திங்கள், 17 பிப்ரவரி, 2014

கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.

கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.

பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா என்பது திருவிளையாடல் காலத்துக் கேள்வி.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஆயில் உபயோகித்தாலும்  கூந்தலின் ஆயுள் என்பது டி என் ஏ தீர்மானித்ததுதான் எனத் தோன்றுகிறது.  கூந்தலுக்கு நறுமணம் உண்டா எனக் கேட்க வேண்டாம். முதலில் கூந்தலே உண்டா எனக் கேட்கலாம். எல்லாருமே அநேகமா குட்டையாக முடி வெட்டிங். பேபி கட், பாய் கட் என.


என் பாட்டி உபயோகப்படுத்திய கேசவர்த்தினி முதற்கொண்டு தோழிகள் உபயோகப்படுத்திய குணா கூந்தல் தைலம், மற்றும் நான் உபயோகப்படுத்திய நீலி பிருங்காதி இதெல்லாம் இதற்குத் தீர்வாக அமையவில்லை.


கருவேப்பிலை, மருதாணி, நெல்லிக்காய் எல்லாம் போட்டுக் காய்ச்சி எண்ணெய் தயாரிப்பார்கள். சிலருக்கு இளநரைக்காக இதைச் செய்து தேய்த்தது முடி அடர்த்தியாக வளர்ந்தது. மேலும் முயல் குட்டியின் ரத்தத்தை எண்ணெயில் போட்டுத் தேய்ப்பது, செம்பருத்திப் பூவை எண்ணெயில் ஊறவைத்து வெய்யிலில் புடம் போட்டுத் தேய்ப்பது., கரிசலாங்கண்ணியை அரைத்து வடை போலத் தட்டி எண்ணெயில் போட்டு உபயோகப்படுத்துவது , கார்போக அரிசி, கரிசலாங்கண்ணி, ஓரிதழ் தாமரை  எனப் பலதும் போட்டுக் ( கிட்டத்தட்ட 25 பொருட்கள் ) காய்ச்சிய எண்ணெயைத் தேய்ப்பது எல்லாம் பலனளிக்கவில்லை. உடல் சூடு எனக் காரணம் சொன்னார்கள்.

என் அம்மாவின் பாட்டி சிறுகீரைத் தைலம் என்ற ஒன்றைத் தயாரிப்பார்களாம். அது பற்றித் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோம். சிறுகீரையை அரைத்துச் சாறெடுத்து  அதை எண்ணெயோடு சேர்த்து சிறு தீயில் பல மணி நேரம் காய்ச்சி ஆறவைத்து உபயோகிப்பார்களாம். சாகும் வரை வெள்ளை வெளேரெனக் காடாக முளைத்திருந்தது அவரின் முடி. கையாலேயே வகிர்ந்து வாரி அழகாக சேவல் கொண்டை போட்டுக் கொள்வார். பார்த்துக் கொண்டேயே இருக்கலாம்.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான எண்ணெய்களைக் கண்டால் கண்ணைக் கட்டுகிறது. ஆண்டி ஹேர் ஃபால் ஆயில், நவரத்ன தேல், கூலிங் ஆயில்,  ஜாஸ்மின் ஆயில், ஆயுர்வேத தைலம், இது போக ஆண்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ , கண்டிஷனர், என பலதும் உபயோகிக்கிறார்கள் இளையவர்கள்.

எந்த எண்ணெயையும் தேய்க்காமல் பூ விக்க வரும் கலாக்காவுக்கு லேசான செம்பட்டை நிறத்தில் செங்கீரைக்கட்டுப் போல அவ்வளவு முடி. எண்ணெய் தடவாவிட்டால் அது போல பரட்டையாகிவிடும் , சடை பிடித்து விடும் என அம்மா பயமுறுத்துவார். எனக்குக் கன்னங்கரிய நிறத்தில் முடி இருந்தாலும் அடர்த்தி குறைவு. நீளமான  குதிரை வால் போல இருந்தது காலப் போக்கில் எலி வால் போல உருமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்.

அம்மாவின் தோழி சரோஜா டீச்சர் வீட்டுக்கு ஒரு முறை அம்மா பகல் நேரத்தில் பலகாரம் கொடுத்தனுப்பியபோது போனால் டீச்சர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். நல்ல காடு மாதிரி கூந்தல். ஆயிரம் நாகங்கள் நளினமாய் நெளிந்தது போல சுருள் சுருளான முடி. சோறு வடித்த கஞ்சியில்  ஒரு பாக்கெட் புலி மார்க்  சீயக்காய்த்தூளைப் போட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார். முடி என்றால் அதுதான் முடி.

தலையைப் பார்த்தால் எண்ணெய் கூட அவ்வளவு வைக்கவில்லை. எண்ணெயே இல்லை என்று சொல்லாம். இதுக்கு எதுக்கு சீயக்காய்த்தூள் தேய்க்கிறார் என்று தோன்றியது. ஆனால் குளித்து வந்ததும் சாம்பிராணியைப் போட்டு ஊஞ்சலில் அமர்ந்தாரே பார்க்கணும். எளிய உருவில் தெய்வமோ தேவதையோ அழகிய ராட்சசியோ ஊஞ்சலாடுவதைப் போல இருந்தது.

