புதன், 29 ஆகஸ்ட், 2012

இளம்பாடலாசிரியர் பத்மாவதி.

ஒரு பாடலாசிரியருக்கு என்ன வயதிருக்கலாம். அவர் என்ன படித்திருக்கலாம். சொல்லுங்கள். சின்னத்தாமரையைப் போல அழகான இந்தப் பாடலாசிரியர் பொறியியல் படித்தவர். ஃபர்ஸ்ட் க்ளாசில் டிஸ்டிங்க்‌ஷனில் கோல்ட் மெடலிஸ்ட். மிகச் சிறுவயதுப் பாடலாசிரியர்.. வயது 25 தான். நம்ப முடியவில்லை அல்லவா., இவர் பெயர் பத்மாவதி.இவரின் முதல் பாடல் வெளிவந்த படம் இயக்குநர் பரத்தின் ”நீதானா அவன்”. இசையமைப்பாளர் தஷி. அந்தப் படத்தில் இவர் எழுதிய பாடல் ஒரு டூயட் பாட்டு.. “ தாவணிப் பொண்ணுன்னு” எனத் தொடங்கும் பாடல். உதயம் தியேட்டரில் அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கும் போது பாடலாசிரியர் என்று இவர் பெயர் வந்ததும் இவரின் மகிழ்ச்சி எப்படி இருந்திருக்கும். இது பற்றி செய்தித் தாள்களிலும் வந்தது. இந்த உயரத்தை எட்டியது எப்படி என அவரிடம் கேட்டோம்.


இவரின் அப்பா பெயர் வெங்கடரமணன். அம்மா மதுராம்பாள். பூர்வீகம் திருச்சி. தங்கை காயத்ரி கெஸ்ட் லெக்சரராகப் படித்துக் கொண்டே பணிபுரிகிறார். இவர் படித்தது B.E., I.T., கோவை பிஎஸ்ஜி டெக்கில் படித்துள்ளார். இந்தக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம். அப்பா அம்மா நீதித்துறையில் இருந்ததால் லா படிக்க வைக்க நினைத்திருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்திலேயே ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மாணவியாகத் தேறியதால் கோவை பிஎஸ்ஜி டெக்கில் படிக்க இடம் கிடைத்தது.

பாடலாசிரியராக வரவேண்டும் என்ற கனவை அது கொஞ்சம் சிதைத்ததாகச் சொல்கி்றார் இவர். இவர் பி ஏ தமிழ் எடுத்துப் படிக்க நினைத்திருக்கிறார். அதிக மதிப்பெண் எடுத்துவிட்டதால் லிட்டரேச்சரில் சேர்க்காமல் என்ஜினியரிங்கில் சேர்ந்த்திருக்கிறார்கள். தமிழ் படிக்க முடியாததால் தன்னுடைய பாடலாசிரியர் கனவு கனவுதான் என நினைத்தவருக்கு விஜய் டிவியின் ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ”ஒரு வெளிச்சம் தந்தது. அதில் வளையாபதி பற்றி பேசியபோது நெல்லை கண்ணன் சொன்னாராம், தமிழ் படித்தவர்களை விட அழகாக வெண்பாக்களைச் சொன்ன பத்மாவதிக்குப் பாராட்டுக்கள். அது ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததாம். தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காமலும் இலக்கியத்தில் பணி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தந்ததாம்.

இவரின் அம்மாவுக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். கல்லூரியில் நிறைய பேச்சுப் போட்டிகளில் ., கவிதைப் போட்டிகளில் இவர் கலந்து கொள்ளும் போது இவரின் தாயார்தான் குறிப்புகள் எடுத்துக் கொடுப்பாராம். விசுவின் ”மக்கள் அரங்கம்” நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் ”அழகிய தமிழ் மகளில் ” பேசி இருக்கிறார். இது எல்லாம் வேலை செய்யும் போது கலந்து கொண்டது.

என் பெயரிலேயே பத்ரிக்கைகளில் கவிதைகள்., தினமலர்., தினத்தந்தி போன்றவற்றுக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். நிறைய மேடைகளில் பேசும்போது வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டாமல் என்னுடைய கவிதைகளையே மேற்கோள் காட்டுவேன். அப்போது என் ஃப்ரெண்ட்ஸ் இதை எல்லாம் ஒரு புத்தகமாகப் போடு. உன் கவிதைகளை மற்றவர்கள் எடுத்து போடுறாங்க. அதுனால புத்தகமா கொண்டுவான்னு சொன்னாங்க. அருண் பாரதி என்பவரின் தமிழ் அழை பதிப்பகம் மூலமா 2009 இல் என் முதல் கவிதைததொகுதி “கைத்தலம் பற்றி” .

