திங்கள், 8 ஜூலை, 2013

பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..

பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்.:-

பதினைந்து வருடங்களுக்கு முன்பு மும்பைப் புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மீது அமிலம் வீசப்பட்ட செய்தி படித்து அதிர்ச்சியாய் இருந்தது. வேலைக்குச் சென்று உழைத்துக் களைத்து வரும் மகளிர் மீது கடும் வெறுப்புக் கொண்ட சிலர் செய்த அக்கிரமச் செயல் அது.

இதேபோல் அந்த சமயத்தில் பெங்களூரில் தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணின் மீது அமிலம் வீசப்பட்டதும் அவர் உடனே சிகிச்சை மேற்கொண்டு தப்பிப் பிழைத்ததும் செய்தியாக வந்தது. ஆசிட் வீச்சுக்கு முன்பு அழகிய மலர் போன்றிருந்த அவர் சிகிச்சைக்குப் பிறகு திடீரென பல வருடங்கள் முதுமை அடைந்தது போல இருந்தது அவரது புகைப்படங்கள். மேலும் உடை சரியாக உடுத்த முடியாமல் மேலாகப் போர்த்தி இருந்தார். எல்லா இடங்களிலும் சதை பேர்ந்து வெள்ளைத் தோல் திப்பி திப்பியாக இருந்தது. கசக்கி எறியப்பட்ட காகிதம் போல சுருங்கி இருந்தார். பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

இந்த மாதிரி நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழ்ந்தது தற்போது அடிக்கடி நிகழ ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்திலும் நிகழ ஆரம்பித்து இருக்கிறது. பெண்கள் மீது அதீத வெறுப்போ அல்லது அதீத விருப்போ இதன் காரணமாய் இருக்கிறது. இவ்வாறு பெண்கள் மீது மட்டும் ஆசிட் வீச்சு நடைபெறும் காரணம் என்ன. ? இது போல எந்த ஒரு ஆண்மீதும் கூட வேறெந்தக் காரணங்களுக்காகவும்  ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றதாக கூற முடியாது.

தன்னால் முடியும் என்று எண்ணி படித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களையும், துணிவோடு செயலாற்றும் பெண்களையும், மிக அழகிய பெண்களையும் குறிவைத்து நடக்கும் இந்தத் தாக்குதல் இந்தியாவில்தான் அதிகம். பெண்களைப் பார்த்து அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சி கொள்ளும் ஒரு சில ஆண்கள் நிகழ்த்தும் கோழைத்தனமான கோரச் செயல் இது.

படிப்பின் மூலமோ, திறமையின் மூலமோ வெல்ல முடியாத பெண்ணைக் கண்டு காழ்ப்புறுவது ஒரு வகை என்றால்., தன்னைக் காதலிக்காத அழகான பெண் யாருக்குமே கிட்டக்கூடாது, அவள் அழகைச் சிதைக்க வேண்டும். அவள் தன்னம்பிக்கையை உருக்குலைக்க வேண்டும் என்ற ஆணாதிக்க மனோபாவ சிந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

பெண்ணை ஆணுக்கு அடங்கிய ஒரு பொருளாகவே, அவனுடைய ப்ராப்பர்ட்டியாகவே சமூகம் கருதுவதன் வெளிப்படைதான் இது. பெண் என்பவள் எப்போதும் ஆணுக்குக் கட்டுப்பட்டவள் என்ற சிந்தனைகளின் ஆதிக்கமே இது போன்ற செயல்களின் வெளிப்பாடு.

பொது இடங்களில் பெண்களைப் பார்த்தால் அவர்களின் வயது, தகுதி, தரம் ஆகியன கருதாது மூன்றாம்தர தமிழ்ப்பட ஹீரோக்கள் போல தங்களையும் ஹீரோவாக நினைத்துக் கொண்டு பெண்களை அணுகுவதும், தங்களின் தகுதி, தராதரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாததும் ஒரு காரணம்.

ஒரு பெண்ணிற்கு தன் மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என ஆராய்ந்தே பார்க்காமல் எனக்குப் பிடித்திருக்கிறது அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. இதெல்லாம் தரம் கெட்ட தமிழ் சினிமாக்களைப் பார்த்தும், 99% பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்து விளம்பரங்கள் பார்த்தும்தான் வருகிறது. ஊடகங்களின் பங்கும் இதுதான்.

