புதன், 6 ஆகஸ்ட், 2014

பக்தர்களா.. பதர்களா.

மாங்காடு
திருவேற்காடு
சென்றவாரம் சென்னை சென்ற போது மாங்காடு திருவேற்காடு அம்மனைத் தரிசிக்கப் போனோம். ஆடிச்செவ்வாய் விசேஷ தினம் மேலும் ரம்ஜான் விடுமுறையானதால் கூட்டம் எக்கித் தள்ளிக்கொண்டிருந்தது.

முதலில் மாங்காடு. ப்ரகாரத்திலேயே அம்மனைப்  ப்ரதிஷ்டை செய்து சுற்றிலும் கும்பங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கும் வளையல்கள் அடுக்கிப் பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பெண்மயில்கள்.

அங்கே மூன்று விதமான க்யூ, பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். மூன்று சுற்றுக்களாக சுற்றிச் சுற்றி வந்ததால் கூட்டத்தைக் கண்டு மலைத்து மயங்கி அமர்ந்து இருந்தபோது  பக்கத்தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்களுக்குச் சென்றுவிட்டுவந்த பெண் ஒருவர் குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.



இன்னும் என்ன வெயிட் பண்ணிக்கிட்டு.. சுத்தி வந்து கோபுரத்தைப் பாத்து சன்னதிக்கு நேரே விழுந்து  கும்பிட்டு  கிளம்புங்க. எல்லாக் கோயில்லயும் நாங்க உள்ளே போய் சாமி கும்பிட்டோம். இங்கேதான் கூட்டம் அதுனால வெளியேயே விழுந்து கும்பிட்டோம் என்றார். திருவேற்காட்டில் இவ்வளவு கூட்டமில்லை ( என்று சொன்னதை அப்பாவியாக நம்பி விட்டோம். ).உடனே விழுந்து கும்பிட்டு ( நடக்கும் மனிதர்கள் மிதித்து விடுவார்களோ என்ற பயத்தோடு ) விடு ஜூட் . திருவேற்காடு.

மாங்காட்டில் கோயிலுக்கு ஓரளவு அருகிலேயே கால்டாக்ஸியிலிருந்து போக முடிகிறது. ஆனால் திருவேற்காட்டில் கோயிலுக்கு வெகுதொலைவில் (பஸ்ஸ்டாண்டு போல தெரிகிறது.) நிறுத்திவிடுவதால் கோயிலைச் சுற்றிக் ( மாங்காட்டிலும் கோயிலில் சைடு வழியாகத்தான் உள்ளே போனோம். )  கொண்டு எங்கேயோ போய் நிறுத்தினார் ட்ரைவர்.

வெய்யில் அனல் பறக்க ( இது அம்மியும் பறக்கும் ஆடி மாசம்பாங்க. ஆனா காத்தையே காணோம்.) கால் கொப்பளிக்க அந்தக் காரை விட்டிறங்கி நடந்தால் ( அடப்பாவிகளா எங்கேயோ கட்டிடம் இடித்த காரைகளை எல்லாம் கொட்டி வைத்து இருந்தார்கள். ) கால் அதில் பட்டு பொத்துப் போனதுதான் மிச்சம்.

கார் பார்க்கிங் ஏரியாவில் கொட்டினால் கல் எல்லாம் பொடிந்து மண்ணாகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ. அந்தப் பக்கம் முடி இறக்கும் இடம் வேறு இருந்தது . எனவே அந்த ஹாலைச் சுற்றி கோயிலின் முன் பக்கம் வந்தோம். அதற்குமுன் ஒரு பெரிய பிரம்மாண்டமான  புற்று இருந்தது. அங்கேயும் மக்கள் கூட்டம்.

வெளியிலேயே டிக்கெட் கவுண்டரைப் பார்த்த ரங்க்ஸ் உடனே போய் 50 ரூ டிக்கெட் வாங்கி வந்துவிடுகிறேன் இங்கேயே இரு என்று ரேகை வரைந்து சென்றார். நானும் கோயிலின் நடைபாதையில் இருந்த தடுப்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தேன். உடனே ஒரு போலீஸ்காரர் வந்து இங்கேயெல்லாம் நிக்கக்கூடாதும்மா. நகரும்மா. அங்கே கோயிலுக்குள்ளே போ. இல்லாட்டி இந்தப் பக்கம் வந்திடும்மா என்றார். பக்கத்தில் இருந்த எல்லாரையும் விரட்டினார்.

