சனி, 19 நவம்பர், 2016

சாட்டர்டே போஸ்ட். செந்தில்குமாரை மாற்றிய சங்ககிரி துர்க்கத்தின் சம்பவம்.

கூட்டாஞ்சோறு என்ற பதிவில் எழுதி வரும் சகோ செந்தில்குமாரின் பல இடுகைகளைப் படித்திருக்கிறேன். ஏர்போர்ட்ஸ், ரயில்வேஸ்டேஷன் மட்டுமல்ல. மத்திய ஆப்ரிக்க நாடுகளில் வாழும் பெண்களுக்கு நடந்து வரும் கொடுமைகள் பற்றியும் இவரது பதிவுகள் விழிப்புணர்வை உண்டாக்கியது.

இவர் தினத்தந்தியில் ஃப்ரீலான்சராகவும் ”அக்ரி டாக்டர்”, “ஹாலிடே நியூஸ்” ஆகிய பத்ரிக்கைகளின் இணை ஆசிரியராகவும் இருக்கிறார். ”சிறந்த விவசாயப் பத்ரிக்கையாளர் “ விருதும் வாங்கியவர் !.

என்னுடைய குல்பர்கா கோட்டை பற்றிய கட்டுரை ஹாலிடே நியூஸில் இடம்பெறச் செய்தவர். தொடர் முயற்சியாளர். கிட்டத்தட்ட 6000 கட்டுரைகள் எழுதி இருக்காராம். மயக்கம் போட்டு விழுந்திடாதீங்க. :) 

இவரிடம் இந்த வார சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது விழிப்புணர்வு உண்டாக்க வேண்டிய ஒரு விபரம் பற்றிப் பகிர்ந்து கொண்டார். தலைப்பைப் பார்த்தவுடனே பகீர் என்றது. இன்னும் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. சீக்கிரம் விமோசனம் பிறக்க வேண்டும் .


////பொம்பளப் புள்ளன்னா கொன்றுவாங்க.. இல்லம்மா..////


சகோ தேனம்மை லெக்ஷ்மணன் எனது இளமை கால நிகழ்வுகள் ஒன்றை எழுதி அனுப்ப சொல்லியிருந்தார். அதற்காக எழுதியது.


நான் எனது 10 வயது வரை சேலம் மாவட்டத்தில் இருந்த சங்ககிரி துர்க்கம்
என்ற சிறு ஊரில்தான் இருந்தேன். எனது தந்தை ரயில்வேயில் வேலை செய்ததால் அடிக்கடி இடம் மாற்றம் நிகழும் அப்படி நிகழ்ந்த இடமாற்றம்தான் அது.


கிட்டத்தட்ட 6 வருடங்கள் அங்கிருந்தேன். முதல் வகுப்பில் இருந்து 6-ம்
வகுப்புவரை அங்கிருந்த ஊராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் ஏதோ படித்தேன்.


நாங்கள் குடியிருந்த ரயில்வே காலனியில் வீடுகளே மிகக் குறைவு.
இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும். ஒரு வீட்டுக்கும் மற்றொரு
வீட்டுக்கும் குறைந்தபட்சம் 500 அடி தொலைவு இருக்கும். அதுவே ஊருக்குள்
இருக்கும் வீடுகள் எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு 200 அடி தொலைவில்
ரயில்வேக்கு சொந்தமான இடத்திலிருந்து சற்று தள்ளியிருக்கும்.


சரியாக எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு சேட்டு வீடு இருக்கும். அதற்கு
சற்று தொலைவில் இன்னொரு வீடு இருக்கும். இந்த இரண்டு வீட்டில் ஏதாவது ஒருவீட்டில்தான் நான் விடுமுறை நாட்களில் இருப்பேன். சேட்டு  வீட்டில் இருக்கும் அகிலேஷ் குமார் எனது பால்ய சிநேகிதன். எனது வகுப்புத் தோழன் வேறு. வகுப்பிலும் இருவரும் அருகருகேதான் அமர்வோம்.


அந்த ஊரில் பெரிய பணக்காரர்கள் அவர்கள்தான். ஓட்டு வீடுகளும் கூரை
வீடுகளும் நிறைந்த அந்த ஊரில் இரண்டு மாடி கொண்ட ஒரே பெரிய வீடு
அவர்களுடையது. அவர்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று வர எனக்கு சுதந்திரம் இருந்தது. மிக அன்பான மனிதர்கள். பெரும்பாலும் ஹிந்தியிலேயே பேசுவதால் எனக்கு எதுவும் புரியாது.


தினமும் அவர்கள் வீட்டிலிருந்து நான்கு லாரி லோடு வெத்தலை வட
இந்தியாவுக்குப் போகும். அதனால் அவர்கள் வீட்டில் எப்போதும் வெத்தலை
வாசம் இருந்து கொண்டே இருக்கும்.


