புதன், 24 ஆகஸ்ட், 2016

சூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. )


குலதெய்வம் கோயிலில் புரவி எடுப்பில் செல்லும் குதிரைகளைப் பார்த்தபடி நின்றிருந்த மேகலா அதிர்ந்த கைபேசியை எடுத்துப் பேசி அதிர்ச்சியானாள். அவளது அப்பா மாரியப்பன் யாரும் இல்லாத வீட்டில் முதல் நாள் இரவு இறந்த செய்தியை, இறந்த விதத்தை அதிர்ச்சியோடு பகிர்ந்திருந்தாள் அவளது அத்தை மோகனா.

பக்கத்தில் நின்றிருந்த தனது அம்மா தேவியைப் பதட்டத்தோடு பார்த்த மேகலா , ”அம்மா ஒரே கூட்டமா இருக்கு. சீக்கிரம் போகலாம் வா, போகலாம் ” என்றாள். ”இருடி சாமி உள்ளே போன பின்னாடி அருச்சனை பண்ணிட்டுப் போகலாம் “ என்றாள். 

”இல்லம்மா பின்னாடி கூட்டம் சாஸ்தியாயிடும் இன்னொருநாள் வரலாம். வா” என்றாள். “அடி இவளே. வெளக்கு வைக்கும்போது உருண்டிருச்சு , அதுனால தீவம் பார்த்துட்டுத்தான் போகணும் “ என அம்மா பிடிவாதம் பிடிக்க, ”இல்லம்மா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாம் அதான் அத்த போன் பண்ணிச்சு , உடனே போவோம்மா என அவளைக் கிளப்புவதிலேயே குறியாயிருந்தாள் மேகலா. ஐஸ் வண்டிகளும், மாங்காய் பத்தைகளும் எலந்தை வடைகளும் மணம் கிளப்பிக் கொண்டிருக்க பலூனைப் பிடித்தபடி குழந்தைகளும் முறைப்பெண்களைச் சுற்றியபடி இளவட்டங்களுமாக கலகலப்பாக இருந்தது முத்துப்பிடாரி அம்மன் கோயில் புரவி எடுப்பு. சாமியாட்டத்தோடு கொடிகளும் குடைகளும் சூழ ஆரம்பித்திருந்தது திருவிழா.


அதிர்வேட்டுச் சத்தத்தில் ஊரே கிளம்பி ஊர்கோலமாக வரத் துவங்க திருவிழாக் கொண்டாட்டத்தை விட்டும் போக மனமில்லாமல் மேகலாவை முறைத்துப் பார்த்த தேவி, ”எல்லாத்துலயும் அப்பன மாதிரி அவசரக் குடுக்கை, ஏன் அங்கன போகணும். நாம மதுரைக்குத்தான போகணும். அந்தாளுக்கு என்ன. நல்லாத்தான் கல்லு மாதிரிக் கெடப்பாரு. இன்னும் எவளும் கிடைச்சா அவ தாலியையும் அறுத்து வித்துக் குடிச்சிட்டுக் கிடப்பாரு. போக்கத்தவரு. ”பொரிந்த அம்மாவிடம் “ரொம்ப சீரியஸாம்மா , ப்ளீஸ் சீக்கிரம் வாங்கம்மா “ என்று கெஞ்சத்துவங்கினாள் மேகலா.


கண்களில் ஓரத்தில் தகப்பனை நினைத்துக் கண்ணீர் வரத் துவங்க யோசனையாய் மகளைப் பார்த்தபடி கைகளைப் பற்றிக் கொண்டாள் தேவி. ‘என்னாச்சாம்டி அந்தாளுக்கு, ஏதும் சீரியஸ்னா. ஆஸ்பத்ரில சேர்த்திருக்கா. இல்ல போய்ச் சேர்ந்திட்டாரா.. “ கரகரப்பான குரலில் பதட்டத்தோடு கேட்டாள் தேவி. ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தாள் மேகலா.


மகளின் கைகளைப் பிடித்துக் கூட்டத்தை விலக்கியபடியே வந்த தேவிக்கு சிறைமீட்ட ஐயனார் கோவிலில் குதிரை எடுப்பில் மாரியப்பனைச் சந்தித்தது ஞாபகம் வந்தது. காளியம்மன் கோயில் பூசாரியான அவளது அப்பன் ஆத்தாளுடன் சமைந்த புதிதில் சிறைமீட்ட ஐயனார் கோயில் புரவி எடுப்புக்கு வந்திருந்தாள் தேவி. கரம்பைக் காட்டுச் செடிகளைப் போல நல்ல முறுக்கான தேகம். எட்டாப்பூ படித்தவுடன் சமைந்ததால் போதும் படிப்பு என நிறுத்திவிட்டாள் அவளது தாய். அதிகம் படிச்சுப்புட்டா புள்ளைக காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஓடிவிடும் என்பது அவளது தாயின் கணிப்பு.

