வியாழன், 20 ஜூன், 2013

ரயில் நிலைய அவதிகள்:-

ரயில் நிலைய அவதிகள்:-

கடல், மயில், யானை, குழந்தை, வானவில் இந்த வரிசையில் பெரும்பாலோருக்குப் பிடித்த ஒன்று ரயில்.  ரயில் ஓடிவரும்போது பார்த்து ரசிக்காம இருக்க முடியாது. அழகான ராட்சசன் வர்றது போல இருக்கும். அவ்வளவு காதல் எனக்கு ரயில் மீது. 

அதே அளவு காதல் ரயில்வே ஸ்டேஷன்கள் மீதும். காரைக்குடியிலும் கும்பகோணத்திலும் மிக நீண்ட ரயில்வே ப்ளாட்பாரங்கள் உண்டு. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும்  ஏதோ பைபாஸ் ரோட்டை கண் கொள்ளும் அளவு பார்க்குற மாதிரிப் பார்க்கலாம். வாகிங் போறவுங்க, ஜாகிங்க் போறவுங்கள எல்லாம் கூட இப்போ ரயில்வே ஸ்டேஷன்ல பார்க்க முடியுது.



அடிக்கடி கரண்ட் கட் ஆகும் தென் தமிழ்நாட்டுல இருக்கிறதால  அதன் பாதிப்பு ரயில்வே நிலையத்திலும் இருக்கு. கரண்ட் போனா அவங்க ஜெனரேட்டரத் தட்டுற வரைக்கும் ஃபான் நின்னு கொசுக்கள் நம்மளதூக்கிட்டுப் போயி பாலாத்துலயோ  மகாமகக் கொளத்துலயோ போட்டுடும்.

ஒரு மாதம் முன்னாடி ஊர் போக வேண்டி சாதாரண டிக்கட் கிடைக்காததால  தட்கால்ல டிக்கட் புக் செய்துட்டு ( ஏசிதான் கிடைச்சுது) காத்திருந்தோம். நம்ம ஊருக்கு  ட்ரெயின் வரும்போது எல்லாருக்கும் மூன்றாம் ஜாமம் அல்லது நாலாம் ஜாமம் ஆகியிருக்கும். நாம் மட்டும் ஓடி ஓடி கோச் தேடி உக்கார்ந்து டிடி ஆர் வர வரைக்கும் முழிச்சிருக்கணும்.

விடியற்காலையில் 3. 05 க்கு வரவேண்டிய ட்ரெயின் என்னைக்கும்  கரெக்டா 3. 30 அல்லது 3.50 க்குத்தான் வரும். அன்னைக்கு நாம் 2. 45 க்கு போயாச்சு. ட்ரெயின் கோச் எந்த வரிசையில் இருக்குன்னு  எலக்ட்ரானிக் போர்டையும் பார்த்தாச்சு.  எஸ் 11, எஸ் 10 .... எஸ் 1 , ஏ 1, ஏ 2, பி 1, பி 2, ஹெச், ஜெனரல் கம்பார்ட்மெண்ட்,  இந்த வரிசையில் இரண்டு லைனில் பாதிப் பாதியாக ஒளிர்ந்தது .

உடனே என் கணவர் அந்தப் பக்கம்தான் வரும் என்று அதன் வலதுகைப்பக்கம் காண்பித்தபடி பி 1 கோச் என்று கருதப்படும் இடத்தில் லக்கேஜுகளைத் தூக்கிக் கொண்டுபோய் அமர்ந்தோம். விடியற்காலை நேரமானதால் கூலிக்காரர்கள் யாரும் இல்லை. அவர்களிடம் கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள்.

ஒவ்வொரு கோச் நிற்குமிடத்திலும் அந்த ஊர் பெயர் எலக்ட்ரானிக் போர்டில் ஒளிரும். ட்ரெயின் வரும்போது ட்ரெயினின் நம்பரும்  எந்த கோச் என்பதும் ஒளிரும். எனவே சிரமமில்லாமல் அங்கேயே இருக்கலாம்.

