வியாழன், 3 ஜனவரி, 2013

நிதி நித்தி நித்தம்..

போலி நிதி நிறுவனங்களின் ஏமாறுபவர்களை தினம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் பார்க்கிறோம். அவர்களுக்கு சில கேள்விகள்.

சாதாரணமா ஒரு வங்கிக்கு பணம் போடப் போறீங்க . அங்கே எல்லாருக்கும் 9% வட்டி. சீனியர் சிட்டிசன்களுக்கு 10% வட்டின்னு கொடுக்குறாங்க. பொதுவா வங்கிகளே வட்டி விகிதத்தைக் குறைச்சிகிட்டு வர்றாங்க. 12% வட்டி இப்போ எந்த வங்கியிலும் கிடையாது. ஒரு லட்ச ரூபாய் டெப்பாசிட் பண்ணா உங்களுக்கு 650/- ரூபாய் மாத வட்டி கிடைக்கும். அப்போ கிட்டத்தட்ட 8 – 8.5 % வட்டிதான் தரமுடியும் வங்கிகளால். ஏன்னா நேர்மையான முறை இது.


இன்னும் சில காலம் போச்சுன்னா பணவீக்கத்தால வங்கிகளால் இந்த நேர்மையான வட்டியையும் கொடுக்க முடியாது. உங்க பணத்தை சும்மா வைச்சிருத்து திருப்பித்தரோம்னு கூட சொல்ல வழி இருக்கு. இல்லாட்டி உங்க பணத்தை நாங்க பத்திரமா வச்சிருக்கோம் அதுனால நீங்க எங்களுக்கு அதுக்கான பாதுகாக்கும் தொகை தாங்கன்னா கூட ஆச்சர்யமில்லை.

 வங்கிகள் அவங்க பிடிக்கிற ஜ்வல் லோனுக்கு 18 % வசூலிக்கிறாங்க. நம்முடைய டெப்பாசிட்டுகளுக்கு அதிகபட்சம் 10 % வட்டி கொடுப்பதால் அந்த 8 % வட்டிதான் அவங்களுக்கான லாபம். அப்பிடி ஒரு தங்க நகைக் கடனுக்கே வங்கிகள் ஒன்றரை வட்டிக்கு பணம் கொடுக்கும்போது ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம் உங்ககிட்ட ஒரு லட்சத்தை வாங்கிக்கிட்டு ஒரு மாசத்துல ஒன்றரை லட்சமா கொடுக்குறோம்னா எப்பிடிங்க ஏமாறீங்க..

இதுல சகிக்க முடியாதது என்னன்னா எங்ககிட்ட இருக்க அடிமுதல் எல்லாத்தையும் வித்து ( காதுல கழுத்துல போட்டுருக்கது, கல்யாணத்துக்கு சேத்து வைச்சது ) அதுல போட்டோம்னு சொல்றதுதான். பொதுவா நீங்க பணம் போடவோ, கட்டவோ வங்கிக்குப் போகாட்டாலும் வட்டிக்கடைக்காரர் கிட்ட நகையை அடமானம் வைச்சு வாங்கி இருக்கலாம். அப்போ அவர் 2 (24%) வட்டி அல்லது 3 (36%) வட்டி வாங்கினார்னா நீங்க வட்டியை முறையா கட்டாட்டா கூட்டு வட்டி போட்டு ஒரு வருஷத்துல நகை மூழ்கிப் போச்சுன்னு நோட்டீஸ் போட்டுடுவாங்க. அதுக்கே ஒரு வருஷம் ஆகும் .

சிலர் 5 வட்டி 10 வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டின்னு அன்பா வசூல் பண்ணுவாங்க. அவங்ககிட்ட வட்டிக்குப் பணம் வாங்கினவங்க கட்டமுடியாட்டா செல்லுலார் ஜெயில் மாதிரி போட்டு அடைச்சி வசூல் பண்ணுவாங்க அல்லது வாங்கின ஆள் மான அவமானத்துக்குப் பயந்து தூக்குல தொங்கிடுவார்.அந்த மாதிரி இருக்கும்போது உங்க பணத்தை வாங்கி உங்களுக்கே அல்வா கொடுக்கும் இந்த மாதிரி நிதி நிறுவனங்கள் உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லாம அல்வா போல சம்பாதிச்சுக் கொடுக்கும்னு எந்த அடிப்படையில் நம்புறீங்க.

