சனி, 25 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட். ஆங்கிலம் அந்நிய மொழியல்ல என்கிறார் தில்லை அகத்து துளசிதரன்.

வலைத்தள சகோதரரான துளசிதரனின் தில்லை அகத்துக்கு அவ்வப்போது விசிட் செய்வதுண்டு. வெங்கட் சகோ, தனபாலன் சகோ, யாதவன் நம்பி - புதுவை வேலு சகோ, யாழ்பாவண்ணன் சகோ, கில்லர்ஜி சகோ, ரூபன் சகோ போல துளசிதரன் சகோவும் என்னுடைய அநேக இடுகைகளை அவ்வப்போது படித்தும் சில சமயம் ஒரு வார இடுகைகளை ஒரே நேரத்தில் படித்தும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்கள்.

அவர் மட்டுமல்ல அவரது தோழி கீதா அவர்களும் தில்லை அகத்தில் எழுதி வருகிறார்கள். உரையாடல் பாணியில் அமைந்த இடுகைகளும் நிறைய இன்ஃபர்மேஷன் கொண்ட இடுகைகளும் எனக்குப் பிடித்தவை. எதை எழுதினாலும்  திருத்தமாக கவனமாக அழகாக எழுதி வெளியிடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. (தோழர் & தோழி இருவர் எழுதும் வலைத்தளம். ) இதிலும் ஸ்பெஷல் என்னவென்றால் கேரளாவில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரியும் துளசிதரன் சகோ ஃபோனில் சொல்லச் சொல்லக் குறிப்பெடுத்து பல இடுகைகளை சென்னையில் வசிக்கும் கீதா அவர்கள் செம்மையுறப் பதிவேற்றி உள்ளார்கள். ( ஃபோனில் சொல்லி அதைக் கேட்டுப் பதிவு செய்து இடுகையை எழுதும் வித்யாசமான நண்பர்கள்.!!! அருமை. இன்னும் வியக்க வைக்கிறார்கள். !!! )

தமிழ்தான் எனக்குப் பிடித்த மொழி & தாய்மொழி என்பதை விட சரளமாகப் படிக்கவும் பேசவும் எழுதவும் வரும் மொழி. ஆங்கிலம் அடுத்தபடிதான். நட்பு வட்டத்தில் மற்ற மொழிக்காரர்களுடன் உரையாடும்போதுதான் ஆங்கிலத்தில் எழுதுவது. மேலும் பெரிய பெரிய ஆங்கில கில்லிகளைக் கண்டால் கிலி வேறு. :) இது பள்ளியில் பாதி வரை தமிழ் மீடியத்திலும் அதன் பின் ஆங்கில மீடியத்துக்கும் மாறின அநேக பேருக்கு இருக்கும் என நினைக்கிறேன். ( என் கணிப்புதான் ) .

என்னதான் நாம் முகநூலில் தமிழ் ஆங்கிலம் தங்கிலீஷ் பயன்படுத்தினாலும் ஆங்கிலத்தில் உரையாடும்போது கொஞ்சம் பட்லர் இங்கிலீஷ் பாணியில் அமைந்துவிடுவதும் உண்டு. மிகப் பெரும்பான்மையோர் வெளுத்துக் கட்டினாலும் இந்தத் தாழ்வு மனப்பான்மையாலேயே அவர்களுடன் கூடிக் களிக்க அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களால் இயல்வதில்லை. ஆங்கிலப் பாடல்கள் ( ஆல்பம் ) கேட்பது, திரைப்படம் பார்ப்பது,புத்தகங்கள் படிப்பது என்பது என்று இருக்கும் ஒருவர் உரையாடும்போது அவ்வளவு சரளமாக இல்லாததை உணரலாம். ( நம் உச்சரிப்பை ( தமிங்கிலம் என்று ) டப் டுப் என்று உச்சரித்து ஹிந்திக்காரர்கள் கிண்டல் செய்ய, அவர்களின் ஆங்கில உச்சரிப்பை ஹிந்தி + அங்க்ரேசி = ஹிங்க்ரேசி என நானும் கிண்டலடித்திருக்கிறேன் .) ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள். ஆனால் அவர்களின் மொழி ஆட்சி செய்கிறது என்ற ஆதங்கம் தமிழர்களுக்கு உண்டு.

எனவே ஆங்கில ஆசிரியரான துளசிதரன் சகோ அவர்களிடம் அதுபற்றி ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் இங்கே.

///அந்நிய மொழியான ஆங்கிலம் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது எப்படி ? ///

ஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய அவசியமில்லை
     

    2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தாய் மொழியான தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து மகிழும் நமக்கு, வெறும் 700 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த சாசரால் எழுதப்பட்ட காண்டர்பரி டேல்சிலிரிந்து வளரத் தொடங்கிய ஆங்கிலம், இன்றியமையாத ஒரு மொழியாக மாறியிருப்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  தமிழகம் உட்பட இந்தியா மட்டுமல்ல, கடந்த நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலிருந்த சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், இப்போது ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. 

ஆனால், 16 ஆம் நுற்றாண்டில், ஷேக்ஸ்பியரின் கால கட்டத்தில் வாழ்ந்த ஃப்ரான்சிஸ் பேகன் போன்ற மேதைகள் ஆங்கில மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்காது என்ற நம்பிக்கையில், அவர்களது படைப்புகளில் பெரும் பகுதியை க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில்தான் எழுதியிருக்கிறார்கள்.  இத்தகைய சூழலில் வளர்ந்த ஆங்கில மொழிதான் இன்று நூலக மொழி எனும் பதவியிலிருந்து, கணினி மொழி, இணைய மொழி எனும் உயர் பதவியை எட்டிப் பிடித்து உலக மொழியாய் மாறி, உலகெங்கிலும் உள்ள மக்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு மொழியாய் மாறியிருக்கின்றது.

