சனி, 4 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் தனபாலன்

எனது மதிப்பிற்குரிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கடந்த சில வருடங்களாக வலையுலகில் எழுதி வருகிறார். தனது வலைப்பூவில் மட்டுமல்ல., மற்றவர்களின் வலைப்பூவிலும் அநேகமான பின்னூட்டங்கள் கொடுத்திருப்பார். வேகமாகப் படித்துவிட்டு நான் உட்பட பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தகுந்த பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. பின்னூட்டங்களில் டிடி என்று பலர் அழைப்பார்கள். நான் தனபாலன் சகோ என்று விளித்திருப்பேன்.

டெக்னிகல் பதிவுகளானாலும் சரி, திருக்குறள் பாடல்களோடு பகிர்வார். திருக்குறளின் சிறப்பை வாழ்வியல் நெறிகளோடு பகிர்வது சிறப்பு. கல்லூரிகளில் வலைப்பூ பற்றிய பட்டறைகள் நிகழ்த்தி இருக்கிறார். யாரையும் புண்படுத்தாமல் சொல்ல வந்த கருத்துக்களை எளிய முறையில் மனதில் தோன்றும் திரையிசைப் பாடல்களோடு பகிந்திருப்பார். 

இன்னும் இன்னும் இவர் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம். மகளுக்கு அறிவுரை கூறுவதானாலும் சரி மகள் இவருக்குக் கூறிய ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதானாலும் சரி அதை வலையில் பகிர்ந்து செம்மையாகக் கொடுத்திருப்பார். எல்லாருக்கும் சொல்வது போலும் தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போலும் அமைந்திருக்கும் இவரது பதிவுகள் அனைவரையும் கவர்ந்தவை. நல்லதே பகிரும், நல்லதை மட்டுமே பகிரும் அவருக்கு தமிழ் வலையுலகமே நட்பானதில் ஆச்சர்யமில்லை.

அவரின் திருக்குறள் பதிவுகளுக்கும் பாடல்களுக்கும் ( பல பாடல்கள் கேள்விப்பட்டிருப்போம், சில பாடல்கள் கேள்விப்பட்டிராத ஆனால் அருமையான பாடல்களாக இருக்கும் ) நிறைய வாசகர்கள் உண்டு., நான் உட்பட. அவருக்கு வலையுலகம் எப்படி அறிமுகமானது என்று கேட்டேன்.

////"நீங்க வலையுலகம் வந்தது பத்தி சொல்லுங்க..."////

இரண்டு வருடமாக பல வலைத்தளங்கள் வாசித்து இருந்தேன்... நாமும் எழுதலாமா...? நேரம் கிடைக்குமா...? என்ன எழுதுவது...? எதையெல்லாம் எழுதி ஆர்ப்பரிக்கக் கூடாது...? - இப்படி பல கேள்விகள் மனதிற்குள் எழுந்தது உண்மை... அதன் பின் வலைத்தளம் பற்றிய தொழிற்நுட்ப பதிவுகளை வாசிக்க ஆரம்பித்து விட்டேன்... தனியாக தொழில் ஒன்று ஆரம்பித்த பின் இணையத்துடன் நேரம் அதிகம் கிடைத்தது... வலைத்தள பெயர் உட்பட திட்டமிட்டபடி ஆரம்பித்து விட்டேன்...

வாழ்வியல் வழிமுறைகள் மற்றும் வாழ்வதற்கான நெறிமுறைகள் (மனித மனங்களின் சிறு ஆய்வு)

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.

