புதன், 7 அக்டோபர், 2015

செம்மாதுளைச் சாறு

அந்த வங்கிக்குள் நுழைந்தாள் அவள். வாடிக்கையாளர் சேவையில் புகழ்பெற்றுக் கோலோச்சிக் கொண்டிருந்தது அந்த வங்கி.

அவள் ஒரு திராவிடப் பெண்மணி - அது போதும் அவளைப் பற்றிய மேலதிகத் தகவல்களை நீங்களே ஊகித்துக் கொள்வீர்கள். பெரிய சரீரம், கறுத்த நிறம், கீரைக் கட்டாய்க் கூந்தல். கருநிலவுகளாய் உருண்டு கொண்டிருக்கும்  கண்கள்.  பொருத்தமாய் இருந்தாலும் ஏதோ ஒரு ஜவுளிக்கடையில் எடுக்கப்பட்டிருந்த ஒரு ரவிக்கையும் புடவையும்.

அனைத்துப் பணியாளர்களும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க, ஒவ்வொருவரையும் பார்த்த அவள் மேனேஜருக்காகக் காத்திருந்தாள். முன்பே தெரிந்தவள் என்பதால் ஒவ்வொருவராக குசலம் விசாரித்தும், புன்னகை சிந்தியபடியும் சென்றார்கள். மிக அதிகமான அளவு டெப்பாசிட் வைத்திருப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும்தானே.


அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்த்தபோது அனைவரும் கம்ப்யூட்டரில் வாத்யம் இசைக்கும் புல் புல் போலத் தெரிந்தார்கள். நின்ற படியும் பறந்தபடியுமாய். கரன்சியின் சத்தம் ராகமாய் இடம் தோறும் பெயர்ந்து கொண்டிருந்தது.

இதுவரை லாக்கரில் எத்தனையோ கொண்டு வைத்திருக்கிறாள். ஆனால் இதை வைக்க முடியுமா தெரியவில்லை. மேனேஜரைக் கேட்க வேண்டும். முதலில் டெப்பாசிட், இல்லாவிட்டால் லாக்கர் அல்லது அடமானமாவது வைக்க வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் அதை வைக்க வேண்டுமென்று நினைத்தாள் அவள். சுமந்து அலைவது மிகக் கஷ்டமாக இருந்தது. பாதுகாக்க முடியவில்லை. எல்லா ஆசைகளையும் தூண்டிக் கொண்டிருந்தது அது. அவளை நிம்மதியாய் உறங்க விடுவதில்லை .

இரவில் விழித்து எழுந்து பார்ப்பாள். பத்திரமாய் இருக்கிறதாவென. குப்பென வியர்க்கும். வேர்வையினுடே காத்தருளும்படி கடவுளை வேண்டிக்  கண்ணீர் விட்டபடி கண்ணயர்வாள்.

அது அடிக்கடி அவளை சித்திரவதைக்குள்ளாக்கிக் கொண்டு இருக்கிறது. அதிலிருந்து கிளம்பும் பிரியம் அவளை வசப்படுத்தியதுபோல் காயப்படுத்தியும் , பயப்படுத்தியும் இருக்கிறது.

கோட்டுக்காரன் வாத்தியம் போல கடிகாரம் ஒலிக்க மேனேஜர் உள்நுழைந்தர். ஒரு புன்னகையுடன். சின்ன வயதிலிருந்து அவளுக்கு வங்கி மேனேஜர்களையும் டாக்டர்களையும் பிடிக்கும். அவர்களின் புன்னகை முகமும். டாக்டர்களின் சிரித்த முகத்தைப் பார்த்தாலே நோவடங்கி விடுவது போல., மேனேஜரின் புன்னகையைப் பார்த்தாலும் தன் பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வு வந்துவிட்டது என நம்பினாள்.