பழைமையான க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளுக்கும், அதிகமான மக்கள் பேசியிருந்த சீன மொழிக்கும், இனிமையான ஃப்ரென்ச் மொழிக்கும் கிடைக்கப் பெறாத பாக்கியம் எப்படி ஆங்கில மொழிக்குக் கிடைத்தது என்று கேட்டால், சந்தேகமே வேண்டாம், நமக்குக் கிடைக்கும் பதில்கள் இவைதான்.

16 ஆம் நூற்றாண்டு முதல், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, வியாபார நோக்குடன் சென்று, அவற்றை எல்லாம் தங்களது சாம்ராஜ்யத்தின் பாகமாக மாற்றி, அந்நாடுகளை ஆண்ட ஆங்கிலேயர்களும், அவர்களுக்கு இருந்த மொழிப் பற்றும், ஜெர்மன், ஃப்ரென்ச்சு, டானிஷ், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் கலவையான ஆங்கில மொழி எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைத் தன்னுள் உட் கொண்டு வளரத் தயாரானதும் அதற்கானக் காரணங்களே.  அத்துடன் 18, 19 ஆம் நூற்றாண்டுகளிலும் அதன் முன்பும், உலகில், முக்கியமாக ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும், வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்வுகளும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், போன்ற மேதைகளால் நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அரிய நூல்களும் ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அச்சடிக்கப்பட்டு, புத்தகவடிவில் உலகெங்கும் உலா வரத் தொடங்கியதும், உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு அவற்றை எல்லாம் அறிய, ஆங்கில மொழி இன்றியமையாத ஒன்று என்பதை உணரச் செய்ததும் ஒரு காரணமே.

நம் நாட்டிலும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட அரிய நூல்களுக்குச் சமமான நூல்கள், வட மொழியிலும், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு மொழிகளில் இருக்கத்தான் செய்தன.  ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த அவை எல்லாம் சமஸ்க்ருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லோரும் கற்கவோ, எல்லோராலும் கற்பிக்கப்படவோ அனுமதிக்கப்படாமல் பாழாய்ப் போனது நம் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.  அப்படித் தனி உடைமை ஆக்கப்பட்ட சமஸ்க்ருத மொழி எல்லோராலும், பேசப்படாத, வாசிக்கப்படாத காரணத்தால் அழிந்த போது, எல்லோராலும் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட ஆங்கில மொழி உலக மொழியாக வளர்ந்து விட்டது.  சமஸ்க்ருதம் மட்டுமல்ல. அது போல மக்கள் பேசாததாலும், எழுதாததாலும், அழிந்த மொழிகள் தான் ஈப்ருவும், லத்தீனும்.

20க்கும் மேலான மொழிகள் பேசப்படும் இந்தியாவில், இந்தி தேசிய மொழியாக அங்கீகாரம் பெற்ற போது, அது திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களுக்குக் கற்கவும், பேசவும் எழுதவும் சிரமமான ஒன்றானது.  எனவே, ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற நாம் ஆங்கிலத்திற்கு விடை சொல்லி அனுப்ப முடியவில்லை. ஆங்கிலம் நம்முடனேயே தங்கி விட்டது. தென்னிந்தியாவிலிருந்து, வட இந்தியா செல்லுபவர்கள் ஆங்கில மொழியின் உதவியோடுதான் தங்களது கருத்துகளை அங்குள்ளவர்களிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நிலை நம் நாட்டில் உருவானது.  இந்தியப் பல்கலைகழகங்களில் ஆங்கில மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படுவதால் இங்கு கற்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கும் சென்று உயர் கல்வி பெறவும், வேலை வாய்ப்புத் தேடவும் முடிகின்றது.  இருப்பினும், 20 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலத்தில், ஒவ்வொரு மொழி பேசுவோரது மொழி ஆதிக்கம், அவர்கள் பேசும் ஆங்கிலத்தில் கலந்து விடுவதைத் தடுக்க, ஏனோ இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.  அல்லது எடுத்த முயற்சிகள் வெற்றி காணவில்லை என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.  இனிமேலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

உலகமயமாக்கலின் பாகமாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானதால், உலக மொழியான ஆங்கிலத்தை முறையாகக் கற்று, பேசவும், எழுதவும் வேண்டும்.  அதற்கு முதற்படியாக, ஆங்கில மொழியை முறையாகத் தொடக்கப்பள்ளி முதல் கற்பிக்க வேண்டும்.  பிற மொழி கற்பதால், தாய் மொழி கற்பதில் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் வீண் வாதமே. இரண்டோ, மூன்றொ மொழிகளில் குழந்தைகள் சிரமமின்றி பேச முடியும்.  உதாரணமாக, பீஹாரில், போத்கயாவில் பீடா விற்கும் லகன் எனும் 5 வயதுச் சிறுவன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலமும், கொரிய மொழியும், ஜப்பான் மொழியும் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறானாம். 6 வயது மோனு எனும் சிறுவன் ஆங்கிலம், ஜப்பான் மொழி, திபெத் மொழி மற்றும் தாய்லாந்து மொழிகளில் பேசி அவ்வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றானாம்.(!!) (பள்ளி செல்ல வேண்டிய இக் குழந்தைகள் இப்படிப் பணம் சம்பாதிக்க வைப்பது குற்றம்.  விரைவில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று நம்புவோம்.)  இதிலிருந்து 5 அல்லது 6 வயது குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய விதத்தில் மொழிகளைக் கற்பித்தால், கற்கும் சூழல்களை ஏற்படுத்தினால், அவர்கள் கற்பார்கள் என்பது உறுதியாகின்றது.