மரம் வளர்க்கிறோம், சேவல் வளர்க்கிறோம், கம்யூட்டர் கம்பெனி நடத்துறோம். வெளிநாட்டில் வேலை வாங்கித்தரோம். இப்படின்னு ரக வாரியா மனுஷங்க வந்துகிட்டே இருக்காங்க, இப்பவெல்லாம் என்ன ஃபேஷன்னா ஒரு பொதுநல நிறுவனம் ஆரம்பிச்சு காசு கலெக்ட் பண்ணுறதுதான். இதுல பல பிரபலங்களும் ஏமாந்திருப்பதாக ஒரு முகநூல் நண்பர் சொன்னார்.

தேவைப்படுபவர்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னா உங்க வீட்டுல வேலை செய்யிறவங்க, ட்ரைவர், தோட்டக்காரர், மற்றும் அக்கம்பக்கத்தில் தெரிந்த நன்கு படிக்கக்கூடிய குழந்தைகள் ஆகியோருக்கும் அவங்க குடும்பத்துக்கும் உதவுங்க. உண்மையிலேயே நேரிடையா உங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்குத்தான் உதவுறீங்க. உங்க பணத்தை யாரோ ஏதோ பேர் சொல்லி உங்களை ஏமாத்தித் தன்னுடைய பணமா மாத்திக்க உதவாதீங்க.

அடுத்து சில தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சில வங்கிகளுமே கூட இப்போவெல்லாம் இன்சூரன்ஸ் பாலிசி பிடிக்கிறாங்க. அதுல பணம் போடுமுன்னாடி ஒண்ணுக்கு பத்துத்தரம் யோசிச்சு போடுங்க. ஏன்னா போலி நிதி நிறுவனங்கள் அடையாள சாட்சி இல்லாமல் உங்க பணத்தைத்தின்னுடும்னா இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்க பணத்தை அப்படியே திருப்பித்தந்தாலே பெரிசு.

ஒரு வருஷம் போட்டா போதும்னு சில வருடங்களில் மெச்சூரிட்டி தொகை டபுள்னு அந்த இன்சூரன்ஸ் பிடிக்கும் குழுவுல இருப்பவர் சொல்வார். நம்பி போட்டீங்கன்னா அடுத்த வருஷம் அதே தொகையை கட்டச் சொல்வாங்க. மூணாவது வருஷமும்.. போட்டதை எடுக்கணுமேன்னு வேற வழியில்லாம போட்டுகிட்டே இருப்பீங்க. அவங்க இதை எதில் முதலீடு செய்றாங்க தெரியுமா பங்குச் சந்தையில் .. எனவே பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதுதான் நீங்க போட்ட பணத்தோட கதியும். 5 அல்லது 10 வருடம் கழித்து அவங்க நீங்க போட்ட பணத்தோட அசல்ல கூட குறைச்சுத்தரலாம். ஏன்னா அன்னிக்கு அந்தக் கம்பெனி அல்லது வங்கியின் நிலவரம் பங்குச் சந்(தி)தையில் எப்படி இருக்கோ அதைப் பொறுத்தது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் பணம். பணம் கிடைச்சுச்சேன்னு நீங்க சந்தோஷப் படும் அளவு பாடு இருக்கும் அதுல..

எனவே (போலி) நிதி நிறுவனங்கள், இன்சூரன்சுகள், பெனிஃபிட் ( இல்லாத) ஃபண்டுகள், சேம ( அற்ற) நலநிதிகள், ஆகியவற்றில் பணம் போடும்போது ஒன்றுக்குப் பத்தா யோசிச்சு போடுங்க. அல்லது அஞ்சலக முதலீடு, ஃபிக்சட் டெப்பாசிட் சிறந்தது. அஞ்சலக முதலீட்டை விட நிரந்த வைப்பில் வங்கியில் வைக்கப்படும் உங்க பணத்தை நீங்க எப்ப வேணும்னாலும் எடுத்துக்கலாம்.

அடுத்து நித்தி.. எவ்வளவோ பாரம்பர்யப் பெருமை உடைய மடங்களை எல்லாம் புதுப் புது சாமியார்கள் வந்து பேரைக் கெடுக்கிறார்கள். பத்தாதுக்கு காஸ்ட்லி சாமியார் மடங்களும் உருவாகி துறவு, ஆன்மீகம் என்பதன் பேரையே கெடுக்கிறார்கள். இவர்களிடம் பக்தர்களாக இருப்பவர்களுக்கு இவர்களின் குறைபாடுகள் கண்ணுக்குத்தெரிவதில்லையா.. அல்லது அங்கு புழங்கும் பணத்தின் சக்தி அவர்கள் கண்ணையும் மறைக்கிறதா.

