வியாழன், 31 ஜனவரி, 2013

தீபலெக்ஷ்மி.

தீபலெக்ஷ்மி..

மாலை  லேசான இருளை தீட்டத் துவங்கிய போது  இல்லங்களும் , ரோடுகளும் வெள்ளை., மஞ்சள் விளக்குகளால் வர்ணமேற்றத் துவங்கின.  லேசான செவ்வரளிப் பூமணத்தோடு. இருந்தது சாமி செல்ஃப்.  விளக்கு வைக்க வேண்டும்.

மின் விளக்கு  ஏற்றினாலும் சாமி விளக்கை., விளக்குப் பாடலோடு  ஏற்றும் போது  தேவி ப்ரத்யட்சமாவது போல இருக்கும். நெருப்பில் உதித்த அழகு தேவதை. ஓங்கி உயர்ந்து கோபி சந்தனம் தீற்றல் போல ஒளிவிட்டு. சுவற்றிலும் பின்னிருக்கும் சாமி படங்களிலும் ஒரு முகத்தை அல்லது இரட்டை முகங்களை உண்டுபண்ணும் ஒளித்தோற்றம்..


சின்னப்பிள்ளையில்  மாலையில் பள்ளி விட்டு  வீடு வந்ததும் கை கால் முகம் கழுவி் படிக்க உக்காரும்போது அம்மா விளக்கேற்ற சாமிபாட்டுக்களும் ஸ்லோகங்களும் சொல்வதுண்டு.. இப்போது திருமணமானபின் தினமும் விளக்கேற்றி அப்போது போலில்லாமல் விலாவாரியாக இல்லாவிட்டாலும் சில பாடல்கள் சொல்வதுண்டு.

விளக்கே திருவிளக்கே
வேந்தன் உடன்பிறப்பே..
ஜோதி மணி விளக்கே
ஸ்ரீதேவிப் பொன்மணியே.,
.
வேந்தர்கள் அணிவது போன்ற பொன்னும் மணியும் கலந்த வர்ணக் கலப்பிலானது தீபத்தின் நிறம்.. ஏழு வண்ணங்களுடன் கூடியது. இருள் நீலம்.,  அடர் நீலம்., நீல சுவாலை., பாசிப் பசுமை.,தங்கரளி மஞ்சள்., அந்தி வான ஆரஞ்சு.,  நடு நெற்றி அக்னிச் சிகப்பு. ., நடுநெற்றித் தானத்து நான் உன்னைத் தியானித்தால் பிரம்ம மந்திரத்தை போதித்து அருளிடுவாய். தியானச் சுடர்..அறிவுச் சுடர்., ஞானச் சுடர்.. ஞானம் முகிழ்ந்த முனிவர்களின் பார்வைச் சுடர்..ஐயப்பனை வணங்கி விரதமிருப்பவர்கள் அணியும் கருப்பும் நீலமும் கருநீலத் தீ.. புனிதம் காக்கும் தீ..

அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே..

விளக்கை ஏற்றும் போதெல்லாம்., விளக்கின் ஒளியின் முன் ஈர்க்கப்பட்ட விட்டிலைப் போல அமர்ந்து தியானிப்பது., உற்று நோக்குவது இன்பம்.. யோகம்., தியானம்., தாரணை ., சமாதியின் போது இந்த விளக்கோடு ஒன்றுதல் பிடித்தமானதாயிருக்கிறது.

மாலை வேளையில் யாருமற்ற வீட்டில் மின் விளக்கை ஏற்றினால் கூட இந்த சாமி விளக்கையும் ஏற்றுவது ஒரு துணையைப் போல., அம்மாவின் முந்தானையைப் போல பற்றுக் கோடாய் இருக்கிறது. வீட்டில் விளக்கு வைத்து விட்டு வெளியில் செல்லக்கூடாது .. என்பார்கள்.. விளக்கை தனியாக விட்டு விட்டுப் போவது போலத்தான் இருக்கும். விளக்கை மலையேற்றி விட்டு செல்லலாம். வீட்டின் இருள் நீல  இரவில் தீ மட்டும் தனித்திருக்குமே..

பசும்பொன் விளக்கு வைத்துப்
பஞ்சுத் திரி போட்டுக்
குளம்போல் எண்ணெய் விட்டுக்
கோலமுடன் ஏற்றிவைத்தேன்.

