செவ்வாய், 23 மே, 2017

அகல்யா :-

அகல்யா :-
****************

வாகேட்டர் பீச்சில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சூரியமீனின் தங்கச் செதில்களுடன் நீந்திக் கொண்டிருந்த கடலுடன் வெண்மணலும் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதுமான விளையாட்டில் இரண்டும் ஈடுபட்டிருந்தன. கைப்பையை இறுகப்பற்றியபடி இளசுகளின் கூச்சல்களையும் கும்மாளங்களையும் பார்வையிட்டபடி நடந்துகொண்டிருந்தார்கள் கபிலனும் அகல்யாவும்.

அங்கங்கே வட்டம் போட்டு அமர்ந்து நாலைந்து வாலிபர்கள் பாட்டில்களைக் கவிழ்த்துத் தானும் மட்டையாகிக் கிடந்தார்கள். சேஃப் கார்டுகளின் விசில்களில் அலைகளில் ஆடியவர்கள் அவ்வப்போது பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஹெனின்கைனும் கிங்ஃபிஷரும் பட்வைஸரும் கடலின் உப்புநீருடன் கசப்புநீராய்க் கலந்துகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண் நீச்சல் உடையுடன் தண்ணீருக்குள் தற்கொலைக்கு முயல்பவள் போல கைகளை நீட்டியபடி பாய்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

மணலும் நீரும் சேருமிடத்தில் லேசாகக் காலை நனைத்தபடி சொன்னான் கபிலன். ” அப்பாவுக்கு ரெண்டு தரம் அட்டாக் வந்திருச்சு இனி எங்க அப்பா அம்மா என் கூடத்தான் இருப்பாங்க.”.

”ஹ்ம்ம். நல்லதுதான் ஆனா பார்த்துக்க முடியுமா. டயப்படி மருந்து கொடுக்கணும். சாப்பாடு ஜூஸ், சூப் கொடுக்கணும். நீங்க இந்தியாவுல இருந்தா பரவாயில்லை. நான் வேற வேலைக்கு போறேன்.  ””.

“பார்த்துக்கத்தான் வேணும். வேலையை விட்டுடு. நான் அனுப்புறது போதும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, மேவேலைக்கு ஒரு ஆள் போட்டுக்க. வாஷிங் மெஷின் போட்டு சமையல் செய்றதுமட்டும்தானே . உனக்கு ஈஸிதான். “


வேலையை விட்டு விடுவதா..ஆறிலக்கத்தை எட்டப் போகும் சம்பளம்.  எத்தனை ப்ரமோஷன்கள் தவறிப் போனது. ஃபெர்டிலிட்டி செண்டர்களில் கொக்குத் தவம் கிடந்த நாட்களில் எத்தனை ஆசைகள் நிராசைகள்..
”எங்க அப்பா அம்மாவுக்கும் வயசாயிடுச்சு. கூட்டிட்டு வந்து பார்த்துக்கலாமான்னு நினைக்கிறேன். “

“ நல்லா கூட்டிட்டு வந்து சேவை பண்ணு. ஆனா நீதான் யார் கூடவும் ஒத்துப் போகமாட்டியே. அவ்ளோ பேரோடயும் சண்டை போட்டுப்பே “

சரக்கென்று வார்த்தைக் கத்திகள் வரண்ட காயத்தின் புண்ணைக் குத்தியது. தானே சொன்ன வாக்குமூலம்தான் அந்த வரண்ட காயம். சலக்கென்று அலை ஒன்று விசிறி முழங்காலுக்கு மேல் அடிக்க பக்கத்தில் ஒரே பரபரப்பு சலசலப்பு. வட்டத்துக்குள் விழுந்து கிடந்த ஒருவனை அலை இழுத்துச் சென்று கொண்டிருந்தது. சேஃப்கார்டுகள் விசிலுடன் ஓடி வந்தார்கள். அலைக்குள் நீந்தி கொத்தாக அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து மணலில் கிடத்தினார்கள். உடலை அமுக்கி நீரை வெளியேற்றினார்கள். பக்கத்தில் கொங்கணியிலோ கன்னடத்திலோ யாரோ திட்டினார்கள். “குடிச்சிட்டுக் கடல்ல ஆடவந்துட்டானுங்க. “

வடக்கு கோவாவும் தெற்கு கோவாவும் வரையறையற்ற இன்பத்தில் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. கெஸ்ட் இன்விடேஷனில் உணவருந்தச் சென்றபோது அகல்யா கவனித்தாள் காஸினோ ப்ரைடில் கைக்குழந்தைகளுடன் கூட சூதாட வருகிறார்கள் வட இந்தியர்கள்.

