புதன், 26 ஏப்ரல், 2017

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி.


சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி.

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி

 

”என்னுடைய வெற்றி மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் என் சகமனிதர்களின் வெற்றி கொண்டாட்டத்திற்குரியது” என்று அனைவரின் துணைக்கோடலையும் கைக்கொண்ட ஒருவரின் முன், தோல்வி துவண்டு போகாதா என்ன ? தோல்விகளைப் படிக்கட்டுக்களாக்கி வெற்றியெனும் சிகரம் நோக்கிப் பயணிப்பவர் வெறும் 34 வயது மட்டுமே ஆன ஸ்பினோஸ் நிறுவனத்தின் டைரக்டர் அபிராம சுந்தரி. ஃபார்மா மற்றும் பயோ டெக் இண்டஸ்ட்ரியில் நகரத்தார் பெண்களில் முதல் தொழில் அதிபர், இந்தியப் பெண்களில் முதல் முதலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டவர், உலகிலேயே மிக இளைய வயதிலேயே இத்தொழிலில் ஈடுபட்டவர் என்ற முப்பெரும் பெருமைக்குச் சொந்தக்காரர் அபிராமி.

தன்னந்தனியாக அமெரிக்கா, கனடா, அமீரகம், லண்டன், ஜெர்மனி  ஆகிய நாடுகளில் தொழில் நிமித்தம் என்று வரும் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவர். இவ்வளவு பெருமைகள் இருந்தும் அணுக்கத்துக்கு உரியவராகவும் எளிமையாகவும் இருப்பதே இவரின் சிறப்பு.

 

தொடர் முயற்சியாளரான சுந்தரி வெறும் 3000 ரூபாய் சம்பளத்தில் 2004 இல் வேலைக்குச் சென்றவர், இன்றைய தேதியில் பலகோடி மூலதனமுள்ள தொழிலின் தலைவி. வேலையை விடும்போது வருடாந்திர இன்செண்டிவ் ஒன்றரை லட்சம் வரை வாங்கியவர் இன்று மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கக்கூடிய வேலைக்கான அழைப்பிருந்தும் தனியாக நின்று கைவிட்டுப் போகவிருந்த ஒரு நிறுவனத்தைத் தன் பெரு முயற்சியால் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து இன்று திறம்பட நடத்தி வருகிறார்.

 

இந்தியாவிலிருக்கும் சுமார் 150 கிளினிக்கல் ரிசர்ச் கம்பெனிகளில் கோவை துடியலூரில் இருக்கும் ஸ்பினோஸ் முக்கியமான ஒன்று. அதன்( ஸ்பினோஸ் லைஃப் சயின்ஸ் & ரிசர்ச் ப்ரைவேட் லிமிடட் .) ஒவ்வொரு செங்கல்லும் அபிராமியின் உழைப்பை வியர்வையின் வெற்றியைப் பறைசாற்றும்.

 

சர்வதேச மருந்துகளைப் பரிசோதிக்கும் க்ளினிக்கல் ட்ரையல்ஸ், க்ளினிக்கல் ரிசர்ச், பயோ அனலிடிகல் சர்வீசஸ், ஜெனரல் லாபராட்டரி சர்வீசஸ், குவாலிட்டி அஷ்யூரன்ஸ் ஆகியன செயல்படுகின்றன. பயோ ஈக்குவலன்ஸ் ஸ்டடீஸ், 300 விதமான பயோ அனலிடிக்கல் மெத்தட், அத்யாவசியமான சோதனைகள் செய்தபின் வாலண்டியராகப் பதிவு செய்தவர்களுக்கு அட்மிஷன், 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பு, மூன்று வேளையும் மருந்துகளோடு சார்ட் படி திட்டமிட்ட சத்தான உணவுகள், 100 படுக்கைகள், ஒவ்வொரு மருத்துக்கும் சோதனை செய்பவர்களுக்குத் தனித்தனி ஹால்கள், தனித்தனி சீருடைகள், கிட்டத்தட்ட  100 க்கும் அதிகமான படுக்கைகள், தனித்தனி சார்ட்டுகள், சுகாதார கழிப்பிட வசதிகள், தொலைக்காட்சி வசதிகள், எப்போழுதும் அட்டெண்டர்கள், மேலும் இரண்டு மருத்துவர்கள், குவாலிட்டி அஷ்யூரன்ஸ் பிரிவு, இரத்தப் பரிசோதனைகள் , மருத்துவ , உறை மாதிரிகளைப் பாதுகாக்கும்பிரிவு, ரகசியப் பாதுகாப்புப் பிரிவுகள், கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் பிரிவு இவை எல்லாவற்றுக்கும் எலக்ட்ரானிக் நுழைவு அனுமதி இருந்தால் மட்டுமே சென்று வரவும் முடியும் என்பது கூடுதல் பாதுகாப்பு

