திங்கள், 9 பிப்ரவரி, 2015

விரல்கள்.:-



விரல்கள்.:-
================

பிரம்மிப்பு ஏற்பட்டது மனதில் அந்த ஓவியத்தைப் பார்த்ததும். எப்படி வரைய முடிந்தது இப்படி மனசை இழுத்துக் கட்டிக் கொள்கிறார்போல். இத்தனைக்கும் வெறும் பென்சிலால் ஷேட் மட்டும் கொடுத்து வரையப்பட்ட படம் அது. ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் இதழ் பிரிக்காமல் சிரிப்பது போல் இருந்தது.

அந்த இதழின் ஓரத்தில் லேசாய் ஒரு மடிப்பு. அதுதான் சிரிப்புக்கு ஆதாரம்.அந்தப் படத்தில் அந்தப் பெண்ணின் கைகள், விரல்கள், சீராய் சமப்படுத்தப்பட்ட நகநுனிகள், கவுன் சுருக்கம், சுருள் முடி, பம்மினாற்போன்று அந்தக் கன்னம், பளபளத்த தோள்பட்டை எல்லாமே சேர்ந்து சிரிப்பதாகப் பிரமை அளித்தது. கொஞ்சநேரம் எதைப்பறியும் சிந்திக்க முடியவில்லை.

அதன் மேல் வைத்த கண்ணை வேரோடு பிடுங்கித்தான் எடுக்கவேண்டும் போலிருந்தது. மனசு வரிவரியாய் அந்த ஓவியத்தைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தது. ஓவியத்தின் இடது கை மூலையில் கீழ்ப்பக்கம் இராஜன் என்று போட்டிருந்தது.

”பாவி..பாவி.. எப்படியடா இப்படி உன்னால் வரைய முடிந்தது. ஒரு சின்ன காரீயத்துண்டு உன் கையில் அகப்பட்டு எப்படி இப்படி வந்தது. ஓவியம் வரைபவனுக்கு விரல்கள் வெண்டைப்பிஞ்சு போல நீளமாய் இருக்குமாமே. உனக்கு அதற்கு மேல் அரை அங்குல நீளமாய்ப் படைத்திருப்பானோ கடவுள். “ பார்க்கப் பார்க்க ஒரு பக்கம் பரவசமாயும் ஒரு பக்கம் பொறாமையாகவும் கூட வந்தது. 

நானும்தான் வரைகிறேன், நான் வரைவது ஸுவாலஜி நோட் புக்கிலும், க்ளாஸ் நோட் புக்கிலும்தான். வரையும் உருவங்களில் எனக்குத் தலை மட்டும் சரியாகவே வருவதில்லை. பெண்ணாயிருந்தால் கொண்டை கீழே சரிந்து தலை சப்பட்டையாய் இருக்கும். ஆணாயிருந்தால் டோப்பா வைத்ததுபோல் ஆகிவிடும். அட்ஜஸ்ட் பண்ணினால் தேங்காய் மண்டையாட்டம் ஆகிவிடும்.

அந்த உதட்டுச் சுழி மட்டும் மனசில் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தது. கண்காட்சியை விட்டு வீட்டுக்கு வந்ததும் அதே போல் வரைய முயற்சி எடுத்து பதினாலு ஒரிஜினல் ட்ராயிங் பேப்பர்களையும், ஏழு ஹெச் பி பென்சில்களையும் கரியாக்கியதுதான் மிச்சம். ஒன்றில் அந்தப் பெண் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தாள். இன்னொன்றில் கைவிரல்கள் சூம்பிப் போய் இருந்தன, இன்னொன்றில் அந்தக்கால ஜட்ஜுகள் வைத்துக் கொள்ளும் விக்காட்டம் முடி மாறியது. இன்னொன்றில் உதட்டைக் கோணி முறைத்துக் கொண்டிருந்தாள். இன்னொன்றில் உடல் பெருத்தும் தலை குருவித் தலையாட்டமும் ஆனது.

 “சே..! இதற்கெல்லாம் ஒரு கலைஞன் சோர்ந்து போய்விடக்கூடாது.. தோல்வியே வெற்றியின் முதல் படி “ என்று சமாதானம் கூறிக் கொண்டு “ விட்டேனா பார்..!” என்று பலவகை ஸ்கெட்சுகள், ஆயில் பெயிண்டுகள், பேப்ரிக் பெயிண்டுகள் அத்தனையும் வாங்கி துணிகளையும், அரை டன் பேப்பர்களையும் கூட்டுச் சேர வைத்து சுடுநீர் அடுப்புக்கு விருந்தாக்கினேன்.

இன்றுதான் கண்காட்சியின் கடைசி நாள். ஒரு ஆசை மனதில் ஊடாடியது. அந்த ராஜனைப் பார்த்து விடவேண்டுமென்று. முன்பக்கம் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த ஆளை நெருங்கி அந்தப் படத்தை வரைந்த ஆளைப் பற்றி விசாரித்தேன். அவருடைய விலாசத்தைத் தெரிந்து கொண்டு அன்று சாயந்திரம் முதல் வேலையாய் சிங்காரவேலு தெருவுக்குச் சென்றேன். ஐந்தாம் இலக்க எண்.

“ஸார்..! ஸார்..! ” என்று வாசலில் நின்று அழைத்தேன். 

