செவ்வாய், 23 அக்டோபர், 2012

காலால் வரையும் சாதனை ஸ்வப்னா..

இந்த வருடம் பெண்கள் தினத்தில் உங்களுக்கு இன்னொரு தன்னம்பிக்கைப் பெண்ணை அறிமுகப்படுத்தப் போகிறேன். இறைவன் அருளால் எல்லா வளமும்., எல்லா நலமும் பெற்றிருக்கும் உங்களில் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள். பிறப்பிலேயே ஏதாவது குறைபாட்டோடு பிறக்கும் பிள்ளைகளுக்கு கடவுள் மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறார். அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ளவும், தங்கள் திறமை என்ன என கண்டுபிடிக்கவும் கூட. இப்படிப்பட்ட ஒருவர்தான் அகஸ்டின் ஸ்வப்னா.


கேரளாவில் பொத்தனிக் காட்டில் 20.1.1975 இல் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். ஸ்வப்பனா. அழகான இந்தக் குழந்தைக்கு இப்போது 37 வயதாகிறது. இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த குழந்தை. கைகள் அற்று பிறந்த குழந்தையைப் பார்த்து சோர்ந்துவிடவில்லை அவரின் தாய் தந்தையர். எல்லாரையும் போலவே வளர்த்தார்கள். தன்னுடைய எல்லா வேலைகளையும் அவரே செய்து கொள்வார். என்ன கைக்கு பதிலாக கால்களில்.. அப்படியே வரையவும் பழகினார். மிகத் திருத்தமாகவும் அழகாகவும் இருக்கும் ஸ்வப்னாவின் ஓவியங்களும் அழகு.

என்ன வரைகிறாய். எதற்கு கிறுக்குகிறாய் என்றெல்லாம் தடுக்கவில்லை இவரது பெற்றோர். இவரின் வரையும் திறன் இவருக்கு ஒரு வடிகாலாக இருப்பதை உணர்ந்து ஊக்குவித்தனர். அழகிய சிற்பம் போல் இருக்கும் ஸ்வப்னாவின் ஓவியங்களும் அழகு. இரண்டு கால்களாலும் இவர் பிரஷ் பிடித்து வரைகிறார். கால்களால் வரைவது சுலபமா என்ன.. கைகளால் பிரஷ் பிடித்து வரைவதுதான் எல்லாரும் செய்வது ஆனால் வரைய வேண்டும் என்ற இவரின் ஊக்கத்தின் முன் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை இவருக்கு. வலியும் வேதனையும் பிறர்முன் இப்படி இருக்கிறோமே என்ற பச்சாதாபப் பார்வைகளும் கடந்து வரைவது ஒன்றே குறிக்கோளாக வரைய ஆரம்பித்தார்.

கைகள் அற்று பிறந்து விட்டோமே என மூலையில் முடங்கி விடாமல் தன்னுடைய ஓவியத்திறனை வளர்த்துக் கொண்டார். இவருக்கு நன்கு வரையும் திறன் இருப்பதைக் கண்டு கொண்ட பெற்றோரும் இவரது பள்ளி ஆசிரியையும் இவரை வரைய ஊக்குவித்தனர். பள்ளிக் குழந்தையாய் இருந்தபோதே கால்களால் வீட்டுப் பாடம் எழுதிப் பழகிய இவர் நிறைய வரையவும் செய்தார். இவரின் பெயிண்டிங்குகள் ஸ்டூடண்ட்ஸ் ந்யூஸ் லெட்டரிலும், யூத் மாகசீன்களிலும் வெளிவந்தன.

