சனி, 10 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர். மனோரமா ஆச்சியின் அன்பில் நெகிழ்ந்த உதவி இயக்குநர் ராம் பெரியசாமி.

முகநூலில் யாழகிலன், அருண்கருப்பையா இருவரும் என்னை அம்மா என விளிப்பார்கள். அதேபோல் உதவி இயக்குநர் ராம் பெரியசாமி  மம்மி என்பது போல் ”மீ ” என விளிப்பார். :) மிக அதிக அளவு என் பதிவுகள்  எல்லாவற்றையும் வாசித்து கருத்துக் கூறிவிடுவார்.

எளிய மனிதருக்கு இரங்கும் குணம். ஊனமுற்றோரின் பால் பாசம், குழந்தைகள் மேல் அதீதப் பிரியம் என அன்பாலே செய்த மனிதர் அவர். சினிமாத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகின்றார். அவரது பல கவிதைகள் நான் வாசித்திருந்தாலும் இந்தக்கவிதை என்னை அசைத்த ஒன்று. 

////சென்னை அதிவேக
ரயிலின் கூட்டநெரிசலில்
அசதியான முகங்களின்
பார்வைகள் ஜன்னல்வழியே
கடத்திக் கொண்டிருப்பதும்...
தனியான என் மௌனங்களை
ஞாபகங்கள் கொத்தித்தின்றுக்
கொள்ளும் இவ்வேளையில்....
முகம் சூம்பி...
உடல்சூம்பி..
கைகள் சூம்பி....
ஒருவன் இடறி நிற்கையில்..
அந்த குழந்தையின் அழுகை
அவனால்தான் இருக்க முடியும்..
ஐந்துரூவாய் பேனாவை
அவன் விற்கையில்
கடவுளே இவனை
கடத்திச்செல்லென
ப்ரார்த்திக்கையில்
" நுங்கம்பாக்கம் ஸ்டேசன்
வந்திருச்சி... இறங்கிக்குங்க...
பக்கத்து ஸ்கூல்ல போலியோ
மருந்து போடுறாங்க....
தாய்களே...மறக்காதிங்க"..
அவன் தவழ்ந்து செல்கையில்
#முகவரியற்ற_ரயில்பயணங்களில்....
எல்லோர்க்கும் முகவரியை அளித்திருந்தான்.////

///ராம் பெரியசாமியிடம் அவர் பணியாற்றிய சினிமாத்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரச் சொன்னேன்.  ////

வணக்கம் ராம் பெரியசாமி திரைப்பட இயக்குனர்...


நான் உதவி இயக்குனராக பதினைந்து படங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.. கடைசியாக நான் வேலை செய்த படம் "ஜீரோ".. நிறைய அனுபவங்களை பெற்றுள்ள நான் தற்போது உங்களிடம் ஓர் சிறிய அனுபவத்தை பகிர உள்ளேன்....



2001 ம் வருடம் நான் முதன் முதலாக உதவி இயக்குனராய் வேலை செய்தது, ஓர் சீரியல் தான். ."புகுந்த வீடு " என்கிற அந்த சீரியலின் மெயி்ன் கதாபாத்திரம் பண்ணியது நம்ம ஆச்சி மனோரமா.... அவர்களிடம் ஆசி வாங்கியது மறக்கவே முடியாதது.. அசோசியேட் டைரக்டர் வசனத்தை படிப்பார் ஆச்சி.. கண்களை மூடிதான் கேட்பார்.... உடனடியாக அப்படியே ஒப்பித்து எல்லாேரையும் அசரவைப்பார்....


காட்சிப்படி.. வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் மகன்கள் விடுமுறைகளுக்காக கிராமத்தில் இருக்கும் ஆச்சியை பார்க்க வருவது போலவும்.. இரவில் சாப்பாடு சமைத்து நிலவின் வெளிச்சத்தில் சோறு உருண்டை பிடித்து மகன்களுக்கு உருட்டி தருவது போல் காட்சி படமாக்கினோம்..

டைரக்டர் கலைமாமணி கஜேந்திரகுமார் ஆக்ஷன் என்று சொல்ல நான் கிளாப்போர்டு காண்பிக்க காட்சி ஆரம்பித்தது....


ஆச்சி... சோறை உருட்டிக்கொண்டே... டே... கண்ணுங்களா.. எப்ப லீவு கெடச்சாலும் இந்த அம்மாவ பாக்க வந்திருங்கடா.... இப்படி வருஷத்துக்கு ஒருமுறை வந்தா நான் எப்படி பா தாங்குவேன்... நான் அனாதை பொணாமா போயிரக்கூடாதுப்பா " என ஆச்சி கண்கலங்கி சொல்ல மகன்கள் அழுவார்கள்....