வரும்வழியெல்லாம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு. அந்த ஆள் எப்படி இருப்பார்.. கருப்பா, சிவப்பா,  நெட்டையா, குட்டையா, சுருட்டை முடியா, கோர முடியா, கம்பீரமான உடல்வாகா, கட்டையாகவா, என்னால் ஊகிக்க முடியவில்லை. முக்கியமாக அந்த விரல்கள்.. ஓவியம் வரைந்த அவர் விரல்கள். அதைப் பார்க்கவேண்டும். கைகுலுக்க வேண்டும். ம்.. ம்.. மறக்காமல் ஆட்டோகிராஃப் வாங்கவேண்டும். 

மனதுள் ஒரு பிரவாகம். தன்னால் வரைய முடியாவிட்டாலும் அவர் கையெழுத்தை வாங்கி மனதுக்குள் இதயத்துக்குள் பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விரல்களை ஸ்பரிசித்துப் பாராட்டிக் கூற விரும்பி விரல்களிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ வேண்டும். கையைப் பிடித்து உலுக்க வேண்டும்.

அந்த ஓவியத்தைத் திரும்பவும் நினைக்கயில் “ஓ” வென்று குதியாட்டம் போட்டுக் கத்தவேண்டும் போல் இருந்தது. முடிந்தால் அந்த ஓவியத்தை அவரிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

“யார்..? என்ன வேண்டும்..? “ என ஒரு நடுத்தர வயது மாது வந்து வினவினாள் விபரத்தைக் கூறியதும் உள்ளே கூட்டிச் சென்றாள். ஒரு மர மேசையின் முன் அவர் .. சிகப்பாய்… சுருள்முடியாய்.. அந்த ராஜன் அமர்ந்து இருந்தார். கரஙக்ளைக் கூப்பி ”வணக்கம் சார்.” என்றேன்.

அவர் தலையை மட்டும் ஆட்டினார். நான் என் கரங்களை அவர் கரத்தைப் பற்றிக் குலுக்குவதற்காக நீட்டினேன். அதற்குள் அவர் மனைவி காஃபி கலந்து கொண்டு வந்து தந்தார். நான் சங்கோஜப்பட, அவர், ”சும்மா சாப்பிடுங்கள்” என்றார். நான், “சாருக்கு..” என இழுக்க அவர் மனைவி “ அவர் அப்போதே சாப்பிட்டு விட்டார்..” என்றார். 

அவர் என் கரங்களை நீட்டும்போது தன் கரங்களை நீட்டாதது எனக்குள் ஏதோ உடைத்து விட்டாற்போல் இருந்தது.

பேசாமல் டம்ளரை வைத்துவிட்டு நான் கூற ஆரம்பித்தேன். நான் அந்த ஓவியத்தைப் பார்த்து நினைத்தது அத்தனையையும் கூறினேன். ஆட்டோகிராஃபை நீட்டினேன். அவரின் கையெழுத்துக்காக. அத்தனை நேரமும் அவர் தன் கரங்களை மேஜைக்குள்ளேயே புதைத்துக் கொண்டிருந்தார். முகத்தில் புன்சிரிப்புடன் நான் சொல்லிக் கொண்டு வந்ததைக் கேட்டு.

தன் வலக்கரத்தை மேஜை அடியிலிருந்து எடுத்து மேலே வைத்தார். நான் க்ஷணநேரம் அதிர்ந்து போனேன். இடது கை முழுதும் விரல்கள் மூளியாகி வலது கை கட்டை விரலும் ஆட்காட்டி விரலுமே எஞ்சியிருக்க மற்ற விரல்கள் மூளியாயிருக்க.. நான் அப்படியே அதிர்ந்து மரத்து.. ஒன்றுமே தோன்றாமல்.. பயந்து போயிருந்தேன். அடக்கமுடியாமல் அழ ஆரம்பித்து விட்டேன். 

‘ஒரு விபத்தில் இப்படி ஆகிவிட்டது. “ மில்லில் மிஷினை ரிப்பேர் செய்யும்போது இப்படியாகிவிட்டதாம். அந்த வெறியில் இரண்டு விரல்களை மட்டும் வைத்து வரையக் கற்றுக் கொண்டாராம். 

நான் அதிர்ந்து மனதில் சோகமாய்ப் புலம்பலுடன் பையில் பேப்பரில் 
 கனத்துப் போகும் அவரின் அந்தச் “ சிரிப்பு”  படத்துடன் மனதில் எண்ணங்களின் கனத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.


டிஸ்கி 1 :- ( 5-7-84 எழுதியது. ஃபிப்ரவரி  ’85 புரவியில் வெளிவந்தது . )

டிஸ்கி 2 :- இந்தக் கதை மே 20, 2014 அதீதத்தில் வெளியானது.

8 கருத்துகள்:

  1. www.youtube.com/watch?v=lNOt-l76OFQ
    Respected Madam,
    listen please your ganesha bhujangam stanzas with pictures from the blog of Thiru Venkat Nagaraj.
    Thanks a lot.
    Is the complete translation of this ganesh bhujangam over?
    where it is available ?
    subbu thatha

    பதிலளிநீக்கு
  2. நன்றி சுப்பு சார் குமுதம் பக்தி ஸ்பெஷலில் கிடைத்தது. குமுதம் ஆஃபீசில் கேட்டுப் பாருங்கள்

    நன்றி தனபாலன் சகோ.

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. வருத்தப்பட வைத்தாலும் அவர் மன வலிமை அழகு

    பதிலளிநீக்கு
  5. மனதைத் தொட்ட பகிர்வு.

    தன்னம்பிக்கை மனிதர்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)