திங்கள், 20 ஜூன், 2016

கல்கியும் நானும் & FIVE - D - THEORY. யும்

சொல்லப் போனால்  இந்தத் தலைப்பு கல்கி குழும இதழ்களும் நானும் என்றிருந்திருக்க வேண்டும். கல்கி அவர்களின் நூல்களைப் படித்த அபிமானத்தினால் கல்கியும் நானும் எனத் தலைப்பிட்டுக் கொண்டுள்ளேன்.பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், தியாக பூமியும் அலைஓசையும் என்னை மயக்கியதுமல்லாமல் கி ராஜேந்திரன் அவர்களின் ரவி குலதிலகனும் என்னைக் கவர்ந்திருக்கிறார்.

///சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..///


கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோகுலத்தின் சார்பாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் சக வலைப்பதிவர் மாயவரத்தான் அவர்களும் நானும் ஜூன் மாதம் 11 ஆம் தேதி நடுவராக அழைக்கப்பட்டிருந்தோம்.

அந்நிகழ்வில் திருக்குறள் போட்டி, ஒரு நிமிடம் உரையாடல், பாட்டுப் போட்டி, மாஜிக் ஷோ, மிமிக்ரி ஆகியன இடம்பெற்றிருந்தன. முடிவில் மாயவரத்தான் அவர்களும் நானும் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டோம்.

மாயவரத்தான் அவர்களும் குழந்தைகளுக்குத் தேவையான கருத்துக்களைச் சிறப்பாகக் கூறி அமர்ந்தார். அடுத்து நான் அழைக்கப்பட்டேன். அங்கே பகிர்ந்த கருத்துக்களையும் கூற விட்டுப் போன சிலவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன். {{அன்று எனது திருமண நாள், எனது ஐந்தாவது புத்தகமான சிவப்புப் பட்டுக் கயிறைப் புத்தகத் திருவிழாவில் வெளியிடும் நாள், மேலும் கோகுலம் சார்பாக நடுவராகக் கலந்து கொள்ளும் நாள் என முப்பெரும் விழாவாக அது எங்களை ( எனது கணவரையும் ) மகிழ்வித்தது.  - கல்கியில் எனது முதல் கவிதை வெளிவந்தது - கிராமத் திருவிழா என்ற  கவிதை மாணவர் பக்கத்தில் வெளியானது . அதற்குக் கொடுக்கப்பட்ட - பி. எஸ். மணி என்ற எடிட்டர் கையெழுத்திட்ட காசோலையையும் -  15 வாசகர் கடிதங்களையும் ( வாசகர் கடிதங்கள் பாகம் - 1, வாசகர் கடிதங்கள் பாகம் -2  ) என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். பெருமிதமாக உணர்கிறேன். அதன் பின் கல்கியின் கவிதை கஃபேயில்  சென்ற வருடங்களில் நான்கு கவிதைகளும் வெளியாகி உள்ளன.   - இரவு, மெழுகின் முணுமுணுப்புமீன்கள், கோதுதல்  }}

பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி நிறுவனத்தின் இந்த பவளவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி. சின்னப் பிள்ளையில் இருந்து வாசித்து மகிழ்ந்த கல்கி, கோகுலம் , மங்கையர் மலர் ஆகிய பத்ரிக்கை அலுவலகத்தில் நின்று பேச முடியும் அதன் சிறப்பு விருந்தினராக வரமுடியும் என்பதே பெருங்கனவாகத் தோன்றுகிறது. அதை சாத்தியப்படுத்தி மாபெரும் பெருமையை வழங்கிய  கோகுலத்தின் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இனி எனது உரையின் சாராம்சம்:-

உங்ககிட்ட சில விஷயங்களை இன்னிக்குப் பகிர்ந்துக்கணும்னு வந்திருக்கேன். கல்விக்கூடங்களில் இன்று தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் பாடத்திட்டத்தில் தமிழுக்குப் போதிய கவனம் அளிப்பதில்லை. வாழ்க்கைக்கு இலக்கியம் தேவை இல்லை என்று கல்வி நிறுவனங்கள் நினைக்கின்றன. ஆனால் இலக்கியம் படிக்காமல் உருவாகும் தலைமுறை பணத்தை மட்டுமே எண்ணும் காட்டுமிராண்டிக் கூட்டமாக இருக்கும். வாழ்க்கைக்குக் கலையும் இலக்கியமும் அவசியம்.

இம்மாதிரிச் சூழலில் கல்விக்கூடங்கள் ஆதரிக்காத தமிழை இன்றுவரை பத்ரிக்கைகள்தான் முன்னெடுத்துச் செல்கின்றன. அம்முன்னேடுப்பில் முதன்மையாக இருக்கும் கல்கி குழுமத்தைப் பாராட்டுகிறேன். தங்கள் ஊழியர்களின் குழந்தைகள் திருக்குறளைக் கற்க வேண்டும் அதன் படி ஒழுக வேண்டும் என்று கோகுலம் போட்டிகளில் திருக்குறள் மனனத்திறமைக்கு முதல் இடம் அளித்த பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. அப்படிப்பட்ட நிறுவனத்தில் உங்கள் பெற்றோரும் அங்கம் வகிப்பதில் நீங்களும் பெருமைக்குரியவர்களாகின்றீர்கள்.

