சனி, 1 செப்டம்பர், 2012

கவனகக்கலை செழிக்கும் கலைசெழியனின் ஃபெட்னா அனுபவங்கள்.

கவனகக்கலையில் சிறப்பாக ஜொலித்துவரும் கலைசெழியன் அவர்கள் சமீபத்தில் ஐக்கிய அமெரிக்க குடியரசில் நடைபெற்ற ஃபெட்னாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேடையில் சிறப்பு நிகழ்வுகளை நிகழ்த்தித் திரும்பி இருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்.

1, கவனகக் கலையில் எப்போதிருந்து ஈடுபட்டு வருகிறீர்கள். அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள் ஒரே சமயத்தில் நீங்கள் எத்தனை விஷயங்களை கவனகப்படுத்தி இருக்கிறீர்கள் .


பதில்:- 1996-ஆம் ஆண்டு முதல் நான் கவனகக்கலையில் ஈடுபட்டு வருகிறேன். அட்டாவதானி என்பது எட்டுப்பேர்க்கு ஒரே நேரத்தில் விடை பகர்வது. தசாவதானி என்பது பத்துப்பேர்க்கு விடையளித்தல். தற்போது நான் 70 கவனகங்கள் வரை செய்கிறேன். என் 70 கவனக அரங்கேற்றம் தஞ்சாவூரில் முதுமுனைவர் இளங்குமரனார் தலைமையில் நடைபெற்றது.

2. எத்தனை வயதில் இருந்து ஈடுபட்டு வருகிறீர்கள். இதற்கு யார் முன்னோடி உங்களால் இத்தனை விஷயங்களை அவதானிக்க முடியும் என முதலில் அவதானித்தது யார்.

பதில்:- 13-ஆம் வயதிலிருந்து நான் கவனகம் செய்துவருகிறேன். 1996 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் தமிழ்ச்சான்றோர் பேரவையில் பதினாறு கவனகர் கனகசுப்பு ரத்தினம் அவர்கள் கவனகம் நிகழ்த்தினார்கள். அதனைப் பார்க்க நானும் அண்ணனும் அப்பாவுடன் சென்றிருந்தோம். திரு. கனகசுப்புரத்தினம் அவர்கள் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போதே நான் அப்பாவிடம் "அவர் செய்வது போல என்னாலும் செய்ய முடியும்" என்றேன். அன்றிரவே வீட்டில் எட்டுப் பேரை வினவ வைத்தார்; அனைவரின் வினாவுக்கும் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன். அன்றிரவு முதல் அப்பா திரு. சு. கலைச்செல்வன் அவர்கள் பயிற்சி கொடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் எட்டுப் பேர்க்கு விடையளித்தேன். அந்த எண்ணிக்கையைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே வந்து இன்று 70 வரை கவனகம் செய்கிறேன். பயிற்சி யளிப்பதில் என் தந்தையின் பங்கு மிகப்பெரியது.

3. உங்கள் அப்பா, அம்மா, கல்வி, பணி, குடும்பம் பற்றி.

பதில்:-  அப்பா பெயர் சு. கலைச்செல்வன். வழக்கறிஞராக இருக்கிறார். என்றாலும் அதிக நேரம் என்னுடனேயே செலவு செய்து வருகிறார். அம்மாவின் பெயர் திருமதி கிரிசாதேவி. வணிகவியலில் பட்டம் பெற்றிருக்கிறார். இல்லப் பொறுப்பு அவரைச் சார்ந்தது. மூத்த அண்ணன் கலை. திருமாறன்; திருமணம் ஆகிவிட்டது; சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இளைய அண்ணன் கலை. சோழன்; திருமணம் ஆகிவிட்டது; இவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.

4.இன்னும் எதிர்வரும் காலங்களில் என்னென்ன புதுமைகள் செய்ய இருக்கிறீர்கள்.