புத்தகக் கண்காட்சிக்குப் பத்து நாளைக்கு முன்னால் இவரின் தந்தைக்கு மாரடைப்பு வந்து ஹாஸ்பிட்டலைஸ் செய்யப்பட்டார். நண்பர்களின் முழு உதவியோடும் ஒத்துழைப்போடும் 2010 ஜனவரி ஒண்ணாம் தேதி புத்தாண்டுப் பிறப்பன்று இவர் புத்தகம் வெளியிடப்பட்டது.

புதிய பார்வை., பாக்யா., தினமலர்., தினத்தந்தி எல்லாவற்றின் விமர்சனத்திலும் இந்தப் புத்தகம் பற்றி வாழ்த்தப்பட்டது. அதன் மூலம் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அது வெண்பா போலவும் , மெட்டுக்கு ஏற்றபடி இருப்பதாகவும் பலரும் சொன்னார்கள். இது சினிமா பாட்டை ஒத்திருந்ததாகச் சொன்னார்கள். இருந்தாலும் இவருக்கு தன்னால் இதை எல்லாம் பண்ண முடியுமா முடியாதா எனக் குழப்பமாக இருந்ததாம்.

எல்லாக் கலைகளுக்கும் குருவிடம் சென்று பயில்வார்கள். ஆனால் சினிமாத்துறையில் இந்தத் துறைக்கென்று பயிற்சி எதுவும் கிடையாது. எனவே இவர் தானாகவே மெட்டுக்குப் பாட்டெழுதப் பழகினார். இதைத் தொழிலாகப் பண்ணமுடியாது என அனைவரும் நினைத்தார்கள். ஒரு பெண் இரவு நேரமோ., அதைத் தாண்டிய நேரமோ இதைப் பண்ண முடியாத சூழல். அசென்சரில் பணி புரிந்து வந்தார். கை நிறைய சம்பளம் . நல்ல வேலை. நிரந்தரமான வேலையை இழக்க யோசனை. எனவே 3 மாதம் ’லாஸ் ஆஃப் பே’ யில் லீவு போட்டுவிட்டு நிறைய நாள் காலை ., மாலை., பகல் ., இரவு என எல்லா நேரத்திலும் அம்மா சொன்னபடி கிட்டத்தட்ட 300, 400 பாடல்களின் மெட்டுக்களை எடுத்துக் கொண்டு இவரே வரிகளை எழுதிப் பழகினார். இவருக்கு நிறைவு வந்த பிறகு சினிமாவுக்காக எழுதத் துவங்கினார். நிறைய இயக்குனர்கள்., இசையமைப்பாளர்களைப் பார்க்க குரோம்பேட்டையிலிருந்து சாலிக்கிராமம் வரை தினமும் பயணம் செய்துள்ளார். மதிய உணவை அருகாமையில் இருக்கும் ஒரு பூங்காவில் சாப்பிடுவார்.

இதன் நடுவில் தினமலர் நாளிதழில் வெள்ளி மலரில் ,”அமிர்தவர்ஷினி” என்ற ஒரு நாவல் 22 வாரம் தொடர்கதையாக வந்தது.குங்குமத்தின் குங்குமச்சிமிழில் என்னுடைய ,”இடம்பெயர்தல்” என்ற சமூகநாவல் வெளியிட்டார்கள். அதன் பின் வீரன் செல்வராஜ் இயக்கிய ,”தாய்” குறும்படத்தில் ஆராரோ பாடினேனே அழகான ராஜா., கால்கோடி வைரம் நீயடா” என்ற பாட்டை எழுதினார்.இதை வெளியிட்டவர் டைரக்டர் எஸ்.வி.சந்திரசேகரன். பெற்றுக்கொண்டவர் ராசு.மதுரவன்.

 “மழைத்துளிகள்” என்ற இசைஆல்பத்தில் 3 பாடல்கள் இவருடையது வெளியானது.மிகப் பெரிய அங்கீகாரம் என்னவென்றால் சாகித்ய அகாடமியின் கலைவிழாவில் நடந்த கவியரங்கத்தில் நெல்லை ஜெயந்தா., தமிழமுதன்., மற்றும் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “யுகபாரதியுடன் “அமர்ந்து பேசியது மறக்க முடியாதது என்று சொன்னார். தான் யாருடைய பாடல்களை அதிகம் கேட்டு ரசித்தோமோ அவர்களோடு சரிசமமாக மேடையில் அமர்ந்து ”இரவீந்தர் என் கனவில்” என கவிதை சொன்னது மிகப் பெருமை தந்தது எனக் கூறுகிறார்.