மனித மனம் தான் எவ்வளவு அற்புதமானது... 90% வரை எனது பதிவுகள் மனதின் விநோதங்களை சொல்லும்... என்னை முதலில் நண்பனாக்கிக் கொண்டேன்... ஆம்... ஆரம்ப பதிவுகளில் பலவற்றில் நண்பர்கள் கூறுவது போல இருக்கும்... அதில் பலதும் நானே... மற்றவை சந்தித்த நண்பர்கள்... தொலைக்காட்சி, வானொலி, புத்தகங்கள் - இவைகள் எனக்கு மிகவும் உதவின... படித்த பல வலைத்தளங்கள் பலவிதங்களில் மிகப் பெரிய உதவி செய்தது என்பதை மறுக்க முடியாது... எல்லாவற்றையும் விட அன்பர்களின் கருத்துரைகள்... சிலரின் சிறிய கருத்துரைகள் கூட எனக்கு உற்சாகம் தரும் + அடுத்த பதிவில் அவர்களின் கேள்விக்கான பதிலும் இருக்கும்...

மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ? (http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html) இது தான் முதலில் எழுதின "Draft" இந்தப் பதிவிலிருந்து பிறந்த பகிர்வுகள் ஏராளம்...! பல மாதங்கள் கழித்து தான் இதை "சுருக்கி" வெளியிட்டேன்...

எனது வீட்டிற்கு வாடிக்கையாக வரும் கீரைக்காரர் "மனிதனின்  உண்மையான ஊனம் எது ?" (http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Real-Handicapped-Person.html) எனும் பதிவிற்கு 'மூலம்' அவர் தான்... இப்படி "பதிவு உருவானது எப்படி...?" என்று எழுத வேண்டும் என்கிற சின்ன ஆசையும் உண்டு...!

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? (http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/1.html) இன்று கூட ஒவ்வொரு பதிவிற்கும் இந்த கேள்விகளே மனதிற்குள் எழும்...! திருக்குறளுக்கு அஸ்திவார பதிவே இது தான்... அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஒட்டி, அப்படிச் சொல்லுங்க...! (http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Power-of-Word.html) என்று ஆரம்பித்து, திருக்குறள் அதிகாரத்தை எளிய உரைநடையில் எழுதினேன்... அனைத்து அதிகாரங்களையும் இவ்வாறே எழுத வேண்டும் எனும் எண்ணமும் உள்ளது... நேரத்தை விட பொறுமையும் திட்டமிடலும் என்னை காக்கும் நம்பிக்கை... குறள் என்னை வழிநடத்துகிறது என்று சொல்வதை விட ISO-வின் கோட்பாடுகளும் அதே போலத்தான்...

ஒரு சில நிமிடங்களில் இப்படி பதில் எழுதியது இதுவாகத்தான் இருக்கும்...! இவை எழுதும் போதே பல பாடல்கள் மனதில் வந்து பாடி விட்டு போனது...! இது போல தான் பதிவு எழுதும் போது, மனதில் தோன்றும் பாடல்களை குறித்து வைத்துக் கொண்டு பிறகு பதிவுகளில் காணலாம்...! குறள் + பாடல் இல்லாமல், மற்ற இரு கேள்விகளுக்கும் சுருக்கமாக என்னால் பதில் எழுத முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்... முடிந்தால் எனது வலையில் பகிர்கிறேன்...

புன்னகை அரசி + மைக் மோகினி... சகோதரிக்கு நன்றிகள் பல...

டிஸ்கி:- எந்தத் தருணத்திலும் எல்லாருடனும் நட்புக்கரம் கோர்த்துச் செல்ல விழையும் உங்களுக்கும் நன்றிகள் பல சகோ. மனிதர்களின் குணநலன்களைச் சொல்லும் பகிர்வுகளும் எனக்குப் பிடித்தவையே. சில சமயம் கவனித்து இருக்கிறேன். பின்னூட்டத்தில் வரும் கருத்துக்களுக்கான பதிலாக அடுத்த பதிவுகள் அமைந்திருப்பதையும். 

சக நண்பர் அறிவுரை கூறுவது போலவும் தனக்குத் தானே நெறிப்படுத்திக் கொள்வது போலவும் அமைந்திருக்கும் உங்கள் பதிவுகள் அனைவருக்கும் அத்யாவசியமானவைதான். 