 

ஆரோக்கியமான வாலண்டியர்களுக்கு /தன்னார்வலர்களுக்கு முதன் முதலாக சந்தைக்கு வரப்போகும் மருந்தைக் கொடுத்து 48 மணிநேரம் ஆய்வு செய்து அதன் விளைவுகள், பின் விளைவுகள், பக்கவிளைவுகள் பற்றி ரிப்போர்ட் அளிப்பதே ஸ்பினோஸின் பணி. அதன் பின் 45 நாட்கள் வரை வாலண்டியர்கள் இவர்களின் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள். இந்த வாலண்டியர்கள் பொதுமக்களின் நன்மைக்காகத் தம்மைச் சோதனைக்கு ஆளாக்கிக் கொள்பவர்கள் என்பதால் எந்த டெஸ்ட் தொடங்கும் போதும் முதலில் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. ஏதேனும் எமர்ஜென்ஸி என்றால் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கவேண்டிய வேலை இது என்பதால் அபிராமி பக்கத்திலேயே வீட்டை அமைத்துக் கொண்டுள்ளார்.

 

ஆமாம் இவ்வளவு சிறப்புகளும் எளிதில் கிட்டிவிட்டனவா என்ன ? அபிராமியின் குழந்தைப் பருவம் எல்லாக் குழந்தைகளையும் போல மிக மிக அழகானதும் இன்பமானதும் கூட. தந்தை தாயின் அரவணைப்பில் கஷ்டம் என்றால் என்ன எனத் தெரியாமல் வளர்ந்தவர்.  கல்லூரியில் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் மஞ்சள் காமாலை, அம்மை, டைபாய்டு என நோய்கள் தாக்க ஹோம்சிக்கோடு அடிக்கடி வீட்டுக்குப் படையெடுக்கும் நோஞ்சானாத்தான் இருந்தார். ஆனால் படிப்பில் படு கெட்டியும் சுட்டியும் கூட. ஆசிரியர்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர். ஒவ்வொரு முறையும் ஹாஸ்டலுக்குப் போகமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க தாயார் படிப்புதான் முக்கியம் அதை எப்படியும் முடித்து விடு என்று ஊக்கம் அளித்திருக்கிறார்.

 

படித்து முடிக்கும் தருவாயில் தந்தையின் வியாபாரம் நொடித்துப் போய்விட தந்தை ஹைதராபாத்தில் ஒரு வேலைக்குச் சேர்கிறார். உறவினர் அனைவரும் கைகொடுக்க தாய் தன் நகைகளை எல்லாம் கழட்டிக் கொடுக்கத் திருமணம் நடைபெறுகிறது. கணவருடன் உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். அனைவரும் உடன் பிறவா சகோதரிகள் போலப் பழகினாலும் மாமியார் தாய்போலப் பரிவு காட்டினாலும் ஒரு தனிமை. சென்னையில் தனிக்குடித்தனம். திருமணத்துக்கு முன் பணத்தைத் தண்ணீர் போலச் செலவழித்த அபிராமிக்குக் கிடைத்த வாடகை வீட்டிலோ குறிப்பிட்ட நேரத்தில்தான் தண்ணீர் வரும்.

 

கணவர் காட்டன் இண்டஸ்ட்ரியில் பணிபுரிந்து வர சம்பளம் போதாமையால் வீட்டின் பின்புறமிருந்த பயோடெக் லாபில் 3000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கே டெஸ்ட் செய்த குழாய்களைக் கழுவும் வேலை மட்டுமே. படித்ததோ ஃபார்மா, செய்வதோ டெஸ்ட் ட்யூப் சுத்தம் என்பதைத் தாங்க முடியாத அவர் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் தான் எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்க அவர்கள் இரவு ஷிப்டில் வந்தால்தான் முழுமையாகக் கற்றுத்தரமுடியும் எனக் கூற இவர் தினமும் இரவு 8 மணியில் இருந்து காலை பத்து மணி வரை நைட்ஷிப்டில் வேலை செய்துவிட்டு அதன் பின் வீட்டுக் கடமைகளையும் கணவரின் உதவியுடன் முடிப்பார்.

