திங்கள், 20 ஜனவரி, 2014

நவதானிய சமையல் குறிப்புக்கள். புதிய தரிசனத்தில்.

1. கவுனரிசி:-

தேவையானவை:-
கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)


செய்முறை:-
கவுனரிசியை சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும். வெளியில் எடுத்து நன்கு மசிக்கவும். சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.


2. சிவப்பரிசிப் பணியாரம்.

தேவையானவை :-
சிவப்பரிசி - 2 ஆழாக்கு தலை தட்டி
உளுந்து அதன் மேல் கோபுரமாக வைக்கவேண்டும்.
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
சிவப்பரிசி , உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து அரைக்கவும். அரை டீஸ்பூன் சீனி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாக ஊற்றி எடுத்து மிளகாய்த் துவையலோடு பரிமாறவும்.

3. கேப்பைப் புட்டு:-

தேவையானவை :-
கேழ்வரகு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை /ஜீனி - 1/3 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை.
தண்ணீர் தேவையான அளவு.
நெய் - 2 டீஸ்பூன்/

செய்முறை:-
கேழ்வரகைக் கழுவி நிழற்காய்ச்சலாகக் காயவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து உப்பு தூவிப் பிசறி சலித்து இட்லிச் சட்டியில் துணி விரித்து ஆவியில் வேகவிடவும். 20 நிமிடம் நன்கு வெந்ததும் இறக்கி உதிர்த்து நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துப் பிசறிப் பரிமாறவும்.

4. கோதுமைக் கொழுக்கட்டை :-

தேவையானவை :-
கோதுமை மாவு - 2 கப்
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்.
சீரகம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:-
வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு நன்கு மணலாக ஆகும்வரை வறுக்கவும். அதில் உப்புத் தண்ணீர் தெளித்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து , சீரகம் போட்டு லேசாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை தேங்காய்த் துவையலோடு பரிமாறவும்.


5. கம்பு பொரியரிசி மாவு.

தேவையானவை:-
கம்பு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை - 1/3ஆழாக்கு அல்லது ஜீனி - 1/3 கப்.

செய்முறை:-
கம்பை நன்கு சுத்தம் செய்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொறித்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொட்டுப்பொடிக்கவும். அதில் சீனி அல்லது நாட்டுச் சர்க்கரை பொடித்துச் சேர்த்துப் பிசறிக் கொடுக்கவும்.

6. குறுவை அரிசிப் பாயாசம்:-

தேவையானவை :-
குறுவை அரிசி - அரை ஆழாக்கு
பால் - 1 லிட்டர்
ஜீனி - 1/2 ஆழாக்கு
ஏலக்காய் - 2
முந்திரி - 10
திராக்ஷை - 10
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
குறுவை அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து குக்கரில் அரை லிட்டர் பாலில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி மிச்ச பாலையும் சேர்த்து ஜீனி கரையும் வரை காய்ச்சி நெய்யில் முந்திரி திராக்ஷை பொறித்துப் போட்டு ஏலத்தைப் பொடி செய்து போட்டுப் பரிமாறவும்.

7. பார்லி வெஜிடபிள் சூப்:-

தேவையானவை:-
பார்லி - 1 கைப்பிடி
காய்கறிக் கலவை - 1 ( காரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணிக் கலவை பொடியாக அரிந்தது.)
தக்காளி - 2 சாறு எடுக்கவும்.
கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:-
பார்லியை 2 டம்ளர் தண்ணீரில் குக்கரில் நான்கு விசில்களுக்கு வேகப்போடவும். வெந்ததும் இறக்கி காய்கறிக் கலவை , தக்காளிச் சாறு சேர்த்து இன்னும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்புப் போட்டு நன்கு வேகவிடவும். ஒரு பானில் வெண்ணெயை உருக்கி கார்ன் ஃப்ளோரைச் சேர்த்து வறுத்துப் பால் ஊற்றவும். அது வெள்ளைச் சாஸாகக் கொதித்ததும் இறக்கவும். ஒரு சூப் கப்பில் பார்லி காய்கறி சூப் 2 கரண்டி ஊற்றி ஒரு கரண்டி வெள்ளை சாஸ் ஊற்றி மிளகு தூவிப் பரிமாறவும்.

8. குருணை கோதுமைக் களி:-

தேவையானவை:-
கோதுமை மாவு - 1 கப்
அரிசிக் குருணை - 1/2 கப்
தண்ணீர் - 6 கப்.
உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:-
குருணையைக் கழுவித் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் கோதுமை மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். உருண்டு வெந்து வரும்போது கிளறி உப்பு சேர்த்து இறக்கவும். முருங்கைக் கீரைக் குழம்புடன் பரிமாறவும்.