நானும் ரங்க்ஸ் இருந்த திக்கைப் பார்த்துக்கொண்டே கம்பியைச் சுற்றிக் கடந்து ( இரண்டு கல்யானைகள் இருக்கின்றன இருபுறமும். பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள் அதன் மேல். ) அதன் புறம் சென்று நின்றேன். கல் யானையின் பக்கம் ஒரு கலர் யானை என்று நினைத்தாரோ என்னவோ ஒரு பெண் போலீஸ் வந்து யம்மா இங்கே எல்லாம் நிக்கக்கூடாது . அந்தப் பக்கம் போம்மா என்றார்.அங்கே அமர்ந்திருந்த எல்லாரையும் துரத்தினார் இவர் ..

நான் அங்கே இருந்துதாங்க இங்கே வந்தேன் என்றேன் ( அது என்னவோ ரங்க்ஸைப் பார்த்தால் யாரும் இப்படிச் சொல்வதில்லை. ரங்க்ஸுக்கு மட்டும் இந்தக் கொடுமை எல்லாம் நடப்பதில்லை. ) கோயிலுக்குத்தானே வந்தோம் இவங்க என்ன குண்டு வைக்க வந்த மாதிரி விரட்டுறாங்க என்ற கடுப்ஸ் எனக்கு. குண்டாக இருப்பதால் மனித வெடிகுண்டுன்னு நெனைச்சிருப்பாங்களோ என்னவோ.

ஒரு வழியா இங்கே விரட்டி அங்கே விரட்டி நான் ஒரு வேனின் பின்னால் நின்றிருக்க ரங்க்ஸோ கம்பிக்கு அந்தப்பக்கம் சென்று என்னைப் பார்த்தார். ஓடிச்சென்று சேர்ந்துகொண்டேன். உள்ளே போனால் கூட்டமா அது , மாநாடு போல இருந்தது. .

ஒன்லி மூணே க்யூதான். அதாங்க பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். உள்ளேயே இன்னொரு கவுண்டர் இருந்தது. அட தெய்வமே. இது தெரிஞ்சா உள்ளேயே வந்து எடுத்துருக்கலாமென்று ரங்க்ஸ் சொல்லிக்கொண்டார்.

கூட்டமான கூட்டம் இங்கேயும். எந்தக் க்யூ என்று தெரியாமல் சிறிது நேரம் முன்னே பின்னே சென்று ஒரு வழியாக 50 ரூ க்யூவைக்கண்டுபிடித்தால் அது தான் உள்ளதிலேயே பெரிய க்யூ இதுதான் என்கின்ற அந்த சதி தெரியாமல் போய்விட்டது.

தர்மதரிசனக் க்யூ நகர்ந்துகொண்டே இருந்தது. 20 ரூ டிக்கெட்டும் ஓரளவு கூட்டத்தோடு நகர்ந்துகொண்டிருந்தது.50 ரூ க்யூதான் ப்ரதோஷ ப்ரதக்ஷிணக் க்யூ போல ( அதாவது நந்தியிலிருந்து கோமுகி வரை பின் கோமுகியிலிருந்து நந்திவரை என்று சுற்றுவோமே அந்த லெவலில் மூன்று பிரகாரமாகக் கம்பிகளோடு இருந்தது. அதிலும் அந்தக் கம்பிகள் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை இல்லாமல் அதன் பிறகிலிருந்து ஆரம்பித்ததால் பக்தகோடிகளின் அராஜகமும் க்யூவை மீறி இங்கும் அங்கும் புகுந்து கொள்வதுமாகக் களேபரமாக இருந்தது.

மேலும் அங்கே அவ்வளவு நேரம் இருந்த காவல்காரர் நம்மிடம் வந்து க்யூல வாங்கம்மா, நியாயமா நடந்துக்குங்க  என்றார். ( ஓ மை கடவுளே இதெல்லாம் எனக்கே நடக்கணுமா.. ) உடனே என் கோபம் கொப்பளித்து அவரிடம் நாங்க இந்த அம்மா பின்னாலேதான் வர்றோம்.( என்று எனக்கு முன்னே நின்றிருந்த பெண்மணியின் தோளைப் பிடித்தவாறு கூறினேன். அவரும் ஆமோதித்தார் )  குறுக்க வர்றவங்களைக் கேளுங்க, நாங்க  நியாயமாத்தான்  வர்றோம். அம்மாவுக்கே தெரியும் என்றேன் கோபுரத்தைப் பார்த்தபடி.

