ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவுரை.

ஏழாமாண்டுத் தொடக்கவிழாவும், டாக்டர் வானதி திரு.இராமநாதன் அவர்களுக்குப் பாராட்டுவிழாவும், அதை மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் பாராட்டிய விழாவாகவும் முக்கனியாகச் சுவைத்தது காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜூலை மாதத் திருவிழா.
வழமை போல் செல்வி கவிதாவின் தமிழமுதத்துடன் துவங்கியது விழா.
பேராசிரியர் திரு. மு. பழனியப்பன் அவர்களின் இன்னுரையோடு களை கட்டியது.
விழாவில் முதல் கூட்டத்தில் முதல் சொற்பொழிவாற்றிய  திரு. இரா. மாது அவர்களுக்கு பேராசிரியர் செந்தழிப் பாவை சிறப்புச் செய்தார். 
மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் திரு. சேவுகன் செட்டியார் அவர்கள் சிறப்புச் செய்தார்கள்.
திருச்சிராப்பள்ளிக் கம்பன் கழகச் செயலாளர் திரு. இரா. மாது அவர்களின் சிறப்புரை.

மாது அவர்களின் தந்தையார் திரு இராதாகிருஷ்ணனும் கம்பனில் தோய்ந்தவர்கள். எனவே கம்பனிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் மாது அவர்களின் சொற்பொழிவு மிகச் செறிவாக இருந்ததில் வியப்பேதுமில்லை.



ஏன் பொலிந்தது என்ற தலைப்புக்கு ஏற்ப., கம்பராமாயணத்தில் இராமன் தனது மூன்று சகோதரர்களுடன் குகன், சுக்ரீவன், விபீடணன் ஆகியோரையும் தனது சகோதரர்களாக ஏற்ற தருணத்தில் தனது தந்தை தயரதனின் மைந்தர்களாகக் குறித்துச் சொல்லிய நேரத்தில் பொலிந்தது எனக் கொண்டுவந்து முடித்தது சிறப்பு.

இராமனின் வாழ்வை ஒட்டி லெக்ஷ்மணனின் வாழ்வும், பரதனின் வாழ்வை ஒட்டி சத்ருக்கனனின் வாழ்வும் எப்படி அமைந்தது என ஹோமத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட பாயாசப் பங்கின் மூலம் தெளிவாக்கினார். அதே போல ராமரை என்றும் பிரியாமல் இருக்கும் லெக்ஷ்மணன் ( ஆதிசேஷன் ), சங்கின் அம்சமாக பரதன், சக்கரத்தின் அம்சமாக சத்ருக்கனன் ஆகியோரைப் பற்றியும் விரிவாகக் கூறியது சிறப்பு.

எம்ஜியாரையும் சிவாஜியையும் நடிப்பில் ஒப்புமை சொல்லி இராமனின் உயர்வைப் பேசிய விதம் எதிர்பாராவிதமாக இருந்தாலும் அருமை.

கம்பனடிசூடி அவர்களின் பேச்சு வழக்கம்போல் நினைவுக் கொத்து. பல மலரும் நினைவுகள். ஒவ்வொருவருடனும அவருக்கு இருக்கும் ஆத்மார்த்தமான தொடர்பு நெகிழ வைத்தது. பொது ஜனத் தொடர்பிலும் சரி, தனி நபர் தொடர்பிலும் சரி மிகப் பர்ஃபெக்டான ஒரு நிலைமையைக் கையாள்கிறார்கள்.அது அவர்களின் இயல்பென்றே சிறப்பித்துச் சொல்லலாம். அவர்களுக்கு அங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்ல எவ்வளவு நல்நினைவுகள் மேலெழுந்தனவோ அதை விட அதிகமாக அங்கே பேசியவர்களுக்கும் இருந்தவர்களுக்கும் கம்பனடிசூடி அவர்களைப் பற்றிய நல்நினைவுகள் மேலோங்கிக் கொண்டிருந்தன.