9.வரகரிசிப் பொங்கல்:-
தேவையானவை:-
வரகரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
முந்திரி - 6

செய்முறை:-
வரகரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றி , பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய் சேர்த்துக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் இறக்கி உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

10. திணைஅரிசி காய்கறி உப்புமா:-

தேவையானவை:-
திணை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி
மிளகு சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்
காய்கறிக் கலவை - 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி )
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 இரண்டாக கீறவும்
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அதில் பச்சை மிளகாய், கருவேப்பிலை, காய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

11. கோதுமை ரவை இட்லி:-

தேவையானவை:-
கோதுமை ரவை - 2 கப்
உளுந்து - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
உளுந்தை ஊறவைத்து அரைக்கவும். கோதுமை ரவையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றித் தண்ணீர் சேர்த்து உளுந்துடன் கலந்து உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும். மறுநாள் புளித்ததும் இட்லியாக ஊற்றி எடுத்து கார சட்னியோடு பரிமாறவும்.

12. கம்பு கீரை அடை:-

தேவையானவை:-
கம்பு மாவு - 2 கப்
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கவும்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:-
கம்பு மாவில் எண்ணெய் தவிர அனைத்தையும் போட்டுப் பிசைந்து பாலித்தீன் ஷீட்டில் அடையாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் நன்கு வேக வைத்துப் பரிமாறவும்.

13. கேப்பைக் கூழ்;-

தேவையானவை:-
கேழ்வரகு மாவு - 1 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை:-
கேப்பை மாவில் தண்ணீரை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும். இரவு புளித்ததும் மறுநாள் காலையில் கிண்டி தயிர் உப்பு சேர்த்து சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து உண்ணலாம்.

அல்லது கேப்பை மாவில் தண்ணீர் சேர்த்துக் கரைத்து அப்போதே அடுப்பில் வைத்துக் கிண்டவும் . கூழ் ஒட்டாத பதம் வந்ததும் ( கண்ணாடி போல மின்னும்). இறக்கி உப்பு சேர்க்கவும்.

அதை 3 பாகமாக பிரித்து ஒரு பாகத்தில் நெய்யும் சீனியும் சேர்த்து உண்ணவும்.

இன்னொரு பாகத்தில் மாவத்தல் பருப்புக் குழம்பு அல்லது கறிக் குழம்பு சேர்த்து உண்ணலாம்.

மூன்றாம் பாகத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்து கீரைப் பொரியல் அல்லது மசியல் சேர்த்து உண்ணலாம்.

14.. நவதானிய தோசை:-

தேவையானவை:-
பச்சரிசி - 1 கைப்பிடி
புழுங்கல் அரிசி - 1 கைப்பிடி
உளுந்து - 1 கைப்பிடி
பாசிப்பயறு- 1 கைப்பிடி
கொண்டைக் கடலை - 1 கைப்பிடி
தட்டைப் பயிறு - 1 கைப்பிடி
கேழ்வரகு - 1 கைப்பிடி
கம்பு - 1 கைப்பிடி
பார்லி - 1 கைப்பிடி
காய்கறிக் கலவை துருவியது - 1 கைப்பிடி ( காரட், பீன்ஸ்)
இஞ்சி - 1 இன்ச் துண்டு துருவியது
பெரிய வெங்காயம் - 1 துருவியது
தேங்காய் - 1 கப் துருவியது.
கொத்துமல்லி - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது

அரைக்க:-
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன் அல்லது பெருங்காயம் - 1 கட்டி
உப்பு - 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு , கொண்டைக் கடலையை ஒன்றாகக் கழுவி ஊறவைக்கவும். கம்பு , பார்லி, கேப்பையைத் தனித்தனியாக கழுவிக் காயவைத்து மிக்ஸியில் குருணையாக பொடித்துக் கொள்ளவும்.

பச்சரிசி புழுங்கலரிசி உளுந்தைக் கொரகொரப்பாக அரைக்கவும். பச்சைப் பயிறு தட்டைப் பயிறு கொண்டைக் கடலையையும் கொரகொரப்பாக அரைக்கவும். இரண்டையும் சேர்த்து கம்பு, கேப்பை, பார்லிக் குருணை பொடியைக் கலக்கவும். உப்பு சேர்க்கவும். வரமிளகாயையும் சோம்பையும் அல்லது பெருங்காயத்தையும் அரைத்துச் சேர்க்கவும்.

தேங்காய்த் துருவல், காய்கறிக் கலவை, வெங்காயத் துருவல் , கொத்துமல்லி சேர்த்து உப்பு போதாவிட்டால் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசைக்கல்லில் தோசைகளாக சுட்டு எடுக்கவும்.


டிஸ்கி :- இந்த ரெசிப்பிக்கள் டிசம்பர் 16- 31. 2013 , புதிய தரிசனத்தில் வெளிவந்தவை.


3 கருத்துகள்:

  1. பதிவை bookmark செய்தாகி விட்டது... வீட்டில் பிறகு வந்து குறித்துக் கொள்வார்கள்.. நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. அத்தனையும் அசத்தலான ரெசிபிக்கள்... பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஆதி :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)