சனி, 8 அக்டோபர், 2016

திருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.

திருநிலை.

டிங் டிடிங் டிங் டிடிங் என்று தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் திருநெலை ஆச்சியின் நெஞ்சத்துடிப்பை அதிகமாக்கியது. பூக்காரம்மா, பேப்பர்காரன், பால்காரப்பையன், தண்ணி கேன் கடைக்காரர், கூரியர் போஸ்ட், வேலை செய்யும் முத்தி யாராக இருந்தாலும் ஏன் இப்பிடி மண்டையிலடிப்பதுபோல காலிங்க்பெல்லை அடிக்கிறார்கள் என்று அவுகளுக்கு நெஞ்சப்பாரடித்தது. டிடிங் டிடிங் என்று பூட்டைத் திறக்கும்போதெல்லாம் மணியடித்தது போல் சத்தமிடும் பெரியவீட்டின் பட்டாலை முகப்புக்கதவு அவர்களின் கண்ணுக்குள் வந்து போனது.

எழுபத்தியைந்து வயதைச் சுமந்த உடம்பை அசைத்துச் சென்று கதவைத் திறந்தால் பேரமிண்டியும் பேரனும் நின்றிருந்தார்கள். வாசப்படி நிலையில் நிக்கமுடியாமல் யார் இப்பிடிக் காலிங்பெல்லை உடைக்கிறது என்று கோபமாகக் கேட்க நினைத்தவர் மௌனமாகத் திரும்பி வந்து தன்னுடைய திண்டில் அமர்ந்தார். அப்பத்தா வீட்டு ஐயாவின் பெயரிட்டுக் கொண்ட அவுக பிரியத்துக்குரிய பேரன் ஐயப்பனைக் கோச்சுக்க முடியுமா. புள்ளகூட்டியே வந்த வீட்டில் மொதமொதலாப் பொறந்த பேரன். அவனுக்காகத்தானே எல்லாம். கேட்ட விளையாட்டுச் சாமானை எல்லாம் வாங்கிக் கொடுத்தமாதிரி இப்ப கேட்ட பூர்வீக வீட்டையும் உடைக்கக் கொடுத்திருக்கிறாக.


ஆயிரத்துச் சொச்சம் சதுர அடி ப்ளாட்டில் பேரனுடனும் பேரன் மனைவியுடனும் வசிப்பதில் அவருக்கு கஷ்டம் ஏதுமில்லை. எல்லாம் பக்கம் பக்கம்தான் உண்ணுவதும் உடுப்பதும் உபாதைகளைக் கழிப்பதும்கூட. பெரிய வீட்டில் சிகப்பி அக்கா இருந்தவரை அவுகளுக்கு எந்தக் குறையுமில்லை. தினம் தினம் சந்தைக்குச் சென்று காய்கனி வாங்கினால் தூக்கி வருவதிலிருந்து கசாப்புக்கடைக்குச் சென்று எலும்பும் கறியுமாக வாங்கிவந்து அம்மியில் மசாலை அரைத்து மஞ்சட்டியில் குழம்பு வைத்துக் கொடுப்பது வரை சிகப்பி இல்லாத அனுவலே இல்லை. நாலுவருஷத்துக்கு முன்னே தீட்டுன்னு நினைச்சு ரத்தப் புற்றைப் பார்க்காமல் விட்டு அவள் போய்ச் சேர்ந்ததில் இருந்து திருநெலை ஆச்சிக்கு கையொடிஞ்சது போலத்தான் இருக்கு.

எல்லார் விருப்பத்துக்கும் எல்லார் சொல்லுக்கும் வளைஞ்சு கொடுக்க வேண்டிய நிலை. தன் நிலையை நினைத்ததும் பெரிய வீட்டின் ஞாபகம் வந்தது ஆச்சிக்கு. பக்கத்திலிருக்கும் இரட்டை வளவு கொண்ட வீடுதான் அவுக வாக்கப்பட்டு வந்த வீடு. நான்காவது மாடியின் ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தார். உச்சியில் இருக்கும் இடிதாங்கும் கலசங்கள் மழையில் பூசரம் பூத்து மரப் ப்ளாச்சுகள் எல்லாம் பெயர்ந்து தேக்குகளும் கூட ஸ்லாகைகளாகப் பிரிந்து சாயம் இழந்து கொண்டிருந்தன. இரண்டாம் கட்டும் மூன்றாம் கட்டும் ஓரளவு கட்டுக்குலையாமல்தான் இருந்தன. இருநூறு வருஷம் இருக்குமா அந்த வீட்டுக்கு. பாட்டையா ரெங்கோனுக்குக் கொண்டுவிக்கப் போய் பெருக்கி வந்து கட்டிய வீடு.