பதில்:- கவனகக்கலையில் பல புதுமையான கவனகங்களை வடிவமைத்து அரங்கேற்றி வந்திருக்கிறேன். புதுமையான கவனகங்களை வடிவமைக்கும் பணியை என் அப்பா மேற்கொள்வார். கவனகக்கலை தொடர்பாகவே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டமும் பெற்றுவிட்டேன். நூறு கவனகர் செய்குதம்பிப் பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு நூறு கவனகம் நிகழ்த்தியுள்ளார். அவர் 25 கவனகங்களை அடிப்படையாகக் கொண்டு நூறு கவனகங்கள் செய்தார். நான் நிகழ்த்தும் நூறு கவனகம் இதிலிருந்து வேறு பட்டுப் புதுமையாக இருக்கும். மக்களால் பெரிதும் வரவேற்புக்குள்ளாகும் சிற்பக் கவனகம், கழித்தல் கவனகம் முதலியவை புதுமை வடிவமைக்கு எடுத்துக்காட்டுகள் எனலாம்.

5.சிறப்பு விருந்தினராக ஃபெட்னாவுக்குச் சென்று திரும்பி இருக்கிறீர்கள். அங்கே உங்கள் நிகழ்ச்சிக்கு எப்படி வரவேற்பு இருந்தது.என்ன சிறப்பு அம்சங்களை நிகழ்த்தினீர்கள்.

பதில்:- வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கவனக நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தகுந்த ஒன்று. பேரவையின் செயற்பாடுகளைக் கண்டு வியந்து போனேன். தற்சமயம் தமிழிசைக்குப் பேரவையினர் ஊக்கம் கொடுக்கிறார்கள். இவ்வாறு பல தமிழ் சார்ந்த கலைகளையும், கலைஞர்களையும் பாராட்டுகிறார்கள்; ஊக்கப்படுத்துகிறார்கள். கலைகளைக் கலையளவில் நிறுத்திவிடாமல் அவற்றைப் பயன்பாட்டு நோக்கில் பேரவையினர் அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இளைய தலைமுறையினரிடம் தமிழைக் கொண்டு சேர்க்க அவர்கள் எடுக்கும் அறிவியல் சார்ந்த முயற்சி வியக்கச் செய்கிறது. இன உணர்வினையும், மொழியுணர்வையும் அமெரிக்க மண்ணுக்கேற்றச் சூழலில் மிகச் செப்பமாகவும் பக்குவமாகவும் அடுத்த தலைமுறையினரிடம் பேரவை வளர்த்துக் கொண்டு வருகிறது. இப்படிப் பல சிறப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடும் பேரவையின் வெள்ளிவிழாவில் கவனக நிகழ்ச்சி நடத்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. - பேரவையில் கவனக நிகழ்ச்சி வெகு சிறப்பாகச் சென்றது. பார்வையாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சி முடித்து கீழே வந்ததும் பலர் தனிப்பட்ட முறையில் பாராட்டினார்கள். பேரவையில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சிகளுள் கவனக நிகழ்ச்சியும் (பின்னூட்டம் மூலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயல்வீரர்களுள் ஒருவரான திரு.சங்கரபாண்டி அவர்கள் அண்மையில் தெரியப்படுத்தியுள்ளார். - பேரவையில் நடைபெற்ற கவனக நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்புச் சேர்க்கும் வகையில் நாடு போற்றும் நல்லவர் திரு. நல்லகண்ணு அவர்கள் முதன்முறையாக யான் நிகழ்த்திய கவனகத்தைப் பார்த்தார்; பாராட்டினார். அதே போல திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோவும் அவர்தம் துணைவியாரும் யான் நிகழ்த்திய கவனக நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தார்கள். திருமதி. பூமா பொன்னவைக்கோ அவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் தனிப்பட்ட முறையில் தம் பாராட்டுகளைத் தெரியப்படுத்தினார். இப்படிப் பாராட்டுப் பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும். - என்னைப் பேரவைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகம் செய்த திரு. மலர்ச்செல்வனாரும் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு அகமகிழ்ந்து வாழ்த்தினார். - சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பேரவையில் நடைபெற்ற கவனக நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றது. அங்கு நடைபெற்ற கவனக நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுப் பிற பிற தமிழ்ச்சங்கங்களும் கவனக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய விழைந்தன. அந்தளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றது.