இதன் நடுவில் நாம் இப்போ உள்ளே போகப் போறோம் அப்போ உள்ளே போகப் போறோம் என்ற நினைப்பிலிருந்தபோதுதான் எப்போதும் வாங்கும் பூவையும் எலுமிச்சையையும் வாங்காமல் வந்திருப்பது தெரிந்தது. ஏதேனும் அதிருப்தியுடன் பேசினால் ரங்ஸின் அதிருப்தியும் நம்மேல் சேர்ந்துகொள்ளும் என்பதால் தட்டிலும் உண்டியலிலும் காசுபோட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கிறுகிறுவென்றுதான் வந்தது. இதில் பத்துப் பதினைந்து பேர் அக்கப்போருடன் அங்கங்கே திடீர் திடீரென்று நம்மைத் தள்ளிக்கொண்டு சாமி வந்துவிட்டது. உடம்பு சரியில்லை என்று சொல்லிக் குறுக்கே உரசிக் கடந்து போனார்கள். அப்போதெல்லாம் அந்தக் காவல்காரர் காணாமல் போய்விட்டார்.

ஒரு வழியாக சன்னதியின் வெளிகேட்டை வந்தடைந்தபோது அது வெளியில் பூட்டப்பட்டிருந்தது. ஒரு அர்ச்சகர் அங்கேயே தேங்காயை வாங்கி உடைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அங்கே ஒரு பத்துப்பேரை உள்ளே விட்டுவிட்டுக் கோயில் சிப்பந்தியும் முக்கிய அலுவலரும் துலாபாரம் பக்கம் போய் நின்று கொண்டுவிடுவார்கள். அதன் பிறகு அவரை நாம் சார் வாங்க வாங்க என்று கத்தி அழைக்க வேண்டும்.

அதற்குள் அவரிடமும் இன்னொரு காவல்காரரிடமும் சிலர் பணத்தை நைஸாகக்கொடுத்து நமக்கு முன்னே அந்தக் கதவின் வழி  குறுக்குவழியில் புகுந்திருப்பார்கள். இத்தனைக்கும் வெளியே நம்மை மிரட்டிய அந்தப் போலீஸ்காரர்கள் இங்கே எதையும் பார்ப்பதில்லை. சும்மா நாங்களும் இங்கே இருக்கோம் என்று குறுக்கும் நெடுக்கும் நடந்து போய் வந்தார்கள்.

இப்படி ஒவ்வொரு பேட்ஜாக பக்தர்கள் கொத்துக்கொத்தாக உள்ளே போய் வரும்போது பெரிய மீசை வைத்த சில ஸ்பெஷல் போலீஸ்காரர்கள் குடும்பத்தோடு உள்ளே சரசரவென்று போய் சாமி கும்பிட்டு மாலை மரியாதையோடு வந்தார்கள்.

நமக்கு முன்னே இரண்டு மூன்று பேட்ஜ் மக்கள் குறுக்கே போய்வந்ததைப் பார்த்ததும் இன்னொரு குழு உள்ளே நுழைய முயற்சிப்பது தெரிந்ததும் க்யூவில் நின்ற எல்லாரும் சத்தம் போட்டார்கள். அதில் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் என்னென்னா எங்கே அநியாயம் நடந்தாலும் எனக்காகத் தட்டிக்கேட்காத ரங்ஸே மற்றவர்களுடன் சேர்ந்து சத்தம் போட்ட அதிசயம் நடந்தது. என் காதை எல்லாம் தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.  இதெல்லாம் உண்மையா என்று கிள்ளியும் பார்த்துக்கொண்டேன்.  

ஒரு வழியாக உள்ளே போனால் அங்கே ஒரு க்யூ. ஒரு இரட்டை வரிசை பானா போல சுற்றி வந்தால் அங்கே ( இன்னொரு பக்க சன்னதிக் கதவு திறக்கப்படவில்லை அதனால் ) ஆறு ஆறு பேராகத்தான் உள்ளே விடுவோம் என்று விட்டார்கள்.

ஒரு வழியாக சுண்டல் கொடுக்கும் கூட்டத்துக்குள் ஓடுவதுபோல உள்ளே ஓடினால் அம்மனை எல்லா அர்ச்சகர்களும் பாதி பாதியாக மறைத்துக்கொள்ள அந்தப் பக்கம் நின்றிருந்தவர்களுக்கெல்லாம் ஒரு அர்ச்சகர் கை நிறையப் பூவைக்கொண்டுவந்து ஆளுக்கொன்றாகக் கொடுத்துச் சென்றார்.

