புதன், 28 அக்டோபர், 2015

பழம்பொரியும், சிக்கன் கறியும்.

சென்ற வருடம் திருவனந்தபுரமும், பாலோடும்  பொன்முடியும் சென்றிருந்த போது விதம் விதமான கேரள உணவுகளை ருசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவற்றுள் கப்பக்கிழங்கு மசியல், கேரள சிவப்பரிசி ( கொட்டையரிசி ) சாதம், தேங்காய் எண்ணெயில் சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு வறுத்த கோழிக்கறி, சிக்கன் க்ரேவி, மத்திமீன் ஃப்ரை , பழம் பொரி ( ஏத்தக்காயப்பம் ), உன்னியப்பம், இலைக் கொழுக்கட்டை,  நேந்திரன் சிப்ஸ், எளக்கி வாழைப்பழம், சீரக வெள்ளம் ( அட சீரகம் போட்டுக் காய்ச்சிய தண்ணிதாங்க ! ) , அப்புறம் ஏதோ மரப்பட்டையைப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரும் கிடைச்சுது.

நம்ம தமிழ்நாட்டு நாக்குக்கு அதெல்லாம் வித்யாசமா இருந்துச்சு. நாம முன்னே கடலை எண்ணெய் அப்புறம் நல்ல எண்ணெய் அது கசந்ததால பின்ன ரிஃபைண்ட் ஆயில்னு மாறிட்டோம். ஆனா மலையாளீஸ் இன்னும் சமையல் தேங்காய் எண்ணெயிலதான்.

நாங்கள் சென்னையில் இருந்தபோது கேரளாவில் ஒரு முறை வெள்ளம் வந்ததை டிவியில்   கீழ்வீட்டுத் தோழி ரஜிதாவுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வெள்ளத்திலும் ஒரு பெண் தேங்காய் உடைத்துத் திருகி ( மெய்யாலுமே ஒரு பாறையின் மேல் அமர்ந்து சுற்றி நீர் ஓடிக் கொண்டிருக்க ) அருகாமணையில் தேங்காய் திருகிக் கொண்டிருந்தது. அப்போது அவர் “ பாரு எவ்ளோ வெள்ளம் வந்து என்ன . தேங்காய் திருவிகிட்டு இருக்கு மலையாளீஸுக்குத் தேங்காய் இல்லாம சமைக்கத் தெரியாது என்றார் !”

அதென்னவோ தேங்காயிலும் தேங்காய் எண்ணெயிலும் விதம் விதமாகப் பொரித்தும் வறுத்தும் வதக்கியும் அரைத்தும் அவர்கள் சமைக்கும் உணவுகளின் ருசிக்கு ஈடு இணை இல்லைதான்.

மத்தி மீனைக் கீறி மிளகாய்ப் பொடி போட்டு உரசி தேங்காய் எண்ணெயில் வறுத்திருந்தார்கள். பயங்கரக்காரம். அது மறுநாள்தான் தெரியும் :) :) :)


பழம் பொரி ஆழப்புழாவில் ஒரு கடையில் வாங்கி சாப்பிட்டேன். லேசாக தித்திப்புடன் வாழைப்பழ பஜ்ஜி போலிருந்தது. மைதாவில் தோய்த்துப் போடுவார்கள் போல அரிசி, வெல்லம், சுக்கு கலந்தது போலும் இருந்தது.

உன்னியப்பமும், இலைக் கொழுக்கட்டையும் பாலோடுக்கு போயிருந்தபோது நண்பரின் உறவினர் வீட்டில் காலைப் பலகாரத்துக்கு வைத்தார்கள். அரிசி மாவில் வெல்லத்தை ஊற்றிப்  பிசைந்து குழிப்பணியாரம் போன்ற கல்லில் ஊற்றி எடுப்பது உன்னியப்பம். இலைக்கொழுக்கட்டைக்கு அரிசி வெல்லப் பாகு ஏலக்காய், எள் சேர்த்துப் பிசைந்து ஏதோ ( பலா இலையா தெரியலை - தையிலை மாதிரி இருந்தது ) இலையில் வைத்து மடித்து டூத் பிக்  போலக் குத்தி வேகவைத்து இருந்தார்கள்.