அகிலேஷ் குமார் இல்லாத போது எனது பொழுது கழிவது ராமாயி, லட்சுமி என்ற இரட்டைச் சகோதரிகளுடன்தான். இருவருமே அப்போது திருமண வயதில் இருந்தவர்கள். பாவாடை தாவணியில் அழகாக இருக்கும் அவர்கள் முகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. ராமாயி சற்று மாநிறம். மிதமான அழகு. லட்சுமி நல்ல சிவப்பு. நல்ல அழகு. எனக்கென்னவோ லட்சுமி அக்காவை விட ராமாயி அக்காவையே பிடிக்கும். ஏனென்றால் கலகலப்பாக பேசக்கூடியவர் அவர்தான்.


விவசாயம்தான் அவர்களின் பிரதான தொழில். ஆடு மற்றும் மாடுகளை வளர்ப்பது சகோதரிகளின் பொறுப்பு. தாயம், பல்லாங்குழி, பாண்டி விளையாட்டு என்று எல்லா பெண்கள் விளையாட்டும் எனக்கு அறிமுகமானது அவர்கள் மூலம்தான். விடுமுறை என்றால் வயலில் இருக்கும் கிணற்றுக்கு மாடுகளை கொண்டுபோய் அவைகளை குளிப்பாட்டுவது, அதோடு சேர்ந்து நாங்கள் மூவரும் குளித்துக்
கொள்வது ஒரு இனிமையான அனுபவம்.


ஒருமுறை இப்படி குளித்துவிட்டு வரும்போது ஒரு வீட்டின் முன்பு குழி
தோண்டி அதை மண்ணைப்போட்டு மூடி மஞ்சள் கரைத்து தெளித்து இருந்தார்கள்.


'என்னக்கா இது?' என்று கேட்டேன். 'முந்தா நேத்து சுப்பக்காவுக்கு
பொம்பளப் புள்ள பொறந்துச்சு இல்ல. அதத்தான் நெல்லு போட்டு
கொன்னுட்டாங்க.' என்றார் ராமாயி அக்கா.


'ஏன்க்கா நம்ம ஊருல பொம்பள புள்ள பொறந்தா உடனே கொண்ணுறாங்க?' என்று கேட்டேன். 'பொம்பள புள்ளைகனால என்ன பிரோஜனம் சொல்லு. செலவுதான். பாரு எங்க அப்பனும் ஆத்தாளும் எங்கள கட்டிக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க.

நாங்க பிறந்தப்பவே எங்கள கொன்னு போட்டிருந்தா அவங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம போயிருக்குமில்ல.' என்றது லட்சுமியக்கா. எனக்கும் அது சரியென்றே பட்டது.


சில மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டுக்கு போனேன். ராமாயி அக்கா மிகவும்
சோகமாக அமர்ந்திருந்தார். காரணம் கேட்டேன். 'எங்க அண்ணி மாசமா இருந்தாங்க இல்ல. நேத்து அவங்களுக்கு பொம்பளப் புள்ள பொறந்துச்சு. ராத்திரியோட ராத்திரியா கொன்னுட்டோம். குழந்த செவப்பா எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா? சனியன், பையன பொறந்து தொலைச்சிருக்க கூடாதா..!' என்று அழுதார்.


'ஏன் இப்படி பொம்பளப் புள்ளைங்களா பொறந்து தொலைக்குதோ..?' என்று நானும் என் பங்குக்கு அவர்களை தேற்றினேன்.


என் அம்மா என்னிடம் அடிக்கடி உனக்கு தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சிப்
பாப்பா வேணும்மான்னு கேப்பாங்க. நான் அப்பெல்லாம் தங்கச்சிதான் வேணும்னு சொல்லுவேன். இப்போ அந்த எண்ணத்தில் மாற்றம் இருந்தது.


என் தாய் பிரசவத்திற்காக நானும் அம்மாவும் மதுரையில் இருக்கும் எனது மாமா வீட்டுக்கு வந்திருந்தோம். ஒருநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்த எனது மாமாவும் அத்தையும் 'உனக்கு தம்பி பிறந்திருக்கான்' என்றார்கள். என் தாய் வயிற்றில் இருப்பது பெண் குழந்தைதான் என்று அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையில் இருந்தார். பிறந்தது ஆண் குழந்தை என்றதும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


குழந்தை ஆணாக பிறந்ததில் சோகமாக இருந்தார். 'தங்கச்சி பாப்பா வேணும்னு சொன்னயே. இப்ப பாரு தம்பிதான் பிறந்திருக்கான்.' என்றார் என் தாய் என்னிடம்.


'தம்பியே இருக்கட்டும்மா..!'


'ஏண்டா..?!'


'பொம்பளப் புள்ளன்னா கொன்றுவாங்க.. இல்லம்மா..!' என்றேன்.


என் அம்மா அதிர்ச்சியாக என்னைப் பார்த்தார்.