குன்றிலிட்ட விளக்கு போல . திருவண்ணாமலை தீபம் போல.. அழகாக ஒளிவிடுகிறது விளக்கு குளம் போன்ற எண்ணெயில் திருவண்ணாமலை தீபம்..விநாயகர் தலையில் சூடிய அக்னியைப் போல. . சாலையில்  கடந்து செல்லும் கோயில்களில் கர்ப்பக்கிரகங்களின் ஒளிவிடும் விளக்கு பார்த்து பரவசமாவது அற்புதம். அங்கே ஜெகன்மாதா ஒளி ரூபத்தில் இருக்கிறாள். விளக்கு என்றால் விளக்கமாய் இருப்பது விலக்க வேண்டியவற்றை விலக்கி ஒளி பெருக்குவது..

பாவை விளக்குகள் மிகப் பரவசமூட்டுபவை..  நிஜப்பாவைகள் போல  எந்நேரமும் சேவை சாதிப்பவை. அம்மா., சகோதரி., மனைவி., மகள் எல்லாமே தீபங்கள் தானே.. ஒற்றை தீபத்திலிருந்து ஏற்றப்பட்ட தொடர்தீபங்கள்.. ஒன்றன் வாழ்வை., ஒன்றன் ஆசைகளை அடுத்த தீபத்தில் அது பொருத்திச் செல்கிறது.. அதனதனுக்கான எரிபொருள் தீரும்வரை.. அது அது ஒளி விட்டு அடுத்ததை உயிர்ப்பித்துச் செல்கிறது..

அடர் நீல இரவில்  ஒரு கர்ப்பத்திலிருந்து உலக கர்ப்பத்துக்கு ப்ரசுபமாகிறது..விளக்கு வைத்த வீடு அம்மாவின் கர்ப்பப்பையைப் போலக் கதகதப்பாய் இருக்கிறது. ஒரு முறை தில்லியில் ராஜேஸ்வரி அம்மன் வந்தபோது லட்சதீப யக்ஞத்தில் டிசம்பரின் பனிக்குளிர் இரவுகளில் தமிழ்நாட்டு வாசத்தோடு தீபவாசம் செய்ததுண்டு..

 ஒலிம்பிக்கின் தொடர் ஓட்ட தீபம் போல..ஒருவர் கையிலிருந்து மற்றோருவர்  கைக்கு.தீபம் மாறுகிறது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்., விட்டுச் செல்வதும் வழங்கிச் செல்வதுமே  வாழ்க்கையாகும்.  எல்லாவற்றையும் எனதென்று அள்ளிச் செல்லவே முடியாது. உன் கையில் எப்படி வந்ததோ  அதே போல திரும்பவும் சென்றுவிடும்., ஆன்மாவுக்கு அழிவில்லை.. நான் என்னும் உடல் மட்டும் வெவ்வேறு உடலின் அக்கினிக்குள் புகுந்து ஆட்டம் போடும். அக்கினி இருக்கும்வரைதான் எல்லாம். அக்கினிதான் உயிர் பற்றவைக்கிறது. அக்கினி அணைந்தால் அது சவம்.. சீவன் போனால் சடம்.

விளக்கின் ஒளிபோலே மேலேறிச் செல்லவேண்டும் எண்ணங்களின் தொகுப்பான மனிதனும்.. ஞான தீபத்தை மேலேற்றியபடி. இன்னும் பலபடி.. உயர்ந்து.. ஆகாயம் தாண்டி எண்ணங்களற்ற வெளியில்..

ஞானாக்கினி பெருகும் போதெல்லாம் மனிதன் காமாக்கினியிலும்., கோபாக்கினியிலும்., கூறுபட்டு..விடுகிறான்.  கோபம் எத்தனை செயல்களை வடிக்கிறது.. அகங்காரம்., ஆணவம்., தற்பெருமை., இதெல்லாம் காயப்படும்போது நான் என்னும் ஈகோ தலைநீட்டி அனைத்தையும் தாறுமாறானா பேச்சில் சிதைக்கிறது..