மனிதநேயமிக்க பதிவராக உங்களை உணர்ந்ததில், அறிந்து கொண்டதில் சகோதராகப் பெற்றதில் மிக்க சந்தோஷமடைகிறேன்.  எல்லாருக்கும் நல்லவராக நடந்துகொள்வது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்திருகிறேன். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கும், மிக அருமையான பகிர்வுகளால் எங்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் சாட்டர்டே போஸ்டை சிறப்பித்தமைக்கும் நன்றி சகோ. :) வாழ்க வளமுடன்.


24 கருத்துகள்:

  1. அற்புதமான மனிதரைப்பற்றி அழகான பதிவு.

    நான் ஏற்கனவே பத்திரிகைகளில் எழுதியதை சேமித்து வைக்க ஒரு இடம் வேண்டும் என்பதற்காக தொடங்கியதுதான் கூட்டாஞ்சோறு என்ற வலைப்பூ. அதில் நான் பதிவு செய்த எல்லா பதிவுகளுக்குமே திண்டுக்கல் தனபாலன் என்ற பெயரில் பின்னூட்டம் வரும்.

    பெரும்பாலான எனது பதிவுகளில் அவரது ஒரு கருத்து மட்டுமே இருக்கும். புதிய வலைபதிவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்றே தெரியவில்லை. அதிலும் அவர்களை பாராட்டுவதில் வல்லவர்.

    வலைபதிவில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்து தருபவர். மிக இனிய நண்பர்.அவரைப்பற்றி அற்புதமாக எழுதிய உங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  2. Mr. DD Sir அவர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்தது மிகச்சிறப்பானது.

    மிகச்சுருக்கமான ஆனாலும் சுவையான பேட்டி.

    இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் என்றாலே பூட்டு நினைவுக்கு வருவதுண்டு.

    இவர் மனம், சாவியைத் தொலைத்துவிட்ட, எப்போதும் ஓர் திறந்த நிலையில் உள்ள பூட்டு.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் திண்டுக்கல் தனபாலனை டிடியாக்கிய பெருமை எனக்குதான். :)))))))))

    தொழில் நுட்பங்களில் வல்லவர். 'எங்களு'க்கும் - எனக்கும் - பல யோசனைகள் சொல்லி இருக்கிறார். நான்தான் இதோ இதோ என்று விட்டு விடுகிறேன்.

    நல்ல நண்பர், நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
  5. உண்மையில் அனைவரும் பாரட்ட வேண்டியவர் தான்.இனிய மனிதர். உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் மிகவும் பொருத்தமானவர் ஹா ஹா ...மிகுந்த மனச்சாட்சி உள்ளமனிதர் அல்லவா.அவருக்கு இந்தப் பதிவு அவசியமானதே. சுவையான பேட்டி இருவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ....! வாழ்க பல்லாண்டு ....!

    பதிலளிநீக்கு
  6. திண்டுக்கல் என்றால் டிடி.தான் .......

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்

    தனபாலன் அண்ணாவைப்பற்றி மிக சுவையாக சொல்லியுள்ளீர்கள்... சொல்லியது அத்தனையும் உண்மைதான்.. நான் பல தடவை அண்ணாவுடன் பேசியும் உள்ளேன் பல தடவை நேரில் பேசியது போல பேசியும் உள்ளேன்... அவரின் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. தனபாலன் அண்ணாவை இன்று பேட்டி எடுத்து பதிவாக்கியமைக்கு முதலில் நன்றிகள் தேனக்கா.
    அண்ணாவைப்பற்றி வலையுலகமே அறியும். ஒரு "நல்லமனிதர்" தனபாலன் அண்ணா. அந்த வார்த்தைக்குள் எல்லா நல்லனவையும் அடக்கி சொல்லியுள்ளேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
    அற்புதமான ஒருவரை பேட்டிகண்டமைக்கு வாழ்த்துக்கள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் செந்தில்குமார். இவர் புது வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்றுதான் தெரியவில்லை. மொத்தத்தில் சித்ரா சாலமன் ராஜேஸ்வரி ஜெகமணி, கோபால் சார் போல் தனபாலன் சகோவும் அநேக வலைத்தளங்களில் மிக அதிகப் பின்னூட்டங்கள் கொடுத்தவராக இருப்பார்.