எளக்கி வாழைப்பழமும், சீரக வெள்ளமும் , இன்னொரு மரப்பட்டையைப் போட்டுக் காய்ச்சிய சிவப்பு வெள்ளமும் கிடைத்தது. :) 

அடுத்துப் பொன்முடி சென்ற போதும் அவர்கள் இல்லத்திலிருந்தே கப்பக்கிழங்கு மசியல்,  கேரள சிவப்பரிசிச் சாதம், பருப்பு கறி, சிக்கன் கறி, சிக்கன் கிரேவி கொடுத்தனுப்பினார்கள். அந்த சிக்கன் கறி ரொம்ப சூப்பர். தேங்காய் எண்ணெயில் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு நிறைய சின்ன வெங்காயம் வறுத்து அதில் கோழியைப் போட்டு உப்பிட்டு வறுத்திருந்தார்கள், செம ருசி. ஆனா அவங்க ஊர்ல பால் தயிர் நல்லா இல்ல. இல்லாட்டி தயிர்சாதத்துக்கு இது செம காம்பினேஷனா இருந்திருக்கும்.

இந்த நேந்திரம் சிப்ஸ் (ஏத்தக்காய் சிப்ஸ்) அங்கே ஒரு கடையில வாங்கி வந்தோம். பின்ன கேரளா போனா இன்னும் பலாக்காய் சுக்கு வெரட்டி,  நேந்திரங்காய் உப்பேரி வாங்காம நிறைவு பெறுமா என்ன..

ஆனா அங்கே போயிட்டு வந்தபின்னாடி என் கணவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் இரு பெண்கள்., கேரளா சாரி வாங்கலையா ( அதுதாங்க இரட்டை முண்டு ) அப்புறம் கேரளா சூடிதார் வாங்கலையா அப்பிடின்னு கேட்டு ரேக்கி இந்த சந்தோஷத்தை எல்லாம் கெடுத்துட்டாங்க. அடுத்து எப்ப கேரளா போவோம்னு ரங்க்ஸ் கிட்ட கேட்க ( இதை எல்லாம் வாங்க :) அவர் இங்கேயே எல்லாம் கிடைக்கும் வாங்கிக்கலாம்னுட்டார். :)

என்னதான் சந்தோஷம் இருந்தாலும் சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் எதையும் நாம மிஸ் பண்ணலைங்கிறதுதானே. :)

8 கருத்துகள்:

  1. முதல் படத்தில் காணப்படும் மீன் ஏன் சிரிக்கிறது? :))

    நேந்திரங்காய் சிப்ஸ் மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!

    சமீபத்தில் வாட்சப்பில் வந்த காணொளி ஒன்று பார்த்தேன். தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் கேரளாக் காரர்களுக்கு தோல் வியாதி எதுவும் வராது என்றும், அவர்களின் பளபளப்புக்குக் காரணம் தே.எ தான் என்று சொன்ன காணொளி.

    பதிலளிநீக்கு
  2. பதிவருக்கு ஒரு வேண்டுகோள்:

    இனி தயவு செய்து உணவு சம்பந்தமான உங்கள் பதிவில் படங்களை போடாதீர்கள்; இப்போது இங்கே மாலை 5.30, பசி நேரம். இப்படி இந்த பதிவில் உள்ள படங்களையும் அதன் சுவையையும் ஒருசேர பார்த்த எனக்கு உண்மையிலேயே நாக்கில் எச்சில் ஊறுகிறது, வயிறு பசியில் சத்தம்போட ஆரம்பிக்கின்றது.

    அருமையான விருந்து உங்கள் பதிவு. அடுத்த முறை கேரளா சென்றால் சொல்லி அனுப்புங்கள் நானும் வருகிறேன்.

    நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  3. அப்புறம் நல்ல எண்ணெய் அது கசந்ததால // என்ன சகோதரி எள் நெய் கசந்த்தா? ஆச்சரியமாக உள்ளதே! இலங்கையில் இன்றும் எள்நெய், தேங்காய் நெய் ,மாறவில்லை. கடலை நெய் தெரியாது.
    இலங்கையிலும் , நாங்கள் தேங்காய்ப் பாலிலேயே சமையல் செய்வோம். தேங்காயின்றிச் சமையல் இல்லை. ஐவர் கொண்ட குடும்பத்துக்கே நாளுக்கு 4 தேங்காய் தேவை!

    பதிலளிநீக்கு
  4. மீன் சிரிக்குதா. காரத்துல வாய திறந்து கத்துதுன்னு நினைச்சேன் .

    தாராளமா எடுத்துக்குங்க ஸ்ரீராம் :) தேங்காய் எண்ணெய்க்கு முழுசா மாற முடில. அவியல் மோர்க்குழம்பு, கூட்டுல சேர்த்துக்குறது :)

    அஹா மன்னிக்கவும் கோயில் பிள்ளை சகோ. :) நிச்சயமா சொல்றேன் :)

    எள் நெய்யில் பொரித்தால் சிறிது கசப்படிக்கத்தான் செய்கிறது யோகன். பூரி பொரித்தால் நன்றாக இல்லை ருசி. அதுக்கு கடலை எண்ணெய் பரவாயில்லை. தேங்காய் எண்ணெயில் நாங்கள் தமிழ்நாட்டில் இன்னும் அதிகமா சமைத்துப் பழகலை.

    என்னது அஞ்சு பேருக்கு 4 தேங்காயா.. ஓ மை கடவுளே. அதுதான் தென்னை மரம் அதிகமா இருக்கே இலங்கையில. ஆனா பாரிஸ்ல எல்லாம் விலை ஜாஸ்தியாச்சே. யூரோவில் வேற அதிகமா இருக்கும். அங்கே கிடைக்குதா என்ன.. அல்லது தேங்காய் பவுடர் அல்லது துருவிய பதப்படுத்திய தேங்காய் உபயோகிக்கிறீங்களா. ?

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. மீன் சிரித்தால் தீபாவளி! :) எனக்கென்னமோ கொஞ்சம் அழற மாதிரி இருக்கு! என்னை வறுத்துட்டீங்களேன்னு! :)

    இலையப்பம் [கொழுக்கட்டை] இங்கே சில கல்யாணங்களில் சாப்பிட்டதுண்டு. பழம்பொரியும் ஒரு முறை சாப்பிட்டு பிடிக்காததால் அடுத்த பயணங்களில் சாப்பிடுவதில்லை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆமா எனக்கு அழறமாதிரிதான் தெரியுது :)

    ம்ம் பழம் பொரி திதிப்பா இருக்கும் :)

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  8. சகோதரி! பாரிசில் தாராளமாகத் தேங்காய் கிடைக்கும்! 1 தேங்காய் 50 யூரோ சதம். இங்கு அப்பா அம்மா தவிர எல்லாம் காசிருந்தால் வாங்கலாம். டொமினிக்கன் குடியரசு எனும் நாட்டிலிருந்து இறக்குமதியாகிறது. தாலாந்திலிருந்து கெட்டிப்பால் அடைத்து கிடைக்கிறது. இலங்கையில் எள் நெய் தோல் நீக்கியே செக்கில் ஆட்டுவார்கள் அதனால் கசப்பு இருப்பதில்லை. தோலுடன் ஆட்டினால் கசக்கவே செய்யும். அத்துடன் தேங்காய் பால் மா, உலர்த்திய துருவலும் கிடைக்கும். இளநீர் கிடைக்கும்.
    இங்கு விநாயக சதுர்த்தித் தேரோட்டத்துக்கு குறைந்தது 5 ஆயிரம் தேங்காயாவது சிதறும்.https://www.youtube.com/watch?v=rLO0KUgmKmo இத் தொடுப்பில் , சிதறிய தேங்காய்களைப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)