சனி, 31 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட். உரத்த சிந்தனையாளர்,பன்முகத் திறமையாளர் பத்மாமணி.

முதன் முதலில் பத்மாமணி மேடத்தை நான் விக்னேஷ்வரா க்ளப்பின் ஒரு நிகழ்ச்சிக்கு ருக்மணி அம்மாவுடன் துணை விருந்தினராகச் ( துணைக்குச் சென்று விருந்தினராக கௌரவிக்கப்பட்டேன். ! )  சென்றபோது சந்தித்தேன்.
எஸ் ஏ பி வரதன் அவர்களுடன்.

மிக எனர்ஜிடிக்கான லேடி. தன் வயதுக்கும் மீறிய சுறுசுறுப்பு கொண்டவர். அவரின் தன்னம்பிக்கையான பேச்சுகள்,செயல்பாடுகள் என்னைக் கவர்ந்தன. அவர் யார் என்று அறிய அறிய பிரமிப்பின் உச்சிக்கே சென்றேன். இன்றும் பத்ரிக்கைகளில் அவரின் படைப்புகள் இடம்பெறுகின்றன.திறமைகள் கொண்டோரை ஊக்குவிக்கத் தவறாதவர். லேடீஸ் ஸ்பெஷலில் என் கட்டுரைகளைப் படித்ததாகக் குறிப்பிட்டார். லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடத்தையும் பாராட்டினார். வீட்டிற்குச் சென்றால் கைவினைக் கலைஞர் போல பொருட்கள் செய்திருந்தார். கழுத்தில் அணியும் அணியாரமே 200 வகைக்குமேல் ஒவ்வொரு புடவைக்கும் மேட்சாக செய்து வைத்திருந்தார்.


சமீபத்தில் முகநூலிலும் க்வில்லிங்கில் பூங்கா செய்து ( நவராத்ரிக்காக ) அசத்தி இருந்தார். எந்தக் கைவேலைகளையும் எங்கு பார்த்தாலும் கண்பார்த்தால் கை செய்யும் என்பதைப் போல செய்து தன் வீட்டை அலங்கரிப்பதோடு வழங்கவும் செய்வார். ( க்வில்லிங் தோடு, நெக்லஸ், பொக்கே, மங்களூர் துடைப்பத்தில் பூஜாடி, ஜப்பானிய பூந்தொட்டி சாட்டின் குஷன்ஸ் 
மாக்ரமி த்ரெட்டில் வாசல் தோரணம் என்று  செய்துள்ளதாக ஞாபகம். )  தீபாவளி பொங்கல், கிறிஸ்துமஸ் துர்கா பூஜா என்று விதம் விதமான குத்துவிளக்கு அலங்காரங்களும் ( ஆண்டாள், மீனாக்ஷி, காமாக்ஷி )




அலங்காரத் தட்டுகளும் ( இயேசு ) , ஓவியங்களும் ( ராதா கிருஷ்ணா )

 முத்து வேலைப்பாடுகளில் பூந்தொட்டியில் துர்க்கையும் செய்திருக்கிறார்.
க்ரோஷாவில் இவர் செய்த பல்வேறு பொம்மைகள் மாடிப்படியின் ஒவ்வொரு படியிலும் நின்று நம்மை வரவேற்கும்.


மிகப் பெரும் இலக்கிய ஆளுமைகளுடன் அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்கிறார். அவரே ஒரு மிகப்பெரும் ஆளுமையாக இருந்தும் என் தொலைபேசி எண்ணையும் வாங்கி என்னைத் தொடர்பு கொண்டு அறிந்து உரத்த சிந்தனை நூலில் மிகச் சிறப்பான அறிமுகம் கொடுத்து இருந்தார். அன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு புலவர் பெருமக்கள் பலர் என்னை ஃபோனில் வாழ்த்தியவண்ணம் இருந்தனர்.  இப்படியான நட்பு கிடைக்கப் பெருந்தவம்தான் செய்திருக்க வேண்டும். இறைவன் சித்தம் அந்தச் சந்திப்பு .. தித்திப்பு. :)

