வெள்ளி, 5 டிசம்பர், 2014

எழுத மறந்த கதைகள். பாகம் 1

எழுத மறந்த கதை - 1


அவள் ஒவ்வொரு வார்த்தையையும் புதிதாகப் புதுக்கவிதை எழுதிப் பார்க்க வார்த்தைகளைத் தேடுகிறவளைப் போல அதன் மெல்லிய த்வனியுடன் கேட்டாள். “ சந்துரு. நீங்க உண்மையிலேயே என்னை விரும்பறீங்களா ” வென்று.

அதன் அர்த்தம் அந்த த்வனி அரைகுறையாகக் காதில் விழுந்தபோதே அவனுக்கு தெய்வ சந்நிதானத்தில் காத்திருந்து காத்திருந்து க்யூ நகர்ந்து கடைசியில் தெய்வத்தைத் தரிசிக்கப் போகும் வேளையில் திரைபோட்டு மறைத்துவிட்டால் மனம் எவ்வளவு வலியில் துடிக்குமோ  அதைப்போல இரண்டு மடங்கு துடித்துச் சஞ்சலப்பட்டது.

அந்தக் கேள்வி ஏற்படுத்தின வலி, வடு அவன் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. அவள் அவனைக் கவனிக்காதவள் போல் மீண்டும் கேட்டள். அவன் அவளுடைய இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாததாலோ அல்லது கேள்வியே பிடிக்காததாலோ என்னவோ காதில் வாங்கிக் கொள்ளாத மாதிரி நடித்துப் பார்த்தான். இருப்புக் கொள்ளாமல் இரு கைகளையும் பிணைத்தான். பிரித்தான். கோர்த்து முஷ்டியை இறுக்கி ஆற்றுமணலைப் பந்தாடினான். எழுந்து நின்றான். பிறகு அமர்ந்து உள்ளங்கையில் கோலமிட்டிருந்த மணலை எண்ணினான்.

மூன்றாவது முறையாக அதே கேள்வியை அவள் அலுப்பில்லாமல் திருப்பிக் கேட்கவும் சடாரெனத்திரும்பி  “ இந்தக் கேள்விக்கு அவசியம் பதிலளிக்கணுமா. ? “ கையின் வியர்வை சாகரத்தில் ஆற்றுமணல் முக்குளித்தது. படாரெனக் கைகளைத் தட்டிவிட்டுக் கொள்ள காற்றில் பறந்து அவன் பாண்டில் சிதறியது. நைஸ் மணல்கள் கையை விட்டுப் போகமாட்டோம் என வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டிருந்தன.


வானத்தில் சில்வர் பேர்ட்ஸ் வி வடிவில் பறந்தன. அந்திச் சூரியன் அடுத்த ஊருக்குப் போக டாட்டா காட்டிக்கொண்டிருந்தான்.

அவசியம் பதில் வேணும் என்ற அவள் குரல் அவனை சங்கடப்படுத்தியது. சொல்லிவிட்டுத் தான் கேட்ட கேள்வியால் எதிராளி மனது எந்த அளவு புண்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ளாதவள் போல பின்னியிருந்த ஜடையை அவிழ்த்தாள், பின்னினாள், அவிழ்த்தாள், பின்னினாள்.

இத்தனை நாள் கழிச்சும் இப்படியொரு சந்தேகம் எப்படி வந்தது உனக்கு சுஜய். ?

கேட்ட கேள்விக்கு பதில் வேணும். என்றாள் சுஜயா. கால் நகத்தில் போட்ட க்யூடெக்ஸ் ஒரு விரலில் சதையோடு உறவாடியிருக்க அதைப் பிய்த்தெறிந்து ஒழுங்குபடுத்தினாள்.

இருவரும் பேப்பர் மில்லில் காலை 6 மணியிலிருந்து மதியானம் 2 வரையுள்ள ஷிஃப்டில் வேலை பார்த்தார்கள். ஷிஃப்ட் முடிந்ததும் காண்டீனில் காஃபி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாமினியாற்றில் நடந்துவந்து ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் சண்பக மரத்தின் அடியில் அமர்ந்ததும்தான் அவள் அப்படியொரு எதிர்பாராத கேள்வியைக் ( கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள ) கேட்டாள்.

இவன் கம்பெனியின் வொர்க்கிங் மேனேஜர். அவள் செகரெட்டரி. இன்றைக்கு ஸ்கூட்டர் ரிப்பேர். அதனால்தான் அவளோடு நடந்து வந்து இந்தக் கேள்விக்கணைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை.

மில்லில் ஆஃபீசில் இருக்கும்வரை பாஸ் பாஸ் என்று ஒரே மரியாதைதான். அவனும் அவளை ஒரு ஒர்க்கராகத்தான் ட்ரீட் பண்ணுவான். வெளியில் அவள் பாஸ் ஆகக் கேள்வி கேட்க அவன் இப்போது பதில் சொல்லக் கொஞ்சம் தயக்கப்பட்டான்.

தயக்கம் வந்ததில் வியப்பில்லைதான். அவன் மாமா மகள் ப்ரீதீ இவன் தன்னை மாலையிடுவான் எனக் கண்களில் மணக்கோலம் வடித்துக் காத்திருக்க, பட்டப்பகலுமில்லாமல் சாயந்திரமுமில்லாத இரண்டுங்கெட்டான் பொழுதில் இப்படியொரு கேள்வியை அதுவும் தனக்கு நெருங்கிய என்று நினைத்துக் கொண்டிருந்த நினைத்துக் கொண்டிருக்கிற கடந்த ஆறுமாதப் பழக்கத்துக்காரியான – காதலி என்றும் சொல்லலாம் – சுஜயாவின் வாயிலிருந்து எதிர்பார்க்கவில்லை. என்று அவன் முகம் கூறிக்கொண்டிருந்தது.