பின் குறிப்பு:


நாம் வாழும் சூழல் நம்மை எப்படி மாற்றுகிறது என்பதற்கு இந்த சிறு வயது
நிகழ்வுகள் எனக்கு நல்ல சாட்சி. பெண் சிசுக்கொலை தவறு என்று நான்
உணரும்போது எனக்கு வயது 16.


-------------------------------------------------------


வாய்ப்பளித்த தங்களுக்கு மிக்க நன்றி சகோ!


அன்புடன்

எஸ்.பி.செந்தில்குமார்.

டிஸ்கி:- அடடா படிக்கும்போதே பதைக்குதே. பாவி மக்கா. பத்துமாசம் சுமந்துட்டு எப்பிடித்தான் கொல்ல மனசு வந்துச்சோ. அதப் பிள்ளையில்லாத யார்ட்டயாச்சும் கொடுக்கலாம்ல. இன்னிக்கு எத்தனை பேரு ஃபெர்டிலிட்டி செண்டர்ல தவம் கிடக்குறாங்க. ஹ்ம்ம்

கருத்தம்மா படம் பார்க்காட்டியும் இந்த மாதிரி சம்பவத்தை புத்தகங்களில் படிச்சிருக்கேன். நாலு நாளாச்சு.. இதப் படிச்சு. இன்னும் எனக்குப்  படிச்ச அதிர்ச்சி தீரல. ஆணும் பெண்ணும் ஒண்ணுதான்னு இன்னும் கூட மக்கள் மனங்களில் மாற்றம் வரணும். அதுதான் அவசரத் தேவை.

சாட்டர்டே போஸ்ட் .. சீரியஸான போஸ்டாயிடுச்சு. ரொம்பவும் தேவையான ஒரு விஷயத்தை சாட்டர்டே போஸ்டுக்காக சொன்னதுக்கு நன்றி செந்தில் சகோ. பெண்சிசுக்களைக் காப்போம்.
 

15 கருத்துகள்:

  1. செந்தில்குமார் இளமைக்கால நினைவுகள் மனதை கனக்க செய்து விட்டது.

    //ரொம்பவும் தேவையான ஒரு விஷயத்தை சாட்டர்டே போஸ்டுக்காக சொன்னதுக்கு நன்றி செந்தில் சகோ. பெண்சிசுக்களைக் காப்போம். //
    தேனம்மை நீங்கள் சொன்னது போல் நல்ல விழிப்புணர்வு பதிவு.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மனதை உலுக்கியது நடைமுறை உண்மையை தனது வாழ்வியலோடு கோர்த்து எழுதிய நண்பர் திரு. எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. அரிய செய்திகளை பகிரும் திரு செந்தில்குமாரிடமிருந்து மனதை நெகிழவைத்த பதிவு. வாழும் சூழலில் இவ்வாறான நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும்போது அடையும் வேதனையை அளவிடமுடியாதது. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ட்விட்டரில் பன்ச் பதிவுகள் இடும் செந்தில் குமாரிடமிருந்து ஒரு உருக்கமான பதிவு. மனசு கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. என்னைப் பற்றி சாட்டர்டே போஸ்டில் அறிமுகம் செய்து, எனது இளமைக்கால நிகழ்வையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தங்களுக்கும், அதனை வாசித்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
  6. என் மனதை மிகவும் பதற வைத்துவிட்ட + படித்ததும் நான் கலங்கிப்போய்விட்ட பகிர்வு.

    திரு. செந்தில்குமார் இதனை தன் இளைமைகால நினைவாகச் சொல்லிச்சென்றுள்ள விதம் மிகவும் பாராட்டத்தக்கது. அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் பதிவு.

    வெளியிட்டுள்ள தங்களுக்கும், திரு. செந்தில் குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. இப்படித்தான் சிறுவயதில் சில எண்ணங்கள் பதிப்பிக்கப் படுகின்றன. சாதியும் மதமும் அவற்றில் சில. தவறு என்று உணரும்போது காலம் கடந்து இருப்பது தெரிய வருகிறது பதிவர் ஒற்றுமை ஓங்குக.

    பதிலளிநீக்கு
  8. மனம் பதற வைத்தது! செந்தில்குமார் சாரின் மனதை மாற்றிய சம்பவம்!

    பதிலளிநீக்கு
  9. இது போன்ற கொடுமையான உலகிலா நாம் வாழ்கிறோம்
    அதிர்ச்சியாக இருக்கிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு

  10. சிறந்த பத்திரிகையாளரை
    சிறந்த படைப்பாளியை
    அறிமுகம் செய்தமைக்கு
    நன்றியும் பாராட்டும்

    பதிலளிநீக்கு
  11. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  12. நன்றி கோமதி மேம்.

    நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி உமேஷ் சகோ

    பதிலளிநீக்கு
  13. நன்றி செந்தில் சகோ

    உண்மைதான் விஜிகே சார். கருத்துக்கு நன்றி

    நன்றி பாலா சார்

    நன்றி சுரேஷ் சகோ

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)