சேலத்தில் கோட்டையில் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்றபோதும் தாயாரை வெந்நீரில் ஸ்நானம் செய்வித்து அர்ச்சகர் தலைமுடியைச் சுற்றி முறுக்கி  நாம் துண்டு அணிவது போல அணிவித்து தீபம் காட்டினார். ஸ்நானம் செய்து வரும் நம் அம்மாவையோ பாட்டியையோ பார்ப்பது போலிருந்தது.

முன்பு எல்லாம் அட்டாச்சுடு சவுரி வைச்சு சமாளிப்பார்கள் பெண்கள். இப்போது அட்டாச்சுடு கிளிப்ஸ்கள் வந்துவிட்டன. தலையை சீவி பின்புறம் கொண்டுவது கிளிப்பைப் போட்டால் போதும் இடை வரையோ, நடை வரையோ முடி தொங்கும்.

தற்கால இளம் பெண்கள் திருமணம் வரை முடி இருந்தால் கூடப்போதும் பின்னாடி கவலை இல்லை என நினைக்கிறார்கள். ப்யூட்டி பார்லர்களில் ஆயில் அப்ளை செய்வதற்கும் ஹேர் வாஷுக்கும் செல்கின்றார்கள்.  டாக்டர்களைக் கன்சல்ட் செய்து இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொள்வது , அவர்கள் ப்ரிஸ்க்ரைப் செய்யும் எண்ணெயைப் பயன்படுத்துவது எனச் செல்கிறது நடப்பு.

சிக்கனை தினமும் தின்று வர விரும்பும் குழந்தைகளுக்கு சிக்கனின் சூட்டினாலேயே முடி கொட்டும், AVOID FAST FOOD  என்று கூறித் தடுக்க வேண்டியதாக இருக்கிறது.

கண்ணுக்கும் மூளைக்கும் அதிக வேலை கொடுக்கும் வேலைகள். சாஃப்ட்வேரில் பணிபுரிவோர் அல்லும் பகலும் ஆன்லைனில் இருக்க வேண்டி உள்ளது. கண் எரிச்சல், தூக்கமின்மையோடு  சரிவிகித உணவும் எடுக்காமல் இருப்பது முடி கொட்ட வழிகோலுகிறது. ஊர்விட்டு ஊர் மாற்றம், தண்ணீர் மாற்றம், இதுவும் ஒரு காரணம்.

பெங்களூருவில் டாக்டர் மோகன் பெங்களூரு  தண்ணிக்கு முடி கொட்டுமா என்ற கேள்விக்கு பெங்களூரு என்றில்லை பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் முதல் 90 நாட்கள் முடி கொட்டத்தான் செய்யும் . அதன் பின் வளரும் என்கிறார்

முடிக்கும் முளைக்கும், கொட்டும் காலங்கள் உண்டு. சில சீஸன்களின் கொட்டிக் கொண்டே இருக்கும். சில சீசன்களில் ரொம்பக் கொட்டாது. ஆகக் கூடி கொட்டும் விகிதம் தான் கம்மியே தவிர கொட்டாமலிருக்காது. அதிகம் நான் வெஜ் சாப்பிடுபவர்கள் ( ப்ரோட்டீன் எடுத்துக் கொள்பவர்கள் ), சில சுகர் பேஷண்டுகளுக்கு நிறைய முடி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிலருக்கு ஹெரிடிடியும் ஒரு காரணம்.தைராய்டு பிரச்சனைகளாலும் அதிகமான முடி உதிர்தல் ஏற்படுகிறது.

இருபது வயதிலிருந்தே இளம் வழுக்கையர்கள் பெருகிவிட்டது போல எண்ணெய் வியாபாரிகள் பெருகிவிட்டார்கள். WORK WHILE YOU WORK, PLAY WHILE YOU PLAY  என்பது போல  EAT WHILE YOU EAT ( WITH RIGHT VITAMINS AND MINERAL CONTENT FOOD ) ,  SLEEP WHILE YOU SLEEP  என்று அவசரமாக அறிவுறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆமாம் இப்போ புதுசா இந்துலேகான்னு ஒரு எண்ணெய் வந்திருக்காமே.. அது தடவினா முடி நல்லா வளருதாமே, கொட்டுறதே இல்லையாமே அப்பிடியா. நிஜமா மக்காஸ்.. எத்தைத் தின்னா பித்தம் தெளியும், எதனைத் தடவினா முடி முளைக்கும், என எண்ணெயைத் தேடி ஓடும் வாழ்வில்  யாரும் தன்னையக் கூடத் தேடுறதில்ல.. :)



 

6 கருத்துகள்:

  1. விலைக்கு தகுந்தபடி எண்ணெய்...! இந்தக் குழப்பம் எப்போது தீருமோ...?

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் இப்போ புதுசா இந்துலேகான்னு ஒரு எண்ணெய் வந்திருக்காமே.. அது தடவினா முடி நல்லா வளருதாமே, கொட்டுறதே இல்லையாமே அப்பிடியா. நிஜமா மக்காஸ்.. I think so.. a friend of mine is happy abt the results after using this oil...


    எத்தைத் தின்னா பித்தம் தெளியும், எதனைத் தடவினா முடி முளைக்கும், என எண்ணெயைத் தேடி ஓடும் வாழ்வில் யாரும் தன்னையக் கூடத் தேடுறதில்ல.. :)
    ada... ending Nachunu irukku !

    பதிலளிநீக்கு
  3. முடி தேடி ஓடி ஓடி முடி இழப்புத்தான் அதிகமாகிப் போச்சு

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ

    நன்றி முத்துக் குமார்

    நன்றி குமார்

    நன்றி சந்திரகௌரி

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)