வியாழன், 12 மார்ச், 2015

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.

5. கவனம் பெறப் பயிற்சி.:- 

”கொட்டப் ப்ராந்து பறந்து பறந்து கொட்டுது பார் கொட்டுது பார்.”

இருவர் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள ஒருவரின் முழங்காலின் மேல் இன்னொருவர் இரு கைகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கை கீழ்புறமாக புறங்கை மேல்புறமாக வைக்கவும்.

மற்றொருவர் தன் கண்களில் இரு கைகளையும் பைனாகுலர் லென்ஸ் போலக் குவித்து வைத்துக்கொண்டு 

“கொட்டப்பிராந்து பறந்து பறந்து கொட்டுது பார் கொட்டுது பார்” 

என்று சொல்லி தன் முழங்காலில் கை பதித்தவரின் மேல் டப் என்று எதிர்பாராத போது அடிக்க வேண்டும். இது போல மூன்று முறை. அந்த நேரத்தில் அவர் டக்கென்று கையை எடுத்தால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் அடி நிச்சயம்.

ஒவ்வொரு முறையும் அவர் அடிக்கப் போகும் சமயம் கையை எடுத்து விட்டார் என்றால் தன் தொடையிலேயே அடித்துக் கொண்டது போலாகி விடும்.( குழந்தைகளுக்குக் கண்ணில் லென்ஸ் போலக் கை வைக்கத்தெரியாததால் இதுபோல காதில் பொத்தி விளையாடச் சொல்லிக் கொடுப்பதும் உண்டு.)

6. கொல கொலயா முந்திரிக்கா 

கரண்ட் இல்லாத இரவில் நிலவொளியில் சிமிண்ட் தரையில்/ வாசலில் வட்டமாக அமர்ந்து விளையாடும் விளையாட்டு.

ஒரு துண்டு போதும். இதைக் கையில் பிடித்தபடி ஓடிவந்து 
“ கொலயா முந்திரிக்கா நரிய நரிய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி.”
ஒருவர் பின் போட்டுவிடவேண்டும். அவர் அடுத்து எழுந்து ஓடி சுற்றிச் சுற்றிப் பாடியபடி இன்னொருவர் பின் போடுவார். இப்படித் தொடரும் விளையாட்டு.

7. கிளியாந்தட்டு.

இரண்டடிக்கு இரண்டடி சதுரம் உண்டாக்கி அதில் ஒவ்வொரு முனையிலும் குதிகாலால் விட்டம் வைத்தபடி கட்டைவிரலால் வட்டம் வரையவேண்டும். அதில் நால்வர் நின்று கொண்டு இரு வேறு திசைகளில் கை கோர்த்து வட்டத் தட்டுகளில் தாண்டி மாறிக் கொள்ள வேண்டும். இவர்களை ஒருவர் சுற்றி வர வேண்டும். யாராவது வட்டத்தட்டில் நிற்க தாமதமாகிவிட்டால் காலியாக இருக்கும் தட்டை அவர் பிடித்துக் கொள்வார். தன் தட்டைத் தவறவிட்டவர்  சுற்றி ஓடி வரவேண்டும்.   (அது ஒரு சதுரம் போட்டு அதன் நாலு மூலையிலும் காலால் வட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதில் நால்வர் நிற்பார்கள். அவர்கள் ஒருவர் கையைஒருவர் கோர்த்து இழுக்க வேண்டும் .இவர்கள் நால்வரைச் சுற்றியும் ஒருவர் பிடிக்க ஓடுவார்.அடுத்த தட்டுக்கு மாறும்போது ஒருவர் இடத்தை ஓடுபவர் பிடித்துவிட்டால் விட்டவர் சுற்றி ஓடணும்மற்ற நால்வரும் கரம் மாற்றிக் கோர்த்து ஒருவர் தட்டுக்கு ஒருவர் மாறிக் கொள்வர்.)

8. அஞ்சுகல் விளையாட்டு

”சொட்டாங்கி”க்கல் விளையாட்டு என்று சொல்வதுண்டு.

இது இதில் 5 கல் இருக்கும் அதைத் தூக்கிப் போட்டு ஒவ்வொரு கல்லாக, இரண்டு கல்லாக (இன்னும் 10 வரை ஆட்டம் உண்டு). விதம் விதமாகத் தூக்கிப் போட்டுப் பிடிக்க வேண்டும். இது கண்ணுக்கும் கழுத்துக்கும் கைக்கும் பயிற்சி.  

9. தாயக்கட்டம்/ ஆடுபுலி ஆட்டம்./ பாண்டி

தாயக் கட்டம் என்றதும் ஆடுபுலி ஆட்டமும் வெட்டும்தான் நினைவு வரும். முதலில் சோகிகள் அல்லது தாயக்கட்டைகளில் தாயம் விழுந்தால்தான் அடுத்து ஆடலாம். நால்வர் விளையாடலாம். அடுத்தவர் காயினை வெட்டினால்தான் உள்ளே போகலாம். சில பாதுகாப்பான இடங்களை இண்டூ போட்டு வைத்திருப்பார்கள். அதில் இருந்தால் வெட்டிலிருந்து தப்பலாம். முடிவில் பழுத்தாச்சு என்று சொல்லி மையத்தில் எல்லாக் காயின்களையும் சேர்க்கணும். ஒருவருக்கு 6 காயின் உண்டு. 

10. பல்லாங்குழி.


கஞ்சி ஊத்துற கேம் என்றால் அது பல்லாங்குழிதான். இருவர் ஆடும் ஆட்டம். 14 குழிகள். நேர்ப்பாண்டி எதிர்ப்பாண்டி என்று உண்டு. நேர்ப்பாண்டி என்றால் காயின்களைப்போட்டுவிட்டு கடைசியில் காலியான குழியைத் தடவி அடுத்தில் உள்ள மொத்த காயின்களை எடுத்துக் கொள்ளலாம். எதிர்ப்பாண்டி என்றால் அதன் எதிரில் உள்ள குழியிலும் உள்ள காயின்களையும் எடுத்துக்கொள்ளலாம். 

யார் பக்கம் ஒரு குழியில் 4 காயின்கள் இருந்தாலும் பசு என்று சொல்லி அவரவரும்எடுத்துக்கொள்ளலாம். 

ஒருவர் தோற்கும் நிலைக்கு வர வர காலிக் கட்டங்களில் பேப்பர் அல்லது தக்கையைப் போட்டு விளையாடணும். கடைசியில் தோற்கும் விளையாட்டுக்குக் கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர். 

டிஸ்கி :- இன்னும் விளையாட்டுகள் தொடரும். :)


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.


5 கருத்துகள்:

  1. குழந்தைப்பருவ இனிய மலரும் நினைவுகள் ..... அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கோபால் சார்

    ஆம் தனபாலன் சகோ. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. எதிர்ப்பாண்டி எப்படி விளையாடுவது? இன்னும் கொஞ்சம் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)