நம் பக்கம் பிரம்மாண்டமான ஒரு அர்ச்சகர் தீபத்தைப் பேருக்குக் காட்டிவிட்டு வந்து ( இங்கே ஈரமான விபூதி போலத் தருகிறார்கள் ) . பிரசாதம் கொடுத்தார்.தட்டில் ரங்க்ஸ் பணம் போட்டார்.  அவ்ளோதான். ஒரு நிமிஷம் கூட நின்றிருக்க மாட்டோம். வெளியே வாங்க வெளியே போங்க என்று சத்தம்.

எங்கள் பக்கத்தில் வந்த ஒரு ஜோடி மாலை கொடுக்க அதைத் தூக்கி அம்மன் மேல் போட்டு இன்னொரு மாலையை உருவி அவர்கள் கையில் திணித்தார். என் முன் நின்றிருந்த ஒரு ஜோடி பூ கேட்க” அதெல்லாம் வெளியே தருவாங்க ”என்றார்.

அவர் விடாப்பிடியாகக் கேட்க உடனே  வேண்டா வெறுப்போடு ஒரு கதம்பத்தை அந்தம்மா கையில் விட்டெறிந்தார். நானும் நப்பாசையோடு பூ கேட்க. அதற்குள் ரங்க்ஸ் வெளியே போய் விட்டிருந்தார். திரும்பிப் பார்த்தால் காணலை. நானும் பூ வாங்கிவிடும் முயற்சியில் திரும்ப ஒரு முறை கேட்க. அந்தப் பிரம்மாண்ட அர்ச்சகர் தன் துண்டை இடுப்பில் கட்டியவாறு ஒரு அலட்சியத்துடன் ஹேஹேஹே என்று குலுங்கக் குலுங்கச் சிரித்து கைகளைப் பெரிதாக வீசியபடி ஆடியவாறு ”அதெல்லாம் வெளிய தருவாங்க.  மாலை கொண்டுவந்தால் மாலை . பூ கொண்டுவந்தால் பூ ”என்றார்.  அதையே அங்கே இருந்த பணியாளரும் ( கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல ) “பூ கொண்டுவந்தால் பூ ”என்றார். ”அடுத்த செட் வர்றாங்க வெளிய வாங்கம்மா.. வெளியே போங்கம்மா ”என்று வேறு சத்தம் போட்டார்.

அங்கே அம்மன் மேல் அவ்வளவு பூ கிடந்தது.துளி பூ கேட்டதற்கு ஏதோ இவர்கள் சொந்த வீட்டின் சொத்தைக் கேட்டது போல் அவ்வளவு எகத்தாளம். வரும் பெண்களுக்கு எல்லாம் கொடுத்தாலும் அங்கே குவிந்திருந்த மலை போன்ற பூ மிச்சமிருக்கும்.

உள்ளே திருவேற்காடு மாரியம்மன் மேலும் அதன் முன் நாகம் தலையைக் காக்க சிரசு மட்டும் இருந்த திருக்கோலத்திலும்  பூ மலையே இருந்தது. தட்டில் பணம் போட்டால் பூ கொடுப்பார் என்பதெல்லாம் அந்தக்காலம் போலும். ஒரு வேளை பூக்கடைக்காரர்களுடன் இவர்களுக்கு ஏதும் ஒப்பந்தம் இருக்கிறதோ என்னவோ. பக்தர்கள் பூ வாங்கிக்கொண்டுவந்தால் பூ கொடுங்க இல்லாட்டி அவமானப் படுத்துங்கன்னு.

கோயிலில் அம்மன் திருவுருவச்சிலைகளும் கதவுகளும் கூட வெள்ளியில் அமைந்திருந்தன. வெளியே வந்தால் ஒரு அர்ச்சகர் குங்குமம் கொடுத்தார். எனக்கு முன்னே சென்ற பெண்மணி அந்த அர்ச்சகரின் கரத்தில் பணத்தைரகசியமாய்த் (!) திணித்துவிட்டு நடந்தார். அந்த அர்ச்ச்கர்  ஆச்சர்யமாக அந்தப் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அதன் பின் வெளியே ப்ரகாரத்துக்கு மன உளைச்சலோடு வந்ததும் உற்சவ அம்மன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வரும்போது கூட்டமில்லாமல் இருந்தது. அந்த அர்ச்சகரின் கையில் அரளிப்பூ  இருந்தது. அவரிடம் சென்று பூ கேட்டால் இது அம்மனுக்கு சாத்த என்றார். ”சரி துளி பூ கொடுங்கள் உள்ளே கேட்டால் வெளியே கொடுப்பார்கள் என்றார்கள் ” என்றேன்.