தான் ஏன் ஒரு டாக்டரிம் இதைக் கொடுத்து  வைக்க யோசிக்கவில்லை என நினைத்தாள். ஒரு வேளை மாற்றி வேறொருவரிடம் வைத்து விட்டார் என்றால்.. நினைக்கவே பயமாய் இருந்தது. சரி ஒரு அடகுக் கடைக்காவது போயிருக்கலாம். ஒரு சிட்டை எழுதிக் கொண்டு பணம் வேறு கிடைக்கலாம். யார் கண்டது மீட்க முடியாமல் மூழ்கி விட்டால்..அவர்கள் எல்லாவற்றோடும் சேர்த்து இதையும் அழித்து விட்டால் .  என்னவானாலும் சரி தான் இங்கே வந்ததே சரி என நம்பினாள் அவள்.

எடுத்து வைத்துவிட்டால் தீர்ந்தது பாரம். எல்லாவற்றிலும் மிக இலகுவானதாய் கைப்பிடி அளவு இருந்தாலும் எல்லாவற்றிலும் கடினமானதாய் இருந்தது அது. எதைப் போட்டாலும் உள்ளடக்கி வழிந்து கொண்டிருந்தது அது. அதை மட்டும் ஒப்புவித்து விட்டால் ஒரு காற்றடைத்த பலூன் போல எங்கெங்கும் பறந்து  செல்லலாம் என்பதே நிம்மதியாயிருந்தது அவளுக்கு.

மேனேஜர் ஒரு சில முக்கியக் கோப்புக்களில் கையெழுத்திட்டபின் அவளை அழைத்தார். ஏசி மெஷினின் ஒலியும் கம்யூட்டரின் தட்டுக்களும், சரசரவெனப் பேனாக்களின் ஒலியும் சீல் குத்தும் மெஷினின் முத்தாய்ப்பும் ஒரு தேர்ந்த சிம்பொனியாய் ஒலிக்க  அவள் சினிமாக்களில் வரும் ஹீரோயின் போல மெல்ல நுழைந்தாள் மேனேஜரின் அறைக்குள்.

முகமன்கள் கூறி வரவேற்ற அவருக்கு புன்னகையாய் பதிலளித்தாள். அவளுடைய அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும், லாக்கரும் அங்கே இருந்ததால் குளிர்பானம் வாங்கச் சொல்லியவாறு என்ன தேவையென விசாரித்தார். அவள் மையமாய்ப் புன்னகைத்தவாறே தன் இடது தோளின் பக்கம் கையைக் கொண்டு சென்றாள்.

வழக்கமாக கைப்பை  எடுத்து வரும் அவள் இப்படிச் செய்ததும் மேனேஜர் , பெண்கள் பணப் பர்சை வைக்க ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற சங்கோஜத்தோடு குனிந்தவாறு இருந்தார்.

எதையோ உள்ளிருந்து பிய்க்க முயல்வது போலிருந்தது அவளது நடவடிக்கை. என்ன செய்யப் போகிறாள் எனப் புரியாமல் அமர்ந்திருந்தார் அவர். ஏதாவது ரவிக்கைக் கொக்கியில் மாட்டிவிட்டதோ என அவர் எண்ண வலுவோடு போராடிப் பிடித்து இழுத்து அறுந்தது போல் அதை அவள்  வெளியில்  எடுத்து வைத்தாள். அது .. அது அவளின் இதயம்.. பார்த்தவுடன் அவருக்கு குப்பென வியர்த்தது. ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள், தமனி, சிரை, எல்லாம் அறுத்துவிட்டு செங்கலர்ப் பை போல திடுக் திடுக்கென துடித்துக் கொண்டிருந்தது அது.