நல்லொழுக்கம் கற்பிக்கப்பட்ட மனிதர்கள் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தவறிழைக்கத் தயங்குவார்கள். இதிலும் சுய ஒழுக்கமற்றவர்கள், பொருளாதாரத்தில் கீழ்நிலை கடைமட்ட சமூகத்தினர் , மற்றும் இளைய தலைமுறையினர் சினிமா, விளம்பரங்கள் மட்டுமல்ல அவர்கள் வாழும் சூழ்நிலைகளில் இருந்து கற்றே இந்த வினைகளைச் செய்கின்றனர்.

பெண்ணுக்குத் தாலி வேலி, மூக்கணாங்கயிறு மாட்டுதல், போன்ற சொற்றொடர்கள் மூலம் சமூகத்தில் பெண் என்பவள் ஒரு விலங்கைப் போல அடக்கப்படவேண்டியவள் என்றும் சொத்தைப் போலக் கட்டிக் காக்கப்படவேண்டியவள் என்றும், போகப் பொருள் என்றும் தவறான கருத்துக்களைப் பரப்புகின்றார்கள்.

வினோதினி பொறியியல் கற்றவர். அவர் கட்டிடத் தொழிலாளி சுரேஷைக் காதலிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி 3 மாதம் போராடி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். அவரது தந்தை ஜெயபாலன் தன் மகளுக்கு நிகழ்ந்தது போல ஆசிட் வீசியவருக்கும் ஆசிட் வீசி தண்டனை வழங்கக் கோருகிறார். பெற்ற வயிறு எவ்வளவு துடித்திருக்கும்.

தான் மீண்டு வருவோம் என பத்ரிக்கை, தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்த விநோதினி கண்கள் மற்றும் நுரையீரல் உச்சபட்சமாக சேதமடைந்ததன் காரணத்தால் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டார். விருப்பமில்லாத பெண்ணை விரும்பாத பெண்ணை அழிப்பது என்பது எவ்வளவு கோரச் செயல். அவருடைய குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்து வேலை கிடைத்து சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கும் அந்தப் பெண்ணை அழித்தது அடுத்து வரும்பெண்களையும் பாதிக்கலாம்.

”உலகம் கெட்டுக்கிடக்கு, படித்தது போதும். உனக்குத்  திருமணம் செய்யவேண்டும் . வீட்டிலேயே இரு” என இனி பெரியவர்கள் பெண்களை முடக்கலாம். இப்போதுதான் பெண் கல்வியில் எழுச்சி பெற்று வரும் கிராமங்களில் இந்த செயல்கள் இனி பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்ப, வேலைக்கு அனுப்ப யோசிக்க வைக்கும். பெண் முன்னேற்றம், பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு என்பவை இன்னும் பின் தங்கும்.

இதே போல சிலவருடங்களுக்கு முன் பெங்களூரில் சாஃப்ட்வேரில் பணிபுரியும் ஒருவன் அதேதுறையில் பணிபுரியும் தன்னுடைய காதலி தன்னை விட்டு விலகியதால் கொன்று விட்டான். சில மாதங்களுக்கு முன் ஒரு இளைஞன் கோவையிலும் தான் காதலித்த பெண் தன்னைக் காதலிக்காததால் அவள் வீட்டுக்குச் சென்று கத்தியால் குத்திக் கொன்று விட்டான். இதெல்லாம் பெண்ணை ஒரு உயிராகக் கருதாமல் தன்னுடைய அடிமைப் பொருளாகக் கருதும், இரையாகக் கருதும் ஆதி மனிதனின் காட்டுமிராண்டித் தன மனோபாவத்தின் வெளிப்பாடு.

டெல்லியில் தாமினிக்கு நடந்ததும் சரி, தமிழ்நாட்டில் புனிதாவுக்கு நிகழ்ந்ததும் சரி, பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கும் அவலநிலையின் முடிவுதான் இது. பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்தில் சென்று மது போதையிலிருந்த காமுகர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு தாமினி உட்பட்ட அந்த நிகழ்வு முடிவதற்குள் சண்டிகரில் அதே போல் ஒரு பெண்ணைப் பேருந்தில் கடத்தி பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.தமிழகக் கிராமத்தில் ஒற்றையடிப்பாதையைக் கடந்து பள்ளிக்குப் படிக்கச்சென்ற புனிதாவை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான் ஒருவன்.

அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத கிராமங்களில் இருந்து பெண்கள் பெருநகரங்களை நோக்கிப் படிக்கச் செல்லவேண்டியதாய் இருக்கிறது. பதின் பருவங்களின் உடல் ரீதியான தொந்தரவு, மன ரீதியான தொந்தரவு, குடும்பத்தின் பணரீதியான தேவைகளைக் கடந்து கல்விக்குச் செலவழித்துப் படிப்பது, சமூகத்தின் முன் தானும் உயர்ந்து காட்டவேண்டும் தன் குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளோடு போராடி ஜெயிக்கும் பெண்களை பெண் என்ற ஒரே காரணத்துக்காக உடலாக மட்டும் பார்க்கும் சமூகத்தை, ஆணாதிக்க வெறியர்களை என்ன செய்வது.

