புதன், 13 பிப்ரவரி, 2013

மாமியார் vs மருமகள்

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.



இன்றைய காலகட்டத்தில் மாமியார் மருமகள் உறவு என்பது எப்படி இருக்குனு மூணு மாமியார் மருமகளை பேச வைத்தோம். திருமதி லலிதாபாய் மாமியார்.,அவங்க மருமகள் திருமதி ரேவதி. திருமதி ஆர் பொன்னி., அவங்க மருமகள் எஸ் ஜெயந்தி., திருமதி புஷ்பாவதி அவங்க மருமகள் லதா. இந்த மூன்று ஜோடிகளுமே இந்த தலைப்பை சொன்னதும் சே ..சே எங்களுக்குள்ள கருத்து வேறுபாடே கிடையாது என்றார்கள். உங்க மாமியார், மருமகள் கிட்ட உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது சொல்லுங்கன்னு சொன்னப்புறம் கொஞ்சம் சொன்னாங்க. அப்போ தெரியவந்ததை தொகுத்திருக்கிறேன்.

லலிதாபாய் :- என் மருமக கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது அவளோட பணிவுதான். எல்லா சொந்தக்காரங்களையும் தன் சொந்தக்காரங்களா உபசரிப்பா, என்னோட 52 வயதில் முதல் மருமகள் வந்தா. அவளை வேலை வாங்கணும், நான் உக்கார்ந்து இருக்கணும் அப்பிடிங்கிற எண்ணம் உதிச்சதில்லை. ஊருக்கு போறான்னா போயிட்டு வரேன்மா என சொல்லிச் செல்வாள்.

ரேவதி:- என் மாமியார்கிட்ட பிடிச்சது என்னன்னா மனசுல எதையும் வச்சுக்கமாட்டாங்க.நாம அவங்களுக்குப் பிடிக்காத கருத்து சொன்னா கூட மனசுல வச்சுக்க மாட்டாங்க. விஷயத்தை பெரிசாக்க மாட்டாங்க. பொண்ணு, மருமகள்னு வித்யாசம் பார்க்கமாட்டாங்க. எந்த ஒரு விஷயத்திலயும் நமக்கு ஒரு மாதிரி பொண்ணுங்களுக்கு ஒரு மாதிரின்னு இல்லை. மகளுக்கு சப்போர்ட் பண்ற மாதிரியே மருமகளுக்கும் சப்போர்ட் பண்ணுவாங்க.

ஆர். பொன்னி:- என் மருமகளும் எல்லார்கிட்டயும் பாசமா இருப்பா. யார் வந்தாலும் அன்போட உபசரிப்பா. பாரபட்சம் பார்க்கமாட்டா. எனக்கு உடம்பு சரியல்லைன்னாலும் அவதான் பார்ப்பா. என் பொண்ணுங்களைவிட அவதான் என்னை நல்லா கவனிச்சுக்குவா.

எஸ். ஜெயந்தி:- என் மாமியாரும் வித்யாசம் பார்க்கமாட்டாங்க. இவங்க எனக்கு கிடைச்சது கிஃப்டட்னு சொல்லலாம். ரொம்ப ஃப்ரெண்ட்லி, சட்டுன்னு உணர்ச்சி வசப்படமாட்டாங்க. ரொம்ப பஞ்சுவல்,. ப்ளான் பண்ணி செய்வாங்க எந்த காரியத்தையும். சுத்தம். வீட்டை சரிபண்ணிக்கிட்டே இருப்பாங்க. எதையும் மெயிண்டெயின் பண்ணுக்குவாங்க. அவங்க விஷயத்தை அவங்களே பண்ணிக்குவாங்க. பசங்க மேலே பாசம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பசங்களுக்குப் பிடிச்சதை பார்த்து பார்த்து செய்றது. ஆன்மீகத்துல ஈடுபாடு இதெல்லாம் பிடிக்கும்.