    மிக்க நன்றி கோபால் சார் :)

    தனபாலன் சகோவை டிடியாக்கியது நீங்கதானா ஸ்ரீராம் நல்ல பேர்தான். சொல்லவும் குறிப்பிடவும் விளிக்கவும் எளிதாக இருக்கு. :) நானும்தான் இவர் போடும் டெக்னிகல் பதிவுகளைப் படிப்பதோடு சரி. ஒன்றும் செய்து ப்லாகை உயர்த்தவில்லை. தேமேன்னு போட்டு வைச்சிருக்கேன். ஹாஹா

    பதிலளிநீக்கு
  10. நன்றி இனியா அனைவரும் டிடியை மிக அற்புதமான மனிதர் என்றே சொல்கிறார்கள். ஆமாம் குற்றச்சாட்டு எல்லாம் உண்மைதான். கருத்துக்கு நன்றிப்பா. :)

    நன்றி வலிப்போக்கன்

    மிக்க நன்றி ரூபன். நீங்கள் அமைத்த போட்டிகளை எல்லாம் எங்களுக்குத் தெரியப்படுத்தியவரும் உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவரும் டிடிசகோதான் :)

    ஸ்ரீராம் நானும் இன்னிலேருந்து டிடி சகோ என்றே அழைக்கப் போகிறேன் :)

    நன்றிடா அம்மு. நல்ல மனிதர், அற்புதமான மனிதர் என்று சக மனிதரைப் பற்றி அதிகம் நம் வலையுலக நண்பர்கள் சொல்லி இருப்பது டிடி சகோவைத்தான். அதை என்றென்றும் தக்கவைத்து மென்மேலும் பேரும் புகழும் நட்பும் பெற்று இனிமையாக பல்லாண்டு வாழ டிடி சகோவை வாழ்த்துகிறேன் :)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  12. ///பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தகுந்த பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. //மிக சரியா சொன்ணீங்க அக்கா...சகோதரரின் இரு வரி பதில்களானாலும் அவை ஆழமானவை ..வாழ்த்துக்கள் டி டி .சகோ

    பதிலளிநீக்கு
  13. நண்பர் தனபாலன் எல்லாப் பதிவுகளையும் படித்து, எப்படிப் பின்னூட்டம் இடுகிறார் என்று பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பிறரை ஊக்குவிப்பதில் எந்தப் பாரபட்சமும் காட்டாத நல்ல மனிதர். அவர் பதிவுகளும் அவர் மனதைப் பறைசாற்றும்.

    பதிலளிநீக்கு
  14. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  15. அருமை சகோ.பிறரை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே ! பாராட்டுக்கள் & நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. த= தன்னடக்கம்
    ன=மனதிடம்
    பா= பாராட்டும் பண்பு
    ல= நலம் பாராட்டும் நற்பண்பு
    ன்=வார்த்தைச் சித்தராக வலம் வரும் மாமனித(ன்)

    நானறிந்த நடமாடும் நவீனயுக வள்ளுவன்
    திண்டுக்க்கல் தனபாலன் வாழிய வாழியேவே!

    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம +1

    பதிலளிநீக்கு
  17. ஓட்டு பெட்டி எங்கே? உள
    இடாவிடினும் இவர்தான் தல!

