வெள்ளி, 27 ஜனவரி, 2012

வித்யாவின்( விதூஷ்) வித்யாலயம்,”.ஃபுட் ப்ரிண்ட்ஸ்”.இவள் புதியவளில்.


நம் பிரபல வலைப்பதிவர் ( பகோடா பேப்பர்கள் விதூஷ் ) ., தோழி, சகோதரி, வித்யாவின் குழந்தைகள் காப்பகம் மற்றும் கல்வியகம் ,”ஃபுட் ப்ரிண்ட்ஸ்” பற்றி சிறப்புப் பேட்டி இவள் புதியவளுக்காக எடுக்கப்பட்டது.

1. குழந்தைகள் காப்பகம் ஏன் ஆரம்பித்தீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி.



பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது கனவு. அதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருந்ததால், மூன்று வருஷ அடிப்படை உழைப்புக்குப் பின்ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் ஆரம்பித்தேன். தற்போது மடிப்பக்கத்திலும் நங்கநல்லூரிலும் இயங்கி வருகிறது. மூன்று வயதுக்கு மேற்பட்டக் குழந்தைகளுக்கு ப்ரீகேஜி-யில் அடிப்படைக் கல்வியும் பயிற்றுவிக்கிறோம். பள்ளி முடித்து வரும் குழந்தைகள், மாலை வீட்டுக்குப் போகும்போது பெற்றோருக்கு உதவியாக இருக்கும்படி, வீட்டுப்பாடங்களும் செய்து முடித்துவிட்டு போகும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். இது தவிர பள்ளியில் பரீட்சை நேரங்களில் கூடுதலாகப் படிக்க உதவுகிறோம். ஹாபி வகுப்புக்கள், நடனம், இசை, கராத்தே, போன்றவைகளும் விருப்பமிருந்தால் கற்கலாம். www.footprintslc.com என்ற இணையதளத்தில் மேலும் விபரங்கள் இருக்கின்றன.


2. இதை நடத்துவதில் உள்ள சந்தோஷங்கள் , சிரமங்கள் என்னென்ன?

சந்தோஷங்களின் பட்டியல் மிகவும் நீளம். அதனால், சிரமம் என்னவென்பதை முதலில் சொல்லி விடுகிறேன். வாடகை, வீட்டு ஓனர் மற்றும் இடம், அது மட்டுமே பிரச்சினை.

சந்தோஷங்கள் என்றால் முதலில் சொல்லுவது குழந்தைகள் திடீரென்று வந்து பின்னால் கட்டிக்கொண்டு 'ஆன்ட்டி'ன்னு அன்பு முத்தங்கள் தருவாங்க பாருங்க.. அதுக்கு ஈடு இணையே கிடையாது, சதா சிரித்துக் கொண்டும், அதிசயித்து அதிசயித்து ஏதேதோ பேசிக்கொண்டும், அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வங்கள் நம்மோடு இருக்கும் சந்தோஷம். கதை சொல்லும் போதும், எதையாவது விவரித்து அது அவர்களுக்குப் புரிந்துவிடும் போதும் விரியும் விழிகள் - தெய்வாம்சம். வேறென்னங்க வேண்டும்?

3. அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள், வீடு வாடகைக்கு கொடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன?

பெரும்பாலும் தனி வீடாக எடுப்பதால், அக்கம்பக்கத்துக்காரர்கள் தலையீடு இருப்பதில்லை. அப்படி அடுக்கு மாடியாக இருந்தபோது, சப்தம் வருகிறது என்று சண்டை போடுவார்கள். தண்ணீர், அடிப்படை வசதிகள், முதலீட்டை சேகரிப்பதற்குள் வரும் குழந்தைகளின் தலையை எண்ணி இன்னும் அதிகம் வாடகை கேட்கும் வீடு வாடகைக்குக் கொடுத்தவர்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் இருக்கின்றன.

4. எந்த வயதிலிருந்து எந்த வயது வரை பார்த்துக் கொள்கிறீகள். அல்லது அதன் நடைமுறை பற்றி சொல்லுங்கள்.

பிறந்த குழந்தைகளில் இருந்து பதினாறு வயதுடைய குழந்தைகள் வரை பார்த்துக் கொள்கிறோம். சேவை வரி பதிவு செய்து கொண்டு, மின்சாரத்தை கமெர்ஷியல் ஆக மாற்றி கொண்டால் பின்னாளில் பிரச்சினைகள் பெரிதாக வருவதில்லை. இதுதவிர, சுத்தம், கழிப்பறை பராமரித்தல் போன்றவை அடிப்படை சுகாதாரத் தேவைகள்.