தான் பிறந்த வீடு. ஆயா வீடு. மூத்த பேத்தியாக ஒரே பேத்தியாகப் பிறந்ததும் ஐயா ஓவியமாய்த் தங்கம் உரசி நாவிலிட்டுப் பெயரிட்டு அழைத்த வீடு. ஆயா வீட்டுக்கு ஆம்பிளைப்பிள்ளை இல்லை என்று ஆயாவீட்டு கூடிக்கிற பங்காளிகளில் செகப்பா அழகா இருந்த ஐயப்பனைப் புள்ளி போட்டு பிடித்துப் பிள்ளை எழுதிக்கொண்டு ஐயா பேத்திக்கே கட்டி வைத்த வீடு.

எவ்வளவு பெரிய நிலை வாசல். வெளியிலேயே விக்டோரியா மஹாராணியும் சாமரப் பெண்களும், சிங்கங்களும் புடை சூழ சிப்பாய்கள் நின்று வரவேற்கும் வெளி வாசல் நிலை. மல்லிகைப் பந்தல் வளைத்த ஆர்ச்சின் கீழே பத்து கல்படி ஏறிவந்தால் உள்ளே முகப்பு நிலை வாசல். அதன் பின் பட்டாலைக்குச் செல்லும் நிலை வாசல். பிரம்மாண்ட யானையின் கால்களைப் போல நிற்கும் இருபக்கக் கதவுகளை ஒட்டிய மர வேலைப்பாடு. ஒரு அலமாரியைக் குறுக்கே வைத்தது போலிருக்கும் அதன் கீழ்ப்பக்கமெங்கும் கரவு செறிவான வேலைப்பாடுகளுடன் சூரியகாந்திப் பூக்கள், சாமந்திப் பூக்கள், நாகங்கள். குழலூதும் கிருஷ்ணர், பெரிய திருவடி, ஆலிலைக் கிருஷ்ணர் என பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட மரப்பட்டயங்கள்.

நாகங்களின் மேல் வரிவரியாய் வடிவழகாய்ச் செதுக்கப்பட்டிருக்கும் மடிப்புகளின் முடிவின் சூரியப் பலகை. துவாரபாலகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நாரதர், கவரி வீசும் பெண், திருமால், மீனாக்ஷி சுந்தரேசுவரர், கவரிப் பெண், பிரம்மன், விநாயகர் பூதகணங்கள், என பிரம்மாண்டமான தேக்கங்கதவை இன்னொரு முறை கீழே போய்ப் பார்க்கவேண்டும் போலிருந்தது அவருக்கு.