நம்ம ட்ரெயிந்தான் ரொம்ப லேட்டா வருமே. நாம் போய் உக்கார்வதற்கும் கரண்ட் கட் ஆவதற்கும் சரியாக இருந்தது. கரெக்டா 3 மணிக்கு கட் பண்ணிட்டாங்க. ஆனா 4 மணிக்கு கரெக்டா வராது. ஒரே கும்மிருட்டு. ஜெனரேட்டர் பார்சல் ரூம் எல்லாம் தாண்டித்தான் வந்தோம். இருந்தும் ஒரு ஆள் கூட வந்து ஜெனரேட்டரை ஆன் செய்யவேயில்லை. கருங்கும்மிருட்டில் இந்த மாதிரி ஸ்டேஷன்களில் பைரவர்களின் தொல்லை அதிகம். தெரியாமல் இருட்டில் மிதித்து விட்டோமானால் கடித்து வைத்து விடும் .

இந்த ஊரில் ராத்திரியில் தெருக்களிலேயே நடமாட முடியாது. கார்ப்பரேஷன் வண்டிகள் நாய்களை பிடிப்பதில்லை போல. அவை ஒன்றுக்குப் பத்தாய் இனப்பெருக்கம் செய்து நம்மை மிரட்டக் காத்திருக்கும். இதனால் வண்டியில் செல்லவும் முடியாது. நம்மை ஏதோ அந்தத் தெருவையே  திருட வந்தவர்கள் போல இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை துரத்திக் குலைத்தபடி வரும்.  அதன் சகபாடிகளும் ஆதரவு காட்டியபடி தொடர்ந்து வரும்.

இன்னைக்கு நாமதாண்டா இதுகளுக்குக் கசாப்பு என்ற பயம் ஏற்படுவதைத் தவிர்க்க ஆட்டோவிலேயே வந்து விடுவது வழக்கம். ஊர்தான் சின்ன ஊர். ஆனால் ஆட்டோ வாடகை எல்லாம் அமெரிக்க டாலரில் கொடுப்பது போல கொடுக்கணும்.

கரண்ட் கட்டிலும், நாய் பயத்திலும் அசையாமல் கொசுக்கடியில் அமர்ந்திருக்க வேண்டி வந்தது. அன்னியனிடம்தான் கேக்கணும் இது என்ன விதமான தண்டனை என்று. ஒரு வழியாக நாம் டென்ஷன் எல்லாம் ஆகி ஒருவரை ஒருவர் எதுக்கோ கடிந்து கொள்ளும்போது யாரோ வந்து ஜெனரேட்டரைப் போட்டார்கள். ஓரளவு விளக்கு எரிந்தாலும் கோச் விபரம் காட்டும் எலக்ட்ரானிக் போர்டுகள் ஒளிரவில்லை. அதுக்கு கனெக்‌ஷன் கொடுக்கவில்லை போல இருந்தது. மைக்கில் எங்கோ ட்ரெயின் வருவதாக சொன்னார்கள்.

வந்தான் இருட்டிலும் அந்த அழகான ராட்சசன் தடதடத்தபடி. சும்மா சல்லென்று போனதில் கம்ப்பார்ட்மெண்டுகளின் வெளிப்பக்கம் கோச் நம்பரே தெரியவில்லை . பொதுவாக இதில் கோச் தெரிய வேண்டி முப்பட்டைத் தகடு பொருத்தி இருபுறமும் கோச் எண் தெரியும்படி பெயிண்ட் செய்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அவை உடைத்து விட்டது போல மூளியாக இருக்கிறது. யார்தான் ட்ரெயினை எல்லாம் சிதைப்பார்களோ..