இங்கே பேசிய குழந்தைகள் மிக அருமையாக திருக்குறளை ஒப்பித்தார்கள். ஆனால் மனப்பாடம் செய்வதில் மற்றும் வார்த்தைகளை உச்சரிப்பதில் சிறிது கடினமாக உணர்ந்தார்கள். அதேபோல் அடுத்த குறள் என்ன என்பதையும் மறந்து நின்றார்கள். இந்த வயதில் நன்கு படித்து உச்சரிப்பைத் திருத்திக் கொண்டு விட வேண்டும். ஏனெனில் பதின்பருவம் தான் மனனத் திறமைக்கு அருமையான பருவம். இந்தப் பருவத்தில் படித்ததுதான் வாழ்க்கை முழுமைக்கும் மறக்காமல் இருக்கும்.

கோகுலம் ஆசிரியர் எழுதிய நூல் ஒன்று மெமரி பூஸ்டர். இதை வாங்கிப் பாருங்க. இதில் அக்ரானிம்ஸ் பற்றிச் சொல்லப்பட்டிருக்கு. அதனால் அடுத்து அடுத்து என்ன குறளைச் சொல்வது என்பது நிம்மோனிக்ஸ், அக்ரோனிம்ஸ் உத்தி , அக்ரோஸ்டிக் உத்தி மூலம் வார்த்தைகளைக் கோர்த்துக் கற்றுக்கொள்ளலாம். அதனால் மறக்காமல் பத்துக் குறள்களையும் சொல்லிவிடலாம்.

பெரும்பாலான பொது இடங்களில் நாம் காணும் குறை என்னவெனில் எழுத்துப் பிழைகள் வார்த்தைப் பிழைகள் மலிந்து வருவது. ஒரு விளம்பர பலகையில் கூட தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத கூட்டம் பெருகி வருகிறது. உச்சரிப்பிலும் பிழைகள். முதலில் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் பழக வேண்டும் . மொழிப்பயிற்சிக்கு கல்விக்கூடங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒரு நிகழ்வில் வெற்றி பெற்றோம் என்பதை விட அதில் பங்கேற்பதே பெரிது என்று பொறுப்பாசிரியர் சொன்னது போல இந்த நிகழ்வில் நீங்கள் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் இதற்காகத் திருக்குறளைப் படித்தது சிறப்பு. அதன் பொருளுணர்ந்து படியுங்கள். பொருளுணர்ந்து படிக்காவிட்டாலும் அனைத்தும் வீண்தான். இதுவரை சொன்னதே சிறப்பு என்றாலும் இன்னும் முயன்றால் சிறப்பிடம் அடைவீர்கள்.

மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து டி (  D ) தியரி பற்றிச் சொல்லலாம் என நினைக்கிறேன். DREAM, DISTRACT, DESTINY, DETRIMINE, DESERVE. இதுதான் அந்த ஃபைவ் டி தியரி (  FIVE  --D -- THEORY ) .

1. அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற., எண்ணியதை எய்த கனவு காணுங்கள். - ட்ரீம். - DREAM,

2. அந்தக் கனவை நனவாக்க விடாமல் உங்களை டிஸ்ட்ராக்ட் செய்யும் விஷயங்களைக் கண்டு ஒதுக்குங்கள். விலக்குங்கள். - DISTRACT,

3. எந்த விஷயத்தை அடையவேண்டும் என்று ஒரு முடிவான இலக்கை நிர்ணயுங்கள். - டெஸ்டினி - DESTINY,

4. அதற்கான திட்டமிட்டு உழையுங்கள் - டிட்டர்மைன் - DETRIMINE,


5. அப்படி உழைத்தால் நீங்கள் எண்ணியது எய்துவீர்கள். -யூ டிஸர்வ்.  - YOU DESERVE.

இந்த ஃபைவ் டி தியரியைப் பின்பற்றி வெற்றிபெற வாழ்த்துகிறேன். உங்க எல்லாரோடயும் உரையாட நேர்ந்தது குறித்து சந்தோஷம்.

நன்றி நல்லதொரு நாளை அளித்த கோகுலத்துக்கும் கல்கி குழுமத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.


5 கருத்துகள்:

  1. என் தாத்தாவிற்கு பொன்னியின் செல்வன் படித்துக் காண்பித்தேன். இப்போது என் மகன்கள் கல்கியின் ரசிகர்கள். இதுதான் கல்கியின் தாக்கம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)