அதன் பின் இவர் தன்னைப் போல கால்களாலும், வாயினாலும் பிரஷ் பிடித்து வரையும் imfpa.co.in என்ற அமைப்பில் 1999 இல் சேர்ந்தார். அதன் விரிவாக்கம் INDIAN MOUTH & FOOT PAINTING ARTISTS. என்பதாகும். அதில் இவரைப் போல உடற்கூறில் குறைபாடு இருந்தாலும் நன்கு வரையக்கூடியவர்கள் மெம்பர்களாக இருக்கிறார்கள். அதன் பின் ஸ்வப்னா நிறைய குரூப் எக்ஸிபிஷன்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

இவர்கள் வரைவது வாழ்த்து அட்டைகளாகவும், கிரீட்டிங்க் கார்டுகளாகவும், கிஃப்ட் டாக்ஸாகவும், காலண்டர்களாகவும், புக் மார்க்குகளாகவும் பயன்படுகின்றன. பைகள், டீ ஷர்ட்டுகள், பொருட்கள் ஆகியவற்றிலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. போலியோவால் பாதிக்கப்பட்டவர்களும் இதில் மெம்பராக இருக்கிறார்கள் . கைகளும் கால்களும் அற்றவர்கள் ஆகியோர் வாயாலும் ஓவியங்கள் வரைகிறார்கள்.

1956 இல் தொடங்கப்பட்ட இந்த MFPA. - MOUTH & FOOT PAINTING ARTISTS இன் லோகோ. HANDICAPPED IN BODY BUT NOT IN SPIRIT. இதைத் தொடங்கியவர் ERICH STEGMANN. இது மும்பையில் உள்ள கிழக்கு அந்தேரியைத் தலைமையிடமாகக் கொண்டு 1980 இல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவர் பாபி தாமஸ். இந்த அமைப்பு 700 மெம்பர்களுடன் 74 நாடுகளில் உள்ளது.

இதன் முக்கியமான அம்சம் இது சாரிட்டி அமைப்பு அல்ல. இதன் நிறுவனர் ஸ்டெக்மானைப் பொறுத்தவரை சாரிட்டி என்பது “PITY" என்ற அர்த்தம் கொடுப்பது என நினைத்தார். இதன் உறுப்பினர்கள் உடற்கூறில் குறைபாடு உடையவர்கள் என்பதால் இரக்கத்துக்குரியவர்களாக கருதப்படக் கூடாது என நினைத்தார். அதனால் MFPA வின் MOTTO .. " SELF HELP, NOT CHARITY".

ஸ்வப்னாவைப் போல நிறையப்பேர் உடற்கூறு குறைபாடு உடையவர்கள் என்றாலும் அவரை தேர்ந்தெடுத்து நம்முடைய லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு அறிமுகப்படுத்த விரும்பினேன். அவர் மலையாளம் தவிர வேறு ஏதும் பேச அறியாதவர் என்பதால் இதன் இயக்குநர் பாபி தாமஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு அவரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்தேன்.

இதுபோல தன்னபிக்கையுடன் நம் இல்லங்களில் இருக்கும் அனைவரையும் நாம் படிப்பு ஒன்றே குறிக்கோளாகக் கருதாமல் ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்குப் பிடித்த கலைகளைச் செய்யும்போது அதில் சாதனைகள் எய்துவார்கள். அடடா எனக்கா இப்படி., என் பிள்ளைக்கா இப்படி என எண்ணாமல் உடற்கூறுக் குறைபாட்டையும் தாண்டி எல்லாராலும் சாதிக்க இயலும் என்பதே ஸ்வப்னா உங்களுக்குச் சொல்லும் சேதி.

டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 20) அகஸ்டின் ஸ்வப்னா பற்றிய இந்தக்கட்டுரை மார்ச் 2012, லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது. 


4 கருத்துகள்:

  1. ஸ்வப்னா அகஸ்டின் அவர்களை நினைத்தால் வியப்பாகவும், மனதில் ஒரு எழுச்சியும் பிறக்கிறது...

    வாழ்த்துக்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  2. அவர் சிறப்புற இந்த இடுகையின்வழி வாழ்த்துவோம்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால்

    நன்றி சுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)