6. பேரவை தவிர்த்து வேறெங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்தினீர்கள்?

பதில்:- பேரவை நிகழ்ச்சியைத் தவிர்த்து, கனெக்டிகெட் தமிழ்ச்சங்கம், மிசோரி தமிழ்ச்சங்கம், ஊசுடனில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம், தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம், பனைநிலம் தமிழ்ச்சங்கம், அட்லாண்டா தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் கவனக நிகழ்ச்சியும் பொழிவும் நிகழ்த்தினேன். திரு. சகாயம் அவர்கள் முதன்முறையாக என் கவனக நிகழ்ச்சியை மிசோரி தமிழ்ச்சங்கத்தில் கண்டு வெகுவாகப் பாராட்டினார்கள். அதே போல ஊசுடனில் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கவனக நிகழ்ச்சியை முதன்முறையாகக் கண்டு வியந்தே போனார்கள்.

7. இதுபோல் இன்னும் எத்தனை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றீர்கள்.

பதில்:- தாய்லாந்து, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்குக் கவனக நிகழ்த்துவதற்காகச் சென்றிருக்கிறேன். இலங்கையில் ஒரு மாதம் தங்கியிருந்து அங்குள்ள பல தமிழ்ப்பள்ளிக் கூட மாணவர்களுக்குக் கவனக நிகழ்ச்சி நடத்தியமை குறிப்பிடத் தகுந்தது.

8. கம்ப்யூட்டர் பரிசு கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்களே. அது பற்றி.

பதில்:- முன்னரே குறிப்பிட்டது போல என்னைப் பேரவைக்கு அறிமுகம் செய்து வைத்த மலர்ச்செல்வனார் எனக்கு மடிக்கணினி ஒன்றைப் பரிசளித்தார். அவர் தான் பிறந்த கிராமத்து அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து நல்ல பல செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். அப்பள்ளியிலும் நான் கவனகம் நிகழ்த்தியிருக்கிறேன். அப்பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள திரு. மலர்ச்செல்வனார் தமிழகம் வந்த போது நானும் அப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போதே மடிக்கணினி பரிசளிப்பதாகச் சொல்லியிருந்தார். அதனை மனத்தில் கொண்டு சரியாக நான் அமெரிக்கா வந்திருந்த போது அதுவும் அவர் இல்லத்தில் தங்கியிருந்த காலத்தில் பரிசளித்துச் சிறப்பு செய்துள்ளார்.

9. ஞாபக சக்திக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு பயிற்சிக்கூடம் ஆரம்பித்து பயிற்சி அளிக்கலாமே. அது பற்றி.

பதில்:- பயிற்சிக் கூடம் தொடங்கலாம். அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் அதனைத் தற்சமயம் செய்வதாக இல்லை. காரணம் முதலில் நூறு கவனகம் செய்ய வேண்டியுள்ளது. நூறு கவனகம் அரங்கேற்றும் வரையில் நானே பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். அதனால் பிறர்க்கு முழுமையாகவும் முழுநேரமாகவும் என்னால் பயிற்சியளிக்க முடியாது. எனவே நூறு கவனகம் அரங்கேற்றம் செய்த பிறகு பயிற்சிக்கூடம் பற்றிச் சிந்திப்பேன். 1

10. இந்தப் பயிற்சி எந்தெந்த விதங்களில் உதவுகிறது.