ஆங்கிலேய மாதுக்களும், தென்னிந்திய தெய்வங்களும், ராசலீலையும், மஹாலெக்ஷ்மியும், தஞ்சாவூர் பெயிண்டிங்கிலும், ரவிவர்மா ஓவியங்களாகவும் நிறைந்திருந்த வீடு. பெல்ஜியம் கண்ணாடிகளும் ஆத்தங்குடி சலவைக் கற்களுமாய்ப் பளபளத்த வீடு. தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும் ஓவியங்களில் மட்டுமல்ல மூன்று கட்டு முழுக்கக் கோலோச்சிய வீடு. திண்டும், கைப்பொட்டியும் சடப்பிரம்பாயும் விரித்த, மான் கொம்பும், மாட்டுத் தலையும், பாடம் செய்து மாட்டிய பட்டாலை. மாடமாளிகை கூடகோபுரம் போல உப்பரிகை கொண்ட வீடு. செவலைப் பசுவும் செவர்லெட்டும் காரும் கூட ஐயா வைத்திருந்த வீடு. இன்று செம்புராங்கற்கள் மட்டுமே மிஞ்சிய வீடு. அதையும் பேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூட விடுமுறை தினங்களில் ஆடிய ஆட்டங்களும் பாடிய பாட்டுக்களும் கொஞ்சம் நஞ்சமில்லை.மாலை நேரத்தில் ஆத்தாவைத் தேடி அழுதது பார்த்து ”ஊட்டி வளக்காத ஆத்தா மேலேயே இம்புட்டுப் பாசம்னா ஊட்டி வளத்திருந்தா ஆத்தாடி தாங்காது” என்று தன் மோவாயில் கைதட்டி வைத்துக்கொள்வாள் முத்தாத்தா அக்கா. இரவு விழிப்பு வந்தால்தான் இன்னும் பயம். அந்தத் தேக்கந்தூண்களில் கவிழ்ந்து கிடக்கும் கல்தாமரைகளின் நுனிகளும் சரி, பட்டியக்கல்லில் வரிசையாக நிற்கும் கல்தூணின் நாற்புறமும் எட்டிப் பார்க்கும் நாகங்களும் சரி பயத்தைக் கிளறத் தவறியதே இல்லை. பயத்தில் ஒருமுறை ஓடிவந்து விழுந்து பட்டியகல்லில் முன்பல்லைக் கூட உடைத்துக் கொண்டிருக்கிறாள் தூக்கத்தில். பூரணை புஷ்கலை ஐயனாரப்பா, முனியையா, காட்டுக் கருப்பா, சோனையா காப்பாத்து என்று வேண்டிக்கொண்டபடியே வந்து கண்ணயர்வாள் குட்டித் திருநிலை.

விசாரிக்காமப் பண்ணிட்டோம் என்று திருமணமாகி இரண்டு வருடத்துக்குள்ளேயே எலும்புருக்கி நோயால் சிவபதவியடைந்த ஐயப்பனை நினைத்து நினைத்து வருந்திய ஐயாவும் ஆயாவும் அடுத்தடுத்துப் போய்ச் சேர்ந்தார்கள். கல்நாகங்கள் பிரம்மாண்டமாகிக் கனவில் வந்து பயமுறுத்தும்போதெல்லாம் நிலையில் இருக்கும் கிருஷ்ணனைப் பற்றி முறையிட்டுக் கண்ணீர் சிந்துவாள் கையறு நிலையில் வெள்ளைச் சீலையில் திருநிலை. நிலையாய் இருக்கும் நிலையில் வரைமுறையற்று இன்பத்திலாடிக்கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அவனைப் பற்றிப் பரவிக் கரைந்து அழுது என்ன பயன். ஆம்பிள்ளையான் என்ற உருவத்தைப்  சந்தனமாலையிட்ட படமாகப் பார்த்து வணங்கியே பழக்கப்பட்டுவிட்டாள் அவள். சீதனப் பணத்தை பங்காளி வீட்டுச் சோனாவிடம் கொடுத்து அடைத்து அந்த வட்டிப் பணத்தில்தான் மகனையும் வளர்த்து ஆளாக்கி இருந்தார்கள் திருநெலை ஆச்சி.

சிந்தனையில் இருந்தபோது மகர்நோன்புப் பொட்டலில் திருநெலையம்மன் அம்பு போட வரும்முன் போட்ட அதிர்வேட்டுச் சத்தம் ஆச்சிக்கு எதை எதையோ ஞாபகப் படுத்தியது. முதலில் அம்பு போட்டதை எடுத்து வந்து ஐயா கொடுத்ததும் அதை சாமிவீட்டில் வைத்து வணங்கியதும் அதன்பின் பத்து வருஷம் கழித்துப் பிள்ளை கூட்டியதும் அவனுக்கு மணமானதும் பிள்ளைபிறக்க வேண்டி மகர்நோன்பில் அம்பு எடுத்து வந்து கொடுத்ததும் ஐயப்பன் பிறந்ததும் சந்தோஷக் கனவு போலிருந்தது திருநெலை ஆச்சிக்கு. அதன் பின் பேரன் வளர்ந்ததும் அதே வீட்டில்தான். அவன் திருமணமும் அங்கேதான். போனவருடமும் அம்பை எடுத்து வந்து அங்கே சாமி அறையில் வைத்து வணங்கி வந்தார்கள்.