அவரிடம் அவரின் இளமைப்பருவம், பணிக்கால சேவைகள், பொதுநல, சமூகப் பணிகள் பற்றிக் கூறுமாறு கேட்டேன். அவர் கூறியவற்றை இங்கே அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

///அன்பின் பத்மா மேம் உங்க கைவேலைப்பாடுகள், உங்கள் இலக்கிய நட்புகள், உரத்தசிந்தனையில் பங்களிப்பு மற்றும் ஃப்ரீலான்சிங்கா எழுதுறது பத்தி சொல்லுங்க. ///

{(தேன் மிக்க மகிழ்ச்சி. கணினியில் இன்னும் கற்றுகொள்ளவேண்டியுள்ளது உன் முகவரியை கொடுக்கவும் தபாலில் அனுப்புகிறேன். ) என்றவர் என் தொடர்ந்த தொல்லைகளால் கணினியிலேயே டைப் செய்து அனுப்ப முயற்சிக்கிறேன் என்றார்  :)  அசத்தலாக அனுப்பியும் விட்டார்  !!!! }

இளமை & பணிக்காலம். :-

சென்னை சௌகார்பேட்டையில் உள்ள மூங்கிபாய் கோயங்கா பள்ளியில் முதல் பேட்ச் 1952ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராமநாத் கோயங்கா தன் மனைவியின் நினைவாகத் தொடங்கிய பள்ளிக்கூடம் அது.அப்போதே 1000 மாணவிகளில் கைவினைத்திறனுக்காக வெரி வெரி குட் என்ற பெருமையை பெற்ற ஒரே மாணவி நான் மட்டும்தான்.

மாநில அரசின் சுகாதாரம்,கல்வி துறையில் பணியாற்றிவிட்டு மத்ய அரசின் தொலைதொடர்பு அலுவலகத்தில் 36 1/2ஆண்டுகள் பணியாற்றி 1991 ஜூன் மாதம் ஒய்வு பெற்றேன்.ஐம்பது பெண்கள் உட்பட நானூறு பணியாளர்கள் இருந்த இடத்தில் தொழிற்சங்கத்தின் கிளைச்செயலாளர் பதவியில் இருந்து தொழிலாளர்களுக்கு சலுகைகள் பெற்று தந்தேன்.

பெண் அலுவலர்களுக்காக நல சங்கம் ஆரம்பித்து சிங்கர் நிறுவனம் மூலம் தையல்  பயிற்சி அளித்து தேர்வு எழுதவைத்து சான்றிதழ் பெற்று தந்தேன் சுமார் பதினெட்டு பேரில் ஐந்து பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்  அதில் நானும் ஒருவள்.என் வயது சன் டிவியில் செய்தி வாசிக்கும் சசிகுமார் தாயார் கனகா  நடராஜன் மூலம் பாட்டு   வகுப்புகள் நடத்தி மத்ய அரசின் போட்டிகளில் பங்கு பெற வைத்து பரிசுகளை அள்ளி வந்தனர்,நானும் சமையல் கைவேலை வகுப்புகள் நடத்தினேன்.

அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் சற்று ஒய்வு பெற மின்விசிறி, பெஞ்ச், கண்ணாடி, வாஷ் பேசின் ,எவர்சில்வர் டம்பளர்கள், சோப்பு.டவல்,நாப்கின் வசதிகள் செய்யப்பட்டன அரசு குடியிருப்பிலும் செயலாளராக இருந்து சிங்கர் மூலம் பயிற்சி அளித்து சான்றிதழ் பெற்று தந்து எக்ஸ்போர்ட் கம்பனியில் நிறைய பேருக்கு வேலைகிடைத்தது   

சமூகப்பணிகள்

1963ம் ஆண்டு பெண்கள் ஊர்காவல் படையில் சேர்ந்து சுமார் பத்து ஆண்டுகள் சேவை செய்தேன் 1973 என் கணவர் மறைவிற்கு பிறகு குழந்தைகளுக்காக பகுதி நேர வேலையாக துணிக்கடையில் மாலை5.30 to.9.00வரை வேலை . ஊர்காவல் படையில் இருந்தபோது பிரதி ஞாயிறுதோறும் கவாத்து பயிற்சி ,வெள்ளம் ஜனத்தொகை கணக்கெடுப்பது போன்ற பணிகள் உண்டு.காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ் கிடைத்தது.

