செவ்வாய், 14 ஜனவரி, 2014

அன்னப்பட்சியை நீவியபடி... எம். ஏ, சுசீலாம்மா..

இன்று எனது கவிதைத் தொகுப்பு  “அன்ன பட்சி ” சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகை பதிப்பகத்தில் அரங்கு எண் . 666., 667 இல் கிடைக்கும்.

அனைவருக்கும்
இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். !
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.!

கல்லூரியை விட்டு வந்து பல வருடங்களான பின்பு போன மாதம்தான் சுசீலாம்மாவை அவரது கோவை வீட்டில் சந்தித்தேன்.துருப்பிடித்துக் கிடந்த நான் தொடர்ந்து இயங்குவதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.

குளிரும் மழையுமாய் பூமியில் ஈரப்பூக்கள் சிலிர்க்கவைத்துக் கொண்டிருந்தன. ஆர். எஸ் புரத்தில் அவர்கள் வீட்டுக்குள் போகுமுன் குற்றாலச் சாரலில் நனைந்தவள் போல இருந்தேன். 

கதவைத் தட்டுமுன் குளிரோடு சேர்ந்து இதயமும் நடுங்கிக் கொண்டிருந்தது படபடப்பால். ஒரு நீலப் புடவையில் அம்மா தேவதையாகக் காட்சி தந்தபடி கதவைத் திறந்தார்.

லேசான நரை தவிர அவரிடம் வேறெந்த மாற்றமுமில்லை. அன்று நாங்கள் கல்லூரியில் கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருந்தார். காலச் சக்கரம் சுழல்கிறதா இல்லையா எனத் தெரியாமல் அப்படி ஒரு பொன்னார் திருமேனி. 

பரவசத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டேன். கதகதப்பான கைகளைப் பற்றியதும் அடைக்கலமான ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது.

கணவருடனும் என்னுடனும் உரையாடிக்கொண்டே உண்ணும் பொருட்களையும் அருந்தும் பானத்தையும் எடுத்து வந்தார். 

நான் சின்னப் பெண்ணாகப் பார்த்த அவரது மகள் மீனாவுக்கு இரண்டு பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் இருந்தார்கள். !

மிகப் பெரிய வீட்டினிலே பெரிய புத்தக அலமாரியும் கணினியுமாக இருந்தது அம்மாவின் அறை. அதில் பல புத்தகங்களை நான் வாசித்து இருக்கக்கூடும். கல்லூரிப் பருவத்தில் அவர் தினம் ஒரு புத்தகமாக வழங்க அதைப் படித்துச் செழுமைப்படுத்திக் கொண்டவர்கள் நானும் உமா மகேஸ்வரியும்.

பல வருடத்துக் கதைகளை அரைநாளில் பேசிட முடியுமா.. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொட்டுத் தொட்டுப் போய்க் கொண்டே இருந்தது பேச்சு, அங்கங்கே பூத்த பூக்களைத் தொட்டுச் செல்வது போல.

அம்மாவின் உதவியாளரும் பணிப்பெண்ணும் வந்ததும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். ஜன்னலோரம் அடுக்கப்பட்டிருந்த பொம்மைகளும் எங்களுடன் சேர்ந்து புன்னகைத்தன.

அம்மா அதே கம்பீரம், அதே அழகு, அதே குரல். 

புத்தக அலமாரியிலிருந்து ஆசை ஆசையாய் எனக்குச் சில புத்தகங்களை வழங்கிக் கொண்டே இருந்தார். கை கொள்ளாமல் அள்ளிக் கொண்டு வந்தேன் அவரது பிரியத்தையும் புத்தகங்களையும். நிறைவாகத் தூறிக் கொண்டே இருந்தது வானம் குளிரக் குளிர அவரது அன்பைப் போல. 


இன்று அவர் எனக்காக துரிதகதியில் எழுதித் தந்த அணிந்துரையின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு.

////‘அன்னப்பட்சி’ தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே  குறிவைப்பவை அல்ல; ஒற்றைப்பரிமாணம் கொண்டவையும்  அல்ல. சமூகப்பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இயல்பாகவே இவற்றுக்கு அமைந்து விடுகிறது.////

இவ்வாசகங்கள் பின்னட்டையிலும் இடம் பெற்றிருக்கின்றன. 

எல்லாருக்கும்தான் ஆசிரியர் வாய்க்கிறார்கள். ஆனாலும் என் அம்மா போல யாருமே இல்லை என்று நிச்சயம் சொல்வேன்.

அன்னப்பட்சியை நீவியபடி அணிந்துரையில் கனிந்துரைத்த அம்மாவின்  அன்பிற்கு முன் நான் கரைந்து நிற்கின்றேன். அன்று அணைத்துக் கொள்ளத் தோன்றியது. அணைப்பதாய் நினைத்து நமஸ்கரித்தேன். வார்த்தைகள்தான் என்னுடைய பலம் என்று நினைப்பேன். அன்றும் இன்றும் உங்கள் அன்பின் முன் வார்த்தைகளற்று நிற்கின்றேன். என்றென்றும் வந்தனங்களுடன் உங்கள் அன்பு மகள்.

---- அழகான முன்மொழிதலுக்கு நன்றி அதீதம். 


12 கருத்துகள்:

  1. இனிய சந்திப்பு... மிக்க மகிழ்ச்சி...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அன்னப்பட்சி வெளியீட்டிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்கூட!!

    பதிலளிநீக்கு
  3. நினைவலைகளின் அருமையான வெளிப்பாடு....

    பதிலளிநீக்கு
  4. நினைவலைகளின் அருமையான வெளிப்பாடு....

    பதிலளிநீக்கு
  5. மகிழ்வான நினைவலைகள் மகிழ்வாகத் தொடரட்டும் !.....
    இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
    மலரட்டும் ......

    பதிலளிநீக்கு
  6. muthal photovil photo eduppavarum photovil iruppathu arumaiyana shot

    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அம்மா
    அழகான நினைவலைகள். மிக்க மகிழ்ச்சி
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. நானும் சந்தித்த நிறைவு ஏற்பட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பாராட்டுகள்... வாழ்த்துகள்..

    சுசீலாம்மாவை தில்லியில் இரண்டு, மூன்று முறை மற்ற பதிவர்களுடன் சந்தித்து பேசியிருக்கிறேன்... பழகுவதற்கு இனிமையானவர்... மென்மையானவரும் கூட..

    அடுத்த முறை கோவை செல்லும் போது சந்திக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  10. நன்றி தனபாலன் சகோ

    நன்றி மனோ சாமிநாதன்

    நன்றி இளங்கோ

    நன்றி அம்பாளடியாள்

    நன்றி ஜெயக்குமார்

    நன்றி பாண்டியன் சகோ

    நன்றி அப்பாத்துரை சார்

    நன்றி விஜி

    நன்றி ஆதி :)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)