பதில்:- கவனகக் கலை என்பது மனித ஆற்றலின் அடையாளம். கவனகம் வெறும் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்ட கலை அன்று. நினைவாற்றலை ஒரு கூறாகக் கொண்ட மனித ஆற்றலின் அடையாளம்தான் கவனகம். சுடர் விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று தேவையல்லவா? தூண்டுகோலாக இருப்பது கவனகக்கலை. அதுவும் வாழும் எடுத்துக்காட்டுகள் மிகுந்த மன எழுச்சியைத் தரக்கூடியன. முறையான கவனகக்கலை நிகழ்த்துவோர் அனைவரும் வாழும் எடுத்துக்காட்டுகளே. மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுக்க வல்லது இக்கலை. மேலும் இதற்கெனச் சில நடைமுறையியல் சார்ந்த பயிற்சிகளும் உண்டு. அவை தெளிந்த மனநிலையைத் தருவதோடு பயன்களையும் விளைவிக்கக் கூடியவை ஆகும்.

11.உங்களுக்குக் கிடைத்த விருது/விருந்து/ சிறப்புப் பாராட்டு இதைப் பகிர்ந்துக்குங்க.

பதில்:- 13 வயதிலிருந்து கவனகம் செய்து வருவதால் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விருதுகள்/சிறப்புப் பட்டங்கள் பெற்றுள்ளேன். - பல தமிழிலக்கிய அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அவற்றை வழங்கியிருக்கின்றன. 'நினைவாற்றலில் மனப்புரட்சி' எனும் நூலை 2000-த்தாம் ஆண்டில் இயற்றினேன். அந்நூலுக்குத் தமிழக அரசின் தமிழிலக்கியச் சங்கப்பலகைக் குறள்பீடப் பாராட்டிதழ்ப் பரிசு கிடைத்துள்ளது. - சென்னை கம்பன் கழகத்தின், வளர்தலைமுறையினருக்கான சிறந்த பேச்சாளர் விருது பெற்றுள்ளேன். சுழல்சங்கத்தின் இளஞ்சாதனையாளர் விருது பெற்றுள்ளேன். - அமெரிக்காவில் தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (MUSC) கவனக நிகழ்ச்சியை அமெரிக்கர்களுக்கு ஆங்கிலத்தில் செய்து காட்டினேன். அமெரிக்கர்களுக்குக் கவனகம் புதுமையான நிகழ்ச்சியாக இருந்தது. வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் பல்கலைக்கழகமும் கவனக நிகழ்ச்சியைப் பாராட்டிச் சிறப்புச் சான்றிதழ் தந்திருக்கிறது.

மிக்க நன்றி கலை செழியன் அவர்களே.. உங்களைப் போன்ற கவனகக் கலைஞர்களை அழைத்து ஃபெட்னாவும் பெருமையுற்றது. இது போல் தங்களாலும் கவனகம் செய்யமுடியும் என்ற ஊக்கத்தை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கும் உங்கள் நிகழ்ச்சி. நன்றி உங்கள் பதில்களுக்கு. 100 கவனகங்கள் செய்து புகழ்பெற்று இன்னும் பலருக்கும் வழிகாட்டியாக விளங்க வாழ்த்துக்கள்.


9 கருத்துகள்:

  1. ஆச்சிரியமான மனிதர் அசாதாரண செயல்!

    பதிலளிநீக்கு
  2. கலைச்செழியனின் கவனகக்கலை குறித்த பதிவு மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது.
    பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கலைச்செழியனின் கவனகக்கலை குறித்த பதிவு மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது.
    பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி முருகேஸ்வரி ராஜவேல்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. 100 கவனகங்கள் செய்து புகழ்பெற்று இன்னும் பலருக்கும் வழிகாட்டியாக விளங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவனகர் கலை செழியன் தமிழியலில் கவனகக் கலை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றது எப்போது? எந்தப் பல்கலைக்கழகத்தில் ஐயா? தயவு செய்து விவரம் பணிந்து வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2011-ஆம் ஆண்டு பட்டம் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம்.

      நீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)