வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஆகாயத் தாமரையிலிருந்து மண்புழு உரம்.

ஆகாயத் தாமரையிலிருந்து மண்புழு உரம்.

நீர்நிலைகள்,குளம்குட்டைகள், ஏரிகள் என்று எங்கு எடுத்துக் கொண்டாலும் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு அதிகம். இதனால் நீரோட்டம் தடைபடுவதுண்டு. கோவையில் திருச்சி ரோட்டின் ஆரம்பத்தில் உள்ள ஏரியிலும் , சிங்கா நல்லூரிலிருந்து திருச்சி ரோடு வரும் வழியில் உள்ள ஏரியிலும் ( இதனால் இங்கே படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளது. )
ஏராளமான அளவில் ஆகாயத்தாமரை வளர்ந்து  நீரை மறைத்துக் கொண்டிருக்கும். அதைப் படகிலிருந்து ஒரு பணியாள் இழுத்துப் பிய்த்துக் கொண்டிருப்பார். ஒரு பக்கம் நீக்க இன்னொரு பக்கம் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும்.

அதே போல கேரளா சென்றிருந்தபோது கொச்சுவெளி பீச்சில்  கடற்கரைக்குச் செல்வதற்கு முன்பிருந்த இந்த ஏரியில்  ஆகாயத் தாமரை மண்டியிருந்தது.  ஏரியை அடைத்து மூடி இருந்தது.

இதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம் என்பதை  எப்போதோ படித்த ஞாபகம் வந்தது.  திருத்துறைப் பூண்டியை அடுத்த ஆதிரெங்கத்தில் உள்ள இயற்கை வேளாண்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர். ஜெயராமன் ,  நம் முன்னோர்கள் எருக்குழியில் இட்டு மக்க வைத்து உரமாகப் பயன்படுத்தினர் எனக் கூறுகிறார்.

தற்போது இதை 4 அடி அகலம் , 15 அடி நீளத்தில் 6 அடி உயரத்துக்கு ( ஒரு அடி உயரத்துக்கு ஒரு முறை ) ஆகாயத்தாமரை செடிகளைப் பரப்பி அதன் மீது மாட்டுச் சாணம் அல்லது மக்கிய தொழு உரத்தைத் தூவவேண்டும். இவ்வாறு ஆறு அடுக்குகளாக அடுக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒரு மாதத்துக்குத் தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போது 6 அடி உயர அடுக்கு 3 அடியாகக் குறைந்துவிடும்.

அப்போது இதில் ஒரு கிலோ மண்புழுவை இட்டு  மேல்புறத்தில் மாட்டுச் சாணம்,  வெல்லம், புளித்த தயிர் ஆகியவை கொண்ட கலவையைத் தெளிக்க வேண்டும். இதைத் தின்று இனப்பெருக்கும் செய்யும் மண்புழுக்கள் மக்கிய ஆகாயத்தாமரையைத் தின்று வெளியேற்றும் கழிவு நல்ல தரமிக்க உரமாகும்.

இது விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பகிர்ந்தேன். ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்பு எண்  94433  20954.

5 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதமான விடயம். ஊர் பஞ்சாயத்து சபைகள் இத்தகைய திட்டங்களை மக்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும், இதனால் ஆகாயத் தாமரைகளும் ஒழியும், மண் புழு உரங்களும் விவசாயிகளுக்கு கிட்டும்.

    பதிலளிநீக்கு
  2. உபயோகமான பதிவு. சனிக்கிழமைகளில் வெளியாகும் 'எங்கள்' பாசிட்டிவ் செய்தித் தொகுப்புக்கு இந்தச் செய்தியின் முக்கியப் பகுதியை எடுத்துக் கொண்டேன்! நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நிரஞ்சன்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)