மூழ்கியவனின் நண்பர்கள் அரண்டுபோய் சிதறி அவனைச் சுற்றி நின்றார்கள். பதட்டம் ஓடிக்கொண்டிருந்தது அனைவரின் முகத்திலும். அவன் சிறிது கண்விழித்து மூடியதும் கூடிய கூட்டம் கலையத் துவங்கியது. அங்கங்கே ஆண் நண்பர்களுடன் வந்த பெண்களும் கலைந்து கொண்டிருக்க சிவப்பு கவுனில் இருந்த பெண் கவனத்தைக் கவர்ந்தாள். இவள் ..இவள் …கீழ்வீட்டு நிர்மலாம்மாவின் மகள் ஷிவானி அல்லவா. அதென்ன முதுகில் ஒரு போஸ்ட்பாக்ஸ் மாதிரி வெட்டிய தொடையைக் கூட முழுமையாக மறைக்காத கவுனுடன் இவள் இங்கே யாருடன் வந்திருக்கிறாள்.

கபிலனிடம் சொன்னால் உனக்கெதற்கு இதெல்லாம் . அவள் பாய்ஃப்ரெண்டாக இருக்கலாம் என்பார். வீட்டில் சொல்லிவிட்டு வந்தாளா. இல்லையா. அவள் அம்மா இதற்கெல்லாமா அனுமதிக்கிறாள். அவள் தோளில் கைபோட்டு அணைத்துச் சென்ற அந்த ஆணின் மீசையில்லா தாடியையும் ஸ்பைக்ஸ் ஹேர்ஸ்டைலையும் பார்த்தால் வீட்டுக்குப் பக்கத்தில் ஜிம் வைத்திருக்கும் நார்த் இந்தியன் பையனைப் போலத் தெரிந்தது. அவள் எதற்கோ ஷடப் என்று சொல்ல அவன் சிகரெட் புகையை நாலாபக்கமும் ஊதியபடி சென்று கொண்டிருந்தான். எப்போது இங்கே வந்தார்கள்.. எப்போது திரும்பிச் செல்வார்கள். மண்ணைத் தூர்த்து நகர்ந்து ஓடிக்கொண்டிருந்த பச்சை நண்டைப் போல மனக் கரையான் அரிக்கத் துவங்கி இருந்தது.

தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியதும் பாக் செய்யத் துவங்கினாள். ஏர்ப்போர்ட்டில் ட்ராலியை நகர்த்தியபடி சென்றபோது பக்கத்தில் அவள் அந்த ஷிவானி தோழிகள் சூழ நின்றிருந்தாள். ”ஆண்டி” என்று தோளில் தட்டியவள் ”வி கேம் ஃபார் அ ஃப்ன் ட்ரிப். இஸ் இட் அ செகண்ட் ஹனிமூன் ஃபார் யூ.. ”என்று கேட்டு கண்ணடித்தாள்.  மரியாதைக்காக புன்னகைத்தாலும் மனதுக்குள் கடுப்பாக இருந்தது அகல்யாவுக்கு.

சொன்னால் “கல்லூரிப் பருவத்தில் உனக்குக் கிடைக்காத சுதந்திரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதென்று உனக்குப் பொறாமை” என்பான் கபிலன். ஆண்களுக்குச் சமமாய் சிகரெட் பிடிப்பதும் தண்ணியடிப்பதும் சுதந்திரம் என்ற கணக்கில் சேருமா. அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

”உன்னுடைய திறமை எல்லாம் வீணாகுது. மெயின் ஃப்ரேமில் டீம் லீடாக இருக்கே. வொர்க் ஃப்ரெம் ஹோம் கூட நீ செய்யலாம். நாங்க அதுக்கு ஏற்பாடு செய்றோம். உன்னைப் போன்ற திறமைசாலிகளை அலுவலகம் இழக்க விரும்பாது.” டீம் மேனேஜர் அதுல் குல்கர்னி சொல்லிக் கொண்டிருந்தார்.