புஷ்பாவதி:- என்னை கவனிச்சுக்கிறது, எது கேட்டாலும் செய்து கொடுக்குறது எல்லாம் பிடிக்கும். என் மருமக கைப்பக்குவம் அருமையா இருக்கும். அவ கையால சாப்பிடவே இங்கு வருவேன். என் பெரிய மகன் வீட்டிலும் இங்கேயும் நல்லா கவனிசுக்குவாங்க. இவ நான் வெஜ் நல்லா சமைப்பா. என் பொண்ணுங்க பிள்ளைங்கபோல மருமகளையும் சொல்லலாம். பிள்ளைகள்ட்ட போல என் மருமகள் கிட்டயும் எனக்கு அதிக சுதந்திரம் இருக்கு. நான் பொண்ணுங்களை எதிர்பார்ப்பதில்லை. என் பையன்கள் ரெண்டுபேரும் என் மருமகள் இரண்டுபேருமே எனக்கு தேவையானதை கவனிச்சுக்குவாங்க.

லதா:- மாமியாரை நானும் என் கொழுந்தனார் மனைவியும் அம்மான்னுதான் சொல்வோம். நிறைய பேர் எங்க ரெண்டு பேரையும் உடன் பிறந்த சகோதரின்னும் எங்க மாமியாரை எங்க அம்மான்னும் நினைச்சுக்குவாங்க. எதாயிருந்தாலும் அந்த நிமிஷமே சொல்லிருவாங்க. பின்னாடி போய் பேசுறது இல்லை. யார்கிட்டயும் சொல்றது இல்லை

லலிதாபாய்:- என் மருமகளும் அப்படித்தான் எனக்கு நேரம்தவறாம உணவு கொடுப்பா., நான் சுகர் பேஷண்ட். சரியா டயத்துக்கு கொடுப்பா. கொஞ்சம் அளவு குறைஞ்சாலும் தெரியும் அவளுக்கு. இன்னும் போட்டுக்குங்கம்மான்னு நேரம் தவறாம அளவு தவறாம உணவு பரிமாறுவா. அம்மா சாப்பிடுங்கன்னு சொல்லும் வார்த்தை பரிவோட இருக்கும். இன்னும் வேணும்னு கேட்காமல் நன்கு பரிமாறுவாள்.

ஆர். பொன்னி:- என் மருமகளும் பால், ஜூஸ், காஃபின்னு பார்த்து பார்த்துகலந்து கொடுப்பா. வீட்டுல நாத்தனார்கள் வந்தா சமைக்க விடமாட்டா, எத்தனை பேர் வந்தாலும் அவ கையாலேயே சமைச்சு நல்லா பரிமாறுவா. இப்படி ஒரு மருமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். ரொம்ப பாசமுள்ள மருமகள்.

எஸ். ஜெயந்தி:- என் மாமியாரும் எங்க சொந்தக்காரங்க யார் வந்தாலும் அவங்களை நல்லா மரியாதை கொடுத்து வரவேற்பாங்க. கவனிப்பாங்க. வீட்டுல எக்ஸ்ட்ரா ரெண்டு பேராவது சாப்பிட அதிகம் செய்ய சொல்வாங்க.

புஷ்பாவதி:- எனக்கும் சுகர் உண்டு . என் மருமகள் நடு இரவில் கூட எனக்கு சமைத்துக் கொடுத்திருக்கிறாள்.

லதா:- என் நான்வெஜ் சமையல் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். எந்த சின்ன விஷயமும் ஷேர் செய்துக்குவாங்க. அவங்க பொண்ணுங்களை விட நல்லா பார்த்துக்குவாங்க. சொல்லப்போனா கல்யாணமாகி அவங்க ரெண்டுபேரும் போயிட்டதால நாங்கதான் இவங்களுக்கு பொண்ணுங்க. எங்க டூர் போனாலும் கடைக்கு பர்சேஸுக்கு போனாலும் நாங்களும் எங்க கொழுந்தனார் வீடும் அம்மாவோடதான் போவோம்.

லலிதாபாய்:- பிடிச்சது பத்தி நிறைய சொல்லலாம். என் மருமககிட்ட பிடிக்காததுன்னா அது ஒரு ஆர்க்யூமெண்ட்னா கடைசிவரை அதை விடுறது இல்லை இதுதான். ஒரு பாயிண்டைப் பிடிச்சால் அதையே சொல்வது. ஒருவர் பொறை இருவர் நட்புங்குறமாதிரி சிலசமயம் அமைதியா இருந்துடுவேன். விவாதிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எனக்கு பொதுவா இது எதையும் நினைவில் வைத்துக் கொள்வது பிடிக்காது.