அதே நேரத்தில்தான் ராமசாமி என்ற ஆண் ஊர்காவலர் போக்குவரத்து கண்காணிப்பாளராக பணி செய்தார். அந்த அனுபவம்தான் அவரை பற்றியும் ட்ராபிக் ராமசாமி என்ற பெயரில் இன்றும் பொதுநல வழக்குகளை போட்டு கலக்கிவருகிறார்.

எங்களுக்கு ஏரியா மானேஜராக கோவிந்தசாமி நாதன் என்பவர் இருந்தார் அவரின் முடியலங்காரம் நடிகர் சிவாஜிக்குப் பிடித்து போய் கெளரவம் படத்தில் அதே சிகை அலங்காரம் செய்து கொண்டார். கோவிந்தசாமினாதன் முன்னாள் மத்திய அமைச்சர் அம்முசாமினாதன் மகன் ஆவார்  நான் பல சங்கீத சபாக்களில் செயலாளராகவும் செயற் குழு உறுப்பினராகவும் இருந்ததால் பெண் ஊர்காவல் படையை சேர்ந்த விருப்பமுள்ள பலரை நாடக நிகழ்சிகளில் பாதுகாப்பு பணிக்கு சேர்த்துக்கொண்டேன்.,பிரதமமந்திரியாக  இருந்த இந்திராகாந்தி சென்னை வருகை தந்தபோது கார்ட் ஆப் ஹானர் என்ற சிறப்பு அணிவகுப்பு மரியாதை செய்தோம்  

ஊர்காவல்படையில் வருடம்தோறும் குடியரசு தினத்தில்  அணிவகுப்பில் பங்கு பெற்றதை குறிப்பிட மறந்துவிட்டேன்.

சென்னைநகரின் இரண்டாவது பெண் பத்திரிகையாளராகவும் இருந்து அன்றைய பிரபலமான ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் திரைப்பட ரிப்போர்டராகவும், சமூக விழிப்புணர்வு குறிப்பாக பெண்களைப்பற்றி எழுதி வந்ததால் `எழுத்தும் சமுதாய மாற்றமும்' என்ற பட்டறையில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது,மிகமிக பிரபலமான ஆசிரியர்கள்,எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட நிகழ்சியில் சுவாரசியமான விவாதங்கள் நடைபெற்றது. கலந்துகொண்டவர்களில் நான் ஒருவள் மட்டுமே பெண் எழுத்தாளர், அன்று நான் மேடையில் பேசிய கருத்துகள் பெரிய விவாதத்திற்கு அடிபோட்டு தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் பத்திரிகையில் வெளியாகியது. அங்கு வந்த என் பேனா நண்பர் குமரி ஜெய் மூலம்  உதயம்ராம், ராஜசேகருக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டு அன்றே உரத்த சிந்தனையின் உறுப்பினர் ஆனேன்.

15-8-1983 அன்று ராஜசேகர் மற்றும் ஆறுபேர் சேர்ந்து பத்திரிகை,வானொலி, தொலைகாட்சி வாசகர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தி ராமாபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவரால் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் மெரீனா கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஐம்பது உறுப்பினர்கள் சேர்ந்து மாத நிகழ்சிகள் நடந்து வந்த நேரத்தில் 1985ல் நான் சேர்ந்தேன். என் அனுபவத்தைக்கொண்டு வாழ்நாள் உறுப்பினர்கள் சேர்வதை கட்டாயமாகி, நானே முதல் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்தேன், இப்போது மிகப்ரபலமான பலர் ஆயுட்கால உறுப்பினர்களாகவும் கிளைகள் பல தோன்றி எங்கேயோ போய்விட்டது