பேச்சும் கூட முறைப்படுத்தாவிட்டால் பெருந்தீதான். பற்றியெறியவைக்கும் பெருநெருப்பு.. விசிறி விடும் பெருநெருப்பு., தலைமுறை தலைமுறைகளாக தீண்ட விரும்பாத சாம்பல் பூசிய கங்கு போர்த்திய பெருநெருப்பு. ஒற்றை வார்த்தைக்காய்க் காத்து நிற்கும் பெருநெருப்பு..  பிடித்து வேக்காளமாக்குறது உறவுமுறைகளை..

ஒளிவீசிய தீபம் லேசாய் சுருங்கத் துவங்குகிறது.. கடையில் வாங்கிய ஐந்து எண்ணெய் கலந்த எண்ணெயை ஊற்றினேன். அம்மா., இதற்கென்று ஐந்து விதமான எண்ணெய்கள் வீட்டிலேயே கலந்து ஊற்றுவார்கள்.,  நல்லெண்ணெய்., விளக்கெண்ணெய்., இலுப்பெண்ணெய்., புங்கை எண்ணெய்., நெய். நெய் மட்டும் பரிசுத்தமாக வாங்கி அல்லது காய்ச்சிக் கலப்பார்கள்.. அந்தக் கலவையில் வீடே மணக்கும். அடுப்பின் பதமான நெருப்பில் முறுகும் நெய்.. வயிற்று அக்னியை  ஏற்றும்.. நெய்யில்லா சோறு நெருப்பு என சொல்வார்கள்.

வள்ளலார் கூட வயிற்று அக்னியை அணைக்க அணையா தீபத்தை ஏற்றினார்..
வடலூரில் அல்லும் பகலும் எரிந்துகொண்டே இருக்கிறது அந்த நெருப்பு., பசிப்பிணியை அணைத்த ஜோதி தைப்பூசத்தில் ஜோதி ஸ்வரூபமாய்.. ஞானப் பரஞ்ஜோதியாய். அன்னதான சபையாய்..பசிப்பிணியை அணைக்க. ஆதிரையின் பிச்சைப் பாத்திரமாய் அகன்று காயும் வயிறு., அமிலம் சுரந்து எரியும் வயிறு., கொழுந்து விட்டு எரியும் பசியில் உணவு என்னும் அவிர்பாகத்தை போட மணிமேகலையிடம் அட்சய பாத்திரம் பெற்றது போல அவ்வப்போது அணைந்து தணிகிறது..உணவென்னும் பச்சைத் தீயைப் போட்டு அவ்வப்போது அணைக்க வேண்டியதிருக்கிறது.

 பித்தளை விளக்கு.,  வெள்ளி விளக்கு., அகல்விளக்கு., இப்போதெல்லாம் பாஷன் மெழுகு விளக்குகள்.. கார்த்திகை தீபங்களில் தீப ஒளித்திருநாளில் வீடெங்கும் விளக்கேற்றுவது வடநாட்டில் வழக்கம்.,தீபங்களின் பண்டிகை., மோட்ச தீபம் என்றும் சொல்வார்கள்.

நமக்கு கார்த்திகைதீபம்தான் தீபத்திருநாள்., வெல்லப் பொறி, அவல் பொறியோடு.. தீபத்தை மாடி., கைப்பிடிச் சுவர்கள்., வீட்டில் எல்லா அறைகளிலும்., எல்லா வாயில்களிலும். குப்பை மேட்டுக்குக் கூட தீபம் வைப்பார்கள் கிராமத்தில்.

தீபத்தின் கதகதப்பு.. அதன் வெப்ப அருகாமை., திரி நிமிண்டிய எண்ணெய் வாசம் கைகளில் எல்லாம் மீறி அதன் ஒளி., ஜோதி.. தீபதரிசனம். கோயிலில் எல்லா அபிஷேகத்துக்கும் தீபம் காண்பிப்பார்கள். அப்போது ஆஹா என்ன தரிசனம் என்று பரவசத்தில் கன்னத்தில் போட்டுக் கொள்வதுண்டு.. இருளில் இருக்கும் இறை ரூபத்தை லேசாக வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் செயல். உன் மன இருளில் ஞான ஜோதியை ஏற்றி இறைவனை தரிசி என்று சொல்வது போல.