ரேவதி:- என் மாமியாரிடம் பிடிக்காத குணம்னா ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு. அந்த அளவு பிடிக்காததுன்னு எதுவுமே இல்லை. சில சமயம் கருத்து மாறுபாடு வரும். சிலசமயம் நான் வெளியே ஒரு நாள் பூரா செல்ல வேண்டிவந்தா அவங்களுக்கு நான் வெளியே போறது பிடிக்காது. இதையும் அவங்களா சொல்லலை. நானா புரிந்துகொண்டேன். அவங்க என்னை அப்போ மிஸ் செய்கிறாங்கன்னு. சிலசமயம் வெளியூர் போக வேண்டி வந்தா தவிர்க்க முடியலை.

ஆர். பொன்னி :- சில சமயம் மௌனப்போராட்டம் நடக்கும். என் மருமகளுக்கு வீட்டை நீட்டா வைச்சிக்க தெரியாது. கரெக்ட் டைமுக்கு ரெடியாக மாட்டா. அவளுடைய வேலைகளில் ப்ளானிங் கிடையாது. பத்துமணிக்கு ஒரு இடத்தில் இருக்கணும்பா 9.30 க்குத்தான் ரெடி பண்ண துவங்குவா.சிலசமயம் மௌனப்போராட்டம் நடக்கும். என்னால மாத்திக்க முடியலை என்பாள். காஸ்ட்லி பொருளானாலும் அங்க அங்கேயே வைப்பா.

எஸ் ஜெயந்தி:- என் மாமியாரிடம் பிடிக்காதுன்னு எதுவுமே இல்லை. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லுவாங்க. சொல்ல மாட்டாங்கன்னு இல்லை. ஆனா சிலசமயம் அவங்க வெளிப்படுத்துறது வச்சி அவங்களுக்குப் பிடிக்கலைன்னு தெரியும் அப்புறம் அதுபோல செய்ய மாட்டேன்.

புஷ்பாவதி :- வீட்டில் இருப்பவர்கள் நேரத்தோடு செய்வார்கள். என் மருமகள் வேலைக்கு செல்வதால் கொஞ்சம் வர லேட்டாகும் ஆன வந்தபின்னாடி அவங்கதான் நமக்கு செய்து கொடுப்பாங்க. நாமதான் கொஞ்சம் அனுசரிச்சு போகணும். எனக்கு கொஞ்சம் பிடிக்காதது என்னன்னா பணத்தை ரொம்ப செலவு செய்வாங்க.கொஞ்சம் சிக்கனமா இருக்கலாம்னு நினைப்பேன்.

லதா:- இதுவரை என்கிட்ட எதுவுமே பிடிக்காதுன்னு அம்மா சொன்னதில்லை. ஆனா இப்படி அப்போ அப்போ சொன்னாங்கன்னா திருத்திக்கலாம். இப்படி வெளிப்படையா பேசிட்டா அதுக்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் செய்து நடந்துக்குவேன். பிடிக்கலைன்னா அதை செய்யக்கூடாதுன்னு செய்றதில்லை.

லலிதாபாய்:- பொதுவா என் பையன் மருமகளோ. பொண்ணு மாப்பிள்ளையோ தம்பதியா பேசிகிட்டு இருந்தாலோ, கொஞ்சம் குரலுயர்த்தி சத்தம் போட்டுக்கிட்டாலோ அந்தப் பக்கம் போறதில்லை. அவங்களுக்கும் பிரைவசி, இண்டிவிஜுவலிட்டி வேணும். அந்தப் பிரச்சனை தானாவே சரியாகிடும்னு நான் ஐடியா ஏதும் குறுக்கே புகுந்து சொல்வதில்லை. ஆனா நான் சிலது சொல்லி இருக்கேன் நம்ம குடும்ப பழக்கவழக்கம்னு . அதை எல்லாம் இவங்க கட்டாயம் கடைபிடிச்சு வர்றாங்க. அது எனக்கு சந்தோஷம்தான்.

ரேவதி:- சொந்த அம்மாவோட கூட காண்ட்ரவர்சி வரும். அப்போ நாம நம்ம அம்மான்னு அட்ஜஸ்ட் பண்ணிப் போறதுபோல மாமியாரையும் அம்மாவா நினைச்சா அட்ஜஸ்ட் செய்து போகலாம்.

