திங்கள், 19 அக்டோபர், 2015

முதிய பூ - நமது மண் வாசம் இதழில்.

பன்னிரெண்டு வயதிருக்கும்
தொலைந்தபோது.


விழிக் கண்ணாடியில்
அழகான பிம்பமாய் உறைந்துவிட்டாய் நீ.


திரும்பத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இரட்டைப் பின்னலில் ஒன்று
உருவித் தொங்க
வாயெல்லாம் வழியும் சிரிப்பையும்
அரைக்கால் பாவாடையில்
உன் குதியாட்ட நடையையும்.


பெரிய பெண்ணாகிவிட்டாயாம்
சுருக்கிவிட்டார்கள் உன் உலகத்தை
சுருங்கிக்கிடக்கிறாய்
உலக்கைக்குப் பின்.

அதிராமல் நடக்கவும்
வாயைமூடி சிரிக்கவும்
ஆணையிடுகிறது உலகம்.


பூப்பெய்தியபோது இழந்த சிரிப்பை
சருகாகும்போது மீட்டிருக்கிறாய்


அடர்சடை நரையாகவும்
குதியாட்டம் தடுமாற்றமாகவும்
இழந்த வருடங்களை
வெள்ளெழுத்துக் கண்ணாடியில்
தேடிக்கொண்டிருக்கிறாய்.


சுருங்கும் விழிவெண்படலத்தில்
சுருக்க விழியோரத்தில் சிரிக்கிறாய்.
எப்போதோ.
அப்போதெல்லாம் மீட்கிறேன்
முழுமையாய் உன்னை
முதியபூவாய்.

டிஸ்கி :- சுய உதவிக் குழுக்களுக்கான பத்ரிக்கையான நமது மண்வாசம் மதுரையிலிருந்து வெளிவருகிறது. இதில் என்னுடைய கட்டுரையையும் கவிதைககளையும் தொடர்ந்து கேட்டு வெளியிட்டு வரும் அதன் ஆசிரியர் & ப்ரபல பத்ரிக்கையாளர் திரு. ப. திருமலை அவர்களுக்கு நன்றிகள்.

அழகான ஓவியங்களால் எனது படைப்புகளை கவினுறச் செய்திருக்கும் ஓவியர் திரு சுந்தர்ராஜன் அவர்கட்கும் நன்றிகள் :)



3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)