மகனும் மகமிண்டியும் பக்கத்து டவுனில் இருக்கிறார்கள். மகன் வட்டிக்கடை வைத்து நொடித்து இப்போது மருந்துக்கடை வைத்திருக்கிறார். பேரன் இன்சினியரிங் படித்துவிட்டு இன்னொரு பங்குக்காரவுகளையும் பார்ட்னராக்கி பூர்வீக வீட்டை இடித்து ப்ளாட் கட்டப்போகிறான். ஆளுக்கு ரெண்டு ப்ளாட்டாம் மிச்சமெல்லாம் விக்கவாம். வேறு வேலை கிடைத்திருந்தால் அவனும் ஏன் பூர்வீக வீட்டை இடிக்கப் போகிறான். முத்தி வந்ததும் கூட்டிக் கொண்டு லிஃப்டில் இறங்கிக் கைத்தடியை ஊன்றியபடி மெல்ல நடந்து பழைய வீட்டுக்குள் நுழைந்தார்கள் திருநிலை ஆச்சி. ஓடி விளையாடிய வீடு. கட்டிப்பிடித்துப் பாடம் நடத்திய தூண்கள்.

“அப்பத்தாளுக்கு வீடுதான் முக்கியம். இந்த வீட்டுக்காகத்தான் இதக் கட்டிக் காப்பாத்தத்தான் அவுகளக் கட்டி வைச்சிருக்காக. அதுனால நாங்க சொன்னா எல்லாம் கேக்க மாட்டாக. அவக பேரே திருநெலை.சொன்ன சொல்லுல நிலையா பிடிச்ச பிடியிலதான் இருப்பாக. அவுகளுக்குப் பொறகுதான் எல்லாம். நீ விட்ரு தம்பி ” என்று கடிந்தபடி மகனும் மகமிண்டியும் ஊர்போய்ச்சேர வெற்று நிலைவாசற்படியில் இடிந்து அமர்ந்திருந்த திருநெல ஆச்சி யோசித்தார். “ வீட்டுக்காகத்தான் கட்டி வைச்சாக, சொந்தம் விட்டுப் போகக்கூடாது சொத்து கைவிட்டுப் போகக்கூடாது, நம்ம புள்ளக கருத்தா காப்பாத்துவாகன்னு. “ ஆசைக்குரிய ஆம்பிள்ளையான விட்டுப்புட்டு பாசத்துக்குரிய ஐயா ஆயாளை விட்டுப்புட்டு அப்பச்சி ஆத்தாளையும் விட்டுப்புட்டு, நமக்குன்னு இருக்குற மகன் மகமிண்டியை வெறுத்துப் புட்டு எங்க போகப் போறோம் நாம. இருக்கும்போதே கொடுத்திருவோம். அடுத்த பங்குக்கார ஏப்பம் விடப்பாத்தபோதே மதறாசுல போயி மேல் கோர்ட்டுல ஐவேசு ( ஐ விட்னஸ்)  சொல்லிக் காப்பாத்துன வீடு. வீட்டை விரக்தி தோய்ந்த கண்களால் பார்த்தார்கள்.

கல்நாகத் தூண்களின் பின்புறம் யார்கண்ணுக்கும் தென்படாமல் ஆம்பிள்ளையானுடன் கைகோர்த்துப் பிடித்திருந்தது தழும்பாய் நெருடியது. ஒரு முறை ரகசியக் கிள்ளும் அவசர முத்தமும் கிடைத்தது அந்த மூன்றாவது தூணின் பின். மெதுவாய் நடந்து அதன் பின்புறம் பார்த்தார். தூணில் ஊருடுவி புகைப்படக் கணவனின் முகம் தெரிந்தது. முதலிரவென்று பாலும் பழமும் மல்லிகையும் கலந்த கலவையில் பூ மெத்தை கிடந்த மேவீடு. டக்குக் டக்கென்று கணவன் இறங்கி வரும் மரப்படிகள் கழண்டு கிடந்தன ஒரு பக்கம். ஒவ்வொருவராகப் போகப் போக துக்கத்தோடு அள்ளிப் போட்ட வீடு. துக்கமும் தூசியும் நிரம்பிக் கிடந்தது எல்லா இடமும். ஆச்சி பரிவுடன் பார்த்துப் பார்த்து நடப்பதைப் பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது வீடும்.