“கணவருக்கு வெளிநாட்டு ட்ரிப் இருக்கு. மாமியார் மாமனாரைக் கூட்டி வரணும். வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்யணும். மெடிகல் ஃபெசிலிட்டீஸ் அதிகம் உள்ள இடத்துல ஃப்ளாட் வாங்கி இருக்கோம். அதுக்கு வீடு ஷிஃப்ட் செய்யணும். நர்ஸிங்குக்கும் ஆள் கிடைச்சா நல்லது. தேடணும். இப்போதைக்கு எனக்கு மூன்று மாசம் லீவ் வேணும். அதன்பின் சொல்றேன். “

கைகுலுக்கி விடைபெறும்போது அவர் கண்களிலும் கைகளிலும் சிறிதான காதல் கசிந்துகொண்டிருந்தது. சேஃபியோ செக்ஸுவல் ( SAPHIOSEXUAL ) மனம் முணுமுணுத்தது. என் திறமைகளைக் காதலி என்னை வேண்டாம். டக்கென்று திரும்பி நடந்தாள். வொர்க் ஃப்ரெம் ஹோம் .. இந்த டீலை ஏற்றுக்கொள்வோமா வேண்டாமா.. சாதக பாதகங்களை மனம் ஆராய்ந்துகொண்டிருந்தது.

னகம்மா வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள். முதல் முறை பார்த்தபோது புது ப்ளாட்டில் அனைத்து வீடுகளுக்கும் தினம் மாலையில் பூ சப்ளை செய்து கொண்டிருந்தாள். ” பொண்ணு காலேஜ் படிக்குதும்மா.. வூட்டுக்காரரு ஒரே குடி.. தினம் பூ வாங்கினிங்கன்னா எனக்கு பொண்ணு படிப்பு செலவுக்கு ஆகும்மா.. “ என்றாள். பால்கனியில் துளசி, புதினா, கற்பூரவல்லி, கொத்துமல்லி, நீலச்சங்குப்பூ, ரோஸ், மேரி கோல்ட், டேபிள் ரோஸ் , கத்தாழை, மணி ப்ளாண்ட் என ஏகத்துக்கும் செடிகள் இருந்தன.

ப்ளாட்டுக்கு தினம் வருபவள்தான். அதனால் பாதுகாப்பானவள். லீவும் போடமாட்டாள். ” சரி வாங்கிக்கிறேன். ஆனா பகல்ல என்ன செய்றே. காலையில் ஒரு தரம் வந்து வீடு கூட்டி துடைச்சு பாத்திரம் தேச்சுக் கொடுத்துட்டுப் போ “ சரி என்று வந்தாள் கனகம்மா.

மூன்று வேளையும் சாப்பாடு கொடுப்பது, குளிக்க ஏற்பாடு செய்வது, கைபிடித்து அழைத்துச் சென்று குளிக்க வைப்பது. பாத்ரூம் செல்ல உடை உடுத்த உதவுவது, காலையும் மாலையும் சின்ன வாக்கிங் அழைத்துச்செல்வது,. டிவி போடுவது, பேப்பர் படித்துக் காண்பிப்பது அத்தோடு சமைப்பது அவர்களின் உடையையும் வாஷிங்மெஷினில் போட்டு அயர்ன் செய்வது, கூடவே மளிகை, மருந்து பழங்கள் வாங்க ஷாப்பிங் மாலுக்குச் செல்வது., ஃபோன் கரண்ட் இண்டர்நெட் பில் கட்டுவது என ஓய்வில்லாமல் வேலை இருந்தது அகல்யாவுக்கு.

அம்மா வராத நாட்களில் மாலை நேரங்களில் வந்து பாத்திரம் மட்டும் தேய்த்துக் கொடுத்த மாலாவைப் பிடித்துப் போக அவளிடம் மாலையிலும் காலையிலும் வந்து மாமனார் மாமியாரைப் பார்த்துக்கொள்ள உதவி செய்யும்படிக் கேட்க ஃபீஸ்கட்ட அம்மா பணம் கொடுத்தாலும் உடைகள் வாங்கவும் பாக்கெட்மணிக்கும் ஆகுமே என மாலா ஒத்துக்கொண்டாள்.