அந்த தீப காலங்களில் ஆறு சந்திகளிலும் தரிசிப்பதையே வாழ்வின் வரமாகக் கருதும் மக்களுமுண்டு. திருவனந்தல்., காலைச் சந்தி., மதிய சந்தி., சாயரட்சை., இராக்காலம்., அர்த்தசாமம் என  ஒரு நாளில் ஆறுமுறை கோயிலில் இல்லதும் அல்லதுமாய் உள்ள இறை ரூபத்தை நெய் தீபத்திலும் ., தீபாராதனையிலும்  தரிசித்து வரும் புண்ணியாத்மாக்கள் அடங்கியது நம் தேசம்.

தாமரை தண்டு திரிக்காக தாமரைத் தண்டுகள் வாங்கி உடைத்து உடைத்து சுற்றுவது., வாழைத்தண்டுத் திரிக்காக வாழைத் தண்டு நறுக்கும் போது நாரை விரலில் சுற்றி திரிப்பது., பஞ்சுத் திரி திரிக்க இலவம் பஞ்சு வாங்கி உள்ளங்கை தேயதேய  திரிப்பது இதெல்லாம் அம்மாவுக்குப் பிடிக்கும். ஏனோ நூல் திரியை ஒரு திரியாகவே மதிப்பதில்லை அம்மா.

எந்தக் கோயில் சென்றாலும் எல்லா சந்நிதிகளிலும்  நெய் விளக்குப் போட்டால்தான் திருப்தியாகும் அம்மாவுக்கு. இதற்காக அகல் செய்பவர்களிடம் பிரத்யேகமாக 100., 200 என வாங்கி வருவார்கள். என்ன ஒவ்வொரு விளக்கையும் ஒச்சமில்லாமல்  இருக்கிறதா எனப் பார்ப்பதே முதல் வேலை.. போடும் விளக்குகளில்  பெயிண்டிங்கில் பூவேலை., படம் எல்லாம் போட்டு ஜோராக இருக்கும்.  விளக்கு போடுவதை ஒரு தியானமாகவே செய்து வந்தார் அம்மா.. நீலத்தீ ஏற்றுபவர் போல மெல்லிய தீயை ஒளிரச் செய்வார்..

ஏற்றினேன் நெய் விளக்கு
எந்தன் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கு
மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள
மாதாவைப் பாருமம்மா..

என்னை நன்றாக வைத்துக் கொள்., என் கணவரை., குழந்தைகளை., என்னைச் சார்ந்தவர்களை என வேண்டிக் கொள்வது பழக்கமாகிவிட்டது.. எல்லாரையும் நல்லா வைச்சுக்கோ என வேண்டுவதுவும். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என நினைப்பதுவும் உண்டு. .

திருமணத்தில் தீ வளர்த்து தாரை வார்த்துக் கொடுப்பதுண்டு.. அக்னி சாட்சியாய் இந்தப் பெண்ணை இந்த ஆணுக்கு கொடுக்கிறேன். இவர்களின்  பழைய தீவினை இந்தத் தீயோடு அழிந்தது. இனி புதிதாய் முளைக்கும் குற்றங்களையும் இந்தத் தீயின் துணையோடு., சத்யத்தீயின் துணையோடு கடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் அது.

தங்க மஞ்சள் போல ஒளிவிடுகிறது அக்கினிச் சட்டி.. ஆடி மாசம் செவ்வாய் தோரோட்டம்.. கஞ்சி காய்ச்சி .,கூழ் ஊற்றி., அம்மை போட்டவர்கள் ., வயிற்றில் மாவிளக்கு வைத்து., அரியரிசி ., துள்ளுமா., மாவிளக்கு படைத்து., அலகு குத்தி., தீச்சட்டி., சுமந்து .. தீமித்து.. அது வேண்டுதல்..குடும்பத்துக்கான இறையாண்மை.. இந்தக் கோயில் வேண்டுதல்கள் எல்லாம்..

அந்தப் பூச்சட்டியும் பூமிதியும் குடும்பத்தில் கணவனுக்காக மனைவிக்காக குழந்தைகளுக்காக என்று நிறைவேற்றப்படும் குடும்பத்தின் இறையாண்மைக்கான வெளிப்பாடு..மஞ்சள் ஜோதி மயமாய் உடை உடுத்தி., மஞ்சள் பூசி., மஞ்சள் சாமந்தி சூடி மஞ்சள் ஒளியாய் காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி போல கணவனும் ., மனைவியும் சக்தி மயமாதல்.. சில சமயம் செவ்வாடைகுள்ளும் இருக்கும் சக்திகள். ஆரஞ்சுத் தீ..