ஒரு வழியாக இஞ்சின் பக்கம் கோச் தெரியாமல் ஓடி செல்லை ஆன் செய்து சார்ட்டைப் பார்த்தால் எஸ் 11.. அடடா தப்பாக இந்தப் பக்கம் வந்துட்டோம். நம்முடைய கோச் ( அடுக்கப்படிருந்த அழகு அப்படி ) அந்தக் கடைசி.. உடனே லக்கேஜுகளோடு ஓடத்துவங்கினோம். அந்த அர்த்த ராத்திரியிலும் 4, 5 பேர் இறங்கினார்கள். 4, 5 பேர் ஏறினார்கள்.

எஸ் 6 க்குக் கிட்டத்தில் ஓடத்துவங்கும்போது ட்ரெயினுக்கு சிக்னல் கிடைத்துப் புறப்படத் தயாராகியது. உடனே எஸ் 6 இல் ஏறி உட்பக்கமாகவே எஸ், 5, எஸ்  4, எஸ் 3, எஸ் 2, எஸ் 1 என்று  எல்லாரையும் இடித்து நடைபாதையிலும் மேலிருந்து கால் தொங்கப்போட்டிருந்தவர்களின் பாதங்களில் ஆசீர்வாதங்கள் வாங்கியபடி போய்ச்சேர்ந்தோம். அட ஏசி கோச் செல்ல இயலாதபடி தடுக்கப்பட்டிருந்தது.

அதற்குள் பாத்ரூம் பக்கம் வாஷ்பேசினின் பக்கச் சுவற்றில் முகுதுகை வைத்தபடி ரங்கமணி நின்றுவிட்டார். கொஞ்சநேரம் நானும் நின்று பார்த்துவிட்டு அந்தக் கடைசி சீட்டில் படுத்திருந்தவர் விட்டிருந்த கொஞ்சம் இடத்தில் தொற்றியபடி அமர்ந்திருந்தேன். குளிரான  அதிகாலை என்பதால் பாத்ரூம் செல்பவர்களும் வருபவர்களுமாக ஒவ்வொருவராக வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

கோச் எங்கே நிற்கும் என்பதை சரியாகப் பார்க்கவில்லை என நான் கோபமாகப் பார்க்க அதன் பின் ரங்கமணி என் பக்கமே திரும்பவில்லை. குளிர்காத்து வீசி வீசி அடிக்க கதவைச் சாத்தினோம். ரங்கமணியை என் எதிர்ப்பக்கம் உக்கார அழைத்தும் ( அங்கே சிறிது இடம் இருந்தது ஆனால் தலையைக் குனிந்து கொண்டுதான் உக்காரவேண்டும். மிடில் பர்த் இடிக்குமே ) வராததால் எங்கே விழுந்து விடுவாரோ என்ற பயத்தோடு அமர்ந்திருந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ( 50 நிமிடம் இருக்கலாம் ). கழித்து நடுவில் எங்குமே நிற்காத ரயில் அடுத்த  பெரிய ஸ்டேஷனை வந்தடைந்தது. அப்பாடா என்று ஓட்டமாக கோச்சை விட்டு இறங்கி எங்கள் ஏசி கோச்சுக்குள் ஓடி ஏறினோம். உடனே ரயில் புறப்பட்டு விட்டது. பின்னே லேட்டாக வந்த நேரத்தை எல்லாம் காம்பன்சேட் செய்ய வேண்டாமா..

ஆனால் அங்கே முன்னாடியே எங்கள் பர்த்தில் ( தேர்ட் ஏசி ) யாரோ உபயோகித்த ப்ளாங்கெட்டுகளும் போர்வைகளும் கம்பளிகளும் கிடந்தன. உருண்டு சுருண்டிருந்த பெட் ஸ்ப்ரெட்டுகளை விட்டுவிட்டு ( எதிர்த்தாற்போல எங்கள் தலையணையையும் சேர்த்து யாரோ ஒருவர் 3 தலையணை வைத்துப் படுத்துக் கலைத்திருந்தார் ) .