ம்டம் என்று யாரோ யாரையோ அடிக்கும் சத்தம் கேட்டு மதியக் குட்டித் தூக்கத்தில் இருந்து விழித்த அகல்யா வேகமாக பால்கனிப் பக்கம் வந்தாள். கனகம்மாதான் மாலாவின் கையை முறுக்கி முதுகுப்பக்கம் வைத்து முதுகில் அடித்துக் கொண்டிருந்தாள். ”என்ன கனகம்மா என்னாச்சு நிறுத்துங்க.”. என அகல்யா சொல்ல., “ என்ன ட்ரெசுன்னு இத வாங்கி வச்சிருக்கா பாருங்கம்மா. அழகா சுரிதார் போடுறத விட்டுட்டு. காலை ஒட்டிக்கிட்டு இது டைட்டா இருக்கு. இதப் போட்டு மேல பெரிய குர்த்தாவை போட்டுட்டு இவ நடந்தா கூட எங்க தெருல இருக்குற நாயிங்க விசில் அடிக்குது. நமக்கு இதெல்லாம் தேவையா… “

கனகம்மா சொன்னது லெக்கின்ஸ் பற்றி.. அகல்யா சொன்னாள். “ கனகம்மா இது ஒண்ணும் அசிங்கமான ட்ரெஸ் இல்ல. உடம்ப முழுக்க மூடுது. அவளுக்கு வசதியா இருக்கு.பார்க்குறவங்க பார்வையில கோணத்தனம் இருந்தா அதத்தான் திருத்தணும். இவ எந்தத் தப்பும் பண்ணல. நாந்தான் வாங்கிக் கொடுத்தேன். “  கனகம்மா அதற்குப் பின் பேசவில்லை. வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

ரவு நேரங்கள் சில சமயம் பதற்றத்தை விளைத்துவிடுவதுண்டு. குழந்தையைப் போல மாமனாரும் மாமியாரும் இருக்க. சில சமயம் அதிகப்படியாக வேர்த்தோ மயக்க நிலைக்கோ மாமனார் போகும்போது ஒன்றும் செய்ய இயலா நிலைக்குப் போய்விடுவாள் அகல்யா. ஆஸ்பிரின் கொடுத்து அவ்வப்போது ஐசி யூனிட்டில் சேர்க்கும்படி ஆனது. எனவே மாலா இரவும் தங்கும்படி ஆனது. அகல்யாவுடைய அம்மா அப்பாவும் அவ்வப்போது வந்து சென்று கொண்டுதான் இருந்தார்கள்.

யூரோக்களை அனுப்பிக் கொண்டேயிருக்கும் கபிலன் ஸ்கைப்பில் தினம் ஒரு நாட்டில் இருந்து பேசுவதுண்டு. ஏழாண்டு சலிப்புப் போல ஒன்று அகல்யா மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு வெறுமை எல்லாவற்றிலும். வொர்க் ஃப்ரெம் ஹோம் செய்யலாமா வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது அகல்யாவுக்கு. மாமனார் மாமியாரின் உடல் நிலை ஒரு நாளைப் போல இருப்பதில்லை மறுநாள். எந்த நேரத்தில் எமர்ஜென்ஸி உதவி தேவைப்படும் எனச் சொல்ல இயலாத நிலை.

மரியாதை நிமித்தம் வீட்டிற்கு அவர்களைப் பார்க்க வந்த அதுல் குல்கர்னி அவளுடைய இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதை நினைவுறுத்திச் சென்றார். அவர்களுக்குத் தேவை நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும் திறமையான அடிமைகள். இங்கே ரூபாய்களில் அடிக்கும் மனித உழைப்பை வெளிநாடுகளில் யூரோக்களில் விற்றுச் சம்பாதித்துக் கொண்டிருந்தது நிறுவனம். இருந்தும் கை நிறையக் காசு., தனித்துவம் எல்லாம் கரைந்து வீட்டிற்குள் சுழலும் மங்கிய கோள் போல உணர்ந்தாள் அகல்யா.