நாப்பது லெச்சத்துக்கு முகப்பு நிலை வெலை போயிருக்காம். வந்தவங்களால அதைப் பேர்க்க முடியல. அங்கே ஓட்டம் இருந்திருக்கு. ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டுப் பேர்க்க முடியாமப் பயந்துபோயிட்டாக. மூன்று முறை பூசை போட்டு தீபம் காட்டி வேண்டிக்கிட்டு முனியனாசாரி அந்த நிலைக்கதவை ஆட்களோடு வந்து சிந்தாமல் சிதறாமல் லட்டைப்போலப் பெயர்த்திருந்தார். முகப்பு நிலையே மூன்று கலியம் பீரோ, தோதகத்தி பீரோ, தேக்கு பீரோவை அடுத்தடுத்து நிக்கவைச்சது போல நின்றிருந்தது.  அடுத்தடுத்துப் பெயர்ந்து கொண்டிருந்தன நிலைகள். நடந்து நடந்து களைத்தவர் சாமிவீட்டின் நிலைமுன் வந்து நின்றார். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சாமி வீட்டில் கண்ணாடி மாட்டி உள்ளுறைந்திருக்கும் சுயத்தையே தெய்வமாக வணங்கக் கற்பித்த முன்னோர்கள். பரம்பரைகள், இந்தத் தலைமுறைகள், எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது. மாறிக் கொள்பவர்கள் பிழைக்கலாம்.

”ஆத்தி “ என்றார்கள் திருநிலை ஆச்சி. விழுந்துவிட்டார்களோ என்று என்னாச்சி என ஓடி வந்தாள் முத்தி.  ’பேரனுக்கு மகன் பொறக்கோணும் வம்சம் வெளங்கோணும்’னு எடுத்து வைச்ச அம்பெல்லாம் சாமி வீட்டு நிலையில் சிலோன் சாம்பிராணி டப்பாமேல் வைத்தது ஞாபகம் வந்தது ஆச்சிக்கு. வக்கு வக்கென்று சாமிவீட்டுப் பக்கம் நடந்து போனார், மேல் வரந்தையில் கை விட்டுத் துழாவினார். ”ஆச்சி தூசியும் தும்பட்டையுமா இருக்கு என்ன செய்றீங்க விழுந்திறப் போறீக ”என்றார் முனியன் ஆசாரி . ”சொல்லுங்க எடுத்துத் தர்றம். ”

திருநெலை அம்பு போட ஆரம்பிச்சிட்டா. மூணுதரம் போடுவா. ஆச்சி நகர்ந்து வந்ததும் பெயர்ந்திருந்த சாமி வீட்டுத் திருநிலை அதிர்ந்து விழுந்தது. மகர்நோன்புப் பொட்டலில் அதிர்வேட்டுச் சத்தம் கேட்கும்போது திருநெலை ஆச்சியின் கையில் வம்சம் விளங்க எடுத்த மூன்று அம்புகள் இருந்தன. 

ிஸ்கி :- இந்திறுகை 28.8.2016 ினர் வாரில் வெளியானு. ( ாட்பாடி, மன்னார்குடி, ஈரோட, ிருச்சியில் பித்ாகச் சொன்னார்கள் நண்பர்கள். ) :) நன்றி ேவாஜன் சண்முகம் சார் ! 

4 கருத்துகள்:

  1. தினமலரில் வெளியானதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    [28.08.2016 தினமலர்-வாரமலரிலும் வாசித்து விட்டு, தங்களைப் பாராட்டி, அன்றைக்கே அந்த தினமலர் பக்கத்தின் படத்துடனும், அட்டைப்படத்துடனும் ஓர் மெயில் கொடுத்திருந்தேன். நினைவிருக்கலாம். :) ]

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி விஜிகே சார். ஆமாம் சார் :) மறக்குமா :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)