புதிய ஒரு மொழி கற்பவர்கள் முதலில் அம் மொழியிலுள்ள, நம் மொழியில் இல்லாத ஒலிகளை எழுப்ப பழகிக் கொள்ள வேண்டும்.  தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் உள்ளன. 30 வித்தியாசமான ஒலிகளை  நுரையீரலிலிருந்து நாம் வெளியேற்றும் காற்றை நாக்கு, மூக்கு, பல் மற்றும் உதடுகளின் உதவியால் வித்தியாசமான ஒலிகளாக மாற்றி தமிழ் மொழியை பேசிக் கொண்டிருக்கின்றோம்.  இதில் 12 உயிர் எழுத்து ஒலிகளை எழுப்பும் போது காற்று வாயினுள் எங்கும் தடைபடாமல் சுதந்திரமாக வெளியேறுகிறது.  ஆனால், ஆங்கில மொழியில் இதற்குச் சமமான A E I O U  எனும் எழுத்துக்களிலிருந்து உருவாகும் 12 வவ்வல் ஒலிகளும், 8 Diphthong  (2 வவ்வல் ஒலிகள்  சேர்த்துச் சொல்வது) இதில் நாம் பேசாத ஆனால் நம்மால் முயன்றால் எளிதாக எழுப்ப முடிகின்ற 8 ஒலிகளை நாம் முதலில் உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ் ஒலிகள் அடங்கிய வார்த்தைகளைப் பல முறை உச்சரித்து, அவற்றை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

/ə/ - about நடு நாக்கை உபயோகித்து வாயை அதிகம் திறக்காமல் சொல்லப்படும் “அ” சப்தம்.
ə:- Turn - ə அந்த சப்தத்தைக் கொஞ்சம் நீட்டிச் சொல்லும் சப்தம்.
/ɪə/- இயா – Here,  //- எய் – Take, // - எய – there, /ʊə/ - உஅ – Your, /əʊ/ - ஒவ் – No (நோவ்), /ɔɪ/ - Boy ஆ வையும் ஓ வையும் சேர்த்து உச்சரிக்கும் போது அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலி

     அதே போல் க்ச்ட்த்ப்ற் எனும் வல்லினத்திற்குச் சமமான Plosives ங்ஞ்ண்ந்ம்ன் எனும் மெல்லினத்திற்குச் சமமான Nasals, ய்ர்ல்வ்ழ்ள், எனும் இடையினத்திற்குச் சமமான Fricatives  ஆங்கிலத்தில் உண்டு என்றாலும், தமிழில் உள்ள ல, ள, ழ எனும் மூன்று இடையினத்திற்கு ஒரே ஒரு /l/ ல எனும் lateral சப்தம் மட்டும் தான் ஆங்கிலத்தில் இருக்கிறது.  அது வித்தியாசமான இரு விதத்தில் Dark “l” ஆகவும், கிளியர் “l” ஆகவும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால், “வ்” எனும் இடையினத்திற்குப் பதிலாக, இரண்டு வித்தியாசமான ஒலிகள் ஆங்கிலத்தில் உள்ளன.  /v/- Victory எனும் போது உச்சரிக்கப்படும் /v/ -வ” – கீழ் உதட்டை மேல் பல்லில் தொட்டு, காற்றைப் புறம் தள்ளி உச்சரிக்க வேண்டும்.  அதே சமயம், /w/- வ – ஒலியை உதடுகளை பல்லில் தட்டாமல், வட்டவடிவாக்கி காற்றைப் புறம் தள்ளி உச்சரிக்க வேண்டும்.

    18 மெய்யெழுத்துக்களுக்குப் பதிலாக 24 Consonant sounds ஆங்கிலத்தில் உள்ளன.  தமிழ் மொழியில் இல்லாத ஒலிகள் /w/- தவிர, /g/ - Gun,  /θ/ - Thin  “த”  எனும் ஒலியை நுனி நாக்கைப் பற்களின் பின் புறம் தொட்டுக் காற்றை வெளியேற்றி உச்சரிக்க வேண்டும். அதே சமயம் நாம் உச்சரிக்கும் “த” ஒலி நுனி நாக்கை பற்களின் மேல் அண்ணத்தில் தொடுவதால் உண்டாகிறது.  ð – This“த” ஒலியை கொஞ்சம் அதிகமான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.

/s/ -  “ஸ்” Sin, /z/ - Zoo, ஸ்” சத்தத்தைக் கொஞ்சம் நீட்டி அதிகமான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.  /ʃ/ - ஷ – Ship, /ʒ/ - Measure - ʃ சத்தத்தை நாவின் பின் புறத்தை உயர்த்திக் கொஞ்சம் அதிகமான சத்தத்தில்தான் உச்சரிக்க வேண்டும்.  // - ஜ – Judge.