மூன்று மாதம் கழித்து இந்தமுறை கபிலன் வந்தபோது எந்த ஊருக்கும் செல்ல இயலவில்லை. அகல்யா ஒரு மங்கிய தீபம் போல மவுனமாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். வாட்ஸப் ஃபேஸ்புக் நட்பு எல்லாம் துண்டித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத் தொடர்பும் அற்று தனித்தீவில் வசிக்கும் ஒரு ஆதிவாசி போல எந்திரமாய் எழுவதும் குளிப்பதும் பெரியவர்களைக் கவனிப்பதும் என அவள் பொழுது ஓடிக்கொண்டிருந்தது.

தன்னில் பாதியான அவளுக்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு கபிலன் ஆளாகி இருந்தான். அன்றிரவு அதிகமாக வியர்த்தபடி படுக்கையில் தவித்துக்கொண்டிருந்த தகப்பனைக் கண்டதும் அவன் உள்ளம் துடித்தது. ஒரே பரபரப்பில் ஆம்புலன்ஸ் வந்ததும் ஹாஸ்பிட்டலில் சேர்த்ததும் இரண்டு நாட்கள் மௌன அலைச்சலில் கழிந்தன. ஐசியூவின் கண்ணாடிக் கதவுகள் தேவலோகக் கதவுகள் போலத் தெரிந்தன. தந்தை மூச்சு விடுகிறார். அது போதும் அதுவே போதும் எனத் திரும்பியவன் தன் கண்களில் வடிந்த கண்ணீர் அகல்யாவின் கண்களிலும் பெருகி வழிவதைக் கண்டான்.

குணமாகி வீடு வந்த தந்தை மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. “ எங்களுக்கு அகல்யா மருமகள் இல்லை.. மகள். அதுவும் இரண்டாவது ஆண்பிள்ளை போல..எங்களைக் காக்கும் தெய்வம்.. “ கேட்டதும் சிலிர்த்தது கபிலனுக்கு. உன்னைவிட அவள் உயர்வானவள் எனத் தந்தை சொன்னது போல இருந்தது அவனுக்கு. இருந்தாலும் பெருமையாயிருந்தது..

”மேல் வேலைக்கும் அப்பா அம்மாவைப் பார்த்துக்குறதுக்கும் சரியான ஆள் ஏற்பாடு செய்திருக்கியே அகல்யா.. நீ வேணா திரும்ப வேலைக்கு போகலாமே. உங்க ஆஃபீஸ்ல உனக்கான இடம் நிரப்பப்படாமல் இருக்குன்னு அதுல் சொன்னாரே.. ” மனைவியிடம் வினவினான் கபிலன்.

போறேன் ஆனா இப்ப இல்லை..

சரி எப்பன்னு முடிவு பண்ணி இருக்கே..

ஒரு ஆறு வருஷம் கழிச்சு..

ஏன் அதுவரை என்ன..

எனக்கு டெலிவரிக்கும் அதன் பின் சைல்ட் கேருக்கும் ஆறு வருஷம் மெடர்னிட்டி லீவ் உண்டு. அத என்ன செய்ய..

கண்ணோரம் குறும்பு மின்ன அகல்யா கேட்க கபிலனுக்குள் உற்சாக இசை கொப்பளித்தது.. அட உண்மையாகவே  பாண்ட் வாத்திய சப்தத்துடன் குதிரையில் அமர்ந்த அந்த ஜிம் இளைஞன் மாப்பிள்ளையாக ஷாதி பாரத் நடைபெற்று உள் நுழைய அவுடன் ஷிவானியின் கல்யாணம் ப்ளாட்டிஸின் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது..



6 கருத்துகள்:

  1. நவீனகால அகல்யாவின் கதையா? சூப்பராக யோசித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக நேர்த்தியாய்
    சொல்லிப்போனவிதமும்
    முடித்த விதமும் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. ஷிவானிக்கும் நல்ல காலம் பிறந்தது!

    பதிலளிநீக்கு
  4. அகல்யா அகலாய்!!! ஒளிர்கிறாள்!!! அருமை! முடிவும் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  5. உங்கள் எழுத்தும் நடையும் ஈர்க்கிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  6. Thanks VGK sir

    Thanks Ramani sir

    THanks Sriram

    THanks Tulsi sago

    Thanks Bala sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)