புதன், 12 செப்டம்பர், 2012

மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்.

ஜாதிமதங்களைப் பாரோம் என்று எழுதிய பாரதியே கலந்து கொண்ட விழா என்றால் அது 9.11.1919 இல் காரைக்குடியில் நடைபெற்ற ஹிந்து மதாபிமான சங்கத்தின் விழாதான். இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அ.மு.க.கருப்பன் செட்டியார், தமிழ்க்கடல் ராய.சொ. , மகாகவி பாரதியார், சொ.முருகப்பன் செட்டியார், ரெங்கநாதன் செட்டியார்.

மலர்மன்னன் திண்ணையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

/// தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில் ஒரு பொது நலப் பணிக்கான அமைப்பைத் தோற்றுவித்திருந்தனர்.


தமிழ் இதழியல் முன்னோடிகளுள் குறிப்பிடத் தக்கவரும், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை வாசம் செய்தவரும், ஆழ்ந்த ஆன்மிக நாட்டம் உள்ளவரும், நகரத்தார் சமூகத்திற்கே உரித்தான ஈகைக் குணம் மிக்கவருமான ராய. சொக்கலிங்கம் (1898-1974), தமது சகா சொ. முருகப்பாவையும் இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு தொடங்கிய சங்கம் அது.


( இச்சங்கத்தில் எனது பேரன்பிற்குரிய பாட்டனார் திரு. பெரி. அரு. அருணாசலம் செட்டியார் அவர்களும் பலகாலம் உறுப்பினராகவும், சிலகாலம் உபதலைவராகவும் இருந்து பணியாற்றி உள்ளமை குறித்து உங்களுடன் பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.).


 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கடையத்தில் இருந்த காலத்தில் ராய.சொ. அழைப்பை ஏற்று, 1919 செப்டம்பர் 9 அன்று காரைக்குடி 
ஹிந்து மதாபிமான சங்கத்தில் உரையாற்றியும் தமக்கே உரித்தான இடிக் குரலில் பாடல்கள் பாடியும் மகிழ்வித்தார் என்பது சங்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி. இங்கேதான் பாரதியாரின் புகழ்பெற்ற செங்கோல் ஏந்திய கோலத்தில் அவர் அமர்ந்திருக்கும் புகைப் படம் எடுக்கப்பட்டது!
ராஜாஜி, திரு.வி.க. எனப் புகழ் வாய்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்ற சிறப்பு, காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திற்கு உண்டு. மேன்மை மிக்க ஆன்மிகத் தலைவர்களும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளனர்.//

இது பற்றி பா. ராகவன் கூறுகையில்

 /// தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ.முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது.. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப் படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்./// எனக் குறிப்பிடுகிறார்.

அந்தப் பாரம்பரியப் பெருமைமிக்க சங்கம் இன்றும் காரைக்குடியில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை திரு சேதுராமன் சாத்தப்பனும் அனுப்பி உதவித்தந்தார்கள்.

அதில் ///இந்து மதாபிமான சங்கம் காரைக்குடியில் தோற்றுவிக்கப்பட்டு நாட்டுத் தொண்டு, தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்து வரும் நிறுவனம்,. பிங்கள ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்தாறாம் நாள் 10.9.1917 ,” என் கடன் பணி செய்து கிடப்பதே “ என்ற அப்பர் சாமிகள் வாக்கைக் குறிக்கோளாகக் கொண்டு நகரத்தார் இளைஞர் பலரால் தோற்றுவிக்கப்பட்டது இச்சங்கம்..

செட்டிநாட்டின் சீர்திருத்தத் தந்தை எனப் பாராட்டப் பெறும் சொ. முருகப்பா முன் நிற்க, அவருக்குத் துணையாக ராய. சொக்கலிங்கனார்,கானாடுகாத்தான் வை. சு.சண்முகனார், அமராவதி புதூர் பிச்சப்பா சுப்பிரமணியன் இன்னும் பலர் நின்று ஊக்குவிக்க இச்சங்கம் காரைக்குடியில் திருவாசக மடத்தில் தொடங்கப்பட்டது.