5. குழந்தைகள் எப்படி ஃபீல் செய்கிறார்கள்.

( 4 குழந்தைகளிடம் கருத்து கணிப்பு செய்தோம்)

ஷீலா - 4 வயது: விளையாடிகிட்டே படிக்கலாம். க்ளே மாவு பெசஞ்சு பொம்மை பண்ணுவேன்.

அம்ருத் - 7 வயது: ஹோம்வொர்க் எல்லாம் இங்கேயே முடிச்சுடுவேன். விளையாடிட்டே இருக்கும்போது அம்மா வந்துருவாங்க. நைட்டு டாம் அன்ட் ஜெர்ரி பார்க்க விடுவாங்க.

கிரேஸ் - 12 வயது: நான் ஸ்கூல் ப்ராஜெக்ட் வொர்க் செய்ய வந்திருக்கேன். எனக்கு ஏரோப்ளேன் மாடல் செய்யும் அசைன்மென்ட் இருக்கு.

சுஜீத் - 10 வயது: எங்க ப்ளாட்ல விளையாட யாருமில்லை. இங்க வந்து விளையாடுவேன். நிறையா பிரெண்ட்ஸ் இருக்காங்க.

6. பெற்றோர் எப்படி உணருகிறார்கள்?

ஜேகப்: ஷீலாவின் தந்தை: ஏற்கனவே மூன்று க்ரச்சில் இருந்திருக்கிறாள். இங்க தூங்கு தூங்குன்னு சொல்லாம விளையாட விடறாங்க. அதுனாலே குழந்தையும் சந்தோஷமா இருக்கிறாள். நிறையா விளையாடிட்டு நைட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கதை பேசிட்டு தூங்கிடுவா. எங்களுக்கு இதுவே வசதியாய் இருக்கு.

லக்ஷ்மிராணி: அம்ருதின் அம்மா: பி.பி.ஓ வில் வேலை என்பதால் சாயந்திரம் எப்போ வரேன்னு நிச்சயமில்லை. இங்கேயே ஹோம்வொர்க் ஆயிடுவதனால் ரொம்ப சௌகரியமா இருக்கு.

(1) அவர்கள் தேவைகள் என்னென்ன?

பெற்றோர்கள் தம் குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதையே விரும்புகிறார்கள்.

(2) அதை எப்படி ஃபில் செய்கிறீர்கள்.

தேவையான அளவில் மெல்லிய கண்டிப்போடும், நிறையா அன்போடும், சுதந்திரம் கொடுத்து குழந்தைகளை அவர்களாகவே இருக்க விடுகிறோம். இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இன்னொரு வீடு போன்றே உணர்கிறார்கள்.

7. என்ன என்ன விதமான சேவைகள் வழங்குகிறீர்கள்.

ஃபுட் ப்ரின்ட்ஸ் என்ற ஒரே குடையின் கீழ், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டுப் பாடங்களைச் செய்யவும், பள்ளிப் பாடங்களைப் படிக்கவும், அருங்கலைகள் பல கற்கவும், வாசிக்கப் பழகுவதும், சுதந்திரமாக இயங்கவும், வாழ்வியல் நெறிகளைப் பழகவும், சிறிது நேரம் விளையாடுவதும் என்று தமது பொன்னான குழந்தைப் பருவ நேரங்களை வீணாக்காமல் நல்லவை பல கற்று சிறப்பாக வளர உதவும் இடமாக அமைந்திருக்கிறது. PreKG, Afterschool Day Care, Homework Assistance, Summer Camps, Hobby Classes, Crafts, Sewing, Drawing, Handwriting, Mathemagic, State, CBSE, ICSE tuitions, Photography, Hindi Prachar Sabha Exams, Carnatic/Hindustani Vocal, Keyboard, Bharatnatyam, Personality Development & Communication Skills. Special coaching for Competitive Exams like Olympiad (Science & Maths), Macmillan IAIS, NCERT Talent Search, Spell Bee, ASSET, NTSE, and STAR, இது தவிர சின்னச் சின்ன workshopகளும் நடத்தப்படுகின்றன.


8. இதனால் பயன் பெற்றோரின் கருத்துக்கள்.

