திங்கள், 4 ஜனவரி, 2016

OCTAVIAN PALER. ஆக்டேவியன் பேலர் - நமக்கு நேரம் இருக்கிறது.

OCTAVIAN PALER. ஆக்டேவியன் பேலர் - நமக்கு நேரம் இருக்கிறது.

கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த மிகச் சிறந்த ரோமானிய அறிவிஜீவி  ஆக்டேவியன் பேலரின் என்னைக் கவர்ந்த ஒரு கவிதையை என் ருமானியத் தோழி டனா முஷ்டேஷியாவின் பக்கத்திலிருந்து மொழி பெயர்ப்பு செய்து வெளியிடுகிறேன்.

ஆக்டேவியன் பேலர் ருமானிய கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மெம்பராக சில காலம் இருந்தவர். பின்னாட்களில் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தால் ருமானிய கம்யூனிஸம் பற்றிய எதிர்க்கருத்துகளைக் கொண்டிருந்தார்.

ருமானியன் ரேடியோ மற்றும்  தொலைக்காட்சி கமிட்டியின்  வைஸ் ப்ரசிடண்டாகவும், ருமானியன் ஜர்னலிஸ்ட் கவுன்சிலில் ப்ரசிடெண்டாகவும் ருமானியன் லிப்ரா என்ற ப்ரபல பத்ரிக்கையின் சீஃப் எடிட்டராகவும் திகழ்ந்தவர்.



எல்லாச் சமயத்திலும் ருமானியப் ( பெருந்தலைகள் ) புகழ்பெற்ற மனிதர்கள் பற்றி ருமானியத் தொலைக்காட்சி எடுத்த கணக்கெடுப்பில் 93 ஆம் இடம் பிடித்தவர். 1926 இல் பிறந்த இவர் தனது எண்பதாவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இவர் கவிஞர் என்பதை விடவும் சிற்சில சமயங்களில் மட்டுமே தன்னைக் கவிஞராக வெளிப்படுத்தியவர் என்பது பொருந்தும். எளிமையாக கூறப்படும் தத்துவ விசாரக் கருத்துகளைக் கொண்ட ஞானச் செறிவு கொண்ட கவிதைகளை வழங்கி இருக்கிறார். வார்த்தைச் சித்தாக இல்லாமல் எதுகை ,மோனை, அசர அடிக்கும் உருவகங்கள் இல்லாமல் வாழ்க்கைப் பாடங்களை அப்படியே சொல்லிச் செல்லும் இக்கவிதை என்னைக் கவர்ந்ததுபோல உங்களையும் கவரும் என நம்புகிறேன்.

நமக்கு நேரம் இருக்கிறது :- 

நமக்கு நேரம் இருக்கிறது.  
நமக்கு நேரம் இருக்கிறது எல்லாவற்றிற்கும்.
தூங்க பின்னும் முன்னுமாக ஓட
நாம் செய்த பிழைக்கு வருந்தினாலும் திரும்பத் திரும்பத் தவறிழைக்க
மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பளிக்க நம்மைக் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொள்ள
நமக்கு நேரம் இருக்கிறது படிக்கவும் எழுதவும்.
நாம் எழுதியவற்றைத் திருத்தவும் நாம் எழுதியவற்றை மறுக்கவும்,
நமக்கு நேரம் இருக்கிறது சில திட்டங்களை வடிவமைக்கவும்  அவற்றைப் பின்பற்றாமல் இருப்பதற்கும்
நமக்கு நேரம் இருக்கிறது பிரமைகளில் மூழ்கிக் கிடக்கவும் அவற்றின் சாம்பலைப் பின்னால் அசைபோட்டுக் கிளறிக் கொண்டிருப்பதற்கும்,

 நமக்கு நேரம் இருக்கிறது குறிக்கோள்களுக்கும் மற்றும் வியாதிகளுக்கும்,
காரணமான விதியையும் விவரங்களையும் குற்றம் சுமத்த.
நமக்கு நேரம் இருக்கிறது மேகங்களைப் பார்க்க, விளம்பரங்களைப் பார்க்க அல்லது சில தாறுமாறான விபத்துகளைப் பார்க்க நமக்கு நேரம் இருக்கிறது.
நமது கேள்விகளைத் துரத்த நமது பதில்களை ஒத்திப் போட நமக்கு நேரம் இருக்கிறது.
நமது கனவுகளை நொறுக்க மற்றும் புதிதாக உருவாக்க நமக்கு நேரம் இருக்கிறது நண்பர்களை அமைத்துக் கொள்ள
அவர்களை இழக்க, நமக்கு நேரம் இருக்கிறது பாடங்கற்றுக் கொள்ளவும் அவற்றை மறக்கவும்
மிக விரைவிலேயே நமக்கு நேரம் இருக்கிறது பரிசுகளைப் பெற்றுக் கொள்ளவும் அவர்களைப் புரிந்து கொள்ளாமலிருக்கவும். நமக்கு நேரம் இருக்கிறது எல்லாவற்றிற்கும். 

நேரம் இல்லை எதற்கென்றால் ஒரு சிறிய கனிவுக்கு.
நாம் அதைச் செய்யப்புகும் சமயம்வாய்க்கும்போது நாம் இறக்கிறோம்.

டிஸ்கி:- நன்றி டனா இவ்வளவு பொருள் பொதிந்த கவிதையைப் பகிர்ந்து வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதை உணர்த்தியமைக்கு. எது முக்கியம் எது முக்கியமில்லை என்ற குழப்பத்தில் வாழ்ந்து வரும் நம் போன்ற மனிதர்களுக்கு நிலையாமையையும் வாழும் வரை கைக்கொள்ளவேண்டிய கனிவையும் கவிதையாக்கி அளித்த ஆக்டேவியன் பேலருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது. ! :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)