இதுபோல குறும்படம்., ஆல்பம் முயற்சிகளை அறிந்த இயக்குநர் பரத் “நீதானா அவன்” படத்தில் வாய்ப்பளித்துள்ளார். அப்புறம் வேறு பட முயற்சிகளுக்கான சில சந்திப்புக்களும் சந்தர்ப்பங்களும் சரியா வாய்க்கவில்லை. ஒரு எதிர்பாராத சந்திப்பு ஒரு பாராட்டு டைரக்டர் சங்கரிடமிருந்து கிடைத்தது ., அது ஒரு அறக்கட்டளைக்கான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போயிருந்தபோது இவர் பேச்சைக் கேட்டு சங்கர் மிகவும் பாராட்டியது ஆகும்.

”சோளக்காட்டு பொம்மை” திரைப்படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. விதைக்கும் போது பாடப்படும் ஒரு பாடலை அந்தப் படத்தில் இவர் எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் விவேகாவும் இவரும் எழுதி இருக்கிறார்கள். இது நவம்பரில் வெளியாகிறது.

சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருந்தாலும் ஆங்கிலத்தில் பாட்டெழுதுவதில்லை., மேலும் இரட்டை அர்த்தம் உபயோகிக்கிறமாதிரி பாட்டெழுதுவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதாகாக் கூறினார். இதனால் பல வாய்ப்புக்கள் கைவிட்டுப் போயிருக்கின்றன.

யாரடா நீ மன்மதா என்ற படத்தில் அறிவுமதி., பழனிபாரதி மற்றும் இவரும் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.

சென்னைப் புற நகர் என்ற படத்தில் 3 பாடல்கள் எழுதி இருக்கிறார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால்., சிங்கை பதிவர்கள் மணற்கேணி என்ற போட்டியை நடத்திய போது நாட்டுப்புற இலக்கியம் சார்பா ஒரு கட்டுரையை இவர் சமர்ப்பிக்க.. அதுக்கு பரிசா ஒரு வாரம் சிங்கப்பூர் செல்லும் அதிர்ஷ்டம் கிடைத்தது. இவர் தன் தந்தையுடன் சென்று சிங்கையை சுற்றிப் பார்த்திருக்கிறார். அந்தப் பதிவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டதாக சொன்னார்.

இதுக்கெல்லாம் காரணம் இவர் ஒரு மாதம் தன்னுடைய கிராமத்துக்கு சென்று தங்கி நாட்டுப்புறப்பாடல்களை., விபரங்களை தொகுத்ததுதான். எனவே. எதை செய்ய ஆசைப்பட்டாலும் பயிற்சியோடு., முயற்சியோடு செய்யுங்கள். வெல்வீர்கள்.

டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 16) பத்மாவதி பற்றிய இந்தக் கட்டுரை டிசம்பர் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.


9 கருத்துகள்:

  1. நான் ஒரு பாலாசிரியர் என்ற முறையிலும் தமிழ் திரைப்பட பாடலாசியர் சங்கத்தின் சார்பாகவும் பாடலாசிரியர் பத்மாவதிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்..நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. பாடலாசிரியராக சாதனை அரசியாக பத்மாவதி மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்க்கா.

    பதிலளிநீக்கு
  4. //சின்னத்தாமரையைப் போல அழகான
    மிகவும் ரசித்த வரி.
    தன் கனவுகளை ஒதுக்காமல் வளைந்து கொடுத்துப் பிடித்த பத்மாவதி, சாதிக்கப் பிறந்தவர். சந்தேகமில்லை. இது போன்ற வெற்றிகளைப் படிக்கும்பொழுது தனி உற்சாகம் வந்துவிடுகிறது. எடுத்தெழுதிய உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் பத்மாவதி. தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் நானும் கலந்திருந்ததால் இவரை எனக்குத் தெரியும். 2010 புத்தக விழாவில் இவரைச் சந்தித்தேன். கைத்தலம் பற்றி கவிததையும் அவரிடமே வாங்கினேன். மகிழ்வாக உள்ளது.. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. பத்மாவதி குறித்த பதிவினை வெளியிட்ட தேனம்மைக்கு மிக்க நன்றி.பத்மாவதிக்கு என் பாராட்டுகள்.இந்த பதிவு பாடலாசிரியராக வரவேண்டும் என்று விரும்பும் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்.மீ
    ண்டும் நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  7. நன்றி மதுமதி

    நன்றி தனபால்

    நன்றி பாலகணேஷ்

    நன்றி அப்பாத்துரை

    நன்றி உழவன்

    நன்றி பாலா

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. பாராட்டுகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன். நெல்லைக் கண்ணன் பாராட்டினால் வேறு யார் பாராட்டுதலும் வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)