இந்தியாவில் ஆன்மீக மடங்கள் இறைவனின் பெருமையைப் பரப்பவும். இறை வழியில் மக்களை ஒன்றிணைக்கவும், மக்களுக்கு நல்லவற்றை எடுத்துச் சொல்லவும். நம் நாட்டில் வாழ்ந்த இறையடியார்களின் பெயரால் நல்லெண்ணத்தோடு நன்மக்களால் ஏற்படுத்தப்பட்டு செயலாற்றி வந்தன. இவற்றை செவ்வனே நடத்திச் செல்ல நிலங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் பயன்களும் நல்லோர்களால், ஆன்மீகப் பெருமக்களால், இந்த மடத்திற்கு கிடைக்கவேண்டும் என எழுதி வைக்கப்பட்டன.

இன்றும் பசுமடங்களும், வேத பாடசாலைகளும், கோயில் கட்டளைகளும், அன்னதானமும், கார்த்திகை சோமவார பூசை, காவடி பூசை என பலருக்கும் உணவளிக்கும் நிகழ்வுகளும் இந்தமாதிரி இறைத்தொண்டுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலங்களில் இருந்து கிடைக்கும் பயன்களால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் சத்திரங்கள் குறைந்த வாடகையில் தங்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு முறையான கணக்கு வழக்கு பேரேடுகளும் , தணிக்கைக் கணக்கும் அவசியம்.

இன்று சாமியார்கள் என்ன போதிக்கின்றார்கள். ஹை டெக் ஆசிரமங்கள் வைத்து ஹை டெக் மக்களுக்கு வசதியான கொள்கைகளை போதிக்கிறார்கள். எப்படி சம்பாதிக்கிறாய் என்பது முக்கியமில்லை.. ஆசிரமத்தின் பெயரில் கொஞ்சம் எழுதி வைத்துவிடு.. இன்கம்டாக்ஸ் குறையும்.. என்கிறார்கள், மேலும் தங்கக் கோயில் மார்பிள் கோயில் என்று ஆசாமிகளின் கோயில் பெருகி வருகிறது. அவர்களை நேரில் தரிசிக்க ஒரே க்யூ. ஸ்பெஷலாக தரிசிக்க ரூபாய் 50,000/- வீட்டினுள் ஸ்பெஷல் ஸ்க்ரீனில் பார்த்து பேச 5.000/- என்று எல்லாம் காசு மயம்.

ஒரு சில சாமியார்கள் பட்டும் பீதாம்பரமும் அணிந்து வருகிறார்கள். அவர்களுக்கு பாதபூஜை செய்து அந்த நீரை அருந்தும் பக்தர்களும் இருக்கிறார்கள். சில சாமியார்கள் அரசியல் தலைவர்களின் ஆலோசர்களாக இருக்கிறார்கள். இதில் சிலரை தொலைக்காட்சிகள் படம்பிடித்துப் போடும்போது அவர்கள் காட்டும் ஆணவ முகம் வெறுப்புக்குரியதாக இருக்கும்.

பிள்ளை குட்டிகளோடு பரம்பரை மடங்களில் வாழ்ந்த சாமியார்கள் பற்றி வார இதழ்கள் வெளிப்படுத்தி உள்ளன. பேரின்பம் நோக்கிச் செல்லும் சாமியார்களுக்கு பெண் காரியதரிசிகள் அத்யாவசியமாகி விட்டார்கள். பெண் பக்தைகள் உண்மையிலேயே அவரை நம்புகிறார்களா.. அல்லது நம்ப வைக்கப்படுகின்றார்களா. அல்லது உண்மை உணராத நிலையில் இருக்கின்றார்களா தெரியவில்லை..