அக்கினியாத்தா படைப்பு வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் சின்னஞ்சிறு பெண் போலே இருக்கும் ஆத்தாளை  கண்கொண்டு பார்க்க முடியாது. கண் கூசுவது போல இருக்கும். எந்த யாகத்திலும் ஹோமத்திலும் அவிர்ப்பாகத்தை கொண்டு செல்பவன் அக்கினிதானே.. மனிதர்களையும் கடைசியில் பிடி சாம்பலாக்கி நீ ஒன்றுமில்லை என செய்பவனும் அவன்தான்.

அக்கினி ஆத்தாளாய் இருந்தால் என்ன., அக்கினி தேவனாய் இருந்தால் என்ன. யாதுமாகி யாதுமானவன். பெரு நெருப்பு., நெபுலா., எத்தனையோ யுகங்களாக எரிந்தும் இன்னும் பல யுகங்கள் எரியப் போகும் பெரு நெருப்பு.. செக்கச் சிவந்த சூரியன்..

சந்தேகத்தீ.. ஜானகியின் தேகத்தை தின்றதீ.. ராமராஜ்யத்துக்கான  அங்கீகாரத்துக்காக வளர்க்கப்பட்ட தீ.. இது இன்று எத்தனை குடும்பங்களைத் தின்கிறது..பெருந்தீ..பெருந்தீனி...அக்கினிப் ப்ரவேசம் செய்தாள் அவள்.. ஏக பத்தினி விரதன்தான் ராமன்.. ஆயினும் தன் மனைவியின் கற்பை சோதிக்கிறார். சமூகத்தளைகளில்  ஆசாபாசங்களில்.,  ஆணாதிக்க  மனோபாவங்களில்.,  தந்தையர் வழி சார்ந்த உலகில் ஆழ்ந்த மனம் கற்பிக்கும் மாசு.  இந்தத் தீயின் வாயில் கடிபடாமல் செல்பவர்கள் பேறு பெற்றோர்..

வேகமாய் அடித்த காற்றில் தீபம் சிணுங்கித் தவித்தது. இன்னும் சிறிது எண்ணெய் விட்டு.,, தூண்டுக் குச்சியால் தூண்டிவிட்டாள் திரியை.  தீ  கொஞ்சம் நீண்ட நாவாய் எரிந்தது. சந்தேகத்தீ.. ஜானகியின் தேகத்தை தின்றதீ.. ராமராஜ்யத்துக்கான  அங்கீகாரத்துக்காக வளர்க்கப்பட்ட தீ.. இது இன்று எத்தனை குடும்பங்களைத் தின்கிறது..பெருந்தீ..பெருந்தீனி..

வரண்ட கானகம் பைத்தியம் பிடித்து கோரமாய் எரிவது போல.  எந்தப் பிழையுமில்லாமல் இருந்த குடும்ப நண்பர்கள்  ஒரு சாலை விபத்தில் குடும்பத்தோடு மரித்து கொள்ளி வைக்கப்பட்ட போதும் தீபம் கொழுந்து விட்டு எரிந்தது.. ஏன்.. என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்.. பாவத்தின் தண்டனைதானே மரணம்..  மரணம் தண்டனையா..  அது இறப்பவர்க்கா., அல்லது இருப்பவர்க்கா.,

கும்பகோணம் பள்ளி விபத்தில் துடிதுடித்து கருகிப்போயினவே அந்தத் தளிர்கள்.. என்ன பாவம் செய்தன..ஸ்ரீரங்கத்தில் திருமண மாலைக்காய் காத்திருந்தாளே ஒருத்தி.. அவள் கண்ணெதிரே பலரைத் தின்றதே தீ .. திருமணம் செய்ய நினைத்தவன் உத்தராயணத்தில் மொத்தக் கூட்டத்தோடு சொர்க்கம் ஏகி அவளைப் பாவியாக ஆக்கினானே. .. என்ன தீ .. தீயின் ராஜ்ஜியம்.