    பதிலளிநீக்கு
  18. தன்னடக்கம், மற்றவரை மதிக்கும் பண்பு,பிறரைஊக்குவிப்பதில் தாராளம்,எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அற்புதமான மனிதர் டிடிஎன்றால் அது மிகையில்லை ,அவருடைய பதிவுகள் வித்தியாசமானவை , டிடிக்கும் அவரை பேட்டி கண்ட தேனுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்--சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  19. எங்கள் இனிய நண்பர் ஐயனின் ஏகலைவன் டிடி யைப் பற்றிச் சொன்னதற்கு உங்களுக்கு நன்றிகள் பல! டெக்னிகல் பிரச்சனையா "ஹலோ டிடி"" தான்! இனியவை கூறல் தான் இவரது பலம் இன் தளம்!

    அருமையாக எழுதுபவர். திருக்குறள் என்றால் ஐயன் நினைவுக்கு வந்தாலும் அவருக்குக் கூஜா தூக்கும் சிஷ்யனாக எங்கள் டிடியும் நினைவுக்கு வந்துவிடுவார் இணையாக!!! அவர் வலை சித்தர், வலைத்தேனீ ! பின்னே எல்லா தளங்களிலும் அவர் இல்லாமல் தளம் இருக்காது. பல தளங்களில் முதல் மனிதராக இருப்பார்! 24*365 நாட்களோ என்று வியக்க வைக்கின்றார்!

    மிக்க மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. உண்மைதான் ஏஞ்சல் பின்னூட்டங்களில் அவரின் இரு வரி பதில்களானாலும் நச்சென்று இருக்கும். :)

    நானும் நினைத்திருக்கிறேன். இரண்டுமே மெய்தான் உமேஷ்.. :)

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஆசியா நமக்கு ஊக்கம் கிடைப்பதால்தான் தொடர்ந்து எழுதுறோம் என்று தோணுது. :)

    மிக அருமையாக தனபாலன் சகோவின் பெயருக்கு விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் யாதவன் நம்பி சகோ :) கருத்துக்கு நன்றி. தமிழ்மணத்தில் இணைப்பதோடு சரி நான் ஓட்டு எல்லாம் போடுவதில்லை. :) அதனால் எனக்கு ஓட்டுப் பெட்டி இல்லை என்று நினைக்கிறேன். ஆமா ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் இவர்தான் தல. :)

    அஹா மிக அருமையாகச் சொல்லியுள்ளமைக்கு நன்றி சரஸ் மேம் :)

    ஐயனின் ஏகலைவன், வலைச் சித்தர், வலைத்தேனீ என்று மிக அருமையா சொன்னமை சிறப்பு துளசிதரன் சகோ. ஆமா 24 இண்டு 365 நாளோ என்று வியக்கத்தான் வைக்கிறார். :)



    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  22. பின்னூட்டப் புயல்,வலையுலக மந்திரவாதி எங்கள் டிடி

    பதிலளிநீக்கு
  23. dd அவர்களுக்கு நிகர் அவரேதான். முற்றிலும் உண்மை. எனது வலைப்பூவில் கூட முதன்முதலில் பின்னூட்டமிட்டது அவர்தான். புதிய பதிவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர்.

    அருமையான பதிவு.

    இவண்
    மரிய ரீகன் ஜோன்ஸ்
    www.tamilpriyan.com

    பதிலளிநீக்கு
  24. திண்டுக்கல் என்றாலே பூட்டு நினைவுக்கு வருவதுண்டு.

    இவர் மனம், சாவியைத் தொலைத்துவிட்ட, எப்போதும் ஓர் திறந்த நிலையில் உள்ள பூட்டு.

    பின்னூட்டப் புயல்,வலையுலக மந்திரவாதி எங்கள் டிடி

    கூகுள் முதலாளி வலையுலகத்தை மூடும் வரையிலும் தனபாலன் புகழ் இங்கே யாரோ ஒருவர் உலகில் ஏதோவொரு இடத்தில் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அவர் காலம் கடந்து நிற்பவர்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)