இப்ப நான் என்ன பதிலைச் சொல்லணும்னு நினைக்கிறே.

எப்படிப்பட்ட பதிலா இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும். என்க அவனுக்கு  ஆயாசமேற்பட்டது. உண்மை உண்மையின்னு வாயாலே சொன்னாத்தான் அன்பு இருக்குன்னு நினைக்கிறியா. சுஜி. ? அன்பான மனுசங்க நம்மகிட்ட நடந்துக்கிற முறையிலதான் நாம் அதை உணர்ந்துக்கிடணும்.

அப்படின்னா ஏன் எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாவைப் பார்க்கட்டுமான்னு கேக்கலை நீங்க. ?

அம்மாவை இப்போ எதுக்கு ஏன் உடம்பு சரியில்லையா.. பதறினான்

சீச்சி இப்படியா பயப்படறது.  அம்மாவுக்கு ஒண்ணுமில்ல. நம்ம கல்யாணத்தைப் பத்தித்தான். தயக்கமாக நிமிர்ந்தவள் அவனை நேர்ப்பார்வையாகப் பார்த்துப் புன்முறுவலித்தாள்.

திரும்பவும் குனிந்துகொண்டு மண் ஆராய்ச்சி செய்தான். மாமா மாரலிங்கபூபதி கேட்டால் தொலைச்சுப்பிடுவார் தொலைச்சு.. அவர் கரு மீசையும் கனத்த சரீரமும் வேட்டைத் துப்பாக்கியும் பயமுறுத்தின. கண்ணிமைகளைப் படபடவென அடித்துக் காட்சிகளை விலக்கினான். 


எழுத மறந்த கதை - 2 



வாங்க என்றாள் கல்லு என்கிற கலாவதி. கண்ணனுக்குத் தயக்கமாயிருந்தது. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது போன்ற தவிப்பு. சேரை எடுத்துப் போட்ட கலாவதி.” அட இன்னும் வெளீயேதான் நிக்குறீங்களா.? “ “ உள்ளே வாங்க..” அம்மா



அம்மா இவளின் சத்தம் கேட்டு முன்பே வந்துவிட்டாள் “ யாரு கண்ணனா. அப்பா எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டே. வீட்ல எல்லாரும் சௌக்கியமா. “



பரஸ்பர குசலங்கள் நடந்தேறின. கலாவதி என்ற யௌவனப் பெண் அவனுக்காகக் காப்பி கலந்தாள்.

{[வீட்டிற்கு வரும் வழியில் அவனைக்கண்டு நட்சத்திரங்கள் கைகோர்த்துக் கொண்டன.“நான்.. நானா மெதுவாக அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தேன். என்னுள் இவ்வளவு மென்மை இருக்கிறதா. இல்லை ஒரு பெண்ணைப் பார்த்து அவளின் அபிமானத்துக்காய் என் நா அடங்கி விட்டதா.

சேச்சே அப்படி ஒன்றுமில்லை என நினைத்துக் கொண்டான். அவனைக் குளிரும் வெப்பமும் ஒருங்கே போர்த்தின. மனசுள் நட்சத்திரங்கள் மகிழம் பூக்களாய் தூறல்களாய் மருதாணிப் பொட்டுக்களாய்த் தெறித்தன.

பாலால் தேனால் அபிஷேகித்தன. ஏகப்பட்ட பெண்கள் நட்சத்திரங்களைக் கையில் ஏந்தி “ தனனம், தனனம்”  என்று பாடுவதாகப் பட்டது.]}

அங்குமிங்கும் ஓடினாள். வீட்டிற்கு வந்த தோழியுடன் சள சளவென்று பேசினாள். பேச்சினூடே அவனைப் பார்த்துப் புன்னகைத்துத் தோழியிடம் ஏதோ சொன்னாள்.

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவளிடம் பேசவேண்டும் போல இருந்தது.  அப்படியே அமர்ந்து அவளின் அசைவுகளை பரபரப்புகளை கவனிப்பாளனாய் இருந்து ரசிக்கச் சொன்னது மனது.

எப்படி அழகாய்க் கண்களை விரிக்கின்றாள் ரோஜாமொட்டு மலர்கிற மாதிரி. வைரம் வைத்த வெல்வெட் பெட்டி திறக்கிற மாதிரி அந்தச் சிறிய வாய்தான் எப்படி அசைகிறது.
 

டிஸ்கி:- இதுக்கு முடிவு என்னன்னு பார்க்கிறீங்களா அதான் சொல்லிட்டேனே தலைப்பிலேயே எழுத மறந்த கதைன்னு. இது கல்லூரிப்பருவத்துல டைரில எழுதி வச்சது ஏன் முடிக்காம இருக்கேன்னு தெரியல. இப்ப எப்பிடி முடிக்கிறதுன்னும் தெரியல. படிக்கிறவங்க யாராவது மீதிய எழுதுங்க.. :)


5 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. எழுத மறந்த கதை..... அது சரி...

    நீங்களே எழுதுங்களேன். இல்லை எனில் வேறு யாராவது இதை எழுதுகிறார்களா என்று பார்க்க ஆசை.

    பதிலளிநீக்கு
  3. சீரியஸாக படிச்சுட்டு வந்தா முடிவைக் காணோம்....

    பதிலளிநீக்கு
  4. நானும் ஆவலா இருக்கேன் வெங்கட் சகோ :)

    எப்பிடி தொடர்றதுன்னு தெரில எழில் ! :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)