 

அந்த சமயத்தில் முதல் குழந்தை வயிற்றில் . முதல் குழந்தை பிறந்தவுடன் யாராவது ஒருவர் பகலில் கவனித்துக் கொள்ளவேண்டி இவரின் கணவர் தான் பார்த்து வந்த காட்டன் இண்டஸ்ட்ரி வேலையை ராஜினாமா செய்துவிட்டார். கமிஷன் அடிப்படையில் காட்டன் மொத்த வியாபாரத்தைத் தொடர்கிறார். கணவரின் உதவியாலும், அதீத உழைப்பில் கிடைத்த இன்செண்டிவ், போனஸ் தொகைகளுடனும் லோன் போட்டு சென்னையில் 25 லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்குகிறார் அபிராமி.

 

அதன்பின் கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குச் சொந்தமான இந்த இடத்தை வாங்கி டாக்டர் கணேசன் இந்த பயோ டெக் ஃபார்மாவை ஆரம்பிக்கிறார். டாக்டர் கணேசனின் சென்னை நிறுவனத்தில்தான் டாக்டர் அபிராமி பணிபுரிந்து வந்தார். கோவை நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ள நம்பிக்கையான, துடிப்பான ஆள் தேவைப்பட்ட போது காரும் ட்ரைவரும் தருகிறேன் என்று டாக்டர் கணேசன் உறுதியளிக்க உடனே சம்மதிக்கிறார் அபிராமி.

 

சின்னக் குழந்தையில் தந்தையின் காரில் கல்லூரி ஹாஸ்டலுக்கு வாராவாரம் சென்று வந்தவர் தந்தையின் தொழில் நொடித்ததும் பஸ்ஸில் பயணப்படுவார். ட்ரெயினில் வரும் உறவினர் குழந்தைகளுக்கு சொந்தக்காரர்களின் கார் பறக்க இவரோ பஸ்ஸில் பயணப்பட்டும் நடந்தும் சென்றாக வேண்டிய நிலை. நம் தந்தையிடம் கார் இருந்தபோது எப்படி இருந்தோம். நம் வாழ்வின் லட்சியம் தன் தந்தையுடன் இருந்த பழைய செல்வச் சூழலைத் திரும்ப அடைந்தே தீர்வது, அதற்குத் தொழிலில் ஈடுபடுவது உதவும் என நினைத்தவருக்கு ட்ரைவருடன் கார் கிடைத்ததும் கோவை பயோ டெக் நிறுவனத்தின் பொறுப்பாளராகச் சம்மதிக்கிறார்.

 

அதன் பின் நடந்தவைகளும் இலகுவானவை அல்ல. ஒரு சில வருடங்களுக்குப் பின் டாக்டர் கணேசன் இந்த நிறுவனத்தைப் பராமரிக்க முடியாமல் விற்க விரும்ப ஓரிரு மருத்துவமனைகளும் படையெடுக்க. இதைப் பார்த்த அபிராமிக்கோ தன் கனவுக் கோட்டை சிதைவது போல வருத்தம். பரிசோதனை அறை, பாதுகாப்பு அறை, வாலண்டியர் அறை போன்ற ஒவ்வொரு அறையின் கதவுக்கும் கூட அளவு உண்டாம். அதைப் போல நிறைய ரூல்ஸ் & ரெகுலெஷன் திட்டப்படி வடிவமைக்கப்பட்ட பயோ லாப் உடைபடப் போவது மட்டுமல்ல அங்கே வேலை செய்யும் 70, 80 ஊழியர்களுக்கும் வேலை போய்விடுமே எனப் பதைத்த அபிராமி என்ன செய்வதெனத் திகைக்கிறார்.

 

தன்னுடன் வேலை பார்த்த டாக்டர் செந்திலிடம் தன் வருத்தத்தைப் பகிர்கிறார். இந்த நிறுவனம் சிதைந்து போவதை விரும்பாத டாக்டர் செந்தில் இதைத் தக்க வைத்துக் கொள்ள ஆவன செய்ய உதவ அபிராமி தன்னுடைய இரு இல்லங்களையும் பிணை வைத்து தன்னுடைய கணவரின் பிஸினஸ் லாபம் முழுவதையும் இதில் கட்டி நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்புக்கு வந்துவிட்டார்.