லப் டப் லப் டப் என்னும் ஒலி இன்னும் அதில் அடங்கவில்லை. ரத்தமும் எங்கிருந்தோ பம்ப் ஆகி  எங்கேயோ செல்வது போலத் தோன்றியது. எழுந்து நின்றுவிட்ட அவரைப் பார்த்து .. இதுதான். இதேதான்.. இதை டெப்பாசிட் செய்ய முடியுமா எனக் கேட்டாள்.அதை எடுத்து வெளியில் வைத்ததும் அவள் ஒரு மிதக்கும் பறவையைப் போல இருந்தாள். அதை அங்கேயே விட்டுவிட்டுப் பறந்து விடுவாள் போலத் தோன்றியது மேனேஜருக்கு. எந்த ரத்தகாயமும் அவள் புடவையிலோ ரவிக்கையிலோ இல்லை.

ஆனால் இப்படி ரத்தமும் சதையுமான  இதயத்தை அவர் எங்கேயுமே பார்த்ததில்லை. கசாப்புக் கடையில்  ஆட்டுக்கும், கோழிக்கும் இதயம் வெட்டும்போது கூட அவர் கண்ணை மூடிக் கொள்வார், இறைச்சியை உண்பது வேறு வெட்டுவது வேறு என்பது அவரது அகிம்சை சித்தாந்தம்.

அவரது கேபின் கண்ணாடி கூண்டோடு தனியாக இருந்ததால் அந்த டேபிளின் மேல் ஒரு இதயம் துடித்துக் கொண்டிருப்பதை  யாருமே கவனிக்கவில்லை. இல்லை இல்லை இதை டெப்பாசிட் செய்ய ஏலாது, இங்கே பணம் மட்டுமே செய்ய இயலும். என்றார் அவர்.

ரத்தம் பம்ப் ஆக ஆக அவருக்கு பீதியாக இருந்தது. இல்லை அடமானமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றாள் அவள். இங்கே மூழ்குமுன் நோட்டீஸாவது கொடுப்பார்கள் என்ற நினைப்பில். மீண்டும் அவள் அதை எடுத்துப் பொருத்திக் கொண்டால் தேவலை என்றிருந்தது அவருக்கு.

இல்லை அடமானமும் பிடிக்க முடியாது. இங்கே தங்கம் மட்டுமே அடமானம் பிடிக்கப்படும் என்றார் அவர். கொஞ்சம் கொஞ்சமாக கோபமாகிக் கொண்டிருந்தாள் அவள்.எவ்வளவு பணம் போட்டிருக்கிறேன். சரி என்னுடைய லாக்கரிலாவது வைத்துவிட்டுப் போகிறேன் என்றாள்

லாக்கரில் வைப்பதா. பாதுகாப்பானதுதான் என்றாலும் அது என்ன கசாப்புக்கடை ஃப்ரீசரா. ஆனால் மிக நீண்டநாட்களானால் அதன் வாசமும் ரத்தமும் பக்கத்து லாக்கர்களுக்குப் பரவி விடுமே .. யார் யாருக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி வருமோ எனக் கலங்க ஆரம்பித்தார். மேனேஜர்

அந்த இதயத்திலிருந்து ரத்த ஆறு பெருக ஆரம்பித்தது.  அதில் படிந்திருந்த  பாசம் மிகச் சிவப்பாய் இருந்தது. பார்க்கக் கண்கள் கூசியது அவருக்கு. டேபிளை நிறைத்து ஒரு பிரகாசமான  நதியாய் ஓடியது. அதன் இக்கரையில் அவரும் அக்கரையில் அவளும் நின்றிருந்தார்கள். அவள் அலமாரிகள் சூழ ஒரு தீவில் நிற்கும் நாடோடியைப் போல இருந்தாள்.

இந்த இதயத்தை எப்படியாவாது இங்கேயே வைத்துவிட்டுப் போவது என்று பிடிவாதம் பிடித்தவள் போல இறுக்கமாய் நின்றாள். இந்த ரத்தமும் சதையுமான இதயத்தை இறக்கி வைத்தபின் அவள் இறுகி விட்ட கல்லைப் போலவும் ஒரு விபரீத தோற்றம் கொடுத்தாள். கல்லிலிருந்து விழுந்த தேரை போல அந்த இதயம் குதித்துக் கொண்டிருந்தது.