சமயப்பற்று, மொழிப்பற்று,,நாட்டுப் பற்று, நல்லோர் கூட்டுறவு,இலக்கியப் பயிற்சி இவற்றை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டது இச்சங்கம் இது தொடங்கிய இராமகிருட்டிண கலா சாலை தமிழ்க்கடல் ராய. சொ, மற்றும் கம்பனடிப்பொடி சா.கணேசன் ஆகியோருக்குப் பயிற்சிக் களமாக அமைந்தது. ”கம்பநாடார்” என்ற இதழின் ஆசிரியரான மோ. வே. கோவிந்தராச ஐயங்கார் அவர்களைக் கொண்டு இளைஞர்களுக்குத் திருக்குறள் வகுப்பும் கம்பராமாயணம் வகுப்பும் நடத்தியது..

தமிழ்ப் பெரும் புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்த போது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 27.8.1918 இல்”விவேகானந்தா நூல் நிலையம்”என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது..தொடர்ந்து நூலகமும் படிப்பகமும் செயல்பட்டு வருகிறது. தற்போது சிவன் கோவில் மேலைத்தெருவில் சொந்தக் கட்டிடத்தில் ( 1952 இல் இருந்து ) செயல்பட்டு வருகிறது.

சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இலக்கியக் கூட்டம் நடத்துவதும், ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்துவதும் மரபு. மாதாந்திரக் கூட்டங்களும் நடைபெறும். இந்தச் சங்கத்துக்குக்கு வராத தமிழறிஞரே இல்லை எனலாம்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் இச்சங்கத்துக்கு முக்கியப் பங்குண்டு. காந்தியடிகள் 22.9.1921 இல் காரைக்குடிக்கு வந்தபோது பிறந்து நான்கு ஆண்டுகளே ஆகியிருந்த இச்சங்கம் அவருக்கு ஒரு வரவேற்பு இதழைக் கதர்த்துணியில் அச்சடித்து வழங்கியது.அந்த இதழ் இப்போதும் புதுதில்லியில்காந்தியடிகள் பொருட்காட்சி நிலையத்தில் பேணிக்காக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சி., வ,வே,சு, ஐயர், சுப்பிரமணிய சிவா போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரையும் அழைத்துப் போற்றிய பெருமை உடையது இச்சங்கம்.. 1930 க்குமுன் செட்டிநாட்டில் சங்கம் என்று குறிப்பிட்டாலே அது ஹிந்து மதாபிமான சங்கத்தைத்தான் குறிக்கும் என எழுதுகிறார் சோம..லெ.

இச்சங்கத்தின் மிகப்பெரிய சிறப்பு, மகாகவி பாரதியாருக்கும் இதற்கும் உள்ள தொடர்பு, கானாடு காத்தான் வை.சு. சண்முகனார் அழைப்பை ஏற்று அவர் இல்லத்துக்கு வந்து சிலநாள் தங்கிய கவிஞர் அங்கிருந்து கடையம் திரும்பும்போது காரைக்குடியில் இரண்டு மூன்று நாட்கள் தங்கினார்,அப்போது இச்சங்கத்துக்கு வந்து சொற்பொழிவாற்றினார். சங்க உறுப்பினர் சிலரோடு அமர்ந்து 9.11.1919 இல் நிழற்படம் எடுத்துக் கொண்டார்,.இது பாரதியாரின் அரிய புகைப்படங்களில் ஒன்று.

மூன்று நாட்கள் தங்கியபோது இந்து மதாபிமான சங்கத்து இளைஞர்களின் சுறுசுறுப்பாலும், நாட்டுப் பற்றினாலும் , மொழி அன்பினாலும் ஈர்க்கப்பட்ட பாரதியார் அவர்கள் வேண்டுகோளை ஏற்று இச்சங்கத்தின் மீது ஏழு பாடல்கள் பாடி வாழ்த்தினார்.இவ்வாறு பாரதியாரின் பாடல் பெற்ற சங்கம் தமிழகத்தில் இது ஒன்றுதான் என்பது நகரத்தார் சமூகத்துக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செய்தியாகும்.