 

அதிலும் நிறுவனத்திற்கு மூன்று பங்குதாரர்கள் இருந்தபடியால் அவர்களின் அனுமதி பெற வேண்டி இருந்தது.  சென்னை, டெல்லி என வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அவர்களின் அனுமதிக்காக அடிக்கடிப் படையெடுத்துத் தனது கனவு ப்ராஜெக்டைச் சொல்லி அவர்களின் நம்பிக்கையையும் துணையையும் ஒரு வழியாகப் பெற்று விட்டார். தற்போது நிறுவனம் முழுமூச்சில் செயல்படத்துவங்கி விட்டது.

 


அந்த நிறுவனத்தின் பெயர் ஸ்பினோஸ் என்று வித்யாசமாக இருந்ததால் விசாரித்தோம். ஒரு வேளை மருத்துவத்துறையின் முதுகெலும்பான மருந்துகள் செயல்படும் விதம் பற்றிய ஆராய்ச்சி என்பதால் இப்பெயரோவென. அவர் கூறிய விளக்கம் அசர வைத்தது. ! பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு தத்துவஞானி ஒருவரின் பெயர் ஸ்பினோஸா. அதன் அர்த்தம் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஸ்பினோஸாவின் தத்துவக் கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட அபிராமியும் தன்னுடைய குடும்பத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதால் இந்தப் பெயர் மனதோடு ஒன்றிவிட தங்களுடைய நிறுவனத்துக்கு ஸ்பினோஸ் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

 

தாய் தந்தை கணவர் ஆகியோருடன் வசித்து வரும் இவர் தனது நிறுவன ஊழியர்களையும் சக தோழமைகள் போலத்தான் நடத்துகிறார். இணைந்து வெற்றி காண்பதே இவர் பெற்ற மிகப்பெரிய பேரின்பம் என்று தோன்றுகிறது. தன்னுடைய வெற்றி மகிழ்ச்சி என்றும், தன்னைச் சார்ந்தவர்களின் வெற்றி கொண்டாட்டம் என்றும் கூறும் இவர் ஜெயித்ததில் ஆச்சர்யமென்ன !

 

இன்னும் பத்தாண்டுகளுக்குள் தன் நிறுவனம் எட்டும் உயரம் பற்றியும் இவர்  தீர்மானித்திருக்கிறார்.

*கிளினிக்கல் ரிசர்ச் நிறுவனங்களில் குவாலிட்டியில் நம்பர் ஒன்னாகப் பெயர் எடுப்பது.

 

*ஸ்பினோசை USFDA, WHO,யூரோப்பியன், மலேஷியன் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக மாற்றுவது.

 

*நிறுவனம் இருக்கும் இடத்தை மருத்துவ சேவையின் மூலம் உலகளாவிய பெயர்பெறும் இடமாக மாற்றுவது. 

 

ஆம் தீராத கனவுகளும் தொடர் முயற்சிகளும்தான் தான் நமது வெற்றியைத் தீர்மானிக்கின்றன. துணிச்சலின் மறுபெயர் அபிராமி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மாபெரும் வெற்றியைக் கூடத் தனதாகக் கொள்ளாமல் இன்றைக்குத் தாய்,தந்தை, கணவர்,  மாமியார் , டாக்டர் கணேசன் ஆகியோர் உதவியால் சாதித்ததாக அவர்களுக்கும் பெருமை சேர்க்கிறார். டாக்டர் கணேசன் அவர்களைத் தன்னுடைய தந்தைக்கு நிகராக மதிப்பதால் டாக்டர் கணேசனுடைய பெற்றோரின் புகைப்படங்கள் இவரது அலுவலகத்தை ஆசீர்வதிக்கின்றன.

 

சோதனைகள் புடம் போட சாதித்தெழுந்த அபிராம சுந்தரி இன்னும் பல உயரங்களையும் சிகரங்களையும் எட்ட சர்வதேச நகரத்தார் வர்த்தக சபையின் வாழ்த்துகள். !


6 கருத்துகள்:

  1. திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் நகரத்தார் முன்னோடிகள் அல்லவா அவர்களுக்கே என்று ஒரு தனி acumen இருக்கிறது அவ்வழி வந்த சாதனைப் பெண்மணிக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான கட்டுரை. மிகசிறந்த சாதனைப் பெண்மணியேதான். சோதனைகள் புடம் போட சாதித்தெழுந்த அபிராம சுந்தரி இன்னும் பல உயரங்களையும் சிகரங்களையும் எட்ட நாங்களும் வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்!
    அவரது பணி தொடர
    வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  4. Thanks Venkat Sago

    Thanks Bala sir

    Thanks Jayakumar sago

    Thanks VGK sir

    Thanks Yarlpavanan sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)