      இப்படித் தமிழில் இல்லாத ஒலிகளை உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  30 ஒலிகளில் மட்டும் பேசிப் பழகும் நாம், ஆங்கிலத்தில் உள்ள 44 ஒலிகளையும் உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  ஆரம்பப் பள்ளிகளில் 44 ஓசைகள் அடங்கிய ஆங்கில வார்த்தைகளை மாணவர்கள் உச்சரிக்கத் தேவையான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.  ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளித்து வெற்றி கண்ட பின் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நல்லது.

     ஆங்கில மொழிக்கு 44 வித்தியாசமான ஒலிகளை, வித்தியாசமாக உச்சரிப்பது எவ்வளவு இன்றியமையாததோ, அது போல் தான் வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஆங்காங்கே, “சிலபிள்”களில் அழுத்தம் (Stress) கொடுப்பதும்.  உயிரெழுத்தை (Vowels and Diphthongs)  மையமாகக் கொண்டு உருவாகும் ஒலிகளின் கூட்டம்தான் சிலபிள் என்று சொல்லப்படுகிறது.  உதாரணமாக “Takeஎன்பது ஒரு சிலபிள் வார்த்தை.  அதே சமயம் Taking” என்பது “Take – ing” எனும் 2 சிலபிள் வார்த்தை.

ஆங்கிலத்தில் “Bio” எனும் வார்த்தையை உச்சரிக்கும் போது “Bio” என்று முதலில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.  அதே சமயம், அது Biology” என்றாகும் போது Bio விலுள்ள அழுத்தம் அடுத்த சிலபிள் ஆன Ology க்குத் தாவுகிறது.  மீண்டும் இவ்வார்த்தையை Cal” சேர்த்து விரிவாக்கி Biological” ஆகும் போது ‘Ology  யில் இருந்த அழுத்தம் logical க்குத் தாவி Bio’logical ஆகிறது.(‘பயோ, ப’யோலஜி, ப’லாஜிக்கல்) இப்படி அழுத்தமும் உச்சரிப்பைப் (Pronunciation போலவே மிகவும் முக்கியமான ஒன்று. இதற்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  அப்படி ஆங்கிலத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய சிலபிள் எது என்று அறிந்து பேசிப் பழக வேண்டும்.  கொடுக்கப்படும் பயிற்சிகளும் அதற்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும்.

     5 லட்சத்துக்கும் மேலான வார்த்தைகள் உள்ள ஆங்கில மொழியைச் சுலபமாக, எளிதாக நம் எண்ணங்களை வெளிப்படுத்த, நாம் அன்றாடம் உபயோகிக்கும் 1000 அல்லது 1500 வார்த்தைகள் போதும்.  அவற்றை உபயோகித்து, வாக்கியங்கள், வினாக்கள் போன்றவற்றை உருவாக்கத் தேவையான பயிற்சிகளைத் தேவையின் அடிப்படையில், அதாவது வீட்டில் சாதாரணமாக உபயோகிக்கும் வாக்கியங்கள், வினாக்கள், அலுவலகத்தில், பள்ளியில், பேருந்து நிலையத்தில், வங்கியில் உபயோகிக்கத் தேவையான வாக்கியங்கள், வினாக்கள் என்று பிரிவு படுத்திப் பயிற்சி அளிக்க வேண்டும்.  இயற்பியல், வேதியியல், உயிரியல் இவற்றிற்கு செய்முறை வகுப்புகள் என்பது போல் ஆங்கிலத்திற்குக் குறைந்தது 20% வகுப்புகள் “Communicative Englishக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதற்குத் தனியாக தேர்வும், மதிப்பெண்களும் வேண்டும்.

     இப்படிக் கொஞ்சம் சிரமப்பட்டு மாணவர்களின் மொழி அறிவை அறிந்து தேவையெனில் ஆங்கில அடிப்படை அறிவு நல்கி, அவர்களுக்குத் தேவையான, அவர்களால் எளிதாகப் பயிற்சி செய்யக் கூடிய விதத்தில் பயிற்சி அளித்து அவர்களது ஆங்கில மொழி பேசும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.  இதுவரை நாம் பின்பற்றிய கல்வி முறை அவர்களது ஆங்கில மொழியாற்றலை வளர்க்கவிலை எனில் அது மாணவர்களின் குறையே அல்ல. அது அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின், அவ்வாசிரியர்கள் எதை எப்படிக் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் மொழி வல்லுனர்கள் மற்றும் கல்வி இலாக்காவின் குறையேதான்.  அக்குறையைப் போக்கத் தேவையான வழிகளை இனியேனும் ஆராய்ந்து கண்டறிந்து செயல்படுத்தி, மாணவர்களின் ஆங்கில மொழியாற்றலைச் செம்மைப்படுத்த வேண்டும்.

டிஸ்கி :- ஆஹா அருமை சகோ. படித்துப் பிரமித்துவிட்டேன். !!! என் கல்லூரிப் பருவத்தில் மூன்று நாட்கள் ப்ரிஜ்பாசி என்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆனால் எல்லாமே ஒரு பரிட்சை மாதிரி அவசரம்தான். ரொம்ப ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை. அதுவும் ஒரு பரிட்சை. அவ்வளவே.

கல்லூரி முடிந்ததும் வீட்டில் இருந்த 6 மாத காலத்தில் ( திருமணத்துக்கு முன் ) வீட்டுக்கு வந்து ஹிந்தி ட்யூஷன் எடுத்த கே என் சார் அடிப்படை இலக்கணத்தை அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லிக் கொடுத்தார். அதனால்தான் நான் ராக்ஷ்ட்ரபாஷாவில் முதல் வகுப்பிலும் , அதன் பின் பத்து வருடங்கள் கழித்து ப்ரவேசிகாவில் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபாவில் ஸ்டேட் தேர்ட் ராங்கும் நெய்வேலி ரீஜனில் முதலாவதாகவும் வந்து கேஷ் அவார்டு வாங்கினேன்.