விதையாக இருந்த அமைப்பு ஆலமரமாக மாற என் பங்களிப்பும் ஒரு காரணம்.ஜி.வி.விருது,1988 ஆரம்பிக்கப்பட்டது 1989ல் நானும் அய்யாறும் வாங்கினோம் 1990லிருந்து சங்கத்தில் சிறப்பாக செயல் படும் இரண்டு உறுப்பினர்களுக்கு  செயல்வீரர் விருது நான் வழங்கிவருகிறேன்.இந்த வருடம் வெள்ளிவிழா ஆண்டாக 25th செயல்வீரர்விருது  மார்ச் ஆண்டு விழாவில் வழங்கப்படும்
அவரைச் சந்தித்தபோது அவரின் புகைப்படத்தை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன் :)

டிஸ்கி :-  அஹா அப்பவே சென்னை நகரின் இரண்டாவது பெண் பத்ரிக்கையாளரா. !!!!!!!. கலக்கி இருக்கீங்கம்மா. கேக்கவே சந்தோஷமா இருக்கு . வாழ்த்துகள் மா உங்க சாதனைகளுக்கும் சமூகப் பணிகளுக்கும் சிரம் தாழ்கிறேன் .

கம்ப்யூட்டர்ல தமிழ்ல இவ்வளவும் டைப் செய்து பேரனிடம் புகைப்படம் அனுப்பக் கற்றுக்கொண்டு புகைப்படம் அனுப்பி கலக்கிட்டாங்க பத்மா மேம்.

கற்றுக்கொள்ள வயது தடையில்லை என்றும் என்றும் தேனீயைப்போலச் செயலாற்றுவது எப்படி என்றும் உங்ககிட்ட கற்றுக்கிட்டேன்மா. மேலும் உங்க இலக்கிய பொதுநல செயல்பாடுகள் பார்த்து பிரமிப்பு இன்னும் அடங்கல. சொல்லப்போனா தன்னோட மருமகள் ராஜியோட ஃபோட்டோவை அடிக்கடி போட்டுப் ( அவங்க செய்த பார்க், போட்ட கோலம் , பூஜை என்று ) பாராட்டி இருக்கிற மாமியார் நீங்களாத்தான் இருக்கும். :) 
:
மிக அருமைம்மா அனைவருக்கும் செயலூக்கம் கொடுக்கும் உங்கள் பணிகளை எங்களோடு பகிர்ந்துகிட்டமைக்கு நன்றிம்மா : ) . 80  வயதை நெருங்கியிருக்கும்  உங்களை வணங்குகிறேன். உங்க  தளராத தன்னம்பிக்கையையும் அயராத உழைப்பையும் நாங்களும் கைக்கொள்ள   உங்க ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கிறேன். . :)  

8 கருத்துகள்:

  1. பத்மா அம்மாவின் தன்னம்பிக்கைக்கும், சேவைகளுக்கும் அவரின் ஈடுபாட்டுக்கும் தலை வணங்குகிறேன். தேனியைப் போன்ற சுறுசுறுப்பு.

    பதிலளிநீக்கு
  2. இவரை அறிந்ததில் மிக மிக மகிழ்ச்ச்சி தேன். மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மலைக்க வைக்கிறது இவரின் சாதனைகள். இவரைப்பற்றிக் கேள்விப் பட்டதே இல்லை. இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பிரமித்து விட்டேன்... கற்றுக்கொள்ள வயது தடையே இல்லை தான்...

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி ஆதி வெங்கட்

    நன்றி வல்லிம்மா :)

    நன்றி கீதா மேம்

    நன்றி தனபாலன் சகோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. வெறும் வியப்பு இல்லை பிரமிப்பு என்று தான் சொல்லவேண்டும். எத்தனை எத்தனை சாதித்திருக்கிறார் திருமதி பத்மா மணி. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் இவரிடமிருந்து. ஒரு அருமையான சாதனையாளரை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன், தேனம்மை. நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இம்மாதிரி அருமையானவர்களைப்பற்றி அறியக்கொடுத்த உங்களுக்கு மிகழும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)