செவ்வாய், 18 ஜூன், 2013

கணினிக் கண்ணாடி.:-

கணினிக் கண்ணாடி.:-
***************************
இறுக்கித் தாழ்போட்டு
யாருமற்ற அறையில்
சுவற்றுக் கண்ணாடியில்
தன் பிம்பத்தைத் தானே
பார்த்து ரசிப்பது போன்றது
கணினிதிரையில் விரியும்
தன்கவிதைகளை ரசிப்பது.

 இன்னொரு கைக்கண்ணாடியில்
பிரதிபலிக்கும்
அதிர்ஷ்ட மச்சங்கள்
ஆச்சர்யப்படவைப்பதும்
ஒச்சங்கள் தடவிப்பார்க்க
வைப்பதுமாய்.
 திருத்தப்படாத புருவமும்
ஒப்பனையில்லாத முகமுமாய்
எதார்த்தாமாய் சிலவும்,
குத்துப் புதர்தலைமுடியாயும்
குழைந்து வளைந்து உடலாயும்
துன்ப இன்ப அதிர்ச்சியாய் சிலவும்.
அடிக்கடி புன்னகைத்துப் பார்ப்பதாய்
சிலதை மட்டும் அடிக்கடி படித்து
விழி விரித்துப் பார்ப்பதாய்
சிலதை மட்டும் வெறித்துப் பார்த்து
வித்யாசங்களை உணர்ந்துபார்ப்பதாய்
சிலதை மட்டும் ரசித்துப்பார்த்து
நிர்வாண உடம்பின் வாடையைப்
போலெழும் கணினிச் சூட்டில்
கொஞ்சம் சலிக்கும்போதோ
கண்கள் வலிக்கும்போதோ
கண்ணாடியின்மீது
திரைக் காப்பானைப்போட்டு
வெளியேறியபின்னும்
மிச்சமிருக்கும் அறைக்குள்
நிர்வாணமாய்த் திரிந்த
உடலின் வாசம் மேலெழும்பும்
கவிதை உடலின்
கணினிக் கணப்பாய்

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 15 - 31, 2013,  அதீதத்தில் வெளியானது. 


1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)