உங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தால் மீண்டும் சின்னப் பிள்ளையாகி ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் ஆவல் மேலிட்டுவிட்டது. சிலபிள் பிரித்து உச்சரிக்கும் ஒலிக்குறிப்பளித்து அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறீர்கள். தமிழ்ப் பள்ளிகளில் இருந்து ஆங்கிலப் பள்ளிக்கு மாறும் பிள்ளைகளுக்கு உங்களைப் போன்று முறையாக ஆங்கிலம் கற்பித்தால் அவர்களும் வெளுத்து வாங்குவார்கள். அதை வெறும் பாடமாக சொல்லிச் செல்வதிலேயே புரியாமல் மிரட்சியோடு படித்து ( செகண்ட் பேப்பரில் சொதப்பியோர் ஏராளம் ) ஏதோ பாஸ் செய்கிறார்கள். நீங்கள் கூறியபடி கம்யூனிகேடிவ் இங்க்லீஷ் பயிற்சி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்படவேண்டும். அதற்கு முன் நீங்கள் கூறியபடி ஆசிரியர்களுக்கான பயிற்சியும் அவசியம்.

ரொம்பநாளாக எனக்குள்ளே தோன்றிய எண்ணங்கள் இவை.நடப்பு உலகில் மொழி, வியாபாரம், உத்யோகம், கம்யூனிகேஷன் ஆகியவற்றை முதலில் கையகப்படுத்திய மொழி என்பதாலேயே ஆங்கில ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது என ஆங்கில ஆதிக்கம் பற்றி மிக அருமையாக விளக்கிச் சொன்னமைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தகுந்த விளக்கங்களோடு அருமையாக அதை டைப் செய்து அனுப்பிய தோழி கீதா அவர்களுக்கும் பாராட்டுகள். வாழ்க வளமுடன் :) 

டிஸ்கி:- கீதா அவர்கள் துளசிதரன் அவர்களின் தோழி என்பதை சரிவர கவனிக்காமல் இந்த இடுகையைப் பதிவு செய்திருந்தேன். தற்போது திருத்தம் கொடுத்துள்ளேன். விளக்கிய அனைவருக்கும் நன்றி.  


31 கருத்துகள்:

  1. நான் மதிக்கக்கூடிய பதிவர்களில் உன்னதமான முதன்மையான இடத்தில் இருப்பவர்கள் இந்த தம்பதியினர். அறிவுரை சொல்வது எளிது. ஆனால் இவர்கள் அப்படியே வாழ்வது தான் நான் பார்த்துக் கொண்டிருக்கும் கண்கூடான உண்மை. இருவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  2. உன்னிப்பாகப் படித்துப் பதிவு எழுதும் நீங்கள் துளசிதரன் மற்றும் கீதா அவர்களின் உறவு முறையில் தவறு செய்கிறீர்கள் என்றே தெரிகிறது. நானும் தில்லையகத்து க்ரோனிகிளஸ் பதிவுகளைத் தொடருபவந்தான். வலைப்பதிவாளார் ஒற்றுமை ஓங்குக,

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி சகோதரி! தங்கள் டிஸ்கி ஆஹா! தாங்களும் பிரமிக்க வைக்கின்றீர்கள்! அதுவும் ஹிந்தியில்!!! தங்களது பன்முகத்திறமைகள் பளிச்! பிரமிப்பாக இருக்கின்றது!

    மிக்க நன்றி சகோதரி! மீண்டும்...

    பதிலளிநீக்கு
  4. துளசிஜியும் கீதா சகோவும் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன்.

    ஆங்கிலம் பற்றிய உங்கள் கருத்துதான் எனக்கும்!

    நண்பர் துளசிதரன் ஒரு ஆங்கில அறிமுக வகுப்பே எடுத்து விட்டார். பாராட்டுகள். அவரின் குறும்பட முகத்தைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.

    :)))))))

    பதிலளிநீக்கு
  5. //உலகமயமாக்கலின் பாகமாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானதால், உலக மொழியான ஆங்கிலத்தை முறையாகக் கற்று, பேசவும், எழுதவும் வேண்டும். அதற்கு முதற்படியாக, ஆங்கில மொழியை முறையாகத் தொடக்கப்பள்ளி முதல் கற்பிக்க வேண்டும். பிற மொழி கற்பதால், தாய் மொழி கற்பதில் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் வீண் வாதமே. இரண்டோ, மூன்றொ மொழிகளில் குழந்தைகள் சிரமமின்றி பேச முடியும். உதாரணமாக, பீஹாரில், போத்கயாவில் பீடா விற்கும் லகன் எனும் 5 வயதுச் சிறுவன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலமும், கொரிய மொழியும், ஜப்பான் மொழியும் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறானாம். 6 வயது மோனு எனும் சிறுவன் ஆங்கிலம், ஜப்பான் மொழி, திபெத் மொழி மற்றும் தாய்லாந்து மொழிகளில் பேசி அவ்வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றானாம்.(!!) (பள்ளி செல்ல வேண்டிய இக் குழந்தைகள் இப்படிப் பணம் சம்பாதிக்க வைப்பது குற்றம். விரைவில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று நம்புவோம்.) இதிலிருந்து 5 அல்லது 6 வயது குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய விதத்தில் மொழிகளைக் கற்பித்தால், கற்கும் சூழல்களை ஏற்படுத்தினால், அவர்கள் கற்பார்கள் என்பது உறுதியாகின்றது.//

    மிக அருமையாக சொல்லியிருக்கிரார்கள் துளசிதரன்! வாழ்த்துக்கள்! அவர்கள் கருத்துத்தான் எனக்கும்! இங்கே என்னைப்போல வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கட்டுரை. ஆச்சரியமாகவும் இருக்கிறது . நன்றி தேனா .திரூ துளசிதரன் அவர்களுக்கு மிக நன்றி .