எத்தனையோ தனியார் வங்கியில் இந்த சேவை இருப்பதாக அவள் முணுமுணுதாள் . சேஃப்டி வேலெட்டுக்களிலும் கூட. மேனேஜர் அங்கெல்லாம் உண்டு . இங்கு கிடையாது என மீண்டும் மன்றாடத் தொடங்கி இருந்தார்.

வைத்துக் கொள்ள முடியுமா முடியாதா என அவள் பல்லைக் கடித்தபடி கேட்டபோது இது எல்லாம் தன்னுடைய அதிகாரத்தில் இல்லையென்றும் தன் மேலதிகாரிகளைக் கேட்டே  சொல்ல முடியும் எனவும் அவர் சத்தற்ற குரலில் கூறினார்.பாங்கிக்ங் பாலிசிகளில் முதன் முறையாக அவருக்கு மதிப்பு பிறந்திருந்தது.

ரத்தப் பூவைப் போல செங்கருப்பில் பூத்துக் கொண்டிருந்த இதயம் ஒரு வினோத பூந்தொட்டியாய் அவர் மனதை கிளறியது. பயத்தின் உச்சத்தில் இருந்தார்.

தன் இதயம் இருக்கும் ஒரே காரணத்துக்காகவே காலூன்றி இருப்பவள் போல இருந்த அவள் அதன் கனமற்று பல கணங்களாய் மிதந்து கொண்டிருந்தாள்.

மேனேஜர் முடியவே முடியாது என மறுத்து விட்டதாலும் அதை இறக்கியபின்  அவள் சுமை குறைந்ததாலும் இலகுவான அவள் தன் யதாஸ்தானத்துக்குத் திரும்பினாள். மேஜையில் தனிமையாக ஏற்றுக் கொள் ஏற்றுக் கொள் எனத் துடிக்கும் இதயத்தைப் பார்த்தாள். ஏற்கனவே இருந்த தடத்தில் இருந்து ஒரு பாசக் குரல் கேட்டவள் போல அதை நோக்கி வாஞ்சையாய் விழித்தாள்.

எதற்காக இங்கே வந்தோம். ஏன் உள்ளிருப்பதை எல்லாம் கழற்றி வைத்தோம் என யோசித்தாள். புரியவில்லை. தன்னுடைய இதயம் மட்டும் இன்னும் தனிமையாகக் துடிப்பது அவளுக்கு துயரம் போல ஒன்றை உண்டு பண்ணியது. அதன் குரலைக் கேட்காமல் மேனேஜர் ஒரு பீதியடைந்த பிரயாணி மோதி விழுந்த முயலைப் பார்ப்பது போல பார்த்தது இன்னும் என்னவோ போலிருந்தது.எந்த நம்பிக்கையில் தான் இங்கு வந்தோமோ என வருந்தினாள். எல்லா மனிதர்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. செயலாற்றும் தன்மைக்கும் கூட..

சுமைதாங்கிக் கல்லைப் போலிருந்த மேஜையிலிருந்து தன் சுமையை சும்மாட்டைத் தட்டிப் பானையை  வைப்பவள் போல எடுத்து டக்கென்று பர்சை சொருகிக் கொள்பவள் போல எடுத்து உள்ளே வைத்துக் கொண்டாள்.

மேனேஜர் நாக்கு எல்லாம் உலர்ந்து அவளைப் பார்த்தார். எப்படி இப்படி எல்லாம் வைக்கவும் எடுக்கவும் அவளுக்கு இயலுகிறது. அவளுக்கு கால்  இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும் என யோசித்தார். அப்போது உள்ளே வந்த பையன் வைத்த கூல்ட்ரிங்க்ஸ் அவர் மேசையைப் பிடித்த அதிர்ச்சியில் சாய்ந்தது.