உண்மையான சாதுக்களும் சந்யாசிகளும் இன்று அருகி விட்டார்கள். அவர்கள் புகழ் வெளிச்சத்தில் வருவதில்லை. வெள்ளி ரதம். தங்கச் செங்கோல், வைர க்ரீடம் அணிந்து அவர்கள் பதவிக்கு வருவதில்லை. ஆன்மீகம் என்பது நமக்கான ஒரு ஆன்மப் பயிற்சி. அது ஏசி ஹால்களிலும் ஹை டெக் சாமியார் மடங்களிலும் மட்டுமே இருக்கும் என நினைப்பவர்கள் மாறவேண்டும்.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று திருமூலர் சொன்னார். காரைக்குடிப் பக்கங்களில் சாமிவீட்டில் நட்டநடு நாயகமாக ஒரு நிலைக்கண்ணாடி இருக்கும். அதன் பக்கங்களில்தான் மத்த சாமி படங்கள் இருக்கும். சாமி அறையில் நுழையும் ஒவ்வொருவரும் தன்னில் துலங்கும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்றே அந்த நிலையான கண்ணாடி அங்கு வைக்கப்பட்டிருக்கின்றது.

நிதியிலும், நித்தியிலும் மயங்காமல் நித்யமும் உண்மையாயிருக்கும் உங்கள் உழைப்பில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் பணத்தைப் பெருக்குவதிலும் சரி, உங்கள் ஆன்ம விழிப்புணர்வுக்கும் சரி.. நீங்கள்தான் எஜமான்.. வேறு யாரும் இல்லை.


4 கருத்துகள்:

  1. //அடுத்து சில தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சில வங்கிகளுமே கூட இப்போவெல்லாம் இன்சூரன்ஸ் பாலிசி பிடிக்கிறாங்க. அதுல பணம் போடுமுன்னாடி ஒண்ணுக்கு பத்துத்தரம் யோசிச்சு போடுங்க. ஏன்னா போலி நிதி நிறுவனங்கள் அடையாள சாட்சி இல்லாமல் உங்க பணத்தைத்தின்னுடும்னா இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்க பணத்தை அப்படியே திருப்பித்தந்தாலே பெரிசு.//

    பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு போகவேண்டியது முக்கியமானது இதுவே.

    அண்மையில் சில நிறுவனங்கள் தங்கள் முதிர்வுத்தொகை மற்றும் இறந்தால் தரும் பாலிசித்தொகைகளில் வெகுவாக‌
    கால தாமதம் செய்துள்ளது தெரிய வருகிறது. இறந்தால் தரப்படும் பாலிசித்தொகையை தருவதில் ஏகப்பட்ட சட்டதிட்டங்களை
    அதாவது எதெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கையிலே தெரியப்படுத்துவதில்லையோ அதெல்லாம் சொல்லி க்ளைம் தருவதை
    புறக்கணிக்கிறார்கள்.

    ஓம்புதுஸ்மான், மற்றும் கன்ஸ்யூமர் கோர்ட்டுகளில் இந்த தனியார் நிறுவங்களின் மேல் போடப்பட்ட வழக்குகள் அதிகரித்துக்கொண்டே
    போகின்றன. மற்றும் க்ளைம் அவுட்ஸ்டான்டிங் ரேஷியோ வை முக்கியமாக கவனியுங்கள்.

    ஒரு அடிப்படை விகிதமாக எல்.ஐ.சி யின் விகிதத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் இந்த கம்பெனிகளின் க்ளைம் பட்டுவாடா செய்யும்
    நிலவரத்தை க் கண்டுபிடித்துக்கொள்ளவும். ஹெச்.டி.எஃப்.சி ஸ்டான்டர்ட் லைஃபின் இறந்தபின் தரப்படும் பாலிசித்தொகை பற்றிய‌
    விவரங்கள் அவைகளில் எத்தனை ஆண்டு காலமாக எத்தனை க்ளைம்கள் கொடுக்கப்படவில்லை எத்தனை வழக்குகள் இருக்கின்றன‌
    ஏன் என அண்மையில் ஒரு ஹெச்.டி.எஃப்.சி. லைஃபின் ஃபோன் மார்க்கெடிங் அஃபிஷியலைக்கேட்டேன்.

    ஃபோனை டக் என்று வைத்து விட்டார்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. நிதியிலும், நித்தியிலும் மயங்காமல் நித்யமும் உண்மையாயிருக்கும் உங்கள் உழைப்பில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் பணத்தைப் பெருக்குவதிலும் சரி, உங்கள் ஆன்ம விழிப்புணர்வுக்கும் சரி.. நீங்கள்தான் எஜமான்.. வேறு யாரும் இல்லை.

    விழிப்புணர்வு தரும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி உங்க நீண்ட பின்னூட்டங்களுக்கு சுப்பு சார். நல்ல விஷயத்தைப் பகிர்ந்திருக்கீங்க.

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)