ஒரு வாரம் முன்னேயே பிடி மண் எடுத்துப் புரவி செய்யும் விழா தொடங்க அப்பன் வந்து போயிருந்ததால் அங்கே இருந்த வேளார்கள் எல்லாம் சேங்கை வெட்டுதலுக்குப் போனபோது நல்ல மாதிரியா பழகி வரவேற்பு கொடுத்தாங்க. கண்மாயில ஆளாளுக்கு மூணு தரம் கை நெறைய மண்ணை அள்ளி வந்து கரையில குமிச்சாங்க.

பக்கத்துக் கிராமத்துப் பூசாரி மகனான மாரியப்பனும் தகப்பனோட வந்திருந்தான். மாநிறம் என்றாலும் ஐயனார் கோயில் சிலை போல இருக்கு முறுக்கா இருந்தான். எளவட்டங்கள் எல்லாம் மண்ணள்ளிக் கரையை ஒசத்தினபோது “ஆத்தா நீயும் ஒன் கையால மண்ணள்ளிக் கரையை ஒசத்தாத்தா” என்று அப்பன் கூற இறங்கிய தேவி கைநிறைய மண்ணள்ளிக் கொண்டு கரையில் போட்ட போது அருகே அள்ளிய மாரியப்பன் பார்வையில் அவள் தேரில் இருந்து இறங்கிய அம்மன் சிலை போலிருந்தாள். கண்ணப் பாரு கண்ண. கண்ணழகா, முக அழகா, வடிவழகா இல்ல இந்தச் சாட்டைச் சடை அழகா, நல்ல கரவு செறிவா இம்புட்டு அழகா ஒரு புள்ளையா எனக் காதல் புரவியில் அவளைக் கவர்ந்து செல்லத் துடித்தது அவன் மனம்.

”ராசாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று டிவியில் வாத்தியாரய்யாவும் சரோசா தேவியும் பாட தேவி வாத்தியாரய்யாவாக நினைத்து மாரியப்பனை காதலிச்சு அவனைத்தான் கட்டிக்குவேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள். தாயும் தகப்பனும் ஒத்தைப் பிள்ளையாச்சே என்று அவளது ஆசைக்கு விட்டுக் கொடுத்தார்கள். . ஒண்ணு ரெண்டு வருஷம் நல்லாத்தான் போச்சு. மேகலா பிறந்தாள்.

ஒரு தரம் சேக்காளிகளுக்குள்ள சண்டை வந்து மாரியப்பன் குடித்துவிட்டுக் கலாட்டா செய்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்தபோது துடித்தது அப்பனின் உள்ளம். தப்பான ஆளை மருமகனாக்கிக் கொண்டோமே எனக்கூசினார் அவர். குடிக்கக் காசு கேட்டு அவரது தூரத்துச் சொந்தங்கள் சிலர் வீட்டுக்கு அவன் வந்ததாகக் கேள்விப்பட்டபோது அவமானத்தில் குன்றியது அவர் மனம். ”அவன் முன்னேயே குடிகாரப் பயப்பா, வெசாரிக்காம அவனுக்குப் போயி கருவேப்பிலைக் கண்ணா வளத்த பொண்ணக் கொடுத்தியே” என்று சொல்லிச் சென்றார் அவரது பால்ய தோழர்.

பத்தும் பத்தாததுக்கு தேவியின் நகைகளை ஒவ்வொன்றாக அதட்டியும் மிரட்டியும் வாங்கிச் சென்று குடித்துவிட்டு பழைய கோட்டைப் பக்கம் சுருண்டு கிடப்பான். பிச்சைக்காரர்களோடு சேர்ந்து கஞ்சாவும் புகைக்கிறான் என்று கேட்டபோது அவரது இதயம் சுக்கு நூறானது. ஒத்தப் புள்ளையின் ஆசையை நிறைவேற்றுகிறோம் என்று பாழுங்கிணற்றில் தள்ளி விட்டோமே எனத் துடித்தவர் மறுநாள் எழவேயில்லை.

மாமனார் இறந்ததும் அவர் பூசித்து வந்த காளியம்மன் கோயிலின் பூசாரியாக மாறிய மாரியப்பன் பகல் முழுதும் நன்கு குளித்துப் பட்டை அடித்து தீபம் காட்டி நல்ல முகத்தோடு இருப்பவன் மாலை ஆனால் தட்டில் விழுந்த சில்லறைக் காசுகளை எடுத்துக் கொண்டு குடிக்கப் போய்விடுவான். நள்ளிரவில் திரும்பி சோத்துத் தட்டை உதைத்து தேவியையும் உதைத்து ரகளை செய்வான்.

ஒரு தரம் பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்து அது வார்னிஷ் சாராயம் எனத் தெரிந்து பலபேர் உயிருக்கு ஆபத்தாகி பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட இவனைத் தனியார் ஆசுபத்ரியில் சேர்த்து நிறைய கடன்பட்டு உடன்பட்டு உயிர் பிழைக்க வைத்திருக்கிறாள் தேவி.

”நாந்தான் படிக்காத மட்டையாகிப் போனேன் எம்மகளாவது படிக்கோணும்.” மிச்சம் மீதியாகக் கையில் காதில் கழுத்தில் போட்டிருந்ததை விற்றுப் படிக்க வைத்தாள் மகளை. படித்து முடித்தபின் மதுரையில் ஒரு ஷாப்பிங் மாலின் பெரிய கடையில் பில்லிங் செக்‌ஷனில் வேலைபார்த்து வந்தாள் மேகலா. மகளின் கைப்பையிலிருந்தும் மாரியப்பன் காசை எடுத்துச் சென்றுவிட அது தெரியாத அவள் பஸ்ஸுக்குச் சென்ற சில சமயங்களில் அவமானப்படவும் நேர்ந்திருக்கிறது.

ந்த மூஞ்சியையா பார்த்துக் காதலித்தோம் என்று இப்போதெல்லாம் நினைக்கத் துவங்கி விட்டாள் தேவி. 30 வயதைத் தொடும் மேகலா தந்தை தாயின் திருமண உறவைப் பார்த்து திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்துக்கு வந்துவிட்டாள்.

இன்னபாடு என்றில்லாமல் அவன் ஒரு தரம் சண்டையில் குடிக்கக் காசு கேட்டு அருகாமனையால் தேவியின் தாலியை நறுக்க வர அதைக் கழட்டி அவன் மூஞ்சியில் போட்டு விட்டு பக்கத்திலிருக்கும் ஒரு வக்கீலம்மாவின் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறாள் தேவி. “ஏய். இதுக்குப் பொறந்தவளே. அதுக்குப் பொறந்தவளே நீ வெளியில வரத்தானே வேணும். இருடி இரு. அப்ப வச்சிக்கிறேன் கச்சேரிய. அடி வக்கீலம்மா உனக்கும் இருக்கு. என் பொண்டாட்டிய வெளிய விடு. நீயே எப்பவும் பார்த்துக்குவியா அவளை “ என்று கத்தவும் சீ என்றானது தேவிக்கு.

இப்பிடி எல்லாம் செய்தும் புருஷனுக்கு சுடச் சுட ஆக்கிப் போடவும் ருசியாக கறி ,கோழி முட்டை என்று அவ்வப்போது வீட்டு வேலை செய்யும் கைக்காசில் சமைத்துப் போடவும் தவறுவதில்லை அவள். எல்லாத்தையும் பொறுத்த அவளால் ஒன்றே ஒன்றைத்தான் பொறுக்க முடியவில்லை. ஒரு தரம் மதிய நேரம் வீட்டு வேலை முடிந்து வந்ததும் மகள் வயசு இருக்கும் ஒரு பெண்ணோடு வீட்டுக்குள்ளே அவன் படுத்துக் கிடந்ததைப் பார்த்ததும் காளியாகிவிட்டாள் தேவி. அந்தக் குட்டியை அடித்து விரட்டியவள் அவனை அடிக்காத குறைதான். இந்தாளுக்குப் பொண்டாட்டி தேவையா எனக் கோவத்தோடு மகள் வேலை செய்யும் மதுரையில் ஒரு வீடு பிடித்துச் சென்றுவிட்டாள்.

முதலில் பெண்டாட்டியும் மகளும் போனது சௌகரியமாக இருந்தது மாரியப்பனுக்கு. பின்னர் காளியம்மன் கோயிலில் தட்டில் விழும் சில்லறைக் காசு சோத்துக்கே பத்தாதபோது மகள் வேலை செய்யும் இடத்திலும் போய் குடிக்கக் காசு கேட்டு தகறார் செய்திருக்கிறான் மாரியப்பன். தன் வாழ்க்கைக்கும் தன் மகள் வாழ்க்கைக்கும் ஒரு விடிவு தேடி சாமிக்கு வேண்டிக்கொண்டுதான் இந்தப் புரவி எடுப்புக்கு வந்திருந்தாள் தேவி.

குடியினாலும் கஞ்சாவினாலும் சீர்கெட்டிருந்தது மாரியப்பனின் உடம்பு. கை கால்களில் நிரந்தர நடுக்கம். நிற்கும்போதும் ஆடிக்கொண்டே இருப்பது போன்ற தோற்றம். மனைவி போனதும் சரியான சாப்பாடும் இல்லை. தட்டில் காசு விழுவதும் இல்லை.

சுவரில் மாட்டியிருந்த மாமனார் மாமியார் ஃபோட்டோக்களைப் பார்த்தான். காலால் எட்டி உதைத்தான். பெரிய அழகியக் கெட்டிக் கொடுத்தியோ. கபோதிப் பயலே என்று திட்டினான். வீட்டில் சாமி செல்ஃபில் இருந்த உண்டியலை உடைத்துப் பார்த்தான் காசு போதவில்லை. அவ்வப்போது பக்கத்துப் பொட்டலில் இருந்து வந்து காசு வாங்கிக் கொண்டு சமைத்துத் தரும் குட்டியைத் தேடினான். காசு இல்லாததால் அவளிடமும் இவன் காசு கேட்க அவள் இப்போதெல்லாம் வருவதே இல்லை. உண்ண குடிக்க எதுவுமே இல்லை. ஒரு செம்புத் தண்ணீர் கூட இல்லை.

பகலின் வெய்யில்  மஞ்சள் குவளையைச் சாய்த்தது போல அந்த ஓட்டு வீட்டின் மேல் விழுந்திருந்தது. குடிபோதை தேடி அவனது கை கால்கள் நடுங்கின. சாமி செல்ஃபின் பக்கத்துச் சுவரோரம் சரிந்து அமர்ந்தான். உடம்பு கூடு போல இருந்தது. குடியால் செல்லரித்த கூடு. தலையில் முடி மட்டுமே இருந்தது. கண்கள் உள்ளே குழிவிழுந்து போதையில் ஆழ்ந்திருந்தன. பசியின் கிறக்கமும் போதையும் அவசமும் அவனைத் தாக்கின. ஃபோட்டோவிலிருந்து மாமனார் எழுந்து வருவது போலிருந்தது. கைகளால் தள்ளினான். ஓய் போய்யா என்றான்.

’அஹ்ஹா’ காளியம்மனைப் போல அவர் விழிகள் உறுத்து நோக்கின. யேய் என்றார் அவர். அவன் திகைத்து விழித்து நோக்கினான். அங்கே யாருமே இல்லை அவனையும் அவரையும் தவிர. அவர் கையில் சூலம். பூசை செல்ஃபில் வைத்திருந்த இதை எதற்காகத் தூக்கி வருகிறார்.ிறைமீட்ட ஐயாரா.. இல்லை மத்ுப் பிடாரியா.. ? அவனுக்கு சர்வ நாடியும் ஒடுங்கியது. கையால் கழுத்தைப் பிடித்துக் கொண்டான். சரக்கென்று ஏதோ குத்தியது. இடது கையால் கழுத்தைப் பிடித்து வலது கையால் பிடுங்க எத்தனித்தான். மாமனார் அஹ்ஹ்ஹாஹா என்று கர்ஜனை புரிவது போலிருந்தது. கழுத்தில் இருந்து அரக்கு நிறத்தில் அவன் குடித்த திரவங்களைப் போல ரத்தம் கசியத் துவங்கியது. கண்கள் நிலைகுத்தியபடி அமர்ந்திருந்தான்.

ரண்டு மூன்று நாட்களாக அண்ணனைப் பார்க்கவில்லையே அண்ணியும் மகளும் இல்லையே என்று உள்ளூரில் இருந்த தங்கை மோகனா அண்ணனைப் பார்க்க வீட்டுக்கு வந்தவள் கழுத்தில் சூலத்தோடு அமர்ந்திருக்கும் அண்ணனைப் பார்த்ததும் பயந்து பேயடித்தவள் போலானாள். போலீசுக்கும் அண்ணன் மகளுக்கும் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

போலீஸ்காரரிடம் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
”குடிபோதை கிடைக்காம இந்தாளு தன்னத் தானே சூலத்தால கழுத்துல குத்திக்கிடுச்சு”. வீட்டுக்குள் நுழைந்த தேவியின் கண்களில் முதலில் அந்தச் சூலம்தான் பட்டது. அது அவள் அப்பன் இருக்கும் வரை தினம் ஆராதித்து வந்த சூலம்.

டிஸ்கி :- இந்தக் குறளுக்காக எழுதப்பட்ட சிறுகதை இது. 

9. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டு ஒழுகுவார் (குறள் 921) 


ிஸ்கி:- இு என்னுடையிுகத் ொகுப்பானிவப்புப் பட்டுக் கிறுவில் வெளியாகி உள்ளு. 



ன்றி பன்னாட்டு புலம்பெயர் எழத்ாளர் ஒன்றியம். !  

6 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)