செம்மாதுளைச் சாறு நிறைந்த பேப்பர்கப் மேசையில் குழைந்து ஓடத் துவங்கியது. என்ன செய்வது இனி என நினைத்த அவள் தன்னிதயம் தன்னிடமே திரும்பிவிட்ட திருப்தியில் ஒரு நீல மயில் தன் தோகையை விரித்தது போல திரும்பி நடந்தாள்.

நடந்ததெல்லாம் கனவா நனவா என அறியாது திகைத்தபடி அவள் இதயத்திலிருந்து வடிந்ததின் மிச்சமோ என அந்தச் செம்மாதுளை ரசத்தைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தார் மேனேஜர்.


8 கருத்துகள்:

  1. கதையைப் படித்து முடிப்பதற்குள் என் இதயம் வாய் வழியே வெளியே வந்து விடுமோவென்ற அச்சம் மேலோங்கி இருந்தது. என்ன ஒரு திகில் ! பின்னிட்டீங்க போங்க. # அந்தப் பெண் நீங்கதானே?

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசமான கற்பனை. ஆங்காங்கே மிக அற்புதமான வர்ணனைகள். தலைப்புத்தேர்வும் மிக அருமை. மனம் நிறைந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக பொறுமை குணங்கள் கொண்ட பெண்ணாய்ப் பிறந்தவளின் இதயத்தின் ஆழம் காண முடியாது என்பார்கள்.

    அவள் மனதில் உள்ளதும், வெளியில் சொல்லிக்கொள்ள முடியாததுமான பல்வேறு பாரங்கள், வலிகள், ரணங்கள், அவஸ்தைகள் என எல்லாவற்றையும் இதயத்தோடு கழட்டி தனியே அவள் எடுத்து வைத்துவிட்டால், அவள் உடல் இலேசாக இலவம் பஞ்சுபோல ஆகி மகிழ்ச்சியாகப் பறக்க முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துச்சொல்லியுள்ள இந்தத்தங்களின் கற்பனைக்கதையும், வலுவான அதன் கருவும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன.

    தங்களின் இந்த விசித்திரமான கற்பனைக்கு மீண்டும் பாராட்டுகள், ஹனி மேடம்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான கற்பனை! அருமையான கதை!

    பதிலளிநீக்கு
  5. ஐயோ.... இது மட்டும் சாத்தியமானால் இதய அடைப்பு ஆபரேஷன் எல்லாம் எவ்வளவு சுலபம்!

    பதிலளிநீக்கு
  6. அட! அற்புதமான கற்பனைக் கதை! எப்படி சகோ இப்படி அழகாக கற்பனை செய்யத் தோன்றுகின்றது?!!!!

    இது பல வகைகளில் சிந்திக்க வைத்தது. அவள் உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டு தன் தனிமை, வேதனைகளை வலிகளைக் கொஞ்ச நேரம் பாதுகாப்பாக இறக்கிவைத்துவிட்டு பறந்து திரிந்த பின், அவைகல் களைந்த அந்த வெற்று இதயத்தைப் பொருத்தி மகிழ்வை மட்டுமே நிறப்பிக் கொள்ள யத்தனித்தாளோ?!!!!

    பதிலளிநீக்கு
  7. இது கதை உமேஷ் ஸ்ரீனிவாசன் :)

    உங்களின் விரிவான பின்னூட்டத்துக்கும் புரிதலுக்கும் நன்றி கோபால் சார். :)

    நன்றி சுரேஷ் சகோ

    ஸ்ரீராம்.. ஹாஹா :) குட் ஐடியா.. :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். :) அளவுக்கதிகமான பிரியமும் ஆள் பாராமல் அள்ளிக் கொட்டும் அன்பும் கூட துயரம் தரும் என்பதைச் சொல்லத்தான் இந்தக் கதை நட்பூஸ். :)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)