வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள்.
மனதில் அவர் அருந்தியதும்
நிரம்பிய ரத்தச் சகதியில்
அழுந்தத் தயாராகுங்கள்.

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி
ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள்.
உங்கள் உரையாடல்
ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது.

ஓட ஓட அழுக்கடைகிறீர்கள்.
உணவுச் சத்துக் கொடுத்து
உப்புச் சக்கையைப் பிரித்து
மாசுச் சொல் சுமந்து..


உப்பை எடுத்ததால்
நன்றியோடு இருக்கிறீர்கள்.
என்றும் உயிர்போல
ஒட்டிக்கொண்டே இருக்கலாமென..

நிறைய அறைகள் இருக்கின்றன.
ஓடிக்கொண்டே இருந்த நீங்கள்
ஓய்வெடுக்கப் போகிறீர்கள்.
சிறுநீரக நெஃப்ரான்களில்.

அழுக்கடைந்து தேங்கிய உங்களை
கனத்த பைகளோடு
காலியாக்கி கவிழ்க்கத்
தயாராகிறார்கள் அவர்கள்.

ஒய்வொழிச்சல் இல்லாமல் ஓடிய நீங்கள்
உங்கள் தேவை முடிந்ததும்
ஒழித்துக் கட்டப்படுகிறீர்கள்
உப்புச் சுமந்த திரவமாய்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 1, ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளிவந்தது.

2 கருத்துகள்:

  1. வித்தியாசமமான வரிகள்...

    /// ஒய்வொழிச்சல் இல்லாமல் ஓடிய நீங்கள்
    உங்கள் தேவை முடிந்ததும்
    ஒழித்துக் கட்டப்படுகிறீர்கள்
    உப்புச் சுமந்த திரவமாய்.. ///

    உண்மை வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)