    பதிலளிநீக்கு
  7. அருமையான வகுப்பு! நல்ல தெளிவான விளக்கம் சேமித்து வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.இவரிடம் படிக்கும் மாணவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. தேனம்மை! ஹிந்தியில் வெளுத்து வாங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். ப்ரவேஷிகாவுக்கு அப்புறமா விஷாரத் இரண்டு தேர்வு, ப்ரவீன் இரண்டு தேர்வும் எழுதிட்டீங்க தானே?

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! எங்களை ஊக்குவிப்பதே நீங்கள் எல்லோரும்தானே! எங்களைக் குறித்து இத்தனை நல்ல எண்ணங்களா!? மிகுந்த மகிழ்வாகவும் அதேசமயம் நாங்கள் எங்களை இன்னும் மேம்படுத்தி, பதப்படுத்திக் கொள்ளும் பொறுப்பும் அதிகரிக்கின்றது என்பதையும் உணர்கின்றோம். நன்றி நண்பர்களே!

    நண்பர்கள் ஜோதிஜி, ஸ்ரீராம் அவர்களுக்கு நாங்கள் இருவரும் நண்பர்களே.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான அற்புதமான அலசலுடன் கூடிய பேட்டி.

    //உங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தால் மீண்டும் சின்னப் பிள்ளையாகி ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் ஆவல் மேலிட்டுவிட்டது. சிலபிள் பிரித்து உச்சரிக்கும் ஒலிக்குறிப்பளித்து அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறீர்கள். //

    நான் மனதில் நினைத்ததை தாங்கள் அப்படியே எழுத்தில் சொல்லிவிட்டீர்கள். :)

    ஆங்கில ஆசிரிய நண்பர் திரு. துளசிதரன் சாருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பேட்டி எடுத்து பகிர்வு செய்த தங்களுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. மிக்க நன்றி வைகோ சார்! தங்களது பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்!

    பதிலளிநீக்கு
  12. ஜோதிஜி அவர்கள் இருவரும் நண்பர்கள். இணைந்து ஒரு வலைத்தளத்தில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். நானும் தவறாகக் குறிப்பிட்டு விட்டேன். என் பிழை பொறுத்தமைக்கு துளசி சகோ, தோழி கீதா ஆகியோருக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. ஆம் பாலா சார். அவசரக் குடுக்கைத்தனமா பதிவில் குறிப்பிட்டு விட்டேன். சரிவர கவனிக்காதது ஒரு காரணம். எல்லார் வீட்டிலும் குடும்ப அங்கத்தினரே பதிவு எழுதுவதால் அவர் மனைவியாயிருக்கும் என்பது என் தவறாக கணிப்பாகி விட்டது. மன்னியுங்கள் துளசி & கீதா .. :( :( :(

    பதிலளிநீக்கு
  14. நன்றி துளசி & கீதா தங்கள் பெருந்தன்மைக்கு..

    பதிலளிநீக்கு
  15. ஆம் ஸ்ரீராம் அவர்கள் நண்பர்கள்தான். நாந்தான் பதிவில் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன். அவசரப் பட்டு எழுதிவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. அனுப்பி செக் செய்து கொண்டு வெளியிட்டு இருக்கலாம். ஹ்ம்ம்.

    ஆம் அவரின் குறும்படம் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டேன். என் சுய ப்ரலாபமே அதிகமாகி விட்டது. :)

    பதிலளிநீக்கு
  16. அருமையான கருத்துக்கு நன்றி மனோ மேடம். :)

    கருத்துக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

    உண்மைதான் கீதா மேம் இவரிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். :) நானும் இந்த போஸ்ட் வந்ததில் இருந்து பலமுறை மெயிலில் படித்திருப்பேன். அவ்வளவு சுவாரசியம் :) !

    பிள்ளைகள் 10 வது ப்ளஸ்டூவுக்கு வந்தார்கள் அதோடு ஏறக்கட்டியாச்சு மேடம். அதிலுமில்லாமல் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ட்ரான்ஸ்ஃபரில் ஊர் விட்டு ஊர் மாறுவதால் ஹிந்தி ஆசிரியர் தேட நேரமில்லை. ( எனக்கு நெய்வேலியில் கற்பித்த ஆசிரியை சும்மா பேருக்குத்தான். துணி துவைத்துக் காயப்ப்போட்டுக் கொண்டே இது இதுதான்பா அது அதுதான்பா என்று பொத்தாம் பொதுவாக ஒன்றுமே சொல்லாமல் அரைகுறை கூட இல்லை கால் குறையாக விளக்கம் கொடுப்பார். நான் விளக்கம் கேட்பதே வேப்பெண்ணையாகக் கசக்கும் அவருக்கு. என் கூடப் படித்த பிள்ளைகள் இன்னிக்கு லீவு என்றால் ஐ ஜாலி என ஓடி விடுவார்கள். அந்த ரகம். என்னைப் பார்த்துக் காப்பி அடித்துத்தான் எல்லாரும் நான் டீடேயில் ஈ ஆர்சி கேள்வி பதில் எல்லாம் எழுதிக்குவாங்க்.. ஹாஹா.. நானாகத்தான் படித்தேன். -- ஏனெனில் நான் நன்கு படித்ததைப் பார்த்து தேனம்மை இப்படித்தான் பலர் நல்லா படிப்பாங்க ஆனா பரி்க்ஷையில் ஃபெயில் ஆகிடுவாங்க என்று சொல்லி பயமுறுத்தி இருந்தார். இந்த வயசில் ஃபெயிலானா க்வார்டர்ஸில் இருக்கும் எல்லாருக்கும் முன்னாடி தலைக்குனிவு ஏற்படுமே என்ற எண்ணத்தில் கிடைக்காத புக் எல்லாம் தேடிப்பிடிச்சு விலைக்கு வாங்கி உக்கார்ந்து படி படின்னு படிச்சேனாக்கும். :) :) :) அதுதான் நல்ல ரிசல்ட்.