என் முக வாட்டத்தை பார்த்தாரோ என்னவோ அந்த அர்ச்சகர் உடனே திரும்பி அந்த அரளிப்பூவைப் போட்டுத்  தீபம் காட்டினார். ரங்க்ஸ் தட்டில் பணம் போட  ஒரு எலுமிச்சையையும் ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவையும் கொடுத்தார். நான் நன்றி சொல்லும்விதமாக அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். ரங்க்ஸும் நானும் சந்தோஷமாக வெளியே வந்தோம்.

என்னையே கவனித்து வந்த ரங்ஸுக்கும் ஆசுவாசப் பெருமூச்சு. :) திரும்ப முதல்லேருந்து ----கோயிலுக்கு வெளியே பூ வாங்கு முன்னே ஏன் டிக்கெட் வாங்கப் போனீங்க என்பதில் இருந்து ----- எல்லாம் ஆரம்பிக்குமே.. மனுஷன் சமாளிக்க முடியுமா. :)

இங்கே மட்டும் க்யூவில் 3 மணி நேரம் ஆச்சு. நாள் கிழமை என்றால் வீட்டிலேயே கும்பிட்டுக்கொள்ளலாம் என்பதை நமக்கு நாமே திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியதாயிற்று. என்னவோ பள்ளிக்கூட அட்மிஷன் டைம்களில் பெரிய பெரிய பள்ளிக்கூடங்களில் வேலைபார்ப்பவர்கள் விடும் பந்தா எல்லாம் தோற்றுவிட்டது இந்த போலீஸ்காரர்களும், பணியாளர்களும், அர்ச்சகர்களும் பக்தர்களைப் பந்தாடியது.

பக்தர்களிடம் இவ்வளவு காசையும் வாங்கி அவர்களை ஒரு நிமிடம் கூட சாமி கும்பிட விடாமல் செய்வது என்ன நியாயமோ. அதுவும் தீபம் காண்பிக்காமலே விபூதிப் ப்ரசாதம் தருகிறார்கள். தீபம் காண்பிப்பதும்  பூ தருவதும் தட்டில்  பணம் போட்டாலும் சரிவர நடப்பதில்லை என்றால் இவர்கள் எல்லாம் அதிகாரத்துக்கு மட்டும்தான் பணிவார்கள் என்பதா.

பக்தர்கள் வணங்குவதற்காகக் கோயிலா இல்லை இந்தமாதிரிப் பேர்வழிகள் சொந்த வீடுபோல பந்தா செய்து பக்தர்களைப் பதர்களைப் போல விரட்டுவதற்காகக் கோயிலா.. சிந்திக்க வேண்டிய விஷயம்.

8 கருத்துகள்:

  1. Please just boycott all this type of temples for ever. Almighty is everywhere and pray from your home with peace of mind. Wasting your time, money and energy is not worth at all.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. பிரசித்தி பெற்ற தலங்கள் எல்லாம் தற்போது வணிக மையங்களாக
    மாறிக்கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. மக்களுக்கு இப்போ பக்தி பெருகிப்போச்சு. ஏன்னா இவ்வுலகில் வாழ்வதற்கு அவ்வளவு அக்கிரமம் செய்யவேண்டியதாய் இருக்கு. அதையெல்லாம் சாமி கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டியிருக்கு, என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராகுல் சுரேஷ் !

    நன்றி பெயரில்லா

    நன்றி யாழ்பாவண்ணன்

    நன்றி கிருஷ் ஆம் உண்மைதான்

    ஆம் பழனி கந்தசாமி சார். உண்மைதான் . கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. இறை நம்பிக்கை தவறல்ல
    ஆனால், தரிசிக்க கட்டணம் எனும்போதே (வெவ்வேறு தரங்களில் வேறு),
    அந்த (அனைத்து மத) வழிபாட்டுத் தலங்கள், வணிகத்தலங்கள் என்றாவதை அறிந்து, இப்படிக் கஷ்டப்பட்டு ஏமாறுவதை என்றைக்கு இந்தியர்களாகிய
    நாம் உணரப்போகிறோம்?

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)