புதன், 7 டிசம்பர், 2016

முதல்வர் ஜெயும் முன்னவர் சோவும்

ஜெ ,சோ இருவரும் எனக்கு மிகப் பிடித்த ஆளுமைகள். முதல்வர் ஜெயின் மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்ட மறுநாளிலே அவரது வெல்விஷர் சோ அவர்களும் மறைந்தது யதேச்சையான ஒற்றுமை.

ஜெ - தைரியம் என்பதை மனதில் பச்சை குத்திய பெயர்.  சோ - பத்ரிக்கை உலகில் என்னைக் கவர்ந்த மனிதர்.  தைரியமாகக் கருத்துக்களை முன் வைத்தவர். பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

இருபெரும் துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவரையும் எனக்கு மிகப் பிடிக்கும். அசைக்கமுடியாத மாபெரும் தலைவியாக, பெண்களின் உந்துசக்தியாக,  அனைவரின் பேரன்பையும் பெற்றவராக, தன்னம்பிக்கையுடன் செயலாற்றுபவராக,  தன்னிச்சையாக தீரத்துடன் செயலாற்றுபவராக இன்னும் பலவாக இருந்த ஜெ , அன்னை இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு எனக்குப் பிடித்த தலைவியாவார். தனித்திருந்து மாணவியர் நலனுக்காக வாழ்ந்த எங்கள் கல்லூரி முதல்வர் சகுந்தலா போல, எங்கள் பேராசிரியைகள் போல தன் சாதனைகளாலும், மக்கள்நலப் பணிகளாலும் என்னுள் பிரமிப்பை விளைவித்தவர் ஜெ அம்மா.


அவர் தனிப்பட்ட வாழ்வில் எடுத்த சில முடிவுகள் பிடித்தமில்லாதவையாக இருப்பினும் அரசியல் அரங்கில் சில பல வழக்குகளில் அவர் பெயர் அடிபட்டபோதும் மறுக்கவோ வெறுக்கவோ முடியாதவர் ஜெ அம்மா. அவரது ஆளுமை அத்தகையது. மக்கள் நலத் திட்டங்கள் பல கொண்டு வந்தவர். பத்து ரூபாயில் குடிநீர், ஐந்து ரூபாயில் இட்லி, ஆதரவற்ற பெண்களுக்கான உதவித் தொகை, தொட்டில் குழந்தைத் திட்டம், போன்றவற்றால் மனங்கவர்ந்தவர்.

ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த அரசியல் கோட்டைக்குள் புகுந்து அரசாண்ட பெண் சிங்கமிது.  நம் தைரியத்தின் ஊற்றுக் கண். காலில் விழும் கலாச்சாரம் பிடிக்காது எனினும் தன்னை வணங்கும்படியான பெரும்சக்தி கொண்டு வியப்பூட்டியவர். 

அந்தப் பூமகள் உடல்நிலைக் குறைவின் காரணத்தால் டிசம்பர் 5 அன்று இயற்கை எய்திய செய்தி மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கியது. எனினும் அவர் ஒரு விதையாகவே மறைந்திருக்கிறார். இன்னும் இன்னும் தைரிய விருட்சங்களாக நம் மனதில் கிளைத்தெழுவார் என்றே தோன்றுகிறது . இது போன்ற பெண்ணரசிகள்  இன்னும் பலர் வந்து நம்மை ஆளவேண்டும்.

சோ அவர்கள் திரைப்படத்தில் நகைப்பூட்டியதை விட துக்ளக் மூலம் சிந்திக்க வைத்தது மிகப் பிடிக்கும். ஒரு முறை ஒரு கேள்வி பதிலில் “ எம்ஜிஆர் அண்ணாவின் தம்பி அல்ல” என்று கலைஞர் கூறியதாகக் கேள்வி கேட்ட வாசகருக்கு  ”இப்படியே அவர் சொல்லிக் கொண்டிருந்தால் ஆம் நான் அண்ணாவின் தம்பி அல்ல நான் அண்ணாவின் அண்ணா என்று ஒருநாள் எம்ஜியார் சொல்லப் போகிறார் “ என்று நையாண்டியாகப் பதிலளித்திருந்தார்.

