வெள்ளி, 20 ஜனவரி, 2012

நன்றி சுரேகா...சாதனை அரசிகள் விமர்சனத்துக்கு..



சக வலைப்பதிவராவும் ஒரு நல்ல நண்பராகவும் சுரேகா எனக்கு முதன் முதலில் கேபிள்ஜி எனப்படும் நண்பர் கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் என்ற முதல் புத்தக வெளியீட்டின்போது அறிமுகம். அதாவது அவர் விழாவை அழகாக தொகுத்து வழங்கினார். அழகிய தமிழ். சரளமான நடை. புன்னகை முகம். பின் அவரின் வலைத்தளம் படித்ததுண்டு . அவர் சென்று வந்த, வாழ்ந்த ஊர்கள் பற்றிய பதிவுகள். அவர் வாழ்க்கைத் துணையின் ஒருமித்த எண்ணப் போக்கு பற்றிய பிரமிப்பு, பின் அவரின் நீங்கதான் சாவி என்ற நூல் , என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அவர்.

அந்த தன்னம்பிக்கை நூலைப் படித்து நான் எழுதிய விமர்சனம் திண்ணையில் வெளிவந்தது. என் வலைப்பதிவிலும் பகிர்ந்துள்ளேன். அவர் என் நூலைப் படித்து முதல் விமர்சனம் கொடுத்தது மிக சந்தோஷமான நிகழ்வு. நன்றி சுரேகா. வேறென்ன சொல்லி விடப்போகிறோம் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் நிறைவாக்குவதை விட..!!!

இனி அவரின் விமர்சனம். உங்களுக்காக..

////வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.

முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன். 13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை! ரம்யா தேவி அவர்களே! உங்களைப் பாராட்டுவது சிறியது! வணங்குவதே உரியது!

அடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு! கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண்.! புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி!

மணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும்! அவரது உதவும் குணம் சொல்ல! அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி..! தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.!

சாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.

மாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..

உடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.!

இருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி!

அன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி

இதயநோயுடன் போராடினாலும், இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா!

குழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்!

உயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா!

அ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி!

ஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா!

ஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ்! ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)

படித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி!

சோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி!

வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம் என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!

மனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப்பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம் ஒரு கஷ்டமா? என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, !

என் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை ! என்னிடம் சொல்லி அழுதார்! எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்..! எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா? பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..! என்று தெளிவாகிவிட்டார்.

இதுதான்..இந்த நூலின் வெற்றி!

உண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே! சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி!

சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00

கிடைக்குமிடம்: : நம்ம டிஸ்கவரிதான்! ////

டிஸ்கவரியில் கிடைக்கிறது. திருப்பூர், காரைக்குடி புத்தக சந்தைகளிலும் கிடைக்க ஆவன செய்கிறேன். பெங்களூரு நண்பர்கள் ராமலெக்ஷ்மி, தவிர வேறு யாரும் இருந்தால் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.


5 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

    இணையம் மூலம் எப்படி வாங்குவதென மடல் அனுப்பினேன் டிஸ்கவரி பேலஸுக்கு. இன்னும் பதில் வரவில்லை. அந்த விவரமும் பெற்று இந்தப் பதிவில் இணைத்தால் எல்லோருக்கும் பயனாகும். எனக்கு அனுப்புங்கள் தேனம்மை:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. புத்தகத்தைப் பற்றிய விமர்சன உரை மனதை கவர்ந்தது. வழங்கி சுரேகா அவர்களுக்கு நன்றி...!

    நூலை எழுதிய வழங்கிய தேனம்மைக்கு நூறுகோடி நன்றிகள்..!!

    வாழ்க.. வளர்க..!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)