    பதிலளிநீக்கு
  17. தன்னிலை விளக்கம் அளித்தமைக்கு நன்றி துளசி சகோ.. தெரிந்துகொள்ளாமல் எழுதி ஒரு சின்ன சலசலப்பை உருவாக்கி விட்டேன். பிழை என்னுடையதுதான். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் அன்பான அழகான வாழ்த்துக்கு நன்றி கோபால் சார் :)

    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் துளசி அண்ணாவுக்கும் சகோதரி கீதாவுக்கும் .பேட்டி எடுத்த தேனக்காவுக்கும்
    .இங்கே தான் அவர்களை முதலில் சந்தித்தேன்
    கீதாக்கா பல வருஷம் முன்பே quilling செய்வாராம் ..அதை பின்னூட்டதில் படிச்சி ஓடிபோய் தென்றல் கீதாக்காவை FB யில் நட்பாக்கி ஹா ஹா :) மினி பல்ப் வாங்கி குழம்பினதையும் சொல்லியே ஆகணும் ..

    துளசி அண்ணாவின் ஒரு பதிவு (சாக்ரடிஸ் பற்றி என்று நினைவு )அதை படித்து பிறகு நினைச்சேன் UG படிக்கும்போது ஆங்கில வகுப்புக்கு முக்கியம் அளிக்காம போனேனே என்று :(அருமையா எழுதி இருந்தார் ..
    அனைவர் பதிவிலும் பின்னூட்டத்தில் இருவரின் பங்களிப்பு அருமையா இருக்கும் .பொறுமையா பதில் அளிப்பதில் இருவரும் கிரேட் ...அதைவிட ஆச்சர்யமான விஷயம் ,,,நான் ஒன்னு நினைச்சிருப்பேன் டாஷ்போர்ட் போனா அவங்க அதே விஷயம் பற்றி மிக அழகா எழுதியிருப்பாங்க ! ஒரே அலைவரிசை ..எங்களுக்கு ..முக்கியமா PET செல்லங்கள் விஷயத்தில்

    பதிலளிநீக்கு
  21. அருமையான பதிவு,
    தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் பெயருக்குத்தான் சொல்லித்தரப்படுகிறது. அதாவது 35 மதிப்பெண்கள் எடுத்து பாஸாகும் அளவிற்கு, வருங்கலத்தில் அத்தகைய ஆங்கிலம் போதாது என்பதை காலம் காட்டிக்கொண்டிருக்கிறது.

    ஆங்கிலம் குறித்து அருமையான பதிவு தந்த துளசிதரன் சாருக்கும் அதனை பதிவிட்ட தேனம்மை மேடத்துக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  22. ராட்சசபாஷாவில் முதல் வகுப்பு எடுத்தீங்களா? ஏங்க?

    பதிலளிநீக்கு
  23. ஆங்கிலத்தைப் பற்றியதோர் விரிவான விளக்கம்.
    கேள்வி கேட்டவருக்கும் பதில் இட்ட(இரு)வருக்கும்
    நன்றிகள்!

    பதிலளிநீக்கு

  24. //////துளசி அண்ணாவின் ஒரு பதிவு (சாக்ரடிஸ் பற்றி என்று நினைவு )அதை படித்து பிறகு/////

    சாக்ரட்டிஸ் அல்ல ...லியோ டோல்ஸ்டாய் பற்றிய ஒரு பகிர்வு

    பதிலளிநீக்கு
  25. ஆங்கில மொழி, தமிழ்-ஆங்கில மொழிச் சிதறல் எனப் பல அருமையான கருத்துகளைப் பகிர்ந்த ஆங்கில ஆசிரியரான துளசிதரன் அவர்களுக்கு நன்றி.
    அவரை அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு எனது பாராட்டுகள்.
    தொடரட்டும் தங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  26. அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்...

    இருவரையும் நீங்கள்... முடிந்தால் அனைவரும் சந்திக்கலாம் வேலூரில்...

    தகவல் விரைவில்...