விகடனில் மதன் கூட ஒரு முறை  ”சோவை சந்திப்பதுண்டா” என்று ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலாக,” முன்பெல்லாம் சந்தித்து வந்ததாகவும் தற்போது  துக்ளக் அலுவலகத்தில்  விபி சிங் , சந்திரசேகர், வாஜ்பாய்  போன்ற தேசியத் தலைவர்களோடு அவர் அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதைப் பார்த்தால் மிரட்சியாக இருப்பதால் எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகவும் “ஹாஸ்யமாகக் குறிப்பிட்டிருந்தார். 

“யாருக்கும் வெட்கமில்லை”  என்ற படத்தை சோ 1975 ஆம் ஆண்டு ஜெயாம்மா நடிப்பில் உருவாக்கியுள்ளார். இது சமூகத்தைச் சாடும் தலைப்பாகவே தோன்றுகிறது.

நான் மதிக்கும் இருபெரும் ஆளுமைகளும் இந்த டிசம்பர் மாதத்தில் ஒரே ஆஸ்பத்ரியில் ஒரே விதமான உடல் சீர்கேட்டால் மறைந்தது அதிர்ச்சியளித்த ஒற்றுமைதான்.வந்தவர்கள் எல்லாம் சரித்திரமாவதில்லை. ஆனால் சிலர் வாழும் சரித்திரமாகவும் வாழ்ந்தபின் மகா காவியமாகவும் ஆகிறார்கள். அப்படிப்பட்ட இருவரை நேரில் சந்திக்க இயலாவிடினும் அவர்கள்  வாழ்ந்த காலகட்டத்தில் வாழ நேர்ந்ததே என் பாக்யமாகக் கருதுகிறேன்.

ஜெயம்மா போன்ற பெண்ணரசிகள், தைர்யலெக்ஷ்மிகள்  இன்னும் பலர் வந்து நம்மை ஆளவேண்டும். நான் மிக மிக மதிக்கும் ஜெயம்மாவுக்கும் சோ அவர்களுக்கும் என் மனம்கசிந்த அஞ்சலிகளை என் வலைத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்கிறேன்.


7 கருத்துகள்:

  1. மிகவும் அழகாக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    எனக்கும் இந்த இருவரையும் மிகவும் பிடிக்கும். அவர்கள் இருவரின் மறைவும் மிகவும் வருத்தமாகவே உள்ளது.

    //வந்தவர்கள் எல்லாம் சரித்திரமாவதில்லை. ஆனால் சிலர் வாழும் சரித்திரமாகவும் வாழ்ந்தபின் மகா காவியமாகவும் ஆகிறார்கள்//

    உண்மை. மறுக்க முடியாத உண்மை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. //ஒரு முறை ஒரு கேள்வி பதிலில் “எம்ஜிஆர் அண்ணாவின் தம்பி அல்ல” என்று கலைஞர் கூறியதாகக் கேள்வி கேட்ட வாசகருக்கு ”இப்படியே அவர் சொல்லிக் கொண்டிருந்தால் ஆம் நான் அண்ணாவின் தம்பி அல்ல நான் அண்ணாவின் அண்ணா என்று ஒருநாள் எம்ஜியார் சொல்லப் போகிறார்“ என்று நையாண்டியாகப் பதிலளித்திருந்தார்.//

    மிகவும் ரஸித்தேன். யாருக்கும் பயப்படாத, அதிக அறிவுள்ள, மிகவும் வேடிக்கையான எழுத்தாளர்.

    துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த அன்று, முதல் இதழில் நடுப்பக்கத்தில், இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வதாக ஒரு கார்ட்டூன் வரைந்து, அதில் எழுதியிருந்த வாசகம் எனக்கு இன்னும் நினைவில் இருந்து சிரிப்பினை வரவழைக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார்

    ஆம் ஜம்பு சார் :(

    நன்றி ஜெயக்குமார் சகோ & வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)