95 ஆண்டுகள் கடந்தும் ஏற்றமுடன் இயங்கிக் கொண்டிருக்கும் நகரத்தார் அமைப்புக்களுள் சிறந்த ஒன்றாகிய இந்து மதாபிமான சங்கத்தின் பெருமையைப் பாரதி கூற்றாகவே காணலாம்.

 இது என் தமிழன்னை சுசீலாம்மா எனக்குக் கல்லூரியில் பரிசளித்த பாரதியார் பாடல்கள் புத்தகம். இதை இரண்டு நாட்கள் முன்பு எதேச்சையாகப் புரட்டும் போது இந்தப் பாடலைப் பார்த்து ஆர்வமாகி இந்தத் தகவல்களை எல்லாம் சேகரித்தேன். இன்னும் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்களும், திரு முத்துப் பழனியப்பன் அவர்களும் தகவல்கள் தருவதாகக் கூறியுள்ளார்கள்.

இனி பாரதியார் எழுதியபாடல்.:-

ஹிந்து மதாபிமான சங்கத்தார்:-

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
  அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்குரிய
  உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாகச்
  செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
  பரம்பொருளை அகத்தில் சேர்த்து.

செய்கையெலாம் அதன் செய்கை, நினைவெல்லாம்
  அதன் நினைவு, தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
  யொளிர்வதென உறுதிகொண்டு
பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
  வீண் விருப்பம், புழுக்கம்,அச்சம்,
ஜயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
  வாளாலே அறுத்துத் தள்ளி,

எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
  வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
  பெற்றிடுவார்! சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
  இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
  மெனப்புவியோர் சொல்லு வாரே.

அருமையுறு பொருளிலெல்லாம் மிக அரிதாய்த்
  தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
  ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படியிங் கொழுகாத
   மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
  தழிகின்றார் ஓய்வி லேமே.

இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
  தனையுலகில் இசைக்க வல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
  பாரறியப் புகட்டும் வண்ணம்
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
  காரைக் குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
  இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார்,

உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
  அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக் கொண்டார்.
  தொண்டொன்றே வழியாக் கண்டார்.
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்,
  அவ்வன்பின் ஊற்றுத் தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
  சங்கமொன்று சேர்த்திட்டாரே.

பலநூல்கள் பதிப்பித்தும் பலபெரியோர்
  பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
  லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
  உழைக்கின்றார், கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
  வாழ்ந்தொளிர்க, நிலத்தின் மீதே.!

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



5 கருத்துகள்:

  1. //செய்கையெலாம் அதன் செய்கை, நினைவெல்லாம்
    அதன் நினைவு, தெய்வ மேநாம்
    உய்கையுற நாமாகி நமக்குள்ளே
    யொளிர்வதென உறுதிகொண்டு
    பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
    வீண் விருப்பம், புழுக்கம்,அச்சம்,
    ஜயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
    வாளாலே அறுத்துத் தள்ளி,...//
    அத்வைத கருத்தினை
    அருமையாக எளிதாக
    இதைவிடத் தெளிவாக
    ஈண்டு இவ்வுலகத்தே
    யாரேனும் பாரதியைத்தவிர
    உரைத்திட
    வல்லாரோ ?

    இப்பாடலை இதுவரை நான் படித்ததில்லை.
    புதையலைக் கண்டாற்போல் இருக்கிறது.

    நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான தகவல்கள்....

    இப்பாடலை இதுவரை படித்ததில்லை... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையானதொரு பாடலை எங்களுக்காக பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களின் ஓய்வில் வருகை தாருங்கள்
    http://www.krishnaalaya.com

    பதிலளிநீக்கு
  4. அருமையானதொரு பாடலை எங்களுக்காக பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களின் ஓய்வில் வருகை தாருங்கள்
    http://www.krishnaalaya.com

    பதிலளிநீக்கு
  5. நன்றி சுப்புரத்தினம்

    நன்றி வெங்கட் நாகராஜ்

    நன்றி கிருஷ்ணா ரவி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)