கோரைத்தலை விரித்து கொல்லன்பட்டறை இரும்பை உருக்கும் சூட்டில் மனித உடல்களை தின்ற தீ. என்ன பசி அதற்கு.. முறையற்ற மின் உபயோகம் காரணமாயிருக்கலாம்.. ஆனால் தீ தின்றது தின்றது தானே..நீர் சுனாமியாகி தின்பது போல தீயும் தின்கிறது..அந்தத் தீயைக் கொண்டே யமுனையையும்., கங்கையையும் பூஜை செய்து தீபம் காட்டி வணங்குகிறோம்.

காமத்தீ.. பெட்ரோலியக் கிணறுகளைப் போல மொத்த மனிதரையும் தின்கிறது. வயது வித்யாசம் பார்க்காமல்., பிள்ளைக் கறியைக் கூட.. இதற்காக காமத்திபுரா வேறு.. முறையற்ற காமத்தை முறைப்படுத்தவாம்.. அவர்களும் பெண்கள் தானே.. எத்தனை பெண்கள் இந்தக் காமத்தீயில் பலியாகி பால்வினை நோய்களொடும். எய்ட்ஸோடும்., குழந்தைகளுக்கும் கொடுத்து.. அணுஅணுவாய்., உடல் நெருப்பினால் உண்ணப்பட்டு.. வீழ்ந்து மடியும் மனிதர்கள்..மன்மதனை எரித்த சிவன் வேண்டும் இந்தத் திரிபுரத்தை எரிக்க..

தலைவர்களின் கைப்பாவைகளாய் தொண்டர்கள் தீக்குளிப்பது., மரண தண்டனை வேண்டாமென்று தீக்குளிப்பது..  சோறிடும் இந்தத் தீயே சொர்க்கமும் அழைத்துச் செல்கிறது.. அவர்களை புண்ணியவான்கள் என்ற கருப்புப் போர்வை சூடி. மரவள்ளிக் கிழங்கை போல சுட்டுக் கிடக்கும் அவர்கள் அறிவார்களா நாம் போராடியதெல்லாம் பூர்த்தியானதா என்று..

புகைப்படங்களிலும்., இரங்கல் கூட்டங்களிலும்., நினைவு தினங்களிலும்., அதிகம் போனால் நினைவு மண்டபங்களிலும் வாழவா இந்த அக்கினிப் பிரவேசம்., இந்த உறுதியை உயிரோடு வாழ்ந்து நிறைவேற்றும் துணிவு வேண்டும். 

இரவில் சாமக்கோழிகள் சத்தமிடத்துவங்குகின்றன.. இந்நேரமும் தீபத்தோடு  பேசிக்கொண்டிருந்த நான்.. கொஞ்சம் வேண்டிக் கொள்ளத் துவங்கினேன். அனைவருக்கும் நல்ல வாழ்வையும் நாலு பேருக்கு தொந்தரவில்லாமல் நல்ல சாவையும் கொடு என.

 அன்னையே அருந்துணையே
அருகிருந்து காருமம்மா
வந்த வினை அகற்றி
மகாபாக்கியம் தாருமம்மா.
தாயாரே உந்தன் தாளடியில்
சரணம் என்றேன்.
மாதாவே உந்தன் மலரடியில்
நான் மகிழ்ந்தேன்..


உன்னை சரியாக உபயோகிப்போருக்கு பலனையும்., தவறாக உபயோகிப்போருக்குத் தண்டனையும் தருகிறாய் தாயே. ஆனால் ஒன்றுமறியாதவர்கள் உன்னை அணைத்தால் நீ அவர்களிடம் கருணை காட்டு.. உன் கோபம் அடங்கி சாந்தமாகு..

எல்லார் உடலிலும் மனதிலும் உறையும் அக்கினி தேவியே., தீபலெட்சுமியே உன் கருணைக் கண் பார்வையை மட்டுமே எங்களுக்கு வழங்கு என எழும்போது விளக்கை ஞாபகமாக தனித்து விட்டு விடாமல் ஒரு பூவை எடுத்து பாலில் தொட்டு மலையேற்றிப் பின்  வணங்கி மீள்கிறேன் யதார்த்த உலகுக்கு.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை நவம்பர் 2012 லேடீஸ் ஸ்பெஷலில் தீபாவளி ஸ்பெஷலாக வெளிவந்தது.

http://www.atheetham.com/?p=6344

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)