நான் கண்ணு கலங்கிட்டேன்.... என் பக்கத்துல ஒருத்தர் தேம்பி தேம்பி அழறாரு யாருன்னு பாத்தா... நம்ம டைரக்டர்.... அவரால கன்ட்ரோல் பண்ண முடியல... கட் சொல்லாம அவர் அழுக... லைட்மேன் அழுக... கேமராமேன் கண்கலங்க... நம்புனா நம்புங்க... முழுக்க யூனிட்டே அழவைச்சிட்டாங்க...
பிறகு ஆச்சியே கட் சொல்லிட்டு சிரிச்சாங்க பாருங்க....

ஆனந்தகண்ணீரோடு எல்லோரும் சிரிச்சோம்.. முதல் முதல் நான் அழுதுக்கொண்டே சிரித்தநாள்...


டைரக்டர் போய் ஆச்சி கால்ல விழுந்தாரு... ஆச்சி.. உடனே சோறு உருண்டைய உருட்டி டைரக்டர்க்கு ஊட்டி விட யூனிட்டே பரவசமாயிடுச்சி...


ஆச்சி " எல்லோருமே என் புள்ளைங்க தான பா ".. என்க... சிரிப்பும் கண்ணீரையும் மாறி மாறி வரவழைத்த நாள் அது.....


தெய்வத்தையும் அன்பையும் உணர்ந்த நாளும் அதுதான்...
இதை தங்களுடன் பகிர்ந்ததில் மிக மிக சந்தோஷமே..நன்றி.



டிஸ்கி :- ராம் ஜாலி கார்னரை நெகிழ்ச்சி கார்னராக மாற்றிவிட்டீர்கள். மனோரமா ஆச்சியுடன் சினிமாத்துறையில் அநேகருக்குப் பகிர்ந்து கொள்ள ஆயிரம் இருக்கும் . ஏன்னா அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவராமே.

முகநூலில் உதவி இயக்குநர்கள் சேர்ந்து இருக்கும் தன் படத்துக்கு  கதை சொல்லிகள் எனப் பெயர் கொடுத்திருக்கிறார் ராம். பொதுவாகக் கதை சொல்லிகளை அனைவருக்கும் பிடிக்கும் ராம். நீங்கள் சிறந்த கதை சொல்லியாக ஆகி சிறந்த இயக்குநராகப் பரிணமித்து வெற்றியடைய உங்கள் ”மீ ” யான என் மனமார்ந்த வாழ்த்துகள். ” மாபெரும் சபைதனி நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். “ பேரும் புகழும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் ராம்தம்பு. வாழ்க வளமுடன்.

10 கருத்துகள்:

  1. வாவ்!!!! ஆச்சி ஆச்சிதான்!!! அருமையான அனுபவம் திரு ராம் அவர்களுக்கு! இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்...

    //தனியான என் மௌனங்களை
    ஞாபகங்கள் கொத்தித்தின்றுக்
    கொள்ளும் இவ்வேளையில்....// கொல்லும் இவ்வேளையில்???!!!!

    பதிலளிநீக்கு
  2. அருமை
    அன்பை உணரும் நாள் என்றுமே இன்ப நாள்தான்

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.....

    பதிலளிநீக்கு
  4. அன்பை உணர்ந்த நாள்...
    அருமை... பகிர்வுக்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஒரு பகிர்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. இங்கேயும் இருவிழி நிறைக்கும் நீர்..மாபெரும் சபைதனில் நீங்கள் நடக்க உங்கள் தோள்களில் மாலை விழட்டும்,ஆச்சியின் வாழ்த்து பலிக்க!
    -தங்கத்துரையரசி
    கோவில்பட்டி

    பதிலளிநீக்கு
  9. இங்கும் இரு விழிகளிலும் தளும்பும் நீர்!

    ஆச்சியின் வாக்கு பலிக்கட்டும்.ராம் ,மாபெரும் சபைகளில நீ நடக்க மாலைகள் உங்கள் தோள்களில் விழட்டும்!
    -தங்கத்துரையரசி
    கோவில்பட்டி

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு..... அதைப் பகிர்ந்து கொண்ட நண்பர் ராமின் நட்பில் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்..... ஆச்சி அன்பிலும் அனைவரின் மனதிலும் ஆட்சி புரிந்தவர்.... அவரும் நெகிழ்ந்து நம்மையும் நெகிழ வைத்து விட்டார்... நன்றி...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)