ரங்கமணி ஒரு தலையணையோடு படுத்துக் கொள்ள நான் வேண்டா வெறுப்பாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு என் ஷாலையே போர்த்திக் கொண்டு படுத்தேன்.  ஏற்கனவே ஒரு மணி நேரம் கடந்து விட்டதால் இன்னும் 3 மணி  நேரத்தில் ஊர் வந்து விடுமே என தூக்கமே வரவில்லை. ஏசியும் போதிய அளவு இல்லை. வேர்க்க வேறு செய்தது.

ஏன் 4 மணி நேரப் பயணத்துக்காக அன்டைமில் ட்ரெயில் போய் இந்த அவதி என்கின்றீர்களா. என்ன செய்வது . பஸ்ஸில் சென்றால் அது 5 அல்லது 6 மணி நேரமாகிறது. பஸ் புகையும் ஒத்துக் கொள்வதில்லை. வளைந்து நெளிந்து செல்லும் வயல்பாதைகளைக் கடப்பதால் வயிற்றைக்  குமட்டும். உக்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை . சில சமயம் நின்றுகொண்டே பயணிக்க வேண்டி வரும். ஒவ்வொரு ஊரிலும் பஸ் நின்றபின் அடுத்த பஸ்ஸை ஓடிச் சென்று பிடித்து சீட் பிடிக்க வேண்டும் . இதில் லக்கேஜுகளையும் சுமந்து கொண்டு மிக உயரமான அந்த பஸ்படிகளில் ( ஏன் படிகளை இவ்வளவு உயரத்தில் வைக்கின்றார்களோ தெரியவில்லை) . தவ்வி ஏறி உக்கார்ந்து ( சீட் வேறு இருவருக்குத்தான் பத்தும் அதில் மூவர் கைகால் கட்டப்பட்ட கைதிகள் மாதிரி அமர்ந்து )போக வேண்டும்.

ட்ரெயின் என்றால் உக்காரலாம். படுத்துக் கொள்ளலாம். பாத்ரூம் வந்தால் போகலாம். வாந்தி வராது. அன் டைமாக விழித்தாலும் ஊரில் சென்று ரெஸ்ட் எடுத்துக்கலாம். காரில் செல்வதை விட காசு கம்மிதானே என ட்ரெயினில் ஏசியில் எடுத்தாலும் இந்த அவதிகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது. காசைக் கொடுத்து நோவை வாங்கின கதையாக -- கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும ஆடிக்கிட்டிருந்துச்சாம் என்ற கதையாக  விழித்தபடி ஒருவழியாக ஊர்வந்து சேர்ந்தோம்.

ரயில் நிலையத்தில் சரியான மின்சாரமும், கோச் போர்டுகளும் இருந்திருந்தால் இதில் பாதி அவதி இருந்திருக்காது. மேலும் ஒருவர் ஏசியில் பயணம் செய்தாலும் முதல் ஊரில் இறங்கினவர் உபயோகப்படுத்தின போர்வைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்பதையும் ரயில்வே தெளிவுபடுத்தினால் தேவலாம்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 28,ஜனவரி 2013 திண்ணையில் வெளிவந்தது.


5 கருத்துகள்:

  1. ம்... ரொம்ப அவஸ்தை பட்டிருப்பீங்க போல....

    பதிலளிநீக்கு
  2. சிரமம் தான்...

    கவனிப்பார்களா...? (சந்தேகம் தான்...)

    பதிலளிநீக்கு
  3. Ennai Naai kadithathuthaan ninaivirku varukirathu intha posting parthathum. 5 months aakivittathu. Piraku bike il irunthu nayal vizhuthathum thaan ninaivirku varukirathu. Avathai thaane ithellam.

    பதிலளிநீக்கு
  4. ஆம் ஸ்கூல் பையன்.

    நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)