ஆர். பொன்னி :- மாமியார் மருமகள் ரிலேஷன்ஷிப் அம்மா மகள் உறவுபோல இருந்தா வாழ்க்கை அருமையா இருக்கும். அவங்க நம்மை அம்மாவா நினைக்கணும். நாம அவங்களை பொண்ணா நினைக்கணும்.மெயினா என் பசங்களை சொல்லணும். என் ரெண்டு பையன்களும் என் மேல ரொம்ப அன்பு. நம் பையன்கள் நம்மை எப்படி நடத்துவாங்களோ அதே போலத்தான் நம் மருமகளும் நம்மை நடத்துவாங்க. எத்தனையொ வீடுகள்ல பலவித பிரச்சனை இருக்கு. ஆனா என் குடும்பத்துல அப்பிடி எதுவும் இல்லை. இது கடவுள் எனக்களித்த பரிசு. கடவுளோட ஆசீர்வாதம்.

எஸ் ஜெயந்தி:- வந்த வீட்டை தன்னோட வீடா நினைக்கணும். கணவரோட சொந்தக்காரங்களை எல்லாம் நம்ம சொந்தக்காரங்களா நினைக்கணும். என் மாமியார் இருப்பதால்தான் என் பொண்ணை விட்டுட்டு நான் நிம்மதியா வேலைக்கு போக முடியுது. இவங்க இருப்பதால் சேஃபா இருக்கான்னு. இன்னிக்கு WE CANT TAKE RESPONSIBLITY அப்பிடின்னு நிறைய மாமியார், ஏன் அம்மாக்கள் கூட இருக்காங்க. அப்பிடி இல்லாம எங்க குடும்பம் இன்னும் கூட்டுக் குடும்பமா இருக்கு. வாரம் ஒருமுறை ஒரு பாமிலி கெட்டுகெதர் இருக்கணும். எதையும் ஈஸியா எடுத்துக்கணும். மாக்னானிமஸா எடுத்துக்கணும். வாழ்க்கை அருமையா இருக்கும்.

புஷ்பாவதி:- ஆமாம் அவங்க அம்மா மாதிரி நினைக்க நாமும் பொண்ணு மாதிரி நினைக்கணும் இதுதான் முக்கியம்.

லதா:- உண்மைதான் அம்மா மகள் மாதிரி எல்லா மாமியார் மருமகளும் இருந்துட்டா அங்கே பிரச்சனைக்கு இடம் இல்லை. அப்புறம் எல்லா விஷேஷங்களையும் பெஸ்டிவல்ஸையும் குடும்பம் முழுமைக்கும் ஒண்ணா கொண்டாடணும். அதுவும் நல்ல உறவுமுறையை வளர்க்கும்.
*****************************************************

வருடம் ஒரு முறை மாமியாரை விஷேஷ தினங்களில் சந்திக்கும்போதும் நன்கு கலந்து உறவாடாமல் ஒதுங்கி இருக்கும் சின்னப் பெண்களே இவங்க கருத்தை எல்லாம் படிச்சிட்டு உங்க எண்ணங்களை மாத்திக்குங்க. என்னைக்கும் மாமியார் வெர்சஸ் மருமகளா இல்லாமல் அவங்க உங்க தாயா அன்பு செலுத்தும்படி வாழுங்கள்.

டிஸ்கி:- இந்தப் பேட்டிக் கட்டுரை நவம்பர் 2011 இவள்புதியவளில் வெளிவந்தது.


5 கருத்துகள்:

  1. மாமியார் மருமகள் சண்டை, இருவரிடையே ஒரு புரிதல், விட்டுகொடுத்தல் இல்லாததால் தான் வருகிறது.. நம்ம அம்மா, மகள் என்ற நினைப்பில் பழகினாலே பிரச்னை இன்றி வாழலாம்..
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மருமகள்களை மகளாக ஏற்றுக் கொண்டதால் எங்கள் வீட்டில் இப்பேச்சிற்கே / இப்பிரச்சனையே இல்லை...

    பதிலளிநீக்கு
  3. நன்றி சேக்காளி .. நம்பத்தான் வேணும்..:)

    நன்றி சமீரா. உண்மைதான்

    நன்றி தனபால். வாழ்க உங்கள் அன்பான குடும்பம். :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)