திங்கள், 1 செப்டம்பர், 2014

மந்திராலயம்.

ரொம்ப வருடங்களுக்கு முன் நான் ., என் பையன்கள் இருவருடன் 91., 92 இருக்கும் ., மார்ச் மாதத்தில்  என் மாமனார் ., மாமியாருடன் மந்த்ராலயம் சென்று வந்தது நினைவுக்கு வந்தது. வங்கியில் வேலை செய்யும் என் கணவர் வருடக் கடைசி என்பதால் வர இயலவில்லை.

கோவையிலிருந்து பாம்பே செல்லும் ட்ரெயினில் மந்த்ராலயம் ரோட் என்ற இடத்தில் இறங்கி பஸ்ஸில் சென்றோம்.. மிக மோசமான பஸ் மற்றும் பாதை.. கவர்மெண்ட் கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்..  குழந்தைகளுடனும்  மேலும் சில வயதான உறவினர்களுடனும் சென்றதால் நிறைய உணவுவகைகள் கொண்டு சென்றோம்.. தயிர் சாதம்., சப்பாத்தி., பிஸ்கட்டுக்கள் என.


லக்கேஜ்களை வைத்துவிட்டு துங்கபத்ராவில் சில்லென்ற நீரில் துளைந்தாடினோம். என் சின்னப் பையனுக்கு குளிரியதால் என்னைக் கட்டிக் கொண்டே குளித்தான்.. கோதையின் மடியில் படிக்கும் போது இதெல்லாம் ஞாபகம் வந்தது.. 

 பெண்களுக்கு ஏனோ வெளியுலகம் சம்பந்தமாக  குடும்பமற்றுத் தனியாக சுற்றும் வாய்ப்புக் கிடைப்பதில்லை தோழியருடன். ஒருவேளை பழகிவிட்டதோ என்னவோ.. தனியாக எங்காவது சென்றாலும் எப்போது வீடு திரும்புவோம் என ஒரு நிம்மதியின்மை மாலை நேர இருள் சூழலில் விரட்டும்...

மாலை கோயில் சென்று ராகவேந்திரரை தரிசித்தோம்.. மறுநாள் காலையும் .. மிக சில்லென்று குளிர் சூழ அமைதியாக இன்பமாக ., நிம்மதியாக இருந்தது.. பெருங்கூட்டம்தான்.. ஒவ்வொரு கார்னரிலும் நின்று விழுந்து வணங்கி பன்னிரெண்டு பிரகாரங்கள் வந்து .. பூஜ்யாய ராகவேந்திராய சுலோகம் சொல்லி..  வியாழக்கிழமை விசேஷம்.  இனம்தெரியாத பூக்களும்., முணுமுணுவென்ற பாஷையும்., செங்காவியும் ஒரு கவர்ச்சியாய். எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு பவித்திரமானது போல.. வேண்டுவதற்கு ஏதுமில்லை..

வெளியில் வந்து குழந்தைகளுக்கு இட்லி வாங்கி ஊட்டினோம்.. அரிசிக் குருணையில் உளுந்து ஆட்டி சேர்த்து செய்தது போல் இருந்தது அது.. புட்டு போல் நறநறப்பு.. குழந்தைகள் பழக்கமற்று சரியாக உண்ணவில்ல.. மீண்டும் அடுத்த தரிசனத்துக்காக கோயில்..

மதியம் சாப்பாடு தேவஸ்தானத்தில்.. நீங்கள் கூறியபடி டோக்கன்தான்.. பொதுவாக ஆந்திராவில் பச்சரிசிதான்.. வீட்டில் வாய்வு கொண்டுவிடும் என்று பொங்கல் .,வைகுண்ட ஏகாதசியில் பச்சரிசி பொங்கல் அல்லது சாதம். அல்லது கலவை சாதங்கள் செய்யும் போது மட்டும்தான் பச்சரிசி..
சோறு கொதித்தவுடன் வடித்துவிடுவார்கள் போல .. நல்ல பயிறு மாதிரி முழித்துக் கொண்டு இருந்தால்தான் அவர்களுக்கு சோறு ருசிக்கும்.. திருப்பதியிலும் அப்படித்தான்.. குழைவாக உண்ணும் குழந்தைகளுக்காக நொறுக்கி  நொறுக்கி பிசைந்து ஊட்டினோம்..

எப்படி எல்லாம் குழந்தைகளை பழக்கி வைத்திருக்கிறோம் பாருங்கள்  .. கடலைப் பருப்பு பாயாசம் பரிமாறினார்கள்..  நாங்கள் செய்ததே இல்லை என்பதால் வித்யாசமாக அருமையாக இருந்தது.. ( என் கணவர் சொல்வார்.. யாராவது சமைத்துப் போட்டால் போதுமே .. நல்லா இருக்கு என்று எதற்கெடுத்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பாய் என்று..  பாராட்டக் கூட எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு..!!)

ஊர் செல்ல பஸ் பிடிக்க திரும்பினோம் அதிகம் சார்ஜ் செய்யப்பட்ட பாட்டரி போல எனர்ஜியாக இருந்தது மனது..  ஒரு சில பொருளாதாரத் தொந்தரவுகளில் இருந்து மீண்டிருந்த சமயம்.. அவரே விரும்பி கூப்பிட்டுப் பார்த்தது போல் சந்தோஷமாக இருந்தது.. இன்னுமொருமுறை செல்ல நினைக்கிறேன்.. அவர் விரும்பினால்தான் நடக்கும் போல் இருக்கிறது..

குறிப்பு :- என் பெரிய பையனின் பெயர் திருவேங்கடநாதன்.. ராகவேந்திரரின் பூர்வீகப் பெயர் அது... என் மாமனார் அப்போது அவர் மேல் அதீத பக்தி கொண்டிருந்த காலம்.. தன் பெயரை இடாமல் அவர் பெயரை இட்டார்.. 

4 கருத்துகள்:

  1. அன்பு தேன், மந்திராலயம் நாங்களும் சென்றிருக்கிறோம். நாங்கள் சென்ற 2000ஆவது ஆண்டில் துங்கபத்ராவில் பாறைகளெ இருந்தன. டிசம்பர் மாததிலும் வெயில் சுட்டெரித்தது. ஸ்ரீராகவேந்திரர் மட்டும் குளிர்ந்த பார்வையால் அனுக்கிரஹித்தார். நீங்கள் சொல்வது துங்கபத்ரையில் குளிக்கவில்லையே என்று கவலை வருகிறது. நல்லர்தொரு பயணம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வுக்கா..பெரியவங்க சொல்வாங்க மந்திராலயம் செல்வதற்கு கொடுப்பினை வேண்டும் என்று...நானும் 2 முறை சென்றிருக்கேன்..என் குடும்பத்தில் நான்,அம்மா தவிர மற்ற சகோதரை சகோதரர்கள் சென்றதில்லை..

    பதிலளிநீக்கு
  3. நன்றி வல்லிம்மா

    நன்றி டா மேனகா :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)