    பதிலளிநீக்கு
  27. மீண்டும் நன்றி சகோதர சகோதரிகளே உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்தியதற்கும், அளித்த ஊக்கத்திற்கும். எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    சகோதரி தேனம்மை அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி! உங்களைப் போன்ற ஒரு ஒப்பற்ற நல்ல மனமும், நல்ல திறமையும், புகழ்பெற்ற எழுத்தாளரிடம் இருந்து இப்படியான ஒரு பதிவு எங்களுக்கு மகிழ்வளிக்கின்றது. நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  28. மிக விளக்கமாக ஆங்கிலக் கல்வி ஏன் வளரவில்லை என்று அலசியிருக்கிறார் திரு துளசிதரன். பாராட்டுக்கள்.அவரை உங்கள் தளத்தில் எழுத வைத்ததற்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்.
    ஒரு Spoken English Trainer ஆக பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியதில் நான் அறிந்தவைகளை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
    முதலில் எந்த ஒரு மொழியையும் கற்க வேண்டுமென்றால் அதை கேட்கவேண்டும். நாம் நம் தாய் மொழியை இப்படித்தானே கற்கிறோம். கேட்டதை பேச வேண்டும். நம் அம்மா நம்மிடம் பேசுவதைக் கேட்டு நாமும் முதலில் அதை தப்புதப்பாகப் பேசி பிறகு கேட்டலிலேயே திருத்திக் கொள்ளுகிறோம். கேட்கும் போது நமக்கு அந்த மொழியின் வாக்கிய அமைப்புகள் மனதில் படிந்து விடுகின்றன. ஹிந்தி மொழி எழுத படிக்கத் தெரியாத பல பேர்கள் ஹிந்தி சீரியல்களைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்ளுகிறார்களே. தமிழ் நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு போகும் எல்லோரும் அந்தந்த மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வதில்லையே ஆனால் சரளமாகப் பேசுவார்கள். இதுதான் கேட்பதனால் உண்டாகும் நன்மை. எனது பணிப்பெண் பல மொழிகள் பேசுவாள். கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவள் அவள். 'நீங்கள் என்னுடன் ஆங்கிலத்தில் பேசுங்கம்மா, நான் ஆங்கிலத்திலும் பேசுவேன்' என்பாள். கேட்டுக்கேட்டே பல மொழிகளைக் கற்றவள் அவள்.
    நாம் பள்ளிகளில் என்ன செய்கிறோம். நம் குழந்தைகள் எடுத்ததுடன் ஆங்கிலத்தில்எழுத தொடங்குகிறார்கள். எழுதுவது என்பது கடைசியாக வரக் கூடிய திறமை. முதலில் கேட்டல், பேசுதல், படித்தல் (படித்தல் என்று நான் இங்கு சொல்வது எழுத்துக்களை கண்டறிதல்) பிறகு எழுதுதல் என்று படிப்படியாக ஒரு மொழியைக் கற்க வேண்டும்.ஒரு மொழியைக் கற்க சுலபமான வழி அதைக் கேட்பதுதான்.
    எனது அக்கா பேத்தி 5 வயது. 3 வயதிலிருந்தே ஆங்கிலத்தில் (மட்டுமே) பேசுவாள் இலக்கண சுத்தமாக. காரணம் அவளது ஆசிரியை ஒரு கொரியன் பெண். மிகச் சிறந்த ஆங்கிலம் பேசுகிறாள் அந்தப் பெண். அதனால் அந்த வகுப்பில் படித்த அத்தனை குழந்தைகளுமே ஆங்கிலம் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆசிரியை பேசிப்பேசி குழந்தைகள் வெகு சுலபமாக அந்த மொழியைக் கற்றுக் கொண்டு விட்டார்கள் - எழுத, படிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்னமேயே.
    திரு துளசிதரன் சொல்வதுபோல முதலில் ஆசிரியர்களை பயிற்று வைக்க வேண்டும். ஆசிரியர் தப்புத் தப்பாகப் பேசினால் குழந்தைகளும் அந்த குறை ஆங்கிலத்தையே கற்றுக் கொள்ளும்.
    ஆங்கிலம் சொல்லித் தரும்போது மாணவர்களிடையே learning, unlearning இரண்டும் நடக்க வேண்டும். அப்போதுதான் 'I can't not be able to talk' போன்ற தவறான ஆங்கிலப் பிரயோகங்கள் வராமலிருக்கும்.

    ஆரம்ப வகுப்புகளில் இந்த phonics, syllable stress ஆகியவற்றை சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.
    என்னிடம் ஆங்கிலம் பேச கற்க வரும் மாணவர்களிடம் நான் இதையெல்லாம் சொல்லித் தர முயற்சிக்க மாட்டேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் unlearning மிகவும் கடினம்.
    ரொம்பவும் நீண்டுவிட்டது. கருத்துரை. நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அழகா அருமையா சொல்லி இருக்கீங்க ஏஞ்சல். கருத்துக்கு நன்றிடா :)

    மிக்க நன்றி எஸ் பி செந்தில் சகோ

    அப்பிடியா சொல்லி இருக்கேன் அப்பாத்துரை சகோ..:)

    நன்றி முகம்மது நிஜாமுதீன் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி டிடி சகோ

    அஹா மிக்க நன்றி துளசிதரன் சகோ தன்யளானேன் :)

    மிக விரிவான கருத்துரைக்கு நன்றி ரஞ்சனி மேம் :)






    பதிலளிநீக்கு
  30. honey சகோ!!! ஹிந்தியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறீர்களே!! சூப்பர்! வாழ்த்துகள்! என் நேசத்துக்குரிய சகாஸ் பற்றி குறிப்பிடும் பதிவு, அதில் துளசி அண்ணாவின் அட்டகாசமான உச்சரிப்புப் பயிற்சி!!! மிகமிக அருமை. நன்றி அண்ணா! அண்ணாவை பேட்டி கண்டமைக்கு நன்றி சகோ!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)