ( சாஸ்தாவை) வழிபடுவதால் சாத்தப்பன் என்ற பெயரும் இந்தப் பகுதிகளில் வாழும் நகரத்தாரில் வழங்கப்படுவது குறித்து ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் ஊனையூர் குலதெய்வத்தின் பேரே முத்துவெள்ளைச் சாத்தையனார். !!!.

சாத்தன் என்ற பெயர் சமணச் சார்புடைத்தாம். சமண மதம் சார்ந்த சாத்தன் என்ற பெயர் ஐயனாரையும் குறிப்பது. ஐயனார் & சாத்தன் வணிகர்களின் குலதெய்வம். சாத்தன் என்றால் காப்பவன் என்று பேராம். தனது வணிகக் குழுக்களைக் காக்கும் தலைவன் பெயர் சாத்தன் என்றிருந்தது போல, மக்களைக் காக்கும் பேரரசர்களுக்கும் சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது வியக்கவைக்கும் ஒற்றுமை.

திருமெய்யத்தில் முத்தரையர்கள் பெரும்பிடுகு பெருந்தேவியின் காலத்தில் அமைத்த விஷ்ணு கோயிலே முத்தரையர் காலத்தில் பழமை மிக்க கோயிலாம். அதே போல் சத்யபுத்திரர் என்ற பேரும் திருமெய்யத்தில் இருக்கும் சிவன் சத்தியகிரீஸ்வரர் என்பதும், விஷ்ணு சத்திய மூர்த்தி என்பதும் வியத்தகு விஷயங்கள்.  இத்தெய்வங்களே சாத்து
( மிளகு, உப்பு, ஏலம் , தான்யம் ) வணிகர்களின் காவலர் மற்றும் மக்களின் காவலராகவும் இருந்திருக்கிறார்கள்.

சத்திய புத்திரன் என்ற அர்த்தத்தில் திருமெய்யர் , மெய்யப்பன் என்ற பெயர்கள் இங்கே அனைவருக்கும் இடப்பட்டிருப்பதும் சிறப்பு.

முத்தரையரில் ஆரம்பித்து மெய்யரில் வந்து முடித்துள்ளேன். ஆராய்ச்சி செய்தால் இன்னும் நிறையத் தகவல்கள் கிடைக்கும் போலிருக்கிறது. தெரிந்துகொள்ளவும் ஆர்வமாயிருக்கிறது.

இம்மன்னர்கள் வழியில்  அரசர்களின் பெயர்கள்  சாத்தன், சாத்தன் மாறன் , சாத்தன் பூதி, சாத்தன் பழியிலி மற்றும் ராணியின் பெயரும் சாத்தன் காளி என்று வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும் மகாவீரர் சாத்தனாகவும், சமணப் பள்ளிகள் சிவன் கோயில்களாகவும் பௌத்த மடங்கள் வைணவத்தலங்களாகவும் மாற்றப்பட்டதாகப் படித்தேன்.

இது தகவல்களைத் தெரிந்தவர்கள் மேலும் பகிருங்களேன். 

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. இத்தகவலை இன்று தான் அறிந்தேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. ஒரு காலத்தில் அரசராயிருந்தவர்
    வெட்ட வெளியில், காயும் வெயிலில் இருப்பது வருத்தத்திற்கு உரியது

    பதிலளிநீக்கு
  4. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)