ஆஷிஷ் & ஆதிஷ் பெற்றோர்: கட்டணம் மிதமாக இருக்கிறதால் என் இரட்டை குழந்தைகளுக்கு பணம் செலுத்துவது சுமையாக இல்லை. ஒரே குடும்பத்தில் இருந்து சேர்க்கும் போது சிறப்பு கட்டணச் சலுகை வேறு கிடைத்தது.


9 பொதுவா கிரீச்சின் தேவை என்ன அது எப்படி உபயோகமா இருக்கு

பெற்றோர்கள் இருவருமே பொருள் ஈட்டுவதன் பொருட்டு பணிக்குச் செல்வது கட்டாயமாக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு தமது குழந்தைகளைத் தாம் பணியிடத்திலிருந்து திரும்பும் வரை பார்த்துக்கொள்ளவும், அவ்வாறு இருக்கும் இடத்தில் குழந்தைகளின் பொன்னான நேரம் விரயமாகாமல் நல்லவிதமாக செலவிடச் செய்து நன்னெறிகள் கறக்கச் செய்வதுமே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. பெற்றோர்களின் கவலையைப் போக்கும் வண்ணம், ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம் காலை 8.00 முதல் இரவு 8.00 மணி வரை அலுவல் நேரத்தைக் கொண்டுள்ளது. இது தவிர அவசரத் தேவைகளுக்காவோ, வேறெந்த காரணங்களுக்காவோ பெற்றோர்கள் வெளியே செல்ல நேர்ந்து, குழந்தைகளை அழைத்துச்செல்ல முடியாத நேரங்களில், குழந்தைகளை மணிநேரக் கணக்கில் இங்கே பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம். இரவு நேர பராமரிப்பும் இருக்கிறது.


10. இதை ஆரம்பித்தது எப்போது. ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா. இதுபோல கிரீச் நடத்தபவருக்கு உங்க ஆலோசனை என்ன.

கடந்த வருடம் ஜனவரி 19 அன்று துவங்கினோம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். அதுபோல இடமும் க்ரச் நடத்துபவர் மனமும் இருந்து விட்டால், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


11. உங்க கிரெச் பேரு அது இருக்கும் இடம். அதில் உள்ள உதவியாளர்கள். வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுகிறார்களா.

ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம், மடிப்பாக்கம். என் நண்பர் திரு. பாலாஜி அவரின் உதவியோடு திரு.நாகராஜ், திருமதி.உமா ஆகியோரும் இதில் இணைந்து பணி புரிகிறார்கள்.

12. அதிக பணம் இன்வெஸ்ட் செய்யணுமா., யார் யாரெல்லாம் நடத்த முடியும். சக்சசிவா நடத்த யோசனைகள்

குறைந்த பட்சம் ஐந்து இலட்சம் கையிருப்புத் தேவை. பொறுமையும், சகிப்புத்தன்மையும், முதல் ஆறுமாசங்கள் வரை யாருமே திரும்பிப் பார்க்காவிட்டாலும், தொடர்ந்து செயல்படும் விடாமுயற்சியும் வேண்டும். அவ்வப்போது பிரச்சினைகள் வரும், தீர்த்துவிட்டோம் என்று உட்கார முடியாது, புதியதாய் வேறொன்று கிளம்பும். விடாமுயற்சி, குழந்தைகளிடம் மாறாத அன்பு, பொறுமை, பேராசை படாமல் இருத்தல் இவை எல்லாம் குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்க அடிப்படை குணங்களாக இருந்தால், அவர் நிச்சயம் இந்தத் தொழில் வெற்றியாளர் ஆகலாம்.


6 கருத்துகள்:

  1. சகபதிவரின் சேவை மையம் குறித்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பணி தொடர வாழ்த்துகள். பதிவுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு குழந்தையுமே பூக்கள் மாதிரிதான்! அந்தப் பூக்களை அவற்றின் இஷ்டத்துக்கு மலர விடுவது மிகமிக மகிழ்ச்சி தரும் விஷயம். இந்நாளில் பெற்றோருககு வரமாக அமையும் இதுபோன்ற விஷயங்கள் உரத்துச் சொல்லப்பட வேண்டியவை. அழகாய் பேட்டி கண்டு எழுதிய தேனக்காவுக்கு சலாம்!

    பதிலளிநீக்கு
  3. விதூஷின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. நன்றி ரமேஷ்

    நன்றி கணேஷ்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு
  5. நல்ல விசயம். தொடர்க அவரின் சேவை பணியும்... உங்கள் பணியும்...

    பதிலளிநீக்கு
  6. நன்றி குடந்தை அன்புமணி சகோ.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)