அடிப்படையிலேயே ஆணும் பெண்ணும் ஒன்று என்று கற்பிக்கப்பட வேண்டும்.  நன்னெறிக் கொள்கைகள் போதிக்கப்பட வேண்டும். விளம்பரங்கள், சினிமாக்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். சமூகத்தின் கண்ணோட்டம் மாறவேண்டும். மது ஒழிப்பு மீண்டும்கொண்டு வரப்படவேண்டும். காதலிக்காத பெண்ணை காமத்தால் அடக்கியாளும் அல்லது அழித்துவிட எண்ணும் மனோபாவங்கள் மாறவேண்டும்.


தாமினியும் சரி, வினோதினியும் சரி தாங்கள் குணமடைந்து மீண்டு வந்து வாழவேண்டும் என்று விரும்பினார்கள். ஒன்றும் அறியாத, தவறேதும் இழைக்காத இவர்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளோடு இறந்துவிட்டார்கள். இவர்களைப் போன்ற எல்லாப் பெண்களுக்கும் நிகழ்ந்த கொடுமைக்கு இந்திய சமூகத்தின் பொறுப்பற்ற தனமும்.,அது வளர்த்து விட்ட ஆணாதிக்க சிந்தனையும்தான் முழுக்க முழுக்க காரணம்.
வர்மா கமிஷன் அரசிடம் கொடுத்துள்ள அறிக்கை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து பெற்ற  கிட்டத்தட்ட 80, 000 யோசனைகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை., ஆயுள் தண்டனை வழங்க பரிந்துரை செய்துள்ளதாக நீதிபதி வர்மா கூறியுள்ளார். மேலும் இது போன்ற வழக்கை விசாரிக்க காவல் சரக எல்லைகளை நீக்குதல், அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கையை எளிமையாக்குதல், பேருந்துகளில் பயணத்தைப் பாதுகாப்பாக்குதல், பெண்கள் சிறுவர் காப்பங்களை கண்காணிக்க செயல்திட்டம் வகுத்தல், இத்தகைய குற்றம் செய்வோரை அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தல், ஆகியனவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன .
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாக பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகும்போது சட்டத்தை மீறுவோருக்கும், செயல்படவிடாமல் தடுப்போருக்கும், கடமை செய்யத் தவறும் அரசு ஊழியருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம் . அமிலம் வீசி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 ( அ) பிரிவின்படி இழப்பீடு வழங்கப் படவேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,இதில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினருக்கு வழக்கமான சட்டத்தின்படி தண்டனை வழங்க ஆயுதப் படையின் சிறப்புச் சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

என்பது திருக்குறள். அதெல்லாம் போய் விட்டது தன்னை அகழ்வாரை சுனாமி, பூகம்பமாகி விழுங்குகிறாள் மண் மகள். மண்ணைத் தூர்த்து நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சுவது போல பெண்ணை அவளின் தாய்மை குணத்தை சுரப்பு வற்றும்வரை உறிஞ்சுகிறது ஆணாதிக்க சமூகம். அவள் வீறுகொண்டு எழுந்து விழுங்கத் தொடங்குமுன் விழிப்பது நலம்.பெண்களை சக ஜீவன்களாக நடத்துவதும் ஆண்கள் மனிதநேயமிக்க மனிதர்களாய் நடந்து கொள்வதும் முக்கியம்.


7 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை தேனக்கா..

    இப்பொழுதுதான் மெதுவாக வெளியே வர ஆரம்பித்திருக்கும் பெண்ணினத்தை இந்த மாதிரியான செயல்கள் கண்டிப்பாக மறுபடியும் வீட்டுக்குள் முடக்கி விடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை...
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாந்தி

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr
    ( S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    பதிலளிநீக்கு
  6. மனதை உருக்குகின்ற செய்திகள்..
    மனித நேயம் மலரட்டும்.. பெண்கள் பெருமையுடன் வாழட்டும்!..

    தங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாழ்க நலம்..

    http://blogintamil.blogspot.com/2015/01/blog-post_29.html?

    பதிலளிநீக்கு
  7. பகிர்ந்தமைக்கு நன்றி யாதவன் நம்பி சகோ.

    பகிர்ந்தமைக்கு நன்றி துரை செல்வராஜு சகோ.

    நன்றி வலைச்சரம் & கலையரசி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)