வானதி திரு. திருநாவுக்கரசு அவர்களைப் பற்றியும் மணிமேகலைப் பிரசுரத்தின் திரு லேனா, திரு ரவி தமிழ்வாணன் பற்றியும் , சிறப்புப் பேச்சாளர் மாது மற்றும் அவர்தம் தந்தை பற்றியும் நினைவலைகளைப் பகிர்ந்து திரு கம்பனடிசூடி அவர்கள் சிறப்பித்துச் சொன்னார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல தனக்கு லேசாக அறிமுகமானவர்களாக இருந்தால் கூட அவர்களையும் - சிறு தகுதி உடையவர்களாக இருந்தாலும் கூட - சிறப்பித்து முன்னிலைப் படுத்தி அவர்களின் திறமைகளுக்குத் தூண்டுகோலாகவும் ஊக்குவிப்பவராகவும் இருந்து ஒளிவிடச் செய்பவர்கள் கம்பனடிசூடி என்பதை அங்கே இருந்தவர்களும், குறிப்பாக சிறப்பாக ரவி தமிழ்வாணன் அவர்களும் பதிவு செய்தார்கள். அதையே என் மனமும் ஆமோதித்துக் கொண்டிருந்தது.
டாக்டர் பட்டம் பெற்றமைக்காக கம்பராமாயணம் பற்றி நூற்றுக்கணக்கில் அதிக நூல் வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக பதிப்புத் திலகம் திரு வானதி இராமநாதன் அவர்களுக்கு தேவகோட்டை ஜமீன்தார் திரு. சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் அங்கவஸ்த்திரம் அணிவித்து வாழ்த்திக் கௌரவித்தார்கள்.
அவர்களுக்கு முடிசூட்டுவிக்கப்பட்டது. கொப்புடை அம்மன் கோயிலில் அர்ச்சனை செய்து பிரசாதமும் அளிக்கப்பட்டது.
வாழ்த்து மடல் வாசித்தளிக்கப்பட்டது.
திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் உரையாற்றினார்கள்.

சக பதிப்பாளர் என்றபோதும் போட்டியாளராகக் கருதாமல் சகோதரர்போல் வாஞ்சையுடன் வானதி ராமனாதன் அவர்களை வாழ்த்திப் பேசினார் ரவி தமிழ்வாணன்.

தந்தையர் காலத்திலிருந்தே இரு குடும்பத்தாருக்கும் உள்ள நல்லிணக்கம் பற்றிப் பேசியதோடல்லாமல் வானதி ராமனாதனின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் அவரது மனைவி உண்ணாமலை ஆச்சி பற்றியும் பாராட்டினார். அதே போல் மறைந்த வானதி சோமு பற்றியும் அவர் பொதுஜனத் தொடர்பில் சிறந்ததை சிலாகித்துக் கூறினார்.  அதேபோல் கம்பனடி சூடி அவர்களின் தனித்தன்மைகளையும் சிறப்பித்துச் சொன்னார்.

ஒரு சொற்பொழிவு எவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் கலகலப்பாகவும் கூட்டத்தினரை கட்டுக்குள் வைக்கும்படியும் இருக்கவேண்டும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருந்தேன் நான் :)
இன்னொன்று குறிப்பிட வேண்டும். தன் மணிமேகலைப் பிரசுரம் சார்பாகவும் மாலையும் அங்கவஸ்த்ரமும் போர்த்தி வானதி ராமனாதன் அவர்களை ரவி தமிழ்வாணன் அவர்கள் சிறப்புச் செய்தார்கள். ரவி அவர்களின் நண்பர் திரு காளி முத்து பூமாலை அணிவித்தார்.
ஒரு மகிழ்ச்சியான தருணம்.
தேவகோட்டையைச் சேர்ந்த இன்னொரு நகரத்தார் பிரமுகர் வானதி இராமனாதன் அவர்களுக்கு ரவியின் சார்பில் பொன்னாடை போர்த்தினார்கள்.
அகமும் முகமும் மலர அனைவரையும் அரவணைத்திருக்கும் கம்பனடி சூடி அவர்களும் ரவி தமிழ்வாணன் அவர்களும் மனிதருள் மாணிக்கங்கள்.
மிகப் பெரும் சர்ப்ரைஸாக ரவி தமிழ்வாணன் அவர்கள் கம்பனடி சூடி அவர்களுக்கும் இன்னொரு பிரமுகர் மூலம் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார்கள்.
கம்பர் விழாவில் சுவைஞர்கள் உரையாடல் தொடர்ந்தது. வீட்டில் வைபவம் காரணமாக நான் எட்டு மணிக்கே கிளம்ப நேர்ந்தது.

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம். வாழ்க வளமுடன். !


6 கருத்துகள்:

  1. புகைப் படங்களுடன் செய்தி சொல்லும் விதம் அருமை..

    பதிலளிநீக்கு
  2. அருமையான நிகழ்ச்சித் தொகுப்பு

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்களுடன் அருமையான நிகழ்ச்சி வர்ணனை
    நேரில் கலந்து கொண்ட உணர்வு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. தகவல் பகிர்வுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி தமிழ் நெஞ்சன்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)