வியாழன், 9 பிப்ரவரி, 2017

இரு வேறு மனம் :- ( மூன்றாம் பரிசு பெற்ற கவிதை )

இரு வேறு மனம் :-

அவனுக்கும் அவளுக்குமிடையில் எதுவுமில்லை
ஒற்றை வாக்குவாதம் தாங்கும் சின்னச் சுவர்கூட
வரப்புத் தகராறில்லை வாய்க்கால் வெட்டவில்லை
பொட்டலாய்க் கிடக்கு வாழ்க்கை
உறவின் உரசல்கள் எங்குமே இல்லை
ஈர்ப்பாக எதுவுமே தோணவில்லை.
எதையும் ரத்து செய்யாமல்
என்னவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இருளில் உருண்டு கொண்டிருக்கிறது பூமி
டிக்கு டிக்கென நேரம் தின்னும் கெடிகாரம்
உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது ஒவ்வொருநாளையும்
தூரத்துக் கோளில் நம்பிக்கையாய்
நடுநிசியில் ஒரு சுடர் தெறிக்கிறது.
பக்கத்துத் தோட்டத்தில் கொஞ்சிக் கொஞ்சி
நெஞ்சக் கூடடையும் குருவிகள்
காதல் துள்ளும் கண்களுடன் பறக்கின்றது.

கைபிடித்த கருணையும் கைகொடுத்த கையும்
புகைப்படப் பிடிமானத்தில் காத்திருக்கின்றன
என்றேனும் நெகிழக்கூடும் இறுகிக் கிடக்கும்
திருமணம் முடித்த இருவேறுமனம்.
பாசம் போர்த்தியிருக்கும் சாகரம்
கனமான மழைக்காய்க் கலையக்  காத்திருக்கிறது
அடைசல் தூறல்கள் நடிப்பவர்களை நனைக்கிறது.
சாரல் பட்டவர்கள் விழிக்கத்துவங்குகிறார்கள்.

ஊசியாய் விழத் துவங்குகிறது
ஒவ்வொரு தேவையின்பின்னும் ஒரு துளி.
மெல்ல மெல்ல வெளியேறுகிறது
அவர்களை முடக்கிய வாதம்.
கைகளைக் கோர்க்காவிட்டாலும்
பக்கம் அமர்ந்து கொள்கிறார்கள்
ஒரு வழியாக நுழைந்துவிட்ட களைப்பில்
மௌனமாய் நடுவில் அமர்ந்திருக்கிறது பிரியம்.

-- டிஸ்கி :- ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை. நன்றியும் அன்பும். :)


8 கருத்துகள்:

  1. //மெல்ல மெல்ல வெளியேறுகிறது
    அவர்களை முடக்கிய வாதம்.
    கைகளைக் கோர்க்காவிட்டாலும்
    பக்கம் அமர்ந்து கொள்கிறார்கள்
    ஒரு வழியாக நுழைந்துவிட்ட களைப்பில்
    மௌனமாய் நடுவில் அமர்ந்திருக்கிறது பிரியம்.//

    சிறப்பு. அருமை

    பதிலளிநீக்கு
  2. மிக நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. எழுதுபவருக்கு எதுவும் எழுது பொருளே

    பதிலளிநீக்கு
  4. இனி பிழைத்துவிடும் அவர்கள் உறவு..

    பதிலளிநீக்கு
  5. நன்றி டிடி சகோ

    நன்றி விசு சார்

    நன்றி துளசி சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி பால சிவசங